Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களே... இந்த சமூகம் நம்மைக் கொன்றுகுவிக்குமுன் வேற்று கிரகத்திற்குச் சென்றுவிடுவோம்!

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இரண்டு மூன்று பெண்களைப் பற்றி வீடியோ மீம்ஸ்கள் முகப்புத்தகத்தின் முதல் பக்கத்தை நிறைத்தவண்ணம் இருக்கின்றன.

காரணம் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் என்ற கருத்து பரவி வருவது சரியா’ என்ற தலைப்பில்,  ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி. அன்று வெளியான மீம்ஸ்கள் பெரும்பாலும் ஆண்கள் தோற்றுவிட்டதாகவும், அந்தப் பெண்ணை பாராட்டியுமே வந்து கொண்டிருந்தது.

ஆனால், அடுத்த நாளில் இருந்து வந்த மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ்கள், அதற்கு வந்த கருத்துக்கள் ஆபாசத்தின் உச்சக்கட்டம். அவ்வளவு வக்கிரங்களுடன் கூடிய பின்னூட்டங்கள். அந்தப் பெண்ணை நால்வர் சேர்ந்து உடலுறவு கொள்ளலாம் என்பதில் தொடங்கி, அந்தப் பெண்ணின் நடத்தை, அம்மா, குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் கேவலமான வசைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அந்தப் பெண் கேட்டது, 'ஏன் பெண்கள் குடிக்கக்கூடாது?' என்ற ஒரு கேள்விதான். அதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள்,  அந்தப் பெண்ணை அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுகின்றனர். 'ஆண்கள் குடித்தால் பெண்களும் குடிப்போம்' என்று கூறும் வறட்டு பெண்ணியத்தை இங்கு நான் பேசவில்லை. ஒரு ஆண்,  தான் குடிப்பேன் என்று இந்நேரம் அந்த அரங்கத்தில் கூறி இருந்தால், அவரையோ அவரது குடும்பத்தையோ கேவலமாக திட்டி எந்த மீம்ஸ்களும் வந்திருக்க வாய்ப்பில்லை.

எப்பொழுதுமே ஆண்களைப் பற்றி எந்த வசவுகளும் வருவதில்லை. ஆண்களைத் திட்டுவதானாலும் சரி, அந்த வீட்டு பெண்களைப் பற்றியும் பெண்களின் நடத்தையைப் பற்றியும்தான் வசவுகள் வரும். ஆனால், இணையதளத்தில் இயங்கும் ஓரளவு படித்த சமூகமும், அதே கேவலமான சாக்கடையில்தான் கிடக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். பெண்கள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு கிடப்பது, ஆண்கள் தான் தான் உயர்ந்தவன், பெண் தனக்கு கீழானவள் என்ற உளவியலில் தொடங்குகிறது. அந்த உளவியலில் இருந்து படித்தவர்களும் கூட விடுபடவில்லை என்பதே இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்த ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்கள் கையில் மீம்ஸ்கள் உருவாக்கம் கூட இல்லை என்பதே இந்த நவீன உலகம், பெண்களுக்கு சமபங்கு கொடுப்பதாக கூறிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இங்கு பெண்கள் சரிசமமாக எல்லாம் மதிக்கப்படுவதில்லை. எல்லாத் துறைகளிலும் இப்போதுதான் பெண்கள் உள்ளே நுழைய தொடங்கி இருக்கிறார்கள். எதிலும் சரி சமமாக இல்லை. இது நிரவுகளின் அடிப்படையிலான உண்மை. எல்லாவற்றிலும் சரிசமமாக வந்து விட்டீர்கள் என்று கூறும் ஆண்களால், பெண்கள் உண்மையில் உள்ளே வரத்தொடங்குவதை சகிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் பெண்கள் தொடாத துறைகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. சரிசமமாக எந்த துறையிலும் பெண்கள் நிரப்பப்படவில்லை. ஐ.டி. துறையில் மட்டும் சில நிறுவனங்களில் பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

யார் குடித்தாலும் தவறு என்று கூறும் நியாயமாரே... டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களில் எங்கு சென்றீர்கள்? ஆண்கள் குடித்தால் அந்த வீட்டுப் பெண்கள் கோவப்படுகிறார்கள், அதிகப்பட்சம் திட்டுகிறார்கள். பெண்கள் குடிப்பேன் என்று பேசினால், அவரையும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசி மீம்ஸ் செய்கிறார்கள். இதுதான் இந்த சமூகக் கட்டமைப்பின் லட்சணம்.

வருடாவருடம் அன்னையர்  தினத்திற்கும், பெண்கள் தினத்திற்கும் மட்டும் புகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நிகழும். பெண்களே! இது நமக்கான உலகம் அல்ல. சீக்கிரம் ஏதாவது ஒரு கிரகத்தை வாழக் கண்டுபிடியுங்கள். இவர்கள் நம்மை வன்மம் ஏறி கொன்று குவிக்குமுன் அங்கு சென்றுவிடுவோம்! 

-ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப்பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ