Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிறந்தநாள் 'ஸ்ப்ரே'யில் தீப்பிடிப்பது உண்மையா? ஒரு அலர்ட் ரிப்போர்ட்! (வீடியோ)

பிறந்தநாள் விழாவில் சிறுவன் தலை மீது தீப்பிடிக்கும் வீடியோ, சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சிறுவன் தலையில் எப்படி தீப்பிடித்தது என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். அந்த சந்தேகத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அந்த வீடியோவில் உள்ள பதிவுகளைப் பார்ப்போம்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வீட்டில் உள்ளவர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவன், கேக் முன்பு மகிழ்ச்சியோடு உட்காந்திருக்க.... அவனது அருகில் நின்றவர், பிறந்தநாள் 'பாப்பரை' பயன்படுத்தி சிறுவனின் தலை முழுவதும் நுரையாக்குகிறார். அப்போது தலைகுனிந்த சிறுவனின் தலையில் தீப்பிடித்து எரிகிறது. உடனே அந்தக் குடும்பம் பதற்றமடைய, சிறுவனோ உயிர் பயத்தில் கதறுகிறான். பிறகு அந்த தீயை அணைப்பதோடு அந்த வீடியோ பதிவு முடிவடைகிறது. மகிழ்ச்சியின் பிறப்பிடமாக இருந்த பிறந்தநாள் வீடு, மனவருத்தத்தை கொடுக்கும் விதமாக அமைந்தது அந்த குடும்பத்துக்கு.

தீப்பிடித்தது எப்படி? என்று வீடியோவை கூர்ந்து கவனித்தால், நுரை தலையுடன் குனியும் சிறுவன் முன்பு இருந்த கேக்கில் உள்ள மெழுகுவர்த்தி மூலமே தீப்பரவியது தெரியவருகிறது.


இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், "இன்றையக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதற்காக பனி போல நுரை பொழிய வரும் கேன்கள் (பாப்பர்) சந்தையில் விற்கப்படுகின்றன. இதுதவிர வாசனை திரவியங்கள், கொசு, கரப்பான் பூச்சி ஒழிப்புக்கான மருந்துகள், பெயிண்ட், ஹேர் ஸ்ப்ரே, ஏர் பிரெஷ்னர் ஆகியவையும் கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்த கேன்களில் உள்ள மூடியில் அழுத்தம் கொடுக்கும் போது புகைப் போல திரவப் பொருள் வெளியே வரும். இதற்கு 'ஏரோசால்' என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது எளிதில் தீப்பிடிக்ககூடியது. பெரும்பாலும் புட்டேன் அல்லது ப்ரோபன் போன்ற ரசாயனங்கள் ஏரோசலாக பயன்படுத்தப்படும். 1980-ம் ஆண்டு வரை சிஎப்சி எனப்படும் க்ளோரோ ப்ளுரோ கார்பன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டது. அந்த ரசாயனம் ஓசோன் படலத்தில் ஓட்டை விழக் காரணமாகக் கூடும் என்பதால் அது தடை செய்யப்பட்டது.

வாசனை திரவியங்கள், பிறந்தநாள் பாப்பரைத் தவிர பெயின்ட், பாலிஷ், சென்ட் அடைக்கப்பட்ட கேன்களிலிருந்து அவை புகை வடிவில் வெளியே வர ஏரோசால் பயன்படுத்தப்படுகிறது. அழுத்தம் காரணமாக வெளியே வரும் புகை குளிர்ச்சியாக இருக்கும். வெளியே வந்ததும் அது அதிகமாக விரிவடையும். இந்த வகை கேன்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக குலுக்க வேண்டும். அப்போது திரவ வடிவில் வரும் புகை. உடல் மற்றும் ஆடையில் ஒட்டிக் கொள்வதோடு ஏரோசால் ஆவியாகி விடும். இந்த வகை கேன்களில் 'அதிக அழுத்தம் கொண்டது, எளிதில் தீப்பிடிக்கக் கூடியது, தீப்பிடிக்ககூடிய பொருள் அருகே பயன்படுத்தாதீர்கள்' போன்ற எச்சரிக்கை வாசகங்களோடு தீ ஜூவாலையின் படம் இருக்கும். ஆனால் அவைகளை மக்கள் கண்டுக்கொள்வதில்லை.

விலை குறைவு காரணமாக, இந்த வகை கேன் பொருட்களில் சீன தயாரிப்புகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீன தயாரிப்புகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதில்லை. இதுபோன்ற கேன்களைக் கண்டால் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் 'கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் சேஃப்டி கமிஷன்' என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு மூலம் பாதுகாப்பற்ற பொருட்கள் மக்கள் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை இந்தியாவில் ஏற்படுத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும்" என்றார்.


பிறந்தநாள் ஸ்ப்ரேயில் தீப்பிடிப்பது உண்மைதானா என்பது குறித்து விசாரித்தபோது உண்மையென்றே தெரிந்தது.

இந்த ஸ்ப்ரேவை சோதனை செய்த ஒருவர் கூறுகையில், "பிறந்தநாள் பாப்பரை (ஸ்ப்ரே) டேபிளில் ஒரு இடத்தில் மொத்தமாக நுரை அடித்தோம். குவிந்திருந்த இந்த நுரை அருகே தீக்குச்சியை கொண்டு சென்றபோது குபீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்த பாப்பரை நன்றாக குலுக்கி அடித்தாலும் தீப்பற்றிக் கொள்கிறது. அதே நேரத்தில் பரந்து விரித்து அடித்தால் தீப்பிடிப்பதில்லை" என்றார்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட ஸ்ப்ரேவை பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ