Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க. வேட்பு மனு படிவமா இது?! நம்ப முடியவில்ல்ல்ல்ல்லை...!

னுத்தாக்கல் செய்ய, வேட்புமனு வாங்க, பிரச்சாரத்துக்கு செல்ல, வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட இப்படி எல்லாவற்றுக்குமே நேரம், காலம், திதி, ஓரை என்று  நம்பிக்கை தொடர்பான அத்தனை விஷயங்களையும் தெளிவாக பார்த்து விடும் கட்சியாக அ.தி.மு.க. இருப்பது ஊரறிந்த ரகசியம். 

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் நடைமுறை முதல் அது பிரதிபலிக்கும். அப்படி இதற்கு முன் கூட்டுத்தொகை 9 வரும்படியாக ராசி எண் பார்த்துதான் விண்ணப்ப மனுவில் வரிசை எண் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 2006 மற்றும் 2011 ல் வரிசை எண் : 27 ஆகும். இதன் கூட்டு மதிப்பு 9.

 


 ராசி எண்ணாக  9-தான் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருந்தது.

ஆனால், 2016 தேர்தலுக்கு ராசி எண் அந்தஸ்து 9-க்கு இல்லை. அந்த அந்தஸ்தை 2 மற்றும்  5 ஆகிய எண்கள் கைப்பற்றி இருக்கின்றன. இந்த தேர்தலுக்கான அ.தி.மு.கவின் விண்ணப்ப மனு வரிசை 23. மனுக்களைப் பெறத் தொடங்கியது 20-ம் தேதி. மனுத்தாக்கல் செய்யக் கட்டணம்  11 ஆயிரம் ரூபாய்.  மனுத்தாக்கல் படிவத்தின் நிறம் பச்சை. மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 2. ஆக, 2 மற்றும் 5 ஆகியவற்றோடு பச்சை நிறத்துக்கும் ஏக முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.

படிவத்தின் முதல் பக்கத்தில் பெயர் விபரம், தொகுதி, கட்டண ரசீது எண் போன்றவை  இடம் பெற்றுள்ளன. 2-ம் பக்கத்தில்  மனுதாரர் பெயர், முகவரி, பெற்றோர், கல்வி, அறிந்த மொழிகள், கேட்கும் தொகுதி, சொந்த ஊர் எது  என்ற விபரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக 12-வது கேள்வியாக, ’இந்த தொகுதியில் தேர்தலுக்கான செலவு எவ்வளவு ஆகும் என்று கருதுகிறீர்கள்?’. அடுத்த கேள்வி, ’தேர்தலுக்கென சொந்தமாக எவ்வளவு செலவு செய்வீர்கள்..? மீத தொகையை எப்படி சரி செய்வீர்கள்?’ என்ற கேள்வி இடம்பெறும்.

ஆனால் இந்த முறை அதற்கு பதிலாக, அதாவது அதே  12-வது கேள்வியாக, 'தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கிற வாக்கு எவ்வளவு?' என்று கேட்கப்பட்டுள்ளது.

 

அதேபோல, 13-வது கேள்வியாக  கடந்த காலங்களில்,  'சொந்தமாக எவ்வளவு செலவு செய்வீர்கள்? மீதத்தை எப்படி சரி செய்வீர்கள்? என்ற கேள்வி இருந்தது... இப்போது அதை மாற்றி அதே  13-வது கேள்வியாக,  'இந்த தொகுதியில் தாங்கள் போட்டியிட விரும்பும் காரணம் என்ன?' என்று கேட்கப்பட்டுள்ளது.

 ’ஏன் இந்த மாற்றம்?’ சீனியர் ர.ரக்களிடம் விசாரித்தேன்.

’அது  ’அம்மா’வின் தன்னம்பிக்கை’ என்று பூரிப்புடன் தொடர்ந்தார்கள். ’அம்மாவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இதில் உச்சக் கட்டமாக, சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்காக மட்டும் தி.நகரில் ஒரு நேர்காணல் நடத்தி மொத்தமுள்ள 200 மாமன்ற உறுப்பினர்களில் 145 பேரை 'பிளாக்-லிஸ்ட்' டில் காட்டியும் எச்சரித்தார்.  அவர்களிலும் 65 கவுன்சிலர்கள் மிக தீவிரமாக கட்டம் கட்டப்பட்டார்கள். ஆனால், கொடுமையிலும் கொடுமையாக அம்மாவால் எச்சரிக்கப்பட்ட  சிலரே, சில காலத்துக்குப் பிறகு தங்கள் முழுப்பெயரை மறைத்து 'நிக்' நேம் சொல்லி மாவட்ட அளவில் கட்சிப் பொறுப்புகளையும் சமீபத்தில் வாங்கி விட்டனர்.

 

இதெல்லாம் அம்மாவுக்குத் தெரிந்த போது கொந்தளித்தார். ஆனாலும் அதற்கு உடனே நடவடிக்கை எடுத்து இப்போதைக்கு பரபரப்பாக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். அதே சமயம் கட்சியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர இந்தத் தேர்தலையே பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டு விட்டார். அதன் எதிரொலிதான், மனுதாக்கல் செய்பவர்களிடம், 'எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என்று கேட்காமல், கடந்த காலங்களில் செலவைப் பற்றிக் கேட்ட, படிவத்தின் அதே வரிசை 12-ல், 'தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கிற வாக்கு எவ்வளவு?' என்று கேட்டிருக்கிறார்.

ஆக, வேட்பாளராக விரும்பும் நபர்களின் விருப்பம், அவர் சொல்லும் நியாயமான காரணம், கட்சிக்காக சிறை சென்றது, போராட்டம் நடத்தியது, கவுன்ட்டர் பொதுக் கூட்டங்கள் போட்டது, தொகுதியில் மரியாதை, கடைசியாக சாதி பலம்... இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தமுறை வேட்பாளர்களுக்கு அம்மா "டிக்" அடிப்பார் என்கிறார்கள்.

இந்தப் புதிய அணுகுமுறையினால் பல மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள், மேயர்கள், மாமன்றத் தலைவர்கள், சேர்மன்கள் என்று பலரின் பெயர் அடி வாங்கலாம். அதே சமயம், வட்டச் செயலாளர், முன்னாள் பகுதி, மாவட்டம், ஒன்றியம் போன்றவர்கள் தகுதி அடிப்படையில் 'சீட்' வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

'சீட்டுக்காக பணம் கொடுத்தேன், இவ்வளவு வெளியேயும், இவ்வளவு உள்ளேயும் செலவு செய்தேன்' என்ற கதையை இனிமேல் யாரும் சொல்ல முடியாது பாருங்கள் " என்கின்றனர்.

ஆக,  கட்சி நிர்வாகத்துக்கு சீனியர்கள், தேர்தலில் களமாட புதியவர்கள் என கார்டன் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

 

இத்தனை மாற்றங்களுக்கு இடையிலும் விண்ணப்ப படிவத்தில் அப்போதும் இப்போதும் கடைசியாக இருக்கும் கேள்வி, 'தாங்கள் கூற விருக்கும் பிற விபரங்கள் யாது ?' இதற்கு அப்போதும், இப்போதும் ஒரே மாதிரியான பதிலைத்தான் மனுதாரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  அது, "அம்மாவின் உண்மைத் தொண்டனாக, அம்மாவின் தலைமையின் கீழ் விசுவாசமாக கடமையாற்றுவேன்" என்பதே!

அம்மாவே மாறிட்டாங்க... நீங்களும் மாறுங்கங்கப்பா!

-  ந.பா.சேதுராமன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close