Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹே ராம்... காந்தி கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்?

ஜனவரி 30. அமைதியையும், அஹிம்சையையும் இந்தியாவின் அடையாளமாக்கிய பொக்கைவாய் கிழவன் படுகொலை செய்யப்பட்ட நாள். இதில் முரண் என்னவென்றால் சாதியத்தினால் அனைத்து இடங்களிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டு நட்சத்திரத்திற்குள் பயணித்த இளம் ஆராய்ச்சி மாணவனான ரோஹித் வெமுலா பிறந்ததும் இதே நாளில்தான்.

நெதர்லாந்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவிட்டு, நவீன விஞ்ஞானம்  நன்மைகளைவிட தீமைகளே செய்யும் என்ற முடிவுக்கு வந்த நண்பர் மாணிக்கம்,  ஒரு முறை நெதர்லாந்தில் அவர் பயின்ற பல்கலைகழகத்தில் நடந்த விஷயத்தை சொன்னார். இவர் ஏதோ ஒரு விஷயத்திற்காக பொய் சொல்லி இருக்கிறார். அது அவரது ஐரோப்பிய சக மாணவர்களுக்கு தெரிய வந்தபோது, அவர்கள் கேட்டார்களாம், “ஹோ... காந்திய தேசத்தில் பிறந்தவர்கள் பொய் சொல்வீர்களா...?” என்று.  காந்திய தேசத்தில் பிறந்தவன்தான் காந்தியை கொலையும் செய்தான் என்று சொல்லி இருக்கிறார்.
 

ஐரோப்பியர்கள், இந்தியாவிலிருந்து யார் வந்தாலும், காந்திய தேசத்திலிருந்து வருகிறார்கள் என அடையாளப்படுத்துவார்களாம். பாவம் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, காந்தியுடன் சேர்ந்து இந்த தேசத்தில் சத்தியமும் மரணித்துவிட்டதென்று. இப்போது உள்ளீடற்ற கூடாய்தான் தேசம் உள்ளது.

சரி. இப்போது காந்தி மீண்டும் உயிர்த்தெழுந்தால் நம்மை பற்றி என்ன நினைப்பார்...? அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் இங்கு நிலவும் சாதிய வேற்றுமைகளை எப்படி எதிர்கொள்வார்...? தான் பெற்று தந்த முதல் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட டெல்லியில் தலைவர்களுடன் கலந்துகொள்ளாமல், கொல்கத்தாவில் இந்து - முஸ்லிம்களிடம் இணக்கத்தை ஏற்படுத்த போராடிய அவர், மீண்டும் வந்தால் என்ன செய்வார்...? மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்த உண்ணாவிரதம் இருக்க முயல்வார். ஆனால், அவர் உண்ணாவிரதம் அமரும் முன் அவருக்கு ஈரோம் சர்மிளாவின் கதையை சொல்லிவிட வேண்டும். ஆட்களை திரட்டி ஒத்துழையாமை இருக்க முயன்றால், நாம் மாஞ்சோலை படுகொலைகளை அவருக்கு விவரித்துவிட வேண்டும். பாவம், அவருக்கு பின்னால் அமைதிக்கும், அஹிம்சைக்கும் இந்த தேசத்தில் மரியாதை இல்லாமல் போய்விட்டது என்று அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

வீட்டு வேலை செய்வதற்காக மட்டுமே தலித்தான ரோஹித்தின் அம்மா,  சாதிய இந்துவால் தத்தெடுக்கப்பட்டார் என தெரிய வரும்போது ஒருவேளை உயிர்த்தெழுந்தால், காந்தி தன்னைத் தானே கழுவேற்றக்கூடும். ஆனால், ரோஹித்துகளை காப்பாற்ற காந்திய வழியைவிட்டால் நமக்கு வேறு எந்த சிறந்த தீர்வும் இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் மனசாட்சியில் புற்றுவைக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்திலும், அமைதியையும், இணக்கத்தையும் விரும்பும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

தருமபுரியில் நத்தம் காலனியில் தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது, சென்னையிலிருந்து வந்த வன்னிய மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வீடாக சென்று கைக்குலுக்கி, அங்கிருந்த குழந்தைகளுடன் ஆரத்தழுவி, எங்களில் சிலர் தம் சுயநலத்திற்காக தவறு செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் உங்களுடனே இருக்கிறோம் என்று சொல்லியதை நாம் அறிவோம்.

இவர்களே நமக்கு நம்பிக்கையளிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பல்கி பெருகும் போது, மரணித்த இந்த தேசத்தின் ஆன்மாவும் உயிர்த்தெழும். காந்தி சொல்லியது போல் இங்கு வன்முறை எந்த தீர்வும் தராது. வெவ்வேறு சமூகத்துடனான உறவாடலும், உரையாடலுமே இணக்கத்தை தரும். அந்த உரையாடல்களை உடனே துவங்க வேண்டிய ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

மக்கள் பெரும் இயக்கங்கள் மீது நம்பிக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகப்போகிறது. மக்களை வாக்காள பெருமக்களாக மட்டுமே பார்க்கும் அந்த பெரும் இயக்கங்கள், மக்கள் ஒன்றுபடுவதை விரும்பாது, சூழ்ச்சி செய்து அந்த உறவாடல்களை உடைக்க பார்க்கும். அதனால், சத்தியத்தின் பால் நம்பிக்கை கொண்ட சிறு அமைப்புகள்தான் இதை முன்னெக்க வேண்டும். சாதிய சமூக கட்டமைப்பின் மேல் அதீத பற்று கொண்ட மக்களின் மனசாட்சியுடன் உரையாட வேண்டும், அவர்களை வென்றெடுக்க வேண்டும். மக்களின் மனசாட்சியை சத்தியத்தை நோக்கி திருப்ப வேண்டும். இதை நாம் இப்போது செய்ய தவறினோமென்றால் நாம் நம்மை அறியாமல் ரோஹித்துகளின் மரணத்திற்கு காரணமாகிறோம் என்று அர்த்தம்.

காந்தி சொல்லியது போல், “சூழல் நாம் உண்மை பேசவும் அதன் போல் நடக்கவும் கோரும் போது நாம் அமைதியாக இருப்பது கோழைத்தனமானது.”

- மு.நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ