Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகைச்சுவையில் உச்சம் தொட்ட காளி என்.ரத்தினம்! ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-20)

பாபதி என்ற சிரிப்பு துணுக்கு சமூக நாடகத்தை, பம்மல் சம்பந்த முதலியார் எழுதினார். இக்கதையை வாங்கி சில மாற்றங்களுடன் சபாபதி என்று அதே பெயரில் திரைப்படமாக, தனது சென்னை பிரகதி ஸ்டுடியோவில்,  1941-ம் ஆண்டு  தயாரித்து வெளியிட்டார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இதற்கு முன் தான் தயாரித்த திரைப்படங்களால் சிறிது நஷ்டம் அடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த ஏ.வி.எம்,   இப்படம் தந்த அமோக வெற்றியினால் உற்சாகமாகினார் என்பார்கள்.

இரண்டு மாதங்களில் தயாரிக்கப்பட்ட சபாபதி படத்தின் தயாரிப்பு செலவு ரூ.37000/-  இதில் படத்தின் கதாநாயகன் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாத ஊதியம் ரூ.70 மட்டுமே. கதாநாயகி நடிகை பத்மாவுக்கு மாத ஊதியம் நாற்பத்தைந்து ரூபாய். தமிழ் ஆசிரியராக நடித்த பிரபல நடிகர் கே.சாரங்கபாணிக்கு கொடுத்த தொகை ரூ.2000. ஆனால் கதாநாயகனின் வேலையாளாக நடித்த நடிகர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...? மூவாயிரம் ரூபாய்!

மற்ற எந்த கதாபாத்திரங்களையும் விட அதிக சம்பளம் வாங்கிய அந்த நடிகர் காளி. என்.ரத்தினம். 40-களில் நகைச்சுவை பாத்திரங்களில் உச்சம் தொட்ட மகா நடிகன்.

தனது பத்திரிகையில் 'கர்நாடகம்' என்ற புனைபெயரில் கல்கி இந்த திரைப்படத்தை வெகுவாக புகழ்ந்து சிலாகித்து விமர்சனம் எழுதினார். மக்களை சிரிக்க வைக்கும் படம் என்றும் போலித்தனமான கௌரவங்கள், வீண் ஜம்பம் இவற்றை சாடிய படம் என்றும் கல்கி தமது பத்திரிகையில் இரண்டு பக்க அளவுக்கு பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தார். இப்படத்தில் தன் நகைச்சுவை சரவெடிகள் மூலம் காளி என் ரத்தினம் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தார்.

படத்தில் வேலைக்காரி குண்டு முத்துவுக்கு (சி.டி.ராஜகாந்தம்)  அவர் திருட்டுத்தனமாக தாலி கட்டி படத்தில் ஏக களேபாரம் செய்து விட்டார். இக்காட்சியை மீண்டும் மீண்டும் திரையரங்கில் காண்பதற்காக ரசிகர்கள் பலமுறை டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்று பார்த்து ரசித்தார்களாம். ஏவி.எம்.எம். எடுத்த ஆரம்பக்கால படங்களுள் அதிக வசூலை பெற்றுத் தந்ததாம் இப்படம். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவை அபரிதமாக பளிச்சிட்ட படம் இது.

ராவ் சாகிப் மாணிக்க முதலியாரின் செல்ல மகன் சபாபதி படிப்பில் நாட்டமில்லாத சுத்த அசடு, சற்றே மந்தப் புத்தியுடையவன். எல்லாவற்றையும் வேடிக்கையாக செய்யும் சுபாவம் கொண்டவன். அவனுக்கு உதவி செய்யும் வேலைக்கார மண்டு சபாபதியாக காளி என்.ரத்தினம் வெகு கச்சிதமாக நடித்தார். எனவே கதையில் இரண்டு 'சபாபதி' பாத்திரங்கள் இடம் பெற்றன. இப்படத்தில் இவ்விரண்டு பேரும் செய்த கூத்துக்கள் பார்ப்போர் வயிறு வலிக்குமளவுக்கு சிரிப்பை வர வழைத்தன. இப்படத்தில் காளி என்.ரத்தினத்தின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

இப்படத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்த காளி என். ரத்தினம் தன் பண்பட்ட நகைச்சுவை நடிப்பால் படத்தின் வெற்றியை உச்சிக்குக் கொண்டு போனார். படம் ஓடிய எல்லா திரையங்களிலும் வசூல் மழை பெய்தது.

இந்த நாடகத்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுத காரணம் அவரது நண்பர் சென்னை வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்கார். அவரிடம் வேலையாளாக இருந்த நரசிம்மன் உண்மையில் புத்திசாலியாக இருந்த போதிலும், மேற்பார்வைக்கு மட்டியைப் போல் தோன்றுவாராம். அவரின் சேட்டைகள் மற்றும் செயல்கள் நண்பர்களுக்கு பலமுறை நகைப்பை விளைவித்திருக்கிறது. அவரின் செய்கைகள்தான் தான் எழுதிய சபாபதி நாடகத்தில் வேலைக்கார சபாபதியின் பாத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்ததாக பின்னாளில் பம்மல் சம்பந்தமுதலியார் தெரிவித்தார்.

இதோடு ஒரு ஆங்கில நாவலில் 'வறாண்டி ஆன்டி' என்னும் மூட வேலையாள் பற்றியும் நான் படித்திருந்த செய்திகளை ஒன்றாய் சேர்த்து சபாபதி நாடகத்தில் வரும் வேலையாள் பாத்திரத்தை உருவாக்கியதாக அவர் தனது 'நாடக மேடை' நினைவுகள் என்ற நூலில் (பக்கம் 347) கூறியுள்ளார். சபாபதி நாடகத்தில் ஒரு சிரமம் இருந்தது. இந்த வேலைக்கார சபாபதியாக நடிப்பவர் நடிக்கும் போது தன் முகத்தில் கொஞ்சமாவது புத்தியுடையவன் போல் நடித்தாலும், இப்பாத்திரம் ரசாபாசமாகும் எனவே நடிப்பவன் திறமையிலேயே இந்த நாடகத்தின் வெற்றி அமையும்.

ஒருமுறை சென்னையில் இந்த நாடகத்தை காளி என் ரத்தினம் பார்த்தார். அப்பொழுது பம்மல் சம்பந்தம் அந்த நாடகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தார். பார்த்து பரவசமடைந்த ரத்னம் தன் நடிப்பாற்றலை வளமைபடுத்திக் கொள்ள அமைந்த சிறந்த வாய்ப்பாக கருதினார். இதன் விளைவை 1941-ல் வந்த 'சபாபதி' திரைப்படத்தில் காளி என் ரத்தினம் நடிப்பில் நாம் இன்றும் கண்டு ரசிக்கிறோம்.

படத்தில் ஒரு காட்சி பணக்கார முதலாளியின் செல்லப் பிள்ளை சபாபதி பள்ளிக் கூடத்தில் படிக்கும். வெகுளித்தனமான மாணவன் அவனது ஆஸ்தான வேலைக்காரன் சபாபதி காளி என். ரத்தினம் சபாபதி முதலியார் (T.R.R.) தன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாட வீட்டை விட்டு வெளியே வருகிறார். விளையாட வெளியே கிளம்பும் டி.ஆர். ராமச்சந்திரன்... காளி என் ரத்தினத்தை பார்த்து டேய் 'சபாபதி' போய் என்னோட பூட்சை கொண்டு வாடா' ரத்தினம் எதிர் கேள்வி கேட்பதற்குள் ராமச்சந்திரன் போய்க் கொண்டு வாடா என்று அதட்டுவார்.

தயங்கி, தயங்கி வீட்டுக்குள் சென்ற ரத்தினம் 'பூட்சை' வெள்ளித்தட்டின் மேல் வைத்து வெகு பவ்யமாக கொண்டு வந்து ராமச்சந்திரனிடம் கொடுப்பார். ரத்தினத்தைப் பார்த்த ராமச்சந்திரனும் அவரது நண்பர்களும் கொல்லென்று சிரித்து விடுவார்கள். வெற்றிலை பாக்கு கொண்டு வருவது போல் பூட்சை வெள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு வந்தால் யார் தான் சிரிக்க மாட்டார்கள்.

மீதி உரையாடல் உரையாடல் இங்கு..

T.R.R: என்னடா இது
K.N.R: பூட்ஸ்..அப்பா

T.R.R.: என்னடா தட்ல (plate)  வைச்சு கொண்டு வர்ரிய
K.N.R:நீதானப்பா சொன்னே.
 
T.R.R.: பிளடி ஃபூல் (Bloody Fool) ஏதாவது தின்றை வஸ்துவை தட்ல வைச்சுக் கொண்டாடான்னு சொன்னா பூட்ஸை கூடவா தட்ல வைச்சிக் கொண்டு வரச் சொன்னேன்.
K.N.R:இதெல்லாம் எனக்கு என்னம்மாப்பாத் தெரியும் - சொல்லிக் கொடுத்தாதானேப்பா தெரியும்.

T.R.R.: இதக்கூடவா சொல்லித்தரனும். இனிமே  பூட்ஸ்ஸ தட்ல வைச்சுக் கொண்டு வராதே - போ
K.N.R:இனிமே பூட்ஸ்ஸ தல வைச்சுக்கொண்டு வரலேப்பா எம்பா - என்னமோ இங்கிலீஷ்ல பிளடி ஃபூல்ஸ் (Bloody Fool) என்னம்மோ சொன்னியேப்பா - அப்படின்னா - என்னப்பா?
 
T.R.R.: பிளடி ஃபூல்ன்ன (Bloody Fool) ரொம்ப கெட்டிக்காரன் அர்த்தம் ஆமாம்.

டி.ஆர். ராமச்சந்திரன் பூட்ஸ் அணிந்து விளையாட மைதானத்திற்கு செல்வதற்குள் மழை வந்து விடும்.

T.R.R.: (மழை பெய்வதை பார்த்துக் கொண்டே) இன்னிக்கு டென்னீஸ் விளையாடின மாதிரிதான் வேரென்ன செய்யலாம் பிரதர்?

T.R.R.ன் நண்பர் ஏன் கார்ட்ஸ் ஆடலாமே

T.R.R.: (ரத்தினத்தைப் பார்த்து) டேய் சபாபதி போய் கார்ட்ஸ் கொண்டு வா.

K.N.R: கார்ட்ஸ் (Cards என்றால் என்ன ஏதுவென்று தெரியாத ரத்தினம் கடிதம் எழுதும் தபால் கார்டை கொண்டு வருவார். (தபால் கார்டை பார்த்ததும் வெறுத்து) இத ஏண்டா கொண்டாந்தே?

K.N.R: நீ இங்கிலிஷீலே சொன்னப்பா! - எனக்கு எப்படி புரியும்பா! தமிழ்லே சொல்லப்பா!
(தமிழில் எப்படி சொல்வது என்று T.R.R. முழிக்க அவரது) நண்பர்: காய்த கட்டுப்பா பிரதர்.

K.N.R: (T.R.R. ன் நண்பரை பார்த்து) சரியான ஃபிளடிபூல்பா (ரத்தினத்தின் பேச்சைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்)

T.R.R;  டேய் சபாபதி அவரை ஏன் திட்டுற?

K.N.R: நீதானப்பா சொன்னே பிளடி ஃபூல்ன்னா கெட்டிகாரன்னு... அதனாலேதான்பா... அப்படி சொன்னேன்பா என்பார்.

T.R.R; சரி சரி நீ வாய மூடிக்கிட்டு போய் காகித கட்டை கொண்டு வா.

வாயை மூடிக்கொண்டே போய் பழைய நியூஸ்பேப்பர் கட்டை தூக்கி கொண்டு வந்து கொடுப்பார் ரத்னம்)

T.R.R.; ஏண்டா இதபோய் தூக்கிக் கொண்டு வந்திருக்கியே உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்!

K.N.R; நான் எப்படிப்பா ஒண்டியா போறதுப்பா - நீயும் என்னோட தொணைக்கு வாப்பா - போகலாம்.

T.R.R; (தன் தலையில் அடித்துக் கொண்டே) சீட்டுக்கட்டுப்பா! ரத்னம் ஒரு வழியாக சீட்டு கட்டை (playing cards) கொண்டு வந்து தருவார்.

படத்தில் வரும் இக்காட்சியை ரசிகர்கள் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார்கள். பின்னே வேலைக்கார 'சபாபதி' ரத்தினத்தின் நகைச்சுவை நடிப்பை பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது!

தமிழ்சினிமாவை தன் நகைச்சுவை நடிப்பால் வயிறுகுலுங்க சிரிக்க வைத்த காளி என். ரத்தினம் அந்த பெயர் வந்தது எப்படி....

அடுத்தவாரம் பார்ப்போம்!

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close