Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்காளர்கள் நீக்கம்... கனிமொழி சொல்வது உண்மையா? நேரடி அலசல் ரிப்போர்ட்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு வரும் வேளையில் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இருந்து எங்கள் பெயர்களை நீக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் தரப்பில் வலுவாக வைக்கப்படுகிறது.

இதன் உச்சகட்டமாக நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர், நஜீம் ஜைதியிடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரிலேயே புகார் மனுவும் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். அவர் புகாரில், "புதிய வாக்காளர்களை   அதிகளவில் சேர்த்து, தி.மு.க.வினரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்" என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். நீக்கல் பட்டியலில் எதிர்க்கட்சியினர் மட்டும்தான் இருக்கின்றனரா, கனிமொழி எம்.பி. சொல்வது உண்மையா? சாம்பிளுக்காக சில தொகுதிகளை நேரில் அலசினோம். நமக்குக் கிடைத்த தகவல்களை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கொண்டு சென்றோம். முதலில் நமக்குக் கிடைத்த தகவல் குறித்து பார்ப்போம்:

கடந்த முறை வாக்களித்த வாக்காளர்களை விட இம்முறை கூடுதலாக புதிய வாக்காளர்கள் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது உண்மையே. அதே வேளையில் தொகுதியில் இன்னமும் உயிரோடிருக்கும் சீனியர் சிட்டிசன்கள், கணவரால் கை விடப்பட்டோர் பெயர்களும் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இல்லை.

பெயர் விடுபட்டது எப்படி?


சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெய்து முடித்த பெருமழையில் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்த குடும்பங்கள் அதிகம். சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களில் சொத்து போல இருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளி, கல்லூரி, சாதிச் சான்றிதழ்கள்  இந்த வெள்ளத்தில் காணாமல் போன முக்கிய சொத்துகள். பெரு வெள்ளம் தமிழகத்தை மூழ்கடிப்பதற்கு முன்னதாக, அதாவது முதல் மூன்று நாள் மழையின் போது, முதியோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் பென்சனை வாங்கும் பெண்களிடம்  ஓய்வூதியத்தை வழங்கிய போஸ்ட் மேன்கள், ஒரு தகவலையும் சொல்லி விட்டுப் போனார்கள்.

"அடுத்த மாதம் உங்களுக்குப் பணம் வரவேண்டும் என்றால், உங்களிடம் வைத்துள்ள சான்றுகளைக் கொண்டு வந்து எங்களைப் பாருங்கள். உரிய சான்றுடன் உதவித் தொகையை வாங்குகிறவரே நேரில் வர வேண்டும்"  என்பதே அந்த தகவல்.

அஞ்சல்துறையும், பெரு மழையும்...

இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் இணைக்கின்ற ஒரு இணைப்பாக முதலில் இடம் பிடிக்கிற ஒரு இணைப்பு மையம் அஞ்சலகமே. அதிலும்,  அரசின் சலுகைகளை  அஞ்சலகம் மூலம் பெறும் பென்சனர்கள் வருகைக்குப் பின்னர், அஞ்சலகமே முழுமையான 'பெயர், முகவரி, இருப்பு, இறப்பு'களின் பில்டராக மாறிவிட்டது. வட்டார போஸ்ட் மேன்களின் கைகளில்தான் தமிழகத்தின் பெரு வெள்ளத்தின் தாக்கம் வேலை செய்ய ஆரம்பித்தது. பெரும்பாலான சீனியர் சிட்டிசன்களிடம் போஸ்ட் மேன்கள் கேட்ட எந்த ஆவணமும் கைகளில் இல்லை. ஒவ்வொரு மாதமும் பென்சன் தாரர்களிடம் பணம் வாங்கியதற்கான 'சிலிப்' ஒன்றை போஸ்ட் மேன்கள் கையில் கொடுத்து விட்டுப் போவார்கள். அந்த 'சிலிப்'பும் சேர்த்தே இந்த பெருமழையில் காணாமல் போய்விட்டது.

வாக்காளர்களை லிஸ்ட்டில் இப்படித்தான் தொலைத்தார்கள்...

இந்த இடத்தில்தான் "வாக்காளர்கள் -அரசு உதவித் தொகை வாங்குபவர்கள், வாக்களிக்க தகுதியற்றவராய் ஆகிப் போனார்கள்" கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரிகளில் மிக இயல்பாக நடந்திருக்கும் ஆதரவற்றோருக்கு எதிரான மாபெரும் துரோகம் இது... எந்த ஆதாரமும் இல்லாதவர்களாக அறியப்பட்ட இவர்கள் இதன் தொடர்ச்சியாகத்தான் 'உயிரோடிருக்கும் பட்டியலிலும் இல்லாதவர்கள்' ஆகியிருக்கிறார்கள். போஸ்ட் ஆபீசில் இருந்து மிகவும் சின்சியராக, பெயர் நீக்கம் லிஸ்ட்டில் வந்தவர்களை "இவர்கள்- இல்லாதவர்கள்" என்று வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகத்துக்கு தகவலைக் கொடுத்து விட்டனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், வாக்காளர் சரிபார்ப்பை கையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையரகத்துக்கும் இந்தப் பட்டியல்கள் போய்ச் சேர்ந்து விட்டன.  இப்படித்தான் கட்சி பாகுபாடு இல்லாமல் வாக்காளர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையரகமும், "நீங்களெல்லாம், இனிமேல் உயிரோடு இல்லை" என்று சொல்லாமல் சொல்வது போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த 'சரண்டர்' பட்டியலில் இருந்த பெயர்களை  தங்கள் சிஸ்டத்தில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார்கள்.  அரசின் ஆயிரம் ரூபாய் பென்சனை ஏதாவது பெட்டிக்கடையில் அப்படியே கொடுத்து வைத்து விட்டு தினமும் பத்தோ, இருபதோ கேட்டு வாங்கி அதை மட்டுமே டீ, பிஸ்கெட்டுகளுக்கு செலவிட்டு உயிர்வாழ்ந்து வந்த பென்சன்தாரர்கள் வரும் மாதங்களில் அரசு நீக்காமலே "இல்லாமல்" போய் விடுவார்கள் என்பதே உண்மை."

இந்த தகவலுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து விளக்கம் கேட்டோம். டபுள் என்ட்ரி, ஒரே போட்டோ, ஐந்து முகவரிகள் என்று வாக்காளர் பதிவு நடைமுறையில் அதிகளவு இருக்கின்ற குளறுபடி களையும் சொன்னோம்.

டபுள் என்ட்ரீ வாக்காளர் கார்டுகள் அதிகமாக சிக்குகிறதே?


"டபுள் என்ட்ரீ கார்டுகள் குறித்த லிஸ்ட்டை சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த மண்டல அலுவலகங்களில் வாக்காளர் லிஸ்ட்டை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம். படிவம் 7-ஐ பயன்படுத்தி நீக்கத்தை சரிசெய்து பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

திமுகவினர் பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டு புகாராகி இருக்கிறது அல்லவா?

புகார்கள் சொல்லப்படுகிறது. நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி விட்டோம். வாக்காளர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளனர் என்றால் அதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் சரி பார்த்து விட்டு சேர்க்க தயாராக இருக்கிறோம். வாக்காளர்களை பெயர் நீக்கம் செய்வதற்கு ஒன்றுமில்லை.  எங்கள் மீதான புகார்களுக்கு முன்பாகவே நாங்கள் பெயர் சரிபார்ப்பு விபரங்களை  மாவட்ட வாரியாக, ஆட்சியர் அலுவலகம் மூலமாக பெற்று சரிபார்த்து விடுகிறோம்.

முதியோர் பென்சன், கணவனால் கைவிடப்பட்டோர்களின் வாக்குரிமைகளே அதிகளவில் பறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் நேரடியாக ஆய்வு செய்ததில் அறிந்தோம். போஸ்டல் துறையின் லிஸ்ட்டில் விடுபட்ட பெயர்களைப் பெற்று தேர்தல் ஆணையம் அந்தப் பெயர்களை நீக்குகிறதா?


கண்டிப்பாக இல்லை. இதில் போஸ்டல் துறையின் பங்களிப்பு இல்லை.  நாங்கள் மாநகராட்சியிடமிருந்து  2009 முதல் இப்போது (2016) வரையிலான டெத் சர்ட்டிபிகேட் லிஸ்ட்டை வாங்கி இருக்கிறோம். அதில் உள்ளபடி,  இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும். அதை நாங்கள் போஸ்டல் துறையில் இருந்து வாங்குவதில்லை, வாங்கவும் முடியாது, பிறப்பு- இறப்பு பதிவு மாநகராட்சியில்தான் கிடைக்கும். இந்த 'நீக்கம்' லிஸ்ட்டை மொத்தமாக அனைத்துக் கட்சியின் கைகளுக்கும் அனுப்பி விடுவோம். இதில் ஒளிவு, மறைவுக்கு வேலையே இல்லை.

மாநகராட்சிகளிடம் நீங்கள் இப்படி டெத் லிஸ்ட்டை வாங்கி விடுவது நல்ல விஷயம்தான். "பென்சனர்கள்" உரிய ஆவணங்கள் கொடுக்காத பட்சத்தில் அவர்களின் பெயர்களை 'பென்சனர்' பட்டியலில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நீக்கி விடுகிறார்கள்... அந்த பட்டியல் நீங்கள் 'லிஸ்ட்' வாங்குவதாகச் சொல்லும் மாநகராட்சி அல்லது ஆட்சியர் அலுவலகங்களுக்குத்தானே போகிறது? அப்போது 'இறந்தவர்' பட்டியலோடு, 'இல்லாதவர்' என்ற லிஸ்ட்டில் வரும் இவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் என்பது மிக இயல்பாக நடந்து விடுமே?

இல்லை, இல்லை.. நாங்கள், நீங்கள் குறிப்பிடுகிற அம்சங்களையும் கவனத்தில் வைத்தே பட்டியல் சரி பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு திருத்தப் பட்டியல் முகாம் விரைவில் நடத்தவுள்ளோம். அதில் விடுபட்ட நபர்கள் விபரங்களை சொல்லி தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தொகுதிக்கு 250 பேர் என்று டோர் டூ டோர் செக்கப் செய்து முடிக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. பூத் லெவல் பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது. எந்த இடத்திலும் குளறுபடி நடக்க வாய்ப்பில்லை..." என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

நாம் விடைபெற்று கிளம்பும்போது, "நீங்கள் குறிப்பிடும் 'பென்சனர்' லிஸ்ட்டில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டது குறித்து நான் விசாரிக்கிறேன்" என்றவர், அப்போதும் ஒரு 'பன்ச்' ஆக,  விடுபட்டிருக்க வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும் என்றார்.


ஆணையம் மறந்த  செல்போன் மெசேஜ்

....வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பெயர்கள் விடுபட்டு விட்டால் படிவம் 7- ஐ பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். அவர்கள் பெயர் சேர்க்கப் பட்டு விடும். அப்படி சேர்க்கப் படாத பட்சத்தில் 'ஏன் சேர்க்கவில்லை' என்ற காரணத்துடன் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பப் பட்டு விடும்.... இப்படி சொன்னது தேர்தல் ஆணையம்தான். படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும் அதில் இடம் பெறாது போய் விட்ட பத்துக்கும் மேற்பட்டோரிடம் பேசியபோது, "நீக்கம் குறித்த காரணம் மெசேஜாக வரவில்லை" என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆதார் கதையும் இதுதான்

ஆதார் அட்டைக்கு இன்று வரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழ்நாட்டில் பேசப்படுகிற தமிழை மட்டும் பேசத் தெரியாதவர்கள். இவர்களிடம் பொதுமக்கள் எந்த விளக்கமும் கேட்டு பதிலை வாங்க முடியாது. உதாரணமாக, ஆங்கிலத்தில் மோகன் என்ற பெயரை இவர்கள் சிஸ்டத்தில் டைப் செய்து விட்டு அதே பெயரை தமிழில் டைப் செய்ய ஒரு தமிழ் டைப்பிஸ்டை தேடுவதும், ஏற்கனவே அந்த தமிழ் டைப்பிஸ்டிடம் நான்கு பேர், ஆங்கிலத்துக்கான தமிழ்ப் பெயரை டைப் செய்து வாங்க காத்திருப்பதும் நடைமுறையில் பார்க்கலாம். வேலைப் பளு காரணமாக, இப்படி நிறைய மோகன்களும், குமார்களும் தங்கள் பெயரை ஒரு மொழியில் மட்டும் டைப் செய்த நிலையில் தங்களுக்கான 'ஆதார்' வாங்கிக் கொண்டு போவது அன்றாடக் காட்சி. ஒரு சிலர் குழப்படியாக தமிழில் மோகனுக்கு, ஆங்கிலத்தில் குமார் என்ற பெயரை அடித்து வாங்கிக் கொண்டு போவதும் கண்கூடான ஒன்று.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராக, ஐ.சி.எஸ். அதிகாரி  சுகுமார்சென் இருந்த (1950 -58) காலகட்டத்தில் மக்கள் தொகை இருந்த நிலை வேறு. இன்று தமிழகத்தில் மட்டுமே (இறுதி செய்யப்பட்ட (?!) வாக்காளர் பட்டியல்படி) 5.79 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.

காஞ்சிபுரத்தின் சோழிங்கநல்லூர் தொகுதிதான் அதிக வாக்காளர்களைக் (5,75,773) கொண்ட  தொகுதி என்றும், நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர் (தனி) தான் குறைந்த வாக்காளர்கள் (1,63,189) கொண்ட தொகுதி என்றும் கூட்டிக் கழித்து கணினி வழியாக இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்திடும் நவீனம் வளர்ந்திருக்கிறது. நவீனம் வளர்ந்து விட்டதே என்பதற்காக அந்த நவீனத்தை கற்காத அப்பாவி பாமரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது, ஒருசாராரின் உணர்வுகளை வெளியில் சொல்ல விடாமல் தடுத்து நிறுத்தும் சர்வாதிகார போக்கே. தேவை ஒரு போர்க்கால நடவடிக்கை. இல்லையென்றால் அஜீத் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய "சிட்டிசன்" சினிமாவின் அத்திப்பட்டி கிராமம் போல தமிழகம் வரலாற்றில் தொலைந்து போனது என்ற அழியாப் பழிச் சொல் நிலைத்து விடும்.

-ந.பா.சேதுராமன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close