Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விடுதலையை விரும்பினோம்... விவசாயத் தொழிலுக்கு வந்தோம்!' - ஏர் முதல் ஏர் கலப்பை வரை!

எச்சரிக்கை: இதை மற்றொரு கதையாக கடந்து விடாதீர்கள். கட்டுரை கொஞ்சம் நீளமானதுதான். இதைப் படிக்கும் அளவு உங்களுக்கு பொறுமை இல்லையென்றால், அதிக பொறுமை தேவைப்படும் விவசாயத்தை உங்களால் வெற்றிகரமாக நிச்சயம் செய்ய முடியாது.

சிங்கை to ரெங்காபுரம்:


'பாஸ், சிங்கப்பூரிலிருந்து ஒருவர் வந்து,  இங்கு அழிந்து வரும் நாட்டு இன மாடுகளை வளர்த்து கொண்டிருக்கிறார்'. இந்த ஒற்றைவரியில்தான் பிரகாஷ், எனக்கு நண்பரின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மென்பொறியாளர்கள், பன்னாட்டு நிறுவனத்தில அதிக சம்பளத்துல வேலை பார்த்தவர்கள் விவசாயத்தை நோக்கி வருவது ஆரோக்கியமானதாக இருந்தாலும், அவர்கள் குறித்து இன்னொரு கருத்தும் இருக்கத்தான் செய்கிறது, “ஆமாம்.... நிறைய சம்பாரிச்சுட்டு, விவசாயத்துக்கு வருவது இப்ப ஃபேஷன் ஆகிருச்சு... இவங்களுக்கு எங்கே விவசாயத்தோட கஷ்டம் தெரிய போகுது... இவங்க நிச்சயம் நிலத்துல இறங்கி வேலை பார்க்க போறது இல்ல.. சும்மா மர நிழலில் கட்டிலில் படுத்துகிட்டு, ஆள் வைச்சு வேலை பார்க்க போறாங்க... அட போங்க சார்...” - இது பெருவாரியான மக்களின் கருத்து. சொல்லப்போனால் நானும் அப்படிப்பட்ட கருத்து கொண்டவர்களில் ஒருவன்தான்.

ஏன் சிங்கப்பூரிலிருந்து வந்து இங்கு நாட்டு இன மாடுகளை வளர்க்க வேண்டும்...? இதில் ஏதேனும் பன்னாட்டு சதி இருக்குமோ...? என்று பத்திரிக்கையாளனுக்கே உரிய ஒரு சந்தேகமும் கூடவே எழுந்தது. ஆனால், பிரகாஷை தருமபுரி மாவட்டம் ரெங்காபுரத்தில் உள்ள அவர் பண்ணையில் பார்த்தபோது, முதல் சந்தேகம் தகர்ந்தது. ஆம். அவர் கட்டிலில் படுத்துக் கொண்டு வேலை வாங்கவில்லை; தொழிலாளர்களில் ஒருவராக அவர்களுடன் சேர்ந்து மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டிருந்தார்.

வேலையை முடித்துக்கொண்டு எங்களுடன் பேச வர, ஏறத்தாழ ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகி இருந்தது. அதற்குள் நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள அவரது பண்ணையை சுற்றிவிட்டு வந்தமர்ந்தோம்.

“ஸ்கூல டேஸ்ல, என் மார்க்கை பார்த்துட்டு, எங்க அப்பா சொல்லுவாரு... உன் படிப்புக்கு செலவழிக்கிற பணத்துக்கு, நாலு மாடுகளை வாங்கி விடலாம்டா... அவர் சொன்னதெல்லாம் உண்மையா ஆயிடுச்சு... என்ன ஒண்ணு, அவர் வாங்கி தரல... சொந்தமா சம்பாரிச்சு நானே வாங்கிட்டேன்.” சிரித்துக்கொண்டே பேச துவங்கினார் பிரகாஷ். பிரகாஷின் பூர்வீகம் தமிழ்நாடு. சிறு வயதிலேயே பெங்களூரில் குடியேறியவர். சிங்கப்பூரில் பல லட்சங்கள் சம்பளத்தில் வேலை பார்த்தவர்.

இலட்சங்கள் தந்த வேலையை விட்டுட்டு, நீங்கள் விவசாயத்தை நோக்கிவர என்ன காரணம்...? என்ற எளிமையான கேள்விக்கு, அவர் அளித்த பதில் மிக ஆழமானது.

சோளப்பாலும், உணவரசியலும்

“ஒரு மதியவேளை, சிங்கப்பூரில் நான் பணி புரியும் நிறுவனத்தில், என் நண்பன் அனுப்புடன் சோளப்பால் (Corn Milk) குடித்துக்கொண்டே பேசி கொண்டிருந்தேன். நண்பன் அனுப், ‘நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், அதனால்தான் நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது’ என்றான்.

ஆனால், என்னால் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'மரபணு மாற்றப்பட்ட உணவுகள், ரசாயன விவசாயத்தால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் என நாம் உண்ணும் உணவில் பாதிக்கும் மேல் விஷம்... பிறகு எப்படி நாம் ஆரோக்கியமான உணவை உண்கிறோம் என சொல்ல முடியும்...?' என்பதாக என் பதில் இருந்தது. பின் அங்கொரு அமைதி நிலவியது. 'ஆமாம் பிரகாஷ்... நீ சொல்வது உண்மைதான்' என அந்த உரையாடல் முடிந்தது.

“பிறகு... தினமும் உணவும் அதனுடன் பின்னப்பட்டிருக்கும் அரசியலையும் பேச துவங்கினோம். 'எந்த உணவு நிறுவனங்களுக்கும் நம் மீது அக்கறை இல்லை. அவர்களை பொறுத்தவரை நாமெல்லாம் கஸ்டமர்ஸ். நம் பாக்கெட்டில் இருக்கும் பணம் மட்டுமே நோக்கம்' என உணவு உற்பத்தியில் இருக்கும் பெரும் நிறுவனங்களை திட்ட தொடங்கினோம். ஆனால் ஒரு புள்ளியில் திட்டுவதை நிறுத்தி, தீர்வை தேட துவங்கிய போது, ஏன் நாமே நமக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடக் கூடாது என் யோசனை எழுந்தது.
நண்பன் நிஹாரும் இணைந்து கொண்டான் அந்த யோசனைதான், சிங்கப்பூரிலிருந்து தருமபுரி ரெங்காபுரத்திற்கு என்னை வரவழைத்தது.

நாங்கள் மூவரும் சேர்ந்துதான் இந்த நிலத்தை 2014-ல் வாங்கினோம்” என தான் ரெங்காபுரத்திற்கு வந்த காரணத்தையும்,  அதனுள் இருக்கும் உணவு அரசியலையும் விரிவாகச் சொன்னார்.

" நான் விவசாயத்திற்காக நிலம் தேடத் துவங்கியபோது இரண்டு விதிகள் மட்டுமே எனக்குள் விதித்து இருந்தேன். ஒன்று விலை குறைவாக இருக்க வேண்டும். மற்றொன்று, விவசாயிகளினால் கைவிடப்பட்ட நிலமாக இருக்க வேண்டும் என்பது. அந்த தேடலுக்கு கிடைத்த விடைதான் இந்த 4 ஏக்கர் நிலம். சிறுதானியம், காய்கறிகள் பயிரிட்டுள்ளேன். நூற்றுக்கணக்கான மரங்களை நட்டுள்ளேன்" என்கிற பிரகாஷின் நிலத்தில் 22 கிர் மாடுகளும், 3 புங்கனூர் வகை மாடுகளும் இருக்கிறது.

உணவு உற்பத்தி சரி... புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால், நாட்டு இன மாடுகள் வளர்க்க காரணம் என்ன... ? என்ற  கேள்விக்கு, அவர் அளித்த பதில் பொருள் பொதிந்தது.

“எல்லாம் சுயநலம்தான் சார்... ஒற்றை பயிர் நட்டு, அதனை அறுவடை செய்து உண்பது வேளாண்மை கிடையாது. அது உங்களை உரங்களுக்காக திரும்பவும் நிறுவனங்களை சார்ந்து இருக்க செய்யும். பிறகு நான் எப்படி ஆரோக்கியமான விவசாயம் செய்கிறேன் என்று சொல்ல முடியும். வேளாண்மை என்பது அதற்கான இடுபொருள்களையும் நாமே உற்பத்தி செய்வது. அதற்கான தீர்வு நாட்டு மாடுகள் மட்டுமே. நாட்டு மாடுகள் தான் வளர்க்க போகிறோம் என நான் முடிவெடுத்தவுடன், என்னுடைய விருப்பமாக இருந்தது அழிவில் இருக்கும் மாட்டு வகைகள் தான். அப்படியாக தான் சுரபியும், ஆதிராவும் (அவர் பண்ணையில் இருக்கும் மாட்டின் பெயர்கள்) என் பண்ணைக்கு வந்தன“.

தற்சார்பு வேளாண்மைக்கு எடுத்துக்காட்டாக இவர் பண்ணை இருக்கிறது. மின்சாரத்தைக்கூட தானே உற்பத்தி செய்து கொள்ளுவதாகக் கூறும் பிரகாஷ் ”நான் 2.5  Kilo-volts amph மின்சாரத்தை, சோலார் மற்றும் காற்றாலை மூலமாகவும் உற்பத்தி செய்து கொள்கிறேன்” என்கிறார்.

கடைசியாக பிரகாஷிடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருந்தன. உண்மையில் அவை என் கேள்விகள் மட்டுமல்ல... 'சம்பாரிச்சுட்டு, விவசாயத்துக்கு வருவது இப்ப ஃபேஷன் ஆகிருச்சு!' என அலுத்துக்கொள்ளும் அனைவரின் கேள்விகள்.

எது உங்களை போன்றவர்களை விவசாயம் நோக்கி இழுக்கிறது..?

சுதந்திரத்திற்கான தேடல் மட்டும்தான் காரணம் சார். நான் இங்கு யாருக்கும் பதில் கூற வேண்டிய தேவையில்லை. மண்ணிற்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதும். முன்பெல்லாம், ஏன் கோபப்படுகிறோம் என தெரியாமலேயே வீட்டில் பல நாட்கள் கத்தி இருக்கிறேன், சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி அல்ல.. மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், அதே நேரம் நாம் ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும். தவறினோமென்றால், விவசாயத்தில் நம் தோல்வி மோசமானதாக இருக்கும்.

உண்மையை சொல்லுங்கள்... வேளாண்மை லாபகரமானதாக இருக்கிறதா...?

சந்தேகமில்லை. லாபமானதுதான். லாபம் என்பதை நீங்கள் பணமாக மட்டும் கணக்கிடாதீர்கள். மகிழ்ச்சி, குடும்பத்துடன் செலவிடும் நேரம், ஆரோக்கியமான உணவு, நோயற்ற வாழ்வு என்பதையும் சேர்த்து கணக்கிடுங்கள். மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவரிடம் நீங்கள் கேளுங்கள், அவர் மாதம் மருத்துவத்திற்கும், ஆரோக்கியமான உணவிற்கும், பொழுதுபோக்கிற்கும் எவ்வளவு செலவிடுகிறார் என்று. அவர்கள் அனைவரும் இங்கு கடனில்தான் வாழ்கிறார்கள்.

விவசாயத்திலும் பிரச்னைகள் இல்லாமல், இல்லை. பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இடைத்தரகர்களை ஒழித்துவிட்டொமென்றால் நிச்சயம் நாங்கள் பணமாகவும் அதிகம் சம்பாதிக்கத் துவங்கிவிடுவோம். அதற்கான வேலைகளில்தான் இப்போது நான் இருக்கிறேன்.

 

100 சதவீத மகிழ்ச்சி


உங்களிடம் பேங்க் பேலன்ஸ் இருக்கும், நீங்கள் விவசாயத்தில் ரிஸ்க் எடுக்க முடியும். ஆனால், எளிய விவசாயினால் அது முடியுமா...?

எதை நீங்கள் ரிஸ்க் என்று சொல்கிறீர்கள்...? ரசாயனம் போடாமல் விவசாயம் செய்வதையா...?.  (புன்னகைக்கிறார்) இந்த ரிஸ்க் என்பது பசுமை புரட்சி ஏற்படுத்திய மனநிலை. நான் விவசாயிகளை செலவு செய்யாதீர்கள் என்கிறேன். அவர்கள் உங்களை செலவு செய்ய சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் நான் ரிஸ்க் எடுக்க சொல்கிறேன் என்கிறீர்கள். சரி. விவசாயிகளின் பொது புத்தியை சிதைத்து விட்டார்கள். இது மாற சில காலம் ஆகும்.

ஆனால், விவசாயிகளின் அச்சத்தில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு இந்த பண்ணையின் கட்டமைப்பை ஏற்படுத்த சில லட்சங்கள் ஆனது. அதற்கு என் நண்பர்கள் அனுப் மற்றும் நிஹார் உதவினார்கள். ஆனால், பெரும்பாலான விவசாயிகளிடம் விவசாய கட்டமைப்பு இருக்கிறது. அவர்கள் துணிந்து ரசாயனத்தையும், ஒற்றை பயிர் சாகுபடி செய்வதையும் கைவிட்டார்கள் என்றால், அதிக லாபம் ஈட்டலாம். இது என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

நீங்கள் செய்வதை ஆர்கானிக் விவசாயம் என்று சொல்லலாமா...?

தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள். மான்சாண்டோ நிறுவனம், 25 சதவித GMO crop-ஐ, ஆர்கானிக்கா அறிவிச்சுருக்கு... பின்னே எப்படி நாம செய்யுறது இயற்கை வேளாண்மைனு, ஆர்கானிக் விவசாயம்னு சொல்ல முடியும். உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னா நேச்சுரல் ஃபார்மிங்னு சொல்லிக்கங்க.

பல இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், புரிந்து கொண்டு வாருங்கள். இதில் ச்சும்மா... கால் ஆட்டி கொண்டு பணம் ஈட்டலாம் என்று நினைப்பீர்களானால்... நீங்கள் தவறான முன் உதாரணம் ஆவீர்கள்” என்று சொல்லி முடித்தார்.

பிரகாஷ் உடனான நீண்ட உரையாடல் பல விஷயங்களை புரியவைத்தது. விவசாயம் வெறும் வணிகம் மட்டுமல்ல. அது சுதந்திரமான வாழ்வியல். அந்த சுதந்திரம்தான் இளைஞர்களை இழுக்கிறது. ஆனால், அதே நேரம் அந்த வாழ்வியல் எளிமையான வாழ்வை கோருகிறது.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close