Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் நலக் கூட்டணிக்கு மங்களம் பாட வைக்கிறதா திமுக? - கடு கடுக்கும் திருமா!

மிழக அரசியலில் அரிதாக எப்போதாவது பூக்கும் குறிஞ்சி மலர் 3 வது அணி. கடந்த காலங்களில் 3-வது அணி உருவாகும்போது கடைதேறாத அணி என மற்ற இரண்டு அணிகளால் வசைபாடப்பட்டாலும்,   அவ்வப்போது தமிழக அரசியலில் மூன்றாவது அணி குறித்த பேச்சு எழுவதும், பின்னர் தேர்தல் நெருக்கத்தில் அவ்வாறு உருவாகிற அணி இருபெரும் கழகங்களின் சித்து விளையாட்டுகளால் சிதறுண்டுபோன வரலாறு உண்டு.

அதுபோன்ற நிலைமை இப்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன்,  மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய 6 கட்சிகள் இணைந்து கடந்த ஜூலை 29-ம் தேதி மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற தனி அணியை உருவாக்கின. ஆனால் சில வாரங்களுக்குள் இந்த அணியிலிருந்து தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் வெளியேறியது. அதன்பின்னர்  மனிதநேய மக்கள் கட்சியும் கம்பி நீட்டியது. இருந்தாலும் ஒருவாறு சமாளித்தபடி அரசியலில் அனுபவம் மிக்க தலைவர்களின் ஒருங்கிணைப்பில் மக்கள் நலக் கூட்டியக்கம் செயல்பட்டு வந்தது. பொதுப்பிரச்னைகளுக்கு உடனடியாக குரல்கொடுப்பது, பல்வேறு போராட்டங்கள், தீவிரமான கூட்டங்கள் அறிக்கைகள் என மக்கள் மத்தியிலும் தீவிர அரசியல் முன்னெடுப்புகளை கொண்டுசென்றது மக்கள் நலக் கூட்டணி.

தேர்தல் கூட்டணிக்கான அத்தனை அம்சங்களுடன் பயணித்துவந்த மக்கள் நலக் கூட்டியக்கம்,  ஒரு நல்ல நாளில் அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே மக்கள் நலக் கூட்டணி  என திருநாமம் சூட்டிக்கொண்டது. அரசியல் கட்சிகளின் தேர்தல் கால சடங்கான மாநாட்டையும் கடந்த மாதம் மதுரையில் நடத்திமுடித்திருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் லேசான சலசலப்பு எழ ஆரம்பித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மையமான குரல் அது. கடந்த காலங்களில் உருவான 3 வது அணிகளை கபளீகரம் செய்த இந்த பிரச்னை தங்கள் கூட்டணியில் எழக்கூடாது என அனுபவமிக்க தலைவர்களான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அதுபற்றிய பேச்சுக்கள் நுழையவில்லை. அவர்தான் முதல்வர் வேட்பாளர் என கடந்த மாதத்தில் எங்கிருந்தோ வந்த ஒற்றைக்குரலுக்கும் ஓங்கி சம்மட்டி அடி அடித்து அந்த குரலை எழாதவாறு அடக்கினார் வைகோ.

ஆனால் இந்த முறை அந்த குரல் வந்த திசை,  கூட்டணியின் முக்கிய கட்சியும் தலித் வாக்கு வங்கியாக கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமிருந்து.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அதன் பொதுச் செயலாளரான ரவிக்குமாரிடமிருந்து கிளம்பிய இந்த குரல் விடுதலை சிறுத்தைகளிடமிருந்து அல்ல; திமுகவிடமிருந்து என்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆர்வத்துடன் உற்றுநோக்கிவரும் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள். தான் எதிர்பார்த்ததுபோலவே மக்கள் நலக் கூட்டணியைச் சிதைக்கும் வேலையை ரவிக்குமார் தொடங்கிவிட்டதாகவும், அவரை ஏவிவிடுவது  திமுக  என்றும் குற்றச்சாட்டை தனது முகநூல் பதிவில் முன்வைத்திருந்தார்  பேராசிரியரும், சமூக ஆர்வலருமான அ. மார்க்ஸ் 

மக்கள் நலக் கூட்டணி எனும் இளந்தளிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில்  தனது முகநூல் பக்கத்தில்  கருத்து தெரிவித்திருந்த அவர், “ தேர்தலுக்குப் பின் ஏதோ ஒரு அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்து,  யார் முதல்வர் எனக் கேள்வி எழுந்தால்,  நிச்சயமாக அந்தத் தகுதி தொல்.திருமாவளவனுக்கு உண்டு என்பதில் எனக்கெல்லாம் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ஒரு கூட்டணி உருவாகி,  அதில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிப்பதில்லை எனவும் முடிவானபின், கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் வெளிப்படையாக இப்படி ஒரு விவாதத்தைத் துவக்கி இருப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

தொல்.திருமாவளவன் அவர்களே,  நல்லகண்ணு போன்றோரே முதல்வராகவேண்டும் என்றெல்லாம் பெருந்தன்மையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு விவாதத்தை இந்த நேரத்தில் ரவிக்குமார் கிளப்பி இருப்பதன் நோக்கமென்ன? சிண்டு முடிய நினைக்கும் தொலைக்காட்சிகள் இதை இப்போது விவாதமாக்கியுள்ளன. ஏதோ முதல்வர் யார் என்பதில் மக்கள் நலக் கூட்டணிக்குள் பூசல் உள்ளது போல இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்கின்றன. தவிர்க்க இயலாமல் இந்த விவாதங்களில் வி.சி.க சார்பாக பங்கேற்பவர்கள் இ்தை ஆதரித்துப் பேச வேண்டிய நிலையும், மற்ற மூன்று கட்சிக்காரர்களும் அது பின்னால் கூடித் தீர்மானிக்க வேண்டியது எனப் பேச வேண்டிய நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு ம.ந.கூவுக்குள் தேர்தலுக்கு முன்பே பூசல் தொடங்கிவிட்டது என்கிற கருத்து இப்படி வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தை சிந்தனைச் செல்வன் அவர்களோ, பொருளாளர் யூசுஃப் அவர்களோ இல்லை ஆளூர் ஷா நவாஸ் போன்றோரோ முன்வைத்திருந்தால் யாருக்கும் இந்தச் சந்தேகம் எழுந்திருக்காது. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி ஒரு விவாதத்தை இந்த நேரத்தில் எழுப்புவது தேவையில்லை. இதை வெளிப்படையாக முன்வைக்காமல் கூட்டணிக்குள் பேசியிருக்கலாம்" என குறிப்பிட்டிருந்தார்.

 ரவிக்குமார் இப்படி ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது கூட்டணியை உடைக்கும் முயற்சி என்கிற நியாயமான ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டும் அ.மார்க்ஸ், தன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவான சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

“ அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற வி.சி.கவை திமுக பக்கம் இழுத்துச் சென்றதில் ரவிக்குமாரின் பங்கு பெரிது என்பது ஊரறிந்த ரகசியம்.

இதனால் அதிமுகவின் கதவு விசிகவுக்கு நிரந்தரமாகச் சாத்தப்பட்டுவிட்டது மட்டுமல்ல, திமுகவிற்குள்ளும் பேரம் பேசும் வலிமையையும் விசிக இழக்க நேரிட்டது” என்று குறிப்பிட்டுள்ள அ.மார்க்ஸ், “மக்கள் நலக் கூட்டணி தொடங்கிய பின்னும் கூட ரவிகுமார் ஸ்டாலினுடன் நெருக்கமாக உறவைப் பேணுவது குறித்து தமக்கு சில நண்பர்கள் கூறியதாகவும், இது ஒரு சாதாரண மரியாதை நிமித்தமான உறவு அல்ல என அவர்கள் குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இப்படியான ஒரு சூழலில் ரவிக்குமார் இப்படி ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டது மக்கள் நலக் கூட்டணியில் அக்கறை உள்ளவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்கள் பொறுமையுடன் இதை அணுக வேண்டும்” என்றும்,  இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக மிக்க நம்பிக்கையோடு மேலெழுந்து வரும் மக்கள் நலக் கூட்டணி எனும் இளந்தளிரை எந்த விதத்திலும் பலவீனமாக்கும் முயற்சிகளை திருமா, ஜி.ஆர், முத்தரசன், வைகோ ஆகியோர் அனுமதிக்கக் கூடாது என்றும்  தமது பதிவில் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

மார்க்ஸ் மட்டுமல்லாது தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக வலைதளங்களிலும் இதே ரீதியான பேச்சு எழவும்தான், சுதாரித்துக்கொண்ட திருமாவளவன் இது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்,  "தோழர் ரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே,
2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர்.

காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணி விழித்திடவேண்டிய நேரமிது!

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்