Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்த தாவூத் இப்ராகிம்! (தாதா தாவூத் இப்ராகிம்: தொடர்-20)

தாவூத்தின் மூளைக்குள் குழப்பமான செய்திகள் வந்து பாய்ந்து கொண்டே இருந்ததில், என்ன முடிவுகள் எடுப்பது என்கிற பெரும் குழப்பத்தில் இருந்தான். நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்கள் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தாவூத்திடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். உலகமே தனது கைக்குள் அடங்கி, தனது ஆளுமையின் கீழ் வைத்து இருப்பது போல மமதையில் இருந்த தாவூத்திற்கு, இன்று அதே உலகம் அவனது காலுக்கு கீழே இடிந்து பூமிக்குள் புதைந்து போவது போல இருந்தது.

திடீர் உணர்ச்சியில் ஒரு முடிவு எடுத்தான் தாவூத். இந்தியாவில் சரணடைந்து விடுவது என்று. அதற்காக பேச்சு வார்த்தை நடத்தவே ராம்ஜெத் மலானியை தன் சார்பில் அனுப்பினான். ஒரு சில நிபந்தனைகளோடு. மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தவிர வேறு எந்த வித வழக்குகளும் தன் மீது நிலுவையில் இருக்க கூடாது. அடுத்து தன்னை சிறையில் அடைக்க கூடாது. தடுப்பு காவலில் அதாவது வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்கிற இரு வாக்குறுதிகளை இந்திய அரசு செய்து கொடுத்தால்,  தான் சரணடையப் போவதாக அறிவித்தான்.

இதற்காக மும்பையின் சட்டசபை கூட்டப்பட்டது. தாவூத் சார்பாக ராம்ஜெத் மலானி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். மும்பையிலும், இந்தியாவில் இருந்த பல்வேறு முக்கியமான அரசியல்வாதிகள், அவர்களுக்கு அடுத்து இந்தியாவை ஆண்டு வரும் பல்வேறு அதிகாரிகள் கதி கலங்கி போனார்கள். தாவூத் சரணடைந்தால் இதுவரை தாவூத்திடம் பெற்ற சலுகைகள், டீலிங்குகள், உறவுகள் எல்லாம் வெளியே வந்துவிடும் என்று அஞ்சினார்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகள்,  அரசியல்வாதிகள் மட்டும் தாவூத்தை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். 'முதலில் தாவூத் சரணடைந்து விடட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒரு முடிவில்லாமல் பேச்சு வார்த்தைகள்,  குதிரைக்கு கடிவாளம் இல்லாதது போல எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது  தாவூத்தின் சரணடையும் படலம்.

சில  நாட்கள் கழித்து இந்திய அரசு, தாவூத்தின் நிபந்தனைகளுக்கு நோ சொல்லியது. அந்த மூன்று நாட்களில் தாவூத்தின் காதுகளுக்கு பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருந்தது. தாவூத்திற்கு நெருக்கமாக இருந்த பல்வேறு அதிகாரிகள் சூழ்ச்சி செய்தார்கள். 'நீங்கள் இந்தியாவிற்கு வந்தால் அவ்வளவுதான்' என்று உலகத்தை மிரட்டிய ஒரு டானை, நெடுநாட்களுக்கு பிறகு அவனது மன நிலையை  நிலைகுலையவைத்தனர்.

மதில் மேல் பூனையாக இருந்த தாவூத் ஒரு முடிவு எடுப்பதற்குள் ‘பாகிஸ்தான்’ காற்று தாவூத்தை தள்ளிக்கொண்டு போய் விட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவு போல தாவூத்தும் இந்தியாவை விட்டு பிரிந்து போனான். இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு மாதங்களில் நடக்கவில்லை.

இந்த பிரச்னைகள் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே 1994 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டைகர் மேமனின் சகோதரன் யாகூப் மேமன் இந்தியாவில் சரணடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. யாகூப் சரணடையவில்லை; அவனை கைது செய்தோம் என்ற ‘ரா’வில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ராமன்,  “மும்பையில் இருந்து டைகர் மேமனின் உறவினர் ஒருவர் யாகூப் மேமனை சந்திக்க வருவதாக தகவல்கள் கிடைத்தன. சந்திப்புக்கு பின்னர் யாகூப், காத்மாண்டில்  இருந்து கராச்சிக்கு செல்லும் பொழுது நாங்கள் அவனை காத்மாண்டில் வைத்து கைது செய்தோம்” என்று மீடியாவில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சிபிஐ தரப்பில்,  யாகூப்பை சிபிஐ கைது செய்ததாக இந்திய அரசிடமிருந்து ரிவார்ட் பணம் வாங்கி இருப்பதாக பேச்சுக்கள் ஓடின. ஆனால் யாகூப்பின் மனைவி ரஹீன்,  “சிபிஐ வழக்கிற்காக,   குண்டு வெடிப்பு வழக்கில் பெயில் கொடுப்பதாக சிபிஐ அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அதனால் எங்களது வழக்கறிஞர் ஷ்யாம் கேஸ்வானி மூலம் அவரை நீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு பெயில் கொடுக்காமல் தந்திரமாக அடுத்த நாள் கைது செய்து விட்டனர்” என்று  மீடியாவில் பேட்டி கொடுத்தார். இப்படி ஒரு கைது, அல்லது சரண்டரை பல்வேறு வழிகளில் பல்வேறு துறைகளில் குழப்பம் செய்ததால் யாகூப் மேமனின் விவகாரம்  பற்றிய சர்ச்சை,  தாவூத்திற்கு ஒரு புதிய கோணத்தை உண்டாக்கியது.

அவனது சரண்டர் எண்ணம் பனால் ஆனது. அவனது மனம் இப்பொழுது முழு நிம்மதியடைந்தது. தாவூத்திற்கு நெருக்கடியான நிலைமை வந்தபொழுது,  பாகிஸ்தானின் அதிகார உயர் மட்ட குழுவில் இருந்தவர்கள் விருந்து கொடுத்து உபசரிப்பதும், உலகத்தின் பல்வேறு உளவு ஆட்கள் பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்து வந்த பொழுது,  ஒரு சிலரை கண்டறிந்து, அவர்களை பாகிஸ்தானில் வைத்து தாவூத்தின் முன்னிலையில் அவர்களின் கதையை முடித்த சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்தன.

இதுபோன்ற பல்வேறு உதவிகளால்,  தாவூத்தின் மனம் முழுவதும்  பாகிஸ்தானுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான். அதன் விளைவாகத்தான், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியில் இருந்த பாகிஸ்தான் நேஷனல் வங்கியை தூக்கி நிறுத்த பல மில்லியன் டாலர் பணத்தை வாரி வழங்கினான்.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு,  தாவூத்தை கையில் எடுத்து இந்தியாவில் பல்வேறு வேலைகளை செய்து வந்தது.  தாவூத்தை வைத்து காஷ்மீரை தங்கள் கையில் எடுக்க திட்டம் போட்டு வேலை பார்த்து வந்தது அந்த அமைப்பு. ஆனால் இந்தியாவில் நிலவி வந்த பல்வேறு அரசியல் சூழ்நிலைகள்,  காஷ்மீரை விட்டுகொடுக்காமல் தக்க வைத்துக் கொள்ள இன்றளவும் போராடிக்கொண்டிருக்கும் நிலை நிலவுகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு மோசமான அமைப்புகளில்  தாவூத் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டான்.

பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷ்ரப்,  ராணுவத்திற்கு அணு ஆயுதங்கள் வாங்க பல்வேறு உதவிகளை தாவூத்திடம் கேட்ட பொழுது, தாவூத் தாராளமாக உதவினான். அதோடு இல்லாமல் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து அணு ஆயுதங்களை வாங்கி கொடுத்தான் தாவூத். அதனால் முஷ்ரப்பிற்கும், தாவூத்திற்கும் நெருக்கம் உண்டானது. இந்த நெருக்கம் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முஷ்ரப்பை கொண்டு வரும் அளவிற்கு வந்தது. முஷ்ரப்க்காக தாவூத், பாகிஸ்தானில் ஒரே வேனில் தேர்தல் பிரசாரம் செய்ததை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று எழுதியது. அதற்காக அதன் கட்டுரையாளர் குலாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் எழுதிய கட்டுரையில், " இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு நிகழும் பொழுதெல்லாம் தாவூத்,  பாகிஸ்தான் எல்லைகளில் அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவார். அதோடு இல்லாமல் தாவூத்தை அனுப்பும் அனைத்து வேலைகளையும் பிரதமரின் அந்தரங்க செயலாளர்தான் பொறுப்பாக செய்வார். முஷ்ரப் ஆட்சியில் அதிகமாக போடப்பட்ட பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகளுக்கான பதவிகள் எல்லாமே தாவூத் சொன்ன ஆட்களுக்கு மட்டுமே போடப்பட்டு இருக்கிறது. தாவூத்தின் ஆட்கள்தான் பாகிஸ்தானின் ஆட்சியை நிர்ணயம் செய்யும் இடத்தில் இருக்கிறார்கள்.

பல்வேறு மூத்த அதிகாரிகள் அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் தாவூத்திடம் வேலை செய்து வருகின்றனர். தாவூத்தின் இந்திய தொடர்புகள் கூட பயங்கரமானவை. மும்பையில் இருந்து கொண்டே தாவூத்திற்கு பல்வேறு வேலைகளை செய்து கொடுக்கிறார்கள். தாவூத்தினை தேடி வரும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் புகைப்படங்கள் என்று எல்லாமே பாகிஸ்தானின் அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகளை பாகிஸ்தான் ஏர்போர்ட்டிலேயே வைத்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது. ஒரு சில அதிகாரிகள் காணாமல் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

பாகிஸ்தான் கஜானாவின் ஒரு பகுதி தாவூத்திற்கு சொந்தமானவை. இஸ்லாமிய மதத்திற்கு எதிரான, அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையை தாவூத், பாகிஸ்தானில் செய்து வருவது மோசமான விஷயம். பாகிஸ்தான் மலைக்குன்றுகள், ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை தாவூத்தின் ஆட்கள் பயிர் செய்து, அதை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இவர்களுக்கு முக்கிய தொழில் தங்கம் கடத்துவது, போதைபொருட்கள் கடத்துவது, கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் போன்றவை. பாகிஸ்தானில் இருக்கும் முக்கியமான அதிகாரிகள் அனைவரும்,  தாவூத்தின் மாலை நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு போடும் ஆட்டம், இந்த நாட்டிற்கு அவமானம்" என்று கூறியிருந்ததோடு,  தாவூத்திற்கு உள்ளூரில், யார் யார் என்ன என்ன வகையில் உதவி செய்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு எழுதியிருந்தார்.

இதற்காக குலாம் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். பிறகு சிறிது நாளில் அவர் அங்கிருந்து தப்பித்து அமெரிக்கா சென்று விட்டார். இப்பொழுதும் குலாம் பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில்,  தாவூத் குறித்த பல்வேறு அப்டேட் செய்திகளை எழுதி வருகிறார்.

2001-ம் ஆண்டு குலாம் எழுதிய கட்டுரையின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த கட்டுரையின் வீச்சு பிரான்ஸ் நாட்டின் இயங்கும் இன்டர்போல் அமைப்பிற்கு  இந்தியா,  அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் நெருக்கடியை கொடுக்கும் அளவுக்கு சென்றது. அவர்கள் தாவூத்தை உலகத்தின் மோசமான குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்து, பாகிஸ்தானுக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருந்தாலும் அதை எளிதாக சமாளித்தது பாகிஸ்தான் அரசு.

அது எப்படி?

- சண்.சரவணக்குமார்      

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

    

  


      
                                                    

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ