Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சகோதரர்களே.... உங்கள் சகோதரிகள் நலமா?

நண்பர்களிடையே ஒருவருக்கு ஒருவர் "மச்சான், மாமா, மச்சி" என்று ஜாலியாக அழைத்துக்கொள்வது போன்று, நண்பனின் தங்கையை காதலிப்பது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

ஏனெனில் பெண்களை சக மனுஷியாக மதிக்கும் பக்குவம் இன்னும் முழுமை யாக ஆண்களுக்கு கை கூடவில்லை. எந்தவொரு நாளாகட்டும்,  செய்தித்தாள்களில் 'கற்பழிப்பு' என்ற வார்த்தை இடம்பெறாமல் இருப்பதில்லை. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த நிர்பயாவின் விஷயத்திலிருந்து,  தினம் தினம் மறைக்கப்படும் ஏராளமான பெண்களின் மனக்குமுறல்கள் வரை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள். 

நாம் தவறு செய்வது எங்கே?

ஊடகங்கள் பெரிதாக்கும் ஒவ்வொரு வன்கொடுமைக்கும் நாம் உடனடியாக கொந்தளிக்கிறோம். ஆர்ப்பாட்டங்கள்,  மறியல்கள், விவாதங்கள் செய்கிறோம். அரசுகளும் அறிக்கைகள் விடும். ஆனால் அதன் தாக்கம் ஒரு வாரம் கூட நிற்பதில்லை. வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு  கடுமையான சட்டத்திருத்தமோ அல்லது தண்டனைகளோ எப்போதுமே குற்றங்களைக் குறைத்தது இல்லை என்பது அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. நாம் எங்கே தவறு செய்கிறோம்? நாம் என்னதான் செய்ய வேண்டும்?

ஏன் இயல்பு வன்கொடுமையாகிறது?


பாலியல் வன்கொடுமைகள், ஈர்ப்பு மற்றும் ஆசையின் உச்சக்கட்ட வெறிபிடித்த நிலை என்று கூறலாம். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது அனைத்து பாலினத்திற்கும் இயல்பான ஒன்று. ஆனால் அது வக்கிரமாக மாறும்போதுதான் இயல்பு,  தவறான செயலாக மாறுகிறது. இந்த வக்கிர செயல்களுக்கு சிறுமிகளிலிருந்து வயதான கிழவிகள் வரை இரையாகியிருக்கிறார்கள் என்பதற்கு பதிவுகள் இருக்கின்றன. ஏன் இறந்த பிணங்களைப் புணர்ந்த கதைகளும் இருக்கின்றன.

ஏன் இயல்பான ஈர்ப்பு இவ்வளவு கொடூரமானதாக வேண்டும்? நமக்குள் இருக்கும் பிரச்னைதான் என்ன? பொதுவாக இதுவரை வெளியாகிய குற்றங்கள் அனைத்திலும் விளிம்பு நிலை மனிதர்களே குற்றவாளிகளாக உள்ளார்கள். அவர்கள் மட்டும்தான் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்களா? அப்படியென்றால் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்களிடையே பாலியல் சுரண்டல்கள் நடப்பதில்லையா? அவர்கள் ஏன் குற்றவாளிகளாக்கப்படுவதில்லை?

முதலில் நிறுத்துங்கள்

பெண் இந்த நேரத்தில் எதற்காக வெளியே போக வேண்டும்? அவள் ஏன் கிளர்ச்சியூட்டும்படியான உடைகளை அணியவேண்டும் என்பது போன்ற வினாக்களை முற்போக்குவாதிகளும்,  நாசூக்காக பெண்ணின் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களின் சுதந்திரத்தை கையகப்படுத்தும் செயலாகத்தான் செய்துவருகிறார்கள். இதுதான் நாம் கொண்டாடும் சுதந்திரமா?

இவற்றையெல்லாம் காரணமாகக் காட்டி,  பெண்களை வன்கொடுமை செய்வதோடு மட்டுமில்லாமல் பெண்களை குறை கூறியே தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்கக் கூட்டத்தின் செயலை என்னதான் சொல்வது? 

இப்போதிருக்கும் சமூகத்தில் ஒரு பெண்மீது நிகழ்த்தப்படும் வன்மமும் காழ்ப்புணர்வும் அவளது வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. என்னதான் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக இருந்தாலும், அவள் மீது விழும் மற்றவர்களின் பார்வை அடியோடு மாறிவிடுகிறது. ஏன் சொந்த வீட்டிலேயே அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் கவலையைத் தங்கள்  முகத்தினின்று மறைத்துவிட முடியுமா? ஏனென்றால் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும் ஒரு பெண்ணின் உணர்வுகள் குடும்பத்தின் கெளரவத்தோடு பிணைக்கப்பட்டுவிட்ட அவலம்தான் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. அதிலிருந்து ஒரு பெண் விடுபடுவது மிகக் கடினம்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு பாலியல் வன்கொடுமைக்குப் பின்னும், எத்தனை மரணங்கள், எத்தனை தற்கொலைகள் நடக்கிறது என்பதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அதனால் தயவு செய்து பெண்ணைக் காரணம் காட்டுவதை முதலில் நாம் நிறுத்திவிட்டு நம் பிரச்னை என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்களின் பிரச்னை என்ன?
 
பாலியல் உணர்வுகள்,  ஆண்களை விடப் பெண்ணுக்குத்தானே அதிகம் என்று அறிவியல் சொல்கிறது. ஆனால் பாலியல் வன்கொடுமையை செய்வது பெண்களா... ஆண்களா? இங்குதான் ஆண்களின் பிரச்னையே ஆரம்பமாகிறது. ஆண்டாண்டுகளாக பெண்ணின் மீது நடத்திவந்த ஆணாதிக்க மனப்பான்மை,  நம் விருப்பத்துக்கு பெண்களை இணங்க வைக்க முயற்சி செய்வதில் வந்து நிற்கிறது. அதற்கான வாய்ப்புகளை காதல் வலையோ, பணமோ ஏற்படுத்தி தருகிறது என்றால்,  வன்கொடுமைகள் மிக சாதாரணமாக பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாமல் நடந்து முடிந்து விடுகிறது.

இவை இரண்டும் கைக்கொடுக்காத பட்சத்தில்,  வன்முறையைக் கையில் எடுக்கிறது ஆண் வர்க்கம். தான் ஆண் என்று மார்தட்டும் இவர்கள்,  இருட்டும் தனிமையும் கிடைத்தால் பெண்களைச் சூறையாட தயங்குவதில்லை.

எங்கும் ஆண்களே இருந்தால்... பிறகு எப்படி?


இன்னமும் நம் சமூகத்தில் ஆண் பெண் சமநிலை ஏற்படவில்லை. எல்லா இடங்களிலும் ஆண்களே அதிகமிருக்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கெதிராய் பேசுபவர்களிலும்,  சட்டமியற்றுபவர்களிலும் ஆண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களும் சுற்றி வளைத்து பெண்ணின் பாதுகாப்பு என்று சொல்லி அவள் மீதே குற்றம் சொல்கிறார்கள்.  பெண்ணுக்கு மட்டும் கட்டுப்பாடுகள். ஆனால் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் கடந்து வர நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டுமோ?. சரி, கலாச்சார உடைகளில் முழுவதுமாக போர்த்திக்கொண்டு வந்தால் மட்டும் பெண்களை,  ஆண்கள் என்ன தங்கள் சகோதரியாகவா பார்க்கிறார்கள்? இங்கு தனிமையும் வலிமையும்தான் ஒரு பெண்ணை அடையப் போதுமானதாக இருக்கிறது.

வேரூன்றிக் கிடக்கும் வக்கிரம்


பால் உறுப்புகள் பற்றிய வக்கிரங்கள்,  இந்த சமூகத்தால் குழந்தைகளின் அறியா பருவத்திலிருந்தே விதைக்கப்படுகிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்வதிலிருந்து ஆரம்பமாகிறது. குடிசைப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இருக்கும் சூழலும், நாகரிகம் என்ற பெயரில் நகரத்தில் தகாத வார்த்தைகள் ஆங்கிலத்திற்கு மாறியிருப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். உறுப்புகளைச் சொல்லி திட்டுவது, கழிப்பறைகளில் கிறுக்குவது  தொடங்கி ஒரு பெண்ணை பொதுவெளியில் அவமானப்படுத்தி, அவளுடைய பிறப்புறுப்பை சிதைப்பதில் போய் முடிகிறது.

பெண்கள் தங்களையும்,  ஆண்களையும்,  மனித வாழ்க்கையையும் புரிந்துகொண்டிருக்கும் அளவுக்கு ஆண்களுக்கு ஏன் புரிவதில்லை. பெண்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட ஆண் என்று செய்திகள் எதுவும் இங்கே வருவதில்லையே...! ஆண்களுக்கு மட்டும் எப்படி தோன்றுகிறது? பாலுறவில் இருவரும் மனம் ஒத்து ஈடுபட்டால்தான் இன்பம் என்பதை ஏன் ஆண்கள் உணர்வதே இல்லை?

ஆண் பெண் இருவரும் விருப்பத்துடன் ஈடுபடவேண்டிய பாலுறவை, விரும்பாத ஒருவரின் மீது பிரயோகிப்பதில் எந்த இன்பமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள,  ஆண் மட்டும் ஏன் மறுக்கிறான். இதற்கு ஒவ்வொரு ஆண் மனதிலும் பல நூறு ஆண்டுகளாய் வேரூன்றிக் கிடக்கும் ஆதிக்க மனப்பான்மை மட்டுமே காரணம்.

பெண்ணை புரிந்துகொள்ளுங்கள்

ஒரு பெண் நினைத்தால்,  மெய்மறந்த நிலையில் ஆணின் உறுப்பை அறுத்தெறிய அவளால் முடியும். ஆனால் அவர்கள் ஆண்களைப் போல வக்கிரமாக,  கொடூரமாக நடந்துகொள்வதில்லை. அவர்கள் மென்மையானவர்கள். அதனாலேயே அவர்கள் மீது ஆண்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை.

சகோதரர்களே... சகோதரிகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்


ஒவ்வொரு ஆணும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பெண்ணைப் பார்க்கும் பார்வை மாற வேண்டியிருக்கிறது. இதற்கான விழிப்புணர்வை,  புரிதலை ஆண்கள் தங்களுக்குப் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். பாலியல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு யாரும் இங்கு வாழவே முடியாது. ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமூகம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் புரிந்துகொள்வதும் இங்கே அவசியமாகிறது. ஆண் பெண் இணைந்து வாழும் அழகான வாழ்வின் அர்த்தத்தை உணரவேண்டும். பெண்களை, சகோதரிகளாக வேண்டாம் குறைந்தபட்சம் சக மனுஷியாய் நினைக்க வேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்திலிருந்து முதலில் தொடங்க வேண்டும்.

- ஜெ. சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close