Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தின் தொழில் நுட்பத் தந்தை என்று தி.மு.க வைச் சொல்லலாம்- ஸ்டாலின் ஐ.டி. மீட் !

                    
சோழிங்கநல்லூரில் நடந்த ஸ்டாலினின் "நமக்கு நாமே" சந்திப்பில், இருபத்தி இரண்டு சாஃப்ட்வேர் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் கேள்விகள் மட்டும் கோரிக்கைகளோடு காத்திருந்தனர்.

அரங்கத்தினுள் நுழைந்த திரு.மு.க.ஸ்டாலின் அனைவரோடும் கை குலுக்கி விட்டு, மேடை ஏறினார். இந்த "நமக்கு நாமே" சந்திப்பு இது வரை 220 இடங்களில் நடந்துள்ளதென்றும், இது 224வது சந்திப்பென்று தெரிவித்த அவர், தொழில்நுட்பத் துறையினரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் கூறினார்.

பின்னர் பேசத் தொடங்கியவர்,

"கடந்த வருட மழையை எதிர்பாராத மழை என்று சொல்ல முடியாது. பருவ மழை தான். வெள்ளம் செயற்கையா இயற்கையா என்ற வாதம் இன்று வரை நடந்து வருகிறது. அதனால் நான்காம் கட்ட "நமக்கு நாமே" சந்திப்பை ஒத்தி வைத்தோம். இந்தப் பெரிய சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும் என்று தயங்கினோம். ஆனால் இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளோம். வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் 234 தொகுதிகளும் நிறைவு பெற்று விடும். எந்த அரசியல்வாதியும் இதைச் செய்யவில்லை என்கிற தற்பெருமை எனக்குண்டு.

பின்னர் அதிமுக ஆட்சி குறித்துப் பேசிய அவர்,கலைஞர் சொல்வதைப் போல் இங்கு நடப்பது, ஆட்சி அல்ல, காட்சி. காட்சியும் அல்ல, காணொளிக் காட்சி.அ.தி.மு.க ஆட்சி, நடந்து-உட்கார்ந்து-படுத்து-இப்போது ஐ.சி.யூ. வார்டில் உள்ளது. செயல்பட முடியாத அரசாக. இனி எந்த அரசியல் பிரமுகராக இருந்தாலும், அவர்கள் தான் மக்களைத் தேடி வர வேண்டும் என்ற நிலை "நமக்கு நாமே" மூலமாய் நிறைவெற்றப் பட்டுள்ளது."என்று உரையை முடித்துக் கொண்டவர், தன் கையில் இருந்த பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும் ஒவ்வொருவர் பல தரப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
"மழையில் பல ஐ.டி நிறுவனங்கள் மூழ்கிப் போயின. இதன் இழப்புகள் ஊழியர்களைத் தான் பாதிக்கும். இனிவரும் காலத்தில் உள் கட்டமைப்புகள் சீராக்கப் பட வேண்டும் என்பதில் இருந்து பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், ஐ.டி வேலைகள் ஏன் பெரும்பங்கு தனியார் நிருவனங்களுக்கே செயல் படுகிறது? அரசும் வேலைகளை அதிகரிக்கலாமே, வேலைக்கு உத்திரவாதம் வேண்டும், வேலை பார்க்கும் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு என வளர்ந்து கொண்டே போனது. அனைத்தையும் தன் நோட்-பேடில் குறித்துக் கொண்டே வந்தார் ஸ்டாலின்.  அனைவரும் பேசிய பின்னர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

"இனி தி.மு.க'வில் கவுன்சிலர்.எம்.பி, எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் மக்களை சந்திக்கும் நிலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அப்படி அவர்கள் சந்தித்தால் தான் வேலையில் இருக்க முடியும் என்ற அறிக்கையையும் விட உள்ளோம்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான நான், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் 1 அல்லது 2 முறை சென்று மக்களை பார்த்து வருகிறேன். கால் நூற்றாண்டிற்கு பிறகு, 1996ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் மேயர் நானே என்றவுடன் அனைவரும் கரவொலியை எழுப்பினர்.
சென்னை மாநகராட்சி கட்டியதிலேயே பெரிய பாலம் பெரம்பூர் பாலம் தான். அதுவும் நான் மேயராக இருந்த போது கட்டப் பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விட்டிருக்க வேண்டும். ஐ.டி ஊழியர்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்ப்பட்ட போது, முதலமைச்சரோ, அல்லது தகவல் தொழில்நுட்ப அமைச்சரோ, எவருமே உங்களை வந்துப் பார்க்க வில்லை. ஏனென்றால் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

"தமிழகத்தின் தொழில் நுட்பத் தந்தை என்று தி.மு.க'வைச் சொல்லலாம். 2000 ஆண்டில் டைடல் பார்க் தி.மு.க ஆட்சியில் தான் கட்டப் பட்டது. அதே போல், மதுரை, கோவை, திருச்சி, சேலம் என முக்கிய நகரங்களிலும் கட்ட நடவடிக்கை எடுத்தோம். அ.தி.மு.க'விற்கு தொலைநோக்கு இல்லாததால், தொழில் நுட்பம் பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் இந்தத் துறை அமைச்சர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள். இளைஞர்களின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தால் நம் மாநிலம் மாறும். தமிழகத்தை வேலை தேடும் மாநிலமாக அல்லாமல், வேலை கொடுக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும். அவர்கள் ரோடு போடுகிறார்களோ இல்லையோ, தவறாமல் "டாஸ்மாக்" திறந்து வைத்து விடுவார்கள்.

டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் "13 அம்ச திட்டம்" என ஒன்றை அறிவித்தார். அவர் அறிவிப்பதில் ஹீரோ. ஆனால் செயல் படுத்துவதில் ஜீரோ. 110 விதி அதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது. அதன் பிறகு தான் பெண்களுக்கு எதிராக 21000 குற்றங்களும், 4769 கற்பழிப்புகளும் தமிழகத்தில் நடந்தன.

சுய தொழில் செய்ய முயல்வோர் முதலமைச்சரைப் பார்க்க முடிவதில்லை.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது, "காரியம் நடக்குதோ இல்லையோ. குறைகளை சொல்லக் கூடிய எளிமை இருந்தது" என பலர் என்னிடம் கூறியுள்ளார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு இந்தியாவில் இருந்து 7 மாநில முதல்வர்கள் சென்றார்கள். ஆனால் நம் முதல்வர் செல்லவில்லை. தலைமைச் செயலகம் வர, பொதுக் குழு என கட்-அவுட் வைப்பதிலேயே நேரம் ஓடி விடுகிறது. இருக்கும் தொழிற்சாலைகளும் வெளியே நகர்கின்றன. நோக்கியா, ஃபாக்ஸ்கான் முதலான நிறுவனங்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டார்கள். இதனால் 75,000 பேர் வேலை இழந்து போனார்கள்.

நான்கு ஆண்டுகளாக, சட்டமன்றத்திடமும், வெளியிலும் 33 எம்.ஓ.யூ கையெழுத்திட்டுள்ளோம். 31 ஆயிரம் கோடி ருபாய் முதலீடு வந்து விட்டது என்று சொல்கிறார்களே தவிர, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று கேட்டால், அவர்கள் சொல்ல மறுக்கின்றனர். ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

"உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்" என்று. உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க அனுமதி கொடுக்காத இந்த ஆட்சி, தனியாக உலக முதலீட்டு மாநாடு சென்னையில் நடத்தியது. 200 கோடி ருபாய் செலவு செய்து விளம்பரத்திற்காக நடத்தப்பட்டது தான் அது.

       .

முதல் நாள் தொடங்கி வைத்த போது, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரப் போகிறது என்றும் இரண்டாவது நாள் 2.42 லட்ச கோடி ரூபாய் வந்து விட்டது என்றனர் ! அதென்ன கால்,அரை,முக்கால் இல்லாமல், 2.42 ? என்று கேட்டால்,

அதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. முதலமைச்சரின் பிறந்தநாள் 2ஆம் மாதம் 24ஆம் நாள். எனவே 24.2 என்ற தேதியை 2.42 லட்சம் என மாற்றி விட்டார்கள். இது வேடிக்கை அல்ல. அவருக்கு ஐதீகப் படி, வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து சொல்லி இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே இது. மாநாடு முடிந்து, 150 நாள் ஆகிவிட்டது. எதாவது  புதிய தொழிற்சாலை வந்துள்ளதா?

மாநிலத்தின் எதிர்காலம் தகவல் தொழில்நுட்பத்தின் கையில் தான் உள்ளது. நாங்கள் கலெக்க்ஷன்,கரப்ஷன்,கமிஷன் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம். இனிமேல் தவறுகள் நடக்காது.
தி.மு.க'வின் வாக்குறுதி அழுத்தம் திருத்தமாகத் தான் இருக்கும். எங்கள் கடமையை ஆற்றுவோம்!" என்று கூறி முடித்தவர், கூடி இருந்தவர்கள் வானை நோக்கி ஃபோனை நீட்ட, செல்ஃபி எடுத்துக் கொண்டு கிளம்பினார் !
  
மு.சித்தார்த் (மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ