Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோஹித் வெமுலா மன்னித்துவிடு!

துனிஷியா என்ற வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குட்டி தேசமது. அதன் அதிபர் ஜென் அல் ஆபிதின் பென் அலி,  1987-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது,  ராணுவப் புரட்சியினை ஏற்படுத்தி நாட்டினை கைப்பற்றினார்.

துனிஷியா உள் உற்பத்தியில்,  பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்த நாடு. ஆனால், அதன் மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருந்தனர். இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்தது. காரணம், ஏகாதிபத்திய நாடுகளுக்கு தன் நாட்டினை கூறு போட்டு விற்றுக்கொண்டு இருந்தார் அதிபர் ஆபிதீன் அலி.

அந்த நாட்டில், வேலையில்லா திண்டாட்டத்தின் விளைவாக முஹம்மத் பென் போஅஸீஸீ என்ற இளைஞன், ரோட்டில் பழம் மற்றும் காய்கறி விற்கும் கடை வைத்து பிழைத்துக்கொண்டு இருந்தான். அவன்தான் அவன் குடும்பத்திற்கான மொத்த வருமானமாக இருந்தான்.

ஒரு நாள் அவனிடம் ஒரு பெண் அதிகாரி,  எப்போதும் கேட்கும் தொகையை விட அதிகமாக மாமூல் கேட்க, அவன் அதனை எதிர்த்து ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு,  அவனை அடித்து நொறுக்கி, கடையையும் துவம்சம் செய்து விட்டு சென்றுவிட்டார் அந்த அதிகாரி. அதன் பின் இது குறித்து பல இடங்களில் முகமது புகார் கொடுத்தும், பயன் இல்லை. இதனை எதிர்த்து ஒரு போராட்டமாக, தன் உடலில் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டு இறந்து போனான் முகமது. போராட்டம் வெடிக்கிறது,  புரட்சி வெடிக்கிறது, சர்வாதிகார அரசை தூக்கி வீசுகிறார்கள் துனிஷியா மக்கள்.

சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையிலான போராட்ட களத்தில், சமணர்கள் பலர், இந்து மதத்தை எதிர்த்து மரணத்தை போராட்ட வடிவமாக கையாண்டு இருக்கிறார்கள். இப்படி எப்போதுமே மரணம் ஒரு போராட்ட வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. நிகழ்காலத்தில் பல்வேறு அரசியல் போராட்ட களங்களில். பலர் ஒவ்வொரு வடிவத்தில் உயிர் கொடை கொடுக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டக் களங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு வடிவங்களில் உயிரை கொடை குடுத்தனர். முக்கியமாக பலர் தீக்குளித்தனர். அதன் விளைவுதான் இத்தனை வருடங்கள் ஆகியும் காங்கிரசாராலும், எந்த இந்திய தேசியக் கட்சிகளாலும், தமிழகத்தினுள் நுழைய முடியவில்லை.

இப்படி அதிகாரமற்ற எளிய மக்கள்,  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய இயலாமையின் வெளிப்பாடாக தற்கொலை என்பதை தனது போராட்ட வடிவமாக, அரசுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஒரு அரசியல் கட்சி தலைவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட போது மூன்று பேர் தீக்குளித்தனர். ஆனால், அரசியல் படுத்தப்பட்டவர்களின் கடிதத்துடன் கூடிய உயிர் கொடைகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் வேறு.

2009- ல் ஈழத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகு, இனப்படுகொலை தீவிரமடைய, குழந்தைகளின், பெண்களின் படங்களை இணையத்தில் பார்த்துவிட்டு, தமிழகமே செய்வதறியாது திகைத்து நிற்க, முத்துக்குமாரின் தீக்குளிப்பு நிகழ்வு,  தமிழக இளைஞர்களை தட்டி எழுப்பியது. தமிழகம் முழுக்க ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த சிறு சிறு போராட்டங்கள் ஒருங்கிணையும் ஒரு மையப்புள்ளியாக அது அமைந்தது. தமிழகம் முழுக்க காலவரையற்ற விடுமுறையினை அரசு அறிவிக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது

முத்துக்குமாரின் உடல் ஆயுதம். இன்று அரசிற்கு எதிரான கலகங்களுக்கு பெருமளவு இளைஞர்கள் பங்கெடுப்பதை சாத்தியப்படுத்தியது முத்துக்குமாரின் இறப்பு. இது சாதாரண தீக்குளிப்பு நிகழ்வு என்றால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசினை அச்சுறுத்தி இருக்குமா என்றால் இல்லை.

ஆம், அந்த அரசியல் படுத்தப்பட்ட, கூர்மையான எழுத்துக்கள்தான்.  “என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகள் இல்லாமல் இருந்திருந்தால்,  “அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும்,
பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள்” என்ற வரிகள் இல்லாமல் இருந்திருந்தால், இந்த மிகப்பெரிய இளைஞர்களின் எழுச்சி சாத்தியமாகி இருக்காது. ஆனால், துனிஷியாவில் நிகழ்ந்தது போல பெரிய எழுச்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர் இங்கிருந்த அரசியல்வாதிகள்.

2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர். செங்கொடி” என்ற கடிதத்தோடு  தீக்குளித்த செங்கொடி,  உலக வரலாற்றிலேயே சமூக பிரச்னைக்காக உயிர் கொடை கொடுத்த முதல் இளம்பெண் என்ற வரலாற்றுச் சுவடுடன் சென்றார்.

யாருக்கும் அசையாத தமிழக அரசு, எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி வந்த அரசு, செங்கொடியின் தீக்குளிப்பு நிகழ்விற்கு பிறகு உடனடியாக 30-ம் தேதி, மூவரின் மரண தண்டனையை குறைக்க கோரி குடியரசு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

சமூகத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், செங்கொடி. இந்த வழக்கு துவங்கியபோது, செங்கொடி பிறந்திருக்க கூட இல்லை. ஆனால், மூவர் தூக்குக்கு எதிராக சென்னை முதல் வேலூர் வரை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி, மனித சங்கிலி என எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு, கடைசியாக தீக்குளிப்பு போராட்டத்தின் மூலம் பத்தொன்பது வயதில் உயிர் கொடை கொடுத்தார் செங்கொடி.

முத்துக்குமார் தீக்குளிப்பின் போது, எழுந்த இளைஞர்களின் எழுச்சியின் மூலம், முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, போராட்டத்தினை தீவிரப்படுத்தி போர் நிறுத்தத்தினை கொண்டு வர முயலாமல், இங்கிருந்த சில தலைவர்கள் தன் சார், தன் கட்சி சார் நலனைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தனர். தனது அரசியல் செயல்பாட்டிற்கு இடையூறு வருமோ என்று பயந்து, இன்றே அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியது முதல், சனி பொணம் தனியா போகாது என்று பேசியது, பெரிதாக வெடித்திருக்க வேண்டிய போராட்டத்தினை ‘அமைதி வழியில் போராட்டம் செய்வோம்’ என்று வசனம் பேசியது போன்றவை போராட்டத்தை வெளியில் தெரியாமல் போக செய்து, பாதையை மாற்றியது,

முத்துக்குமார் தீவிரவாதி என்று சட்டமன்றத்தில் பேசியது, முத்துக்குமாரின் மரணத்தை தனது அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வரை இங்கு மாற்று அரசியலை முன்னிறுத்த கூடியவர்களாக கூறப்பட்டவர்கள் செய்து முடித்தனர். ஆனால், செங்கொடியின் இறுதி நிகழ்விலும் யார் முதலில் பேசுவது, யார் பிந்தி பேசுவது என்று போட்டா போட்டி போட்டனர் சோ-கால்டு தமிழை நேசிக்கும் தலைவர்கள்.

செங்கொடியின் மரணம் மூவர் தூக்குக்கு எதிரான போராட்டங்களை மிக தீவிரமாக்கியது. அரசே பணிந்தது. பெருந்திரளாக மக்கள் நீதிமன்றத்தையே நிறைத்தார்கள்.இன்று அதே தொடராக இந்திய சமூகத்தின் ஜாதிய பாகுபாட்டிற்கு எதிரான போராட்டமாக மரணத்திருக்கிறார் தோழர் ரோஹித். முத்துக்குமார் மற்றும் செங்கொடியின் கடிதத்தைப் போலவே இவரது கடிதமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

“ஒரு மனிதனின் வாழ்க்கை ஒரு வாக்காகவோ, ஒரு எண்ணாகவோ, ஒரு பொருளாகவோ  சுருக்கப்படு கிறது” என்ற வரிகள்  மிகுந்த அரசியல் பொருளும், வலிகளும் உட்பொதிந்தவை. கடிதத்துடன் கூடிய ரோஹித் வெமுலாவின் மரணம்,  இன்று பல்வேறு மாணவர்களை தட்டி எழுப்பி உள்ளது. சர்வதேச சமூகத்தை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. ஆனால், இதோ இந்த மரணத்தையும் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த துடிக்கிறார்கள் பிணம் தின்னிக் கழுகுகள்.

கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது,  பல மாணவர்கள் தற்கொலை செய்தபோது கள்ள மவுனம் காத்த காங்கிரஸ், இன்றோ அதன் அரசியலுக்கு ரோஹித்தின் மரணத்தை பயன்படுத்த நினைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்பதாக அறியப்பட்ட இடதுசாரிகளின் உண்மையான ஜாதிய முகத்தை,  ரோஹித்தே கடந்த காலங்களில் தோல் உரித்து காட்டி இருக்கிறார். அவரது கடிதத்தில் குறிப்பிட்ட வரிகள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை இன்னும் மர்மமானதாகவே இருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது ரோஹித்தை தாங்குவதன் மூலம், அரசியல் லாபங்களை தேடிக்கொண்டு இருக்கின்றன.

இதோ, இன்னொரு மரணமும் பிழைப்பு அரசியல்வாதிகளுக்கு கிடைத்துவிட்டது. ஆனால், ரோஹித்தின் உண்மையான போராட்ட நோக்கம் நிறைவேறுமா என்றால்.... முத்துக்குமார் மன்னித்துவிடு, செங்கொடி மன்னித்துவிடு,  இப்போது ரோஹித் வெமுலா மன்னித்துவிடு. இப்படி ஒவ்வொரு முறையும் ‘மன்னித்துவிடு’ என எழுதிக்கொண்டிருக்கிறோமே தவிர, அவர்கள் எதற்காக இறந்தார்களோ அதற்கான உண்மைப் பொருளை இன்னும் எத்தனை நாட்கள் 'மன்னித்துவிடு'  எழுதியே கழிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

ஆனாலும் அரசியல்வாதிகள், போராட்டக் களங்களில் நடைபெறும் மரணங்களை தன் அரசியலுக்குப் பயன்படுத்தினாலும், போராட்டத்தை சரித்திரமாகும் கலகக்காரர்களின் மரணங்களும், மரண சாசனங்களும் இளைஞர்களை தட்டி எழுப்பி இருப்பதையும், அவர்கள் நேர்மையாக போராட்டக்களத்தில் நின்று, இலக்கை நோக்கி நேர்மையுடன் போராடிக்கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

அந்த வகையில் இந்த மரணங்கள் இந்த சமூகத்தின் மாற்றங்களுக்கான அதிர்வலைகளை துவக்கித்தான் வைத்திருக்கிறது. ஜெய் பீம்!

- ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப்பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ