Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்!

பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு  கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம்.  இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து  முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு.  அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமைப்பான ஃபிஃபாவே கதவை திறந்து கொண்டு காத்திருக்கிறது.  இப்போது ரூபாதேவி சர்வதேச கால்பந்து நடுவர். முரட்டுத்தனம் மிகுந்த கால்பந்து வீரர்களை கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்பு   அவருக்கு .சாதனை படைத்த அந்த வீராங்கனையை திண்டுக்கல்லில் சந்தித்தோம்.

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

வாழ்த்துகள்! சர்வதேச அங்கீகாரம். எப்படி ஃபீல் பண்றீங்க?

“ரொம்ப சந்தோஷமா இருக்கு! இந்த தகவல் வந்தப்போ நான் ஜபல்பூர்ல ஒரு மேட்சுக்காக போய் இருந்தேன். அங்க ரூம் எங்கனு கேக்க போன் பண்ணினப்போ உனக்கு ஒரு குட் ந்யூஸ்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ரூமுக்கு வந்ததும் சந்தோஷத்துல எல்லாரும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க... நியூ இயர்க்குத்தான் விஷ் பண்றாங்களோன்னு நினைச்சேன். அப்பறம்தான் ‘ஃபிஃபா’ என்னை சர்வதேச போட்டிகளுக்கு ரெஃப்ரீயா செலக்ட் பண்ணிருந்த விஷயம் தெரிஞ்சது. என்னால அந்த சந்தோஷத்த தாங்கவே முடியல... இப்போது நான்  ரொம்ப ஹாப்பி”

உங்களைப் பற்றி சொல்லுங்கள். ஃபுட்பால் மேல ஈர்ப்பு வர என்ன காரணம்?

“சின்ன வயசுலயே அப்பா அம்மா இறந்துட்டாங்க. எனக்கு ஒரு அக்காவும் அண்ணனும் இருக்காங்க. அக்காகூட தான் இப்போ இருக்கேன். ஸ்கூல்ல படிக்கும்போதிருந்தே ஃபுட்பால் மேல ரொம்ப ஈடுபாடு. என்னோட கோச், ஜஸ்டின் ஆரோக்கியராஜ் சார்தான் ஆரம்பத்துல ரொம்ப என்கரேஜ் பண்ணினார். அப்ப திண்டுக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள்ல விளையாடியிருக்கேன். தொடர்ச்சியா மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி டீமுக்கும் ஆடியிருக்கிறேன்.

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

ப்ளேயரா இருந்த நீங்க எப்போ ரெஃப்ரீ ஆகணும்னு முடிவு பண்ணினீங்க?

“கடந்த 2012 வரைக்குமே நான் ப்ளேயராதான் இருந்தேன். 2007-ல ரெஃப்ரீ எக்ஸாம் நடந்தது. பொறுமையாக அதற்காக உழைத்தேன். கடந்த 2002 ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டில ரெஃப்ரீயா இருந்த கோமலேஸ்வரன் சங்கர் சார்தான் அப்போ எக்ஸாமினரா வந்தார். அந்த எக்ஸாம் எழுதுனவங்கள்ல நான் மட்டும்தான் பெண். சங்கர் சார் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணினார். ப்ளேயரா இருந்தாலும், ரெஃப்ரீயா இருந்தாலும் ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். ஃபிட்னெச எப்போதும் மெயிண்டெயின் பண்ணனும்னு சொன்னார். ஆண்களுக்கு நிகரா உன்னாலும் பண்ணமுடியும்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார். அதுதான் ரெஃப்ரீயாகிடனும்னு என்னோட ஆசைய வெறியாகவே மாத்திடுச்சு.

         

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

2012-ம் வருஷம்  Project Futureனு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க. 25 வயசுக்கு கீழ இருக்குற ஆண், பெண் நடுவர்களுக்கான பயிற்சி திட்டம். இந்தியா முழுக்க இருந்து செலக்ட் ஆன 140 பேர்ல நானும் மோனிகாவும் தான் பெண்கள். இதுல செலக்ட் ஆனப்பிறகு ஸ்ரீலங்கா, பஹ்ரைன், கத்தார், நேபாள், மாலத்தீவு நாடுகள்ல நடந்த போட்டிகளுக்கு ரெஃப்ரீயா வொர்க் பண்ணினேன்.

ரெஃப்ரீயா உங்க அனுபவங்கள் எப்படி இருந்தது, இருக்கிறது?

“ரொம்ப நல்லா இருக்கு. ப்ளேயரா இருக்குறதுக்கும் ரெஃப்ரீயா இருக்குறதுக்கும் அது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ப்ளேயரா இருந்து ரெஃப்ரீயா இருக்குறதால ப்ளேயர்கள் எப்படி விளையாடுவாங்னு தெரியும் தான...முதல்ல ஸ்ரீலங்கால நடந்த அண்டர் 14 பெண்கள் போட்டில ரெஃப்ரீயா வொர்க் பண்ணேன். நிறைய கத்துக்க முடிஞ்சது. அந்த மேட்ச் முடிஞ்சதும் உடனே கத்தார்ல மேற்காசிய போட்டிகள்ல ரெஃப்ரீயா வொர்க் பண்ணேன். ஆரம்பத்துல சில பிரச்னைகள் இருந்ததுதான். எல்லாத்தையும் விட நிறைய கத்துக்க முடிஞ்சது தான் எனக்கு சந்தோஷம்.”

சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

என்ன வேலை பாக்குறீங்க?

“திண்டுக்கல் ஜி.டி.என் காலேஜ்ல பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி படிச்சேன். கொஞ்ச நாள் ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்ணேன். ஆனா அங்க சம்பளமும் கம்மி. மேட்சுக்கு போக அனுமதியும் கொடுக்கல. அதனால வேலைய விட்டுட்டேன். அப்புறம் காந்திகிராம யுனிவர்சிட்டில சானிட்டர் இன்ஸ்பெக்டருக்கு படிச்சேன். வேலை கிடைக்குனு நம்பியிருந்தேன். இன்னும் கிடைக்கவில்லை.

ஆரம்பத்துல திண்டுக்கல் ஃபுட்பால் அசோசியேசன் சண்முகன் சார்தான் மேட்ச் போறதுக்கு எல்லாம் உதவி பண்ணினார்.  சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் ஒரு வேலை இல்லாதது வருத்தம்தான். வீட்டிலும் சிரமம். ஆக ஒரு வேலை இருந்தா இன்னும் சந்தோஷமா இருப்பேன்”வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஷில்லாங்கில் தொடங்கவுள்ள,  தெற்காசிய கால்பந்து போட்டிகளில் ‘ஃபிஃபா ரெஃப்ரீ’ என்ற அடையாளத்துடன் களமிறங்குகிறார் ரூபாதேவி.

கால்பந்து அருகி வரும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கால்பந்து தமிழச்சி!

- சு. அருண் பிரசாத்


படங்கள்: வீ. சிவக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close