Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தித் திணிப்பை எரித்துப்பொசுக்கிய விருகம்பாக்கம் அரங்கநாதன்!

சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை தெரிந்திருக்கும். அந்த அரங்கநாதன் யார் தெரியுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்விட்ட மொழிப்போர் தியாகி விருகம்பாக்கம் அரங்கநாதன்!  இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து இறந்த மூன்றாவது தியாகியான விருகம்பாக்கம் அரங்கநாதனின் நினைவு நாள் இன்று. (27.1.1965)

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் வலுவடைந்த நேரத்தில்,  மத்திய அரசு அதை வெறுமனே சிறு கும்பலின் போராட்டம் என்று முக்கியத்துவம் அளிக்காமல், புறக்கணித்தது. அந்த  நேரத்தில் இந்தியாவை உலுக்கிப்போட்டவர் அரங்கநாதன்.

60 களின் மத்தியில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட் டம்,  இந்திய அரசை அசைத்துப்பார்த்த ஒன்று. இந்தியை புகுத்த முயற்சித்த மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சியால்,  தமிழகத்தில் பெரும் புரட்சி வெடித்தது. மாணவர்கள்,  தமிழார்வலர்கள் அரசியல்கட்சிகள் ஒன்று திரண்டு இதை எதிர்த்தனர். அதுவரை வழக்கமான பேராட்டமாக மட்டும் தலைநகரை  கிடுகிடுக்கச்செய்த இந்தி எதிர்ப்புப்போராட்டம்,  1965 ஜனவரி 26-ம்தேதி இந்தியாவை உலுக்கிப்போட்டது. இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் முதல் களப்பலியான சிவலிங்கம் தீயிட்டு  மரணித்த நாள் அன்றுதான். 

1965 ஜனவரி 26- ம் தேதி, குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக தி.மு.கழகம் அறிவித்திருந்தது. அன்றைய தினம் தமிழர் ஒவ்வொருவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், மாலையில் துக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் திமுக தலைவர் அண்ணா அறிவித்திருந் தார். அதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாவும் மற்ற சில தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
 
அண்ணாவின் அறிவிப்பாலும்,  கைது சம்பவங்களாலும் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற 24 வயது இளைஞர்,  இதுபற்றி உணர்ச்சிகரமாக தம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். "நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்" என்றார் அப்போது.

சென்னை மாநகராட்சியில், சிப்பந்தியாக வேலை பார்த்து வந்த சிவலிங்கம் தீவிர மொழிப்பற்றாளர். வழக்கமாக வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் அவரை குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவு வழக்கமான இடத்தில் காணாமல் அவரது அண்ணன் திடுக்கிட்டார். அதே நேரம் வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்துகொண்டிருந்தது. ஓடிப்போய் பார்த்தார் அவர். அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். 2 பெட்ரோல் டின்கள் அருகில் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்தில்,  "உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு" என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன. அதிர்ந்தது தமிழகம்.

சிவலிங்கத்தின் தியாகம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எங்குபார்த்தாலும் அவரின் அந்த தியாகம் பற்றியே உருக்கமாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானவர்களில் ஒருவர் சென்னை விருகம்பாத்தை சேர்ந்த அரங்கநாதன். காலையில் தீக்குளித்து இறந்த சிவலிங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அரங்கநாதன், அன்றிரவு முழுவதும் அதுபற்றியே பார்ப்பவரிடம் எல்லாம் பேசியிருக்கிறார். 

தமிழக நிலவரம் குறித்தும் நண்பர்களிடம் கவலையோடு பேசியிருக்கிறார். அன்றிரவு வீட்டில் மனைவியும், மற்றவர்களும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு சுமார் 3 மணிக்கு வீட்டிற்கு வெளியே உயிரோடு தன்னை எரித்துக்கொண்டார். வீட்டிலிருந்து அரங்கநாதன் எழுதிய ஒரு கடிதம்  கைப்பற்றப்பட்டது. அதில், "இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே _ இந்திக்கு வால் பிடிப்பவர்களே,  எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!" என எழுதப்பட்டிருந்தது. அப்போது அரங்கநாதனுக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தனர்.

தமிழகத்தில் இந்தியை புகுத்தும் காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலில் தீக்குளித்த முதல் தியாகி ஆசிரியர் சின்னசாமி. இரண்டாவதாக சிவலிங்கம், அடுத்த தியாகி அரங்கநாதன்.

27.12.1931-ம் ஆண்டு ஒய்யாலி- முனியம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த அரங்கநாதன், மத்திய அரசின் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர். இளம் வயதிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார்.

விருகம்பாக்கத்து இளைஞர்களால் 'குரு' என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன்,  விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நிறுவி நடத்திவந்தார். அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். தமிழுணர்வு மிக்கவரான அரங்கநாதன், தம்பகுதியில் இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் நூல்களை படிப்பது,  விவாதங்களில் பங்கேற்கச்செய்வது என தமிழ் உணர்வாளராகவும் இயங்கிவந்தார்.

அரசு ஊழியராக இருந்தாலும்,  தமிழ்மொழி மீதான பற்றில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்து வந்த அரங்கநாதன்,  இந்தி எதிர்ப்புக்காக தன்னுயிர் தந்த கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கலங்கிப் போனார்.

அன்றிரவு முழுவதும் அதே சிந்தனையுடன் இருந்த அவர், நள்ளிரவு விருகம்பாக்கம் நேஷனல் திரையரங்கம் அருகில்,  தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றப்பட்ட நிலையில் சில கடிதங்கள் கிடந்தது.

தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவற்றின் நகல்களைப் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன.

அரங்கநாதனின் தியாகத்தை போற்றும்வகையில்,  சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதைக்கு பின்னர் வந்த திமுக அரசு அரங்கநாதனின் பெயரைச் சூட்டி கவுரவித்தது.

தமிழ்மொழிக்கான போரில் இன்னுயிர் ஈந்த அரங்கநாதனை தமிழுலகம் என்றும் போற்றும்.

- எஸ்.கிருபாகரன்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ