Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் பிரச்னைகளுக்கு இவரிடம் தீர்வு இருக்கலாம்!

ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பாவை உங்களுக்கு தெரியுமா....?. ஒரு வேலை ஜே.சி குமரப்பா என்று சொன்னால் உங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. 

இன்று நாம் எதிர் கொள்ளும் அனைத்து சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்னைகளுக்கும் இவரிடம்தான் தீர்வு இருக்கிறது. பொருளீட்டுவதற்காக குடும்பம் என்கிற அமைப்பை நாமே சிதைத்து, எதற்காக இவ்வளவு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்றே தெரியாமல், ஆளுக்கொரு  திசையில் ஓடுகிறோமே... கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு குமரப்பாவிடம் அடைக்கலம் புகுந்தால், நிச்சயம் நமக்கொரு நல்ல இளைப்பாறுதல் கிடைக்கும். இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் மட்டுமல்ல அவரது சீடரான ஜே.சி. குமரப்பாவின் நினைவு நாளும் இன்றுதான்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிறந்து லண்டன், அமெரிக்காவில் பயின்று, லண்டனிலேயே நல்ல ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து, பிறகொரு நாள் காந்தியச் சிந்தனைகளால் உந்தப்பட்டு இந்தியா திரும்பி, பிறகு காந்திக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர் ஜே. சி. குமரப்பா.  இந்த தலைமுறை மறந்த மாபெரும் மனிதன், ஆனால், இந்த தலைமுறைக்கு மிகவும் தேவையான தலைவன்.

நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு mass production யே காரணம். அதிக உற்பத்திக்காக அதிகம் உழைக்கிறோம் அதனால் வாழ்தலின் உண்மையான பொருளை இழக்கிறோம். அதிக உற்பத்திக்காக அதிகம் இயற்கையை சுரண்டுகிறோம். அதனால் சூழலியல் சமன்பாடுகள் கெட்டு,  அழிவுகள் ஏற்பட காரணமாகிறோம். ஆனால் 1930 களிலேயே இதற்கு எதிராக இருந்தவர் குமரப்பா. அவர் முன் வைத்தது production by mass. இந்திய சுழலுக்கு,  இயற்கையை அதிக அளவில் சுரண்டும் மொத்த உற்பத்தி உகந்ததல்ல என்பதை அன்றே கணித்தவர். மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை எதிர்த்தவர். 

குமபரப்பா சொல்கிறார், “மையப்படுத்துதல் என்பது அனைவரையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அடக்குமுறையின் ஒரு வடிவமே. பெரிய தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வைத் தன் கைக்குள் வைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் வேண்டுமானால் பொருளாதாரத்திலும் ஜனநாயகத் தன்மை வேண்டும்” என்கிறார்.

நீடித்த வளர்ச்சி குறித்து அதிகம் சிந்தித்தவர். அது குறித்து அதிகம் எழுதியவர். வளங்குன்றா வளர்ச்சி குறித்து இவர் எழுதிய 'Economy of Permanence' என்ற புத்தகம், எளிய வாழ்க்கையின் அவசியத்தை முன் வைக்கிறது. 'பொருளாதார கொள்கைகளை அதிகம் பணம் பண்ணுவதை மட்டும் அடிப்படையாக கொண்டு வடிவமைக்ககூடாது,  அதில் அறக்கோட்பாடுகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டும்' என வாதிட்டவர். 

இந்தியா சிறு கிராமங்களின் தொகுப்பு,  கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என காந்தியைவிட அழுத்தமாக நம்பியவர் குமரப்பா. உள்ளூர் தொழில்களை மேம்படுத்துவது மூலமும், அதை வளர்த்தெடுப்பது மூலமும்தான், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என கிராம தொழில்களை மேம்படுத்த கடுமையாக உழைத்தவர் குமரப்பா.

குமரப்பாவை எளிதில் புரிந்து கொள்ள,  உங்கள் விழிகளை மூடி கொஞ்சம்  ஒரு சிறு கிராமத்தில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த கிராமத்தில் இருபத்தைந்து வீடுகளே உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் என ஏறக்குறைய நூற்றியிருபது பேர் வசிக்கிறீர்கள். கிராமத்திற்கென்று பொதுவாக எழுபது ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான்கு குளம் உள்ளது. நிலத்தில் சிறுதானியங்கள், அரிசி, காய்கறி, பருத்தி பயிரிடுகிறீர்கள். பாசனத்திற்கு குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிறீர்கள். ஆண்கள் வேளாண்மை மற்றும் மண்பாண்டங்கள் செய்ய என வேலையைப்பிரித்து கொள்ள, பெண்கள் கால்நடைகளை பராமரிக்க மற்றும் பருத்தியிலிருந்து ஆடை நெய்கிறார்கள். பெரியவர்கள் மரபு மருத்துவம் பார்க்கிறார்கள். கிராமத்திற்கென்று பொதுவாக ஒரு தானிய குதிர் இருக்கிறது அதில் அறுவடையான தானியங்களை சேர்த்து வைக்கிறீர்கள்.

ஊரில் குளமும் பொதுவாக உள்ளதால், தேவைப்படுவோர் மீன் பிடித்து கொள்கிறார்கள். குழந்தைகளுக் கென சிறு பள்ளி உள்ளது அதில் மொழி, வேளாண்மை, தொழிற்நுட்பம், மண் பாண்டங்கள் செய்வது, ஆடை நெய்வது கற்றுதரப்படுகிறது. சிறு குழுவாக வசிப்பதால், உற்பத்திக்காக செலவிடும் நேரம் போக , நிறைய நேரம் மிஞ்சுகிறது. கலைகள் வளர்கிறது. குறிப்பாக ஒரு குழுவில் அனைத்து வேலைகளும் பகிர்ந்து கொள்ளும் போது சாதி ஒழிகிறது.

இங்கு பணம் தேவைப்படவில்லை, இயற்கை சுரண்டப்படவில்லை, பொருட்கள் நாம் வசிக்கும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால் போக்குவரத்து மிச்சமாகிறது. அதனால் பெட்ரோல் போன்ற புதுப்பிக்க இயலாத ஆற்றல் காக்கப்படுகிறது. வேலைக்குறித்த அச்சமோ, கடன் குறித்த கவலையோ இல்லை. உடல் உழைப்பே பிரதானமாக இருப்பதால் நோய்கள் இல்லை.

இதுதான் குமரப்பா முன் வைத்தது. நாம் இப்போது அந்த திசையிலா பயணம் செய்து கொண்டிருக்கி றோம்...?  நாம் குமரப்பாவையே மறந்த பின்பு, அவரின் கொள்கைகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்தான்.

ஆனால், சமூகத்தில் சிறுபான்மையாக இருக்கும் பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்க,  ஒரு பெரும்பான்மை சமூகம் தம் மகிழ்வை இழந்து, தன் ஆரோக்கியத்தை இழந்து, குறிப்பாக தம் அடுத்த தலைமுறைக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் இயற்கை வளங்களை பெரும் வெறி கொண்டு சுரண்டி,  இப்புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வரும் இத்தருணத்தில், நமக்காக இல்லாவிடினும் அடுத்த தலைமுறைக்காகவேனும் குமரப்பாவை நினைவு கூறுவது இன்றியமையாததாகிறது.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close