Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த காளி என்.ரத்தினம்! (தமிழ்சினிமா முன்னோடிகள் தொடர்-21)

பாய்ஸ் நாடக கம்பெனி

காளி என்.ரத்தினம், மலையப்ப நல்லூரில் 1897-ம் வருடத்தில் பிறந்தார். தந்தை பெயர் நாராயணன். நான்காம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். 

அதேசமயம் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டு திரிந்த ரத்தினம், கும்பகோணத்தில் தம்பா வெங்கடாசல பாகவதர் நாடகக் கம்பெனியில் நடிகராக 1904-ம் ஆண்டு சேர்ந்தார். இது ஒரு பாய்ஸ் நாடகக் கம்பெனி. இதுதான் தமிழ் நாட்டில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட பாய்ஸ் நாடகக் கம்பெனி. பின்னர் இந்த கம்பெனியின் நிர்வாகம் மாறியது.  புதிய நிர்வாகிகளாக மதுரை சச்சிதானந்தம் பிள்ளையும்,  மதுரை ஜெகன்னாத அய்யரும் இதில் சேர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் தொடங்கிய 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 1909 முதல் ரத்தினம் நடிக்கத் தொடங்கினார். 1936-ம் ஆண்டு வரை அதே நாடகக் குழுவில்,  நடிகராக சுமார் 27 ஆண்டுகள் விளங்கினார். 1936-ல் அந்த கம்பெனி எடுத்த 'பதி பக்தி' திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இதுதான் ரத்தினத்தின் முதல் சினிமா பிரவேசம்.

'காளி என். ரத்தினம்' பெயர் வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்திலுள்ள சில ஊர்களில்,  பங்குனி மாதத்தில் அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இவ்வூர்களில் குடிகொண்டுள்ள ஶ்ரீமாரியம்மன், ஶ்ரீ காளியம்மன் போன்ற தெய்வங்களுக்கு,  திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டி, தீ மிதித்து, 'காளியாட்டம்' என்ற சிறப்பு வைபவம் நடந்தேறும். காளியாட்டத்திற்கு,  சுற்ற வட்டார கிராமத்து மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இந்த விழா ஶ்ரீ காளியம்மன் ஊர்வலத்துடன் துவங்கும். ஶ்ரீ காளியம்மன்,  ஊரின் ஒவ்வொரு வீட்டிற்கும் முன் சென்று ஆசிர்வதிப்பாள். அம்மன் ஊர்வலத்தில், பூசாரி ஒருவர் காளியாக வேடம் தரித்து வருவார். சிவப்பு புடவையணிந்த பூசாரி,  நிஜ காளியாகவே பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

1916-ம் ஆண்டு நடந்த திருவிழாவில், கோவலன் நாடகம் நடைபெற்றது. அதில் அல்லி பரமேஸ்வரன் அய்யர் என்பவர் 'காளியாக' வேடம் தரித்து,  வெகு தத்ரூபமாக நடித்தார். நாடக மேடையில் அவர் காளியாக நடிக்கும் போது,  ஶ்ரீ காளியம்மனே மேடையில் பிரச்சன்னமாகியிருப்பதுபோல் தோன்றும்.  அவ்வளவு நேர்த்தியாக நடிப்பார். இந்த நாடகத்தை சுமார் 19 வயது இளைஞர் ஒருவர் பார்த்து பிரமித்து போனார். ஏன் நாமும் இவரைப் போன்று காளி வேஷம் போட்டு நடிக்கக் கூடாது என்று எண்ணினார். அந்த இளைஞர்தான் நாடக நடிகர் என். ரத்தினம்.

அல்லி பரமேஸ்வர அய்யரை குருவாகக் கொண்டு,  காளி வேஷம் போட்டு நடிக்கக் கற்றுக் கொண்டார். 1920-களில் காளி வேஷம் போடுவதில் ரத்தினத்திற்கு நிகர் எவருமில்லை என்ற நிலைக்கு தன் நடிப்பால் உயர்ந்தார்.

சபாபதி

அதுவரை காளி வேஷத்தில் புகழ் பெற்று வந்த அல்லி பரமேஸ்வர அய்யரே,  தனது சீடனான ரத்தினத்திற்கு வெள்ளி சூலம் வழங்கி,  அவரது காளி நடிப்பை பாராட்டி 'காளி' என்ற பட்டத்தை வழங்கினார். ரத்தினம், 'காளி' என். ரத்தினம் ஆனார்.

காளி என். ரத்தினம் சுமார் 65 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களில் பதி பக்தி (1936), சபாபதி (1941) , பக்த கௌரி (1941), மானசம்ரக்ஷ்ணம் (1945), பர்மா ராணி, சகடயோகம், வால்மீகி, மனோன்மணி‎, பிருத்விராஜன், பரஞ்சோதி‎, சந்திரகாந்தா‎, ‎‎காளமேகம், லட்சுமி விஜயம், உத்தமி, சதிசுகன்யா, உத்தமபுத்திரன் ஆகியவை குறிப்பிடத்தகுந்த படங்கள். ‎பெரும்பான்மையான படங்களில் அவர் வழங்கிய நகைச்சுவை,  காலத்தைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்வித்து வருகிறது.

லட்சுமி விஜயம், சபாபதி,  உத்தமி, சதிசுகன்யா, உத்தமபுத்திரன்,  மனோன்மணி போன்ற படங்களில் அவர் செய்த காமெடி இன்றும் திரைப்படம் பார்ப்பவரை மகிழ்ச்சி பரவசத்தில் ஆழ்த்தும். காளி என்.ரத்தினத்தின் சுமார் 10 படங்கள் இன்று DVD உருவில் கிடைக்கிறது. இது தமிழ் ரசிகர்கள் செய்த பாக்யமே! இந்தப் படங்களில் நடித்துள்ள காளி என் ரத்தினத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்றைய ரசிகர்கள் பார்த்து ரத்தினத்தின் நடிப்பாற்றலை விளங்கிக் கொள்ளலாம்.

வாத்தியாரின் வாத்யார் என்.காளி என்.ரத்தினம்


1924-ம் ஆண்டு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக் கம்பெனியில்,  பின்னாளில் தமிழ்த்திரையுலகை கட்டிப்போட்ட ஒரு பிரமுகர்,  தன் 7 வயதில் தன் சகோதரரருடன் சேர்ந்தார்.  பின்னாளில் திரையுலகில் பிரபலமடையவும், தேர்ந்த நடிகராக அவரும் அவரின் சகோதரரும் புகழடைய பாய்ஸ் நாடக கம்பெனியில் அவர்கள் பெற்ற பயிற்சியே காரணம் என்பர். நடிகராயிருந்து,  பின்னர் தமிழக முதல்வராகவும் ஆன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான் அந்த பிரபலம். அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி.


சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த சமயம்,  கம்பெனியின் நாடக ஒத்திகை ஆசிரியர் மற்றும் மேனேஜராக இருந்தவர் காளி என்.ரத்தினம். சின்னஞ்சிறுவயதில் நாடக அனுபவம் இல்லாத அந்த சகோதரர்களுக்கு,  நடிப்பு பயிற்சி அளிப்பதுதான் காளி.என். ரத்தினத்தின் பணி. தேர்ந்த கலைஞரான காளி.என்.ரத்தினம், சகோதரர்களுக்கு நன்கு பயிற்சி அளித்தார்.

ஆனால் காளி என்.ரத்தினம் மிகவும் கறாரான ஆசிரியர். இது சகோதரர்களுக்கு மிக பயத்தை ஏற்படுத்தியது. அந்த பயத்தினாலேயே அவரிடம் முரண்டு பிடிக்காமல் பயிற்சிபெற்றனர் இருவரும். பாய்ஸ் நாடக கம்பெனியில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தில்,  சிறுவன் எம்.ஜி.ஆர் தன் தாயை பார்த்து கதறி அழவேண்டும்.
ஆனால் எம்.ஜி.ஆருக்கு அழ வரவில்லை. அதற்கான ஒத்திகையின்போது எம்.ஜி.ஆர் அழாததால் காளி.என்.ரத்தினம் ஒரு உபாயம் செய்தார். 

அரங்கேற்றத்தின்போது அழவேண்டிய காட்சிக்கு முன் எம்.ஜி.ஆரை,  காளி.என்.ரத்தினம் படுதாவின் பின்புறம் ஒளிந்துகொண்டு அழைப்பார். எம்.ஜி.ஆர் ஓடோடி என்னண்ணே என்று நிற்க,  காளி.என்.ரத்தினம் அவர் தலையில் ஒரு குட்டு வைப்பார். வலிதாங்காமல் எம்.ஜி.ஆர் அழ,  காட்சிக்கு அது தத்ரூபமாக அமைந்து பார்வையாளர்களை அழ வைத்தது. எம்.ஜி.ஆருக்கு கைதட்டல் எழுந்தது.

பின்னாளில் எம்.ஜி.ஆர் அந்த காட்சியில் இயற்கையாய் அழுது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார். பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நடிக்கக் கிடைத்த முதல்வாய்ப்பு,  மகாபாரத நாடகத்தில் உத்திரன் வேடம். அதில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர் காளி என்.ரத்தினம். இந்த வாய்ப்புதான் எம்.ஜி.ஆரை நாடக உலகத்தில் அறிமுகம் செய்து வைத்தது.  அந்த வகையில் வாத்தியார் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் முதல் வாத்தியார், அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் காளி என்.ரத்தினமே.

சந்திரகாந்தா

1936 ல் வெளியான சந்திரகாந்தா என்ற படத்தில் பண்டார சன்னதியாக காளி என்.ரத்தினம் நடித்தார். படத்தில் 'பெண்ணாகி வந்ததொருமாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை.....என்ற பாடலை பாடி, சில பண்டார சன்னதிகள், சைவ மடங்களில் செய்து வந்த அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டினார். படத்தில் இக்காட்சியை ரசிகர்கள் பலமுறை கொட்டகைக்குச் சென்று பார்த்து ரசித்தார்கள். 1930-களில் சமூக சீர்திருத்தப் படமாக வெளிவந்த இப்படம்,  மதவாதிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளான போதும், படம் திரையிடப்பட்ட ஒவ்வொரு ஊரிலும் பல நாட்கள் படம் ஓடி,  வெற்றி சாதனை படைத்தது. சில ஊர்களில் காளி என்.ரத்தினத்தின் ஒரு வசனத்தில் வரும், 'சுவாமிகாள்' என்ற பதபிரயோகத்திற்கு போலீஸ் தடைவிதித்தது.

படத்தில் காளி என்.ரத்தினத்தின் நடிப்பு வெகுவாக  ரசிக்கப்பட்டது. முதன்முதலாக ஒரு தமிழ்த் திரைப்படம்,  ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் காட்டப்பட்ட புதிய வழக்கம்,  இப்படத்திலிருந்துதான் தொடங்கியது எனலாம். கும்பகோணத்தில்தான் ஒரே நேரத்தில் இரண்டு தியேட்டர்களில் இப்படம் ஓடியது.

சந்திரகாந்தா படம் வெற்றி பெற்று, வசூலில் சாதனைப் படைத்தது. இவ்வெற்றிக்குக் காரணம்  ரத்தினத்தின் 'சுவாமிகாள்' நடிப்புத்தான் காரணமென்று அன்று திரையுலகில் சிலாகித்து பேசப்பட்டது. இந்தப் படத்தில் பி. யு. சின்னப்பா,  சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

காளி. என்.ரத்தினம்-சி.டி. ராஜகாந்தம் நகைச்சுவை ஜோடி

மாடர்ன் தியேட்டர்ஸ் 1940 ல் உத்தம புத்திரன் படத்தை தயாரித்தனர். இதில் பி. யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்தப் படத்தில்தான், காளி என். ரத்தினத்துடன் சி. டி. ராஜகாந்தம் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ மதுரம் நகைச்சுவை ஜோடிக்குப்பின் திரையுலகில் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடி காளி. என்.ரத்தினம்-சி.டி. ராஜகாந்தம். மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில்,  இந்த ஜோடி நகைச்சுவை விருந்தளித்தனர். ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி,  போஜன், பர்மா ராணி முதலான படங்களில் இவர்கள் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. சந்திரகாந்தா உட்பட சுமார் 65 படங்களில் நடித்த காளி என்.ரத்தினம் 1950-ம் ஆண்டு,  ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி, சொந்த ஊரான மலையப்ப நல்லூரில் காலமானார்.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் சிரிக்க மறக்கும் வரையில் காளி என்.ரத்தினம் புகழ் நிலையான ஒரு இடத்தை பெற்றிருக்கும்.

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...
 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ