Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாவூத் சகோதரருடன் நெருக்கம் காட்டிய தமிழ் நடிகை! (தாதா தாவூத் இப்ராஹிம் -தொடர்: 22)

தாவூத்திற்கும் பாலிவுட்டில் வலம் வந்த பல்வேறு நடிகைகளுக்கும் உள்ள தொடர்புகளை மும்பை மீடியாக்கள் எழுதி தள்ளின. அதன் தொடக்கமாக தாவூத்தின் டீமில் இருந்த பல்வேறு நபர்கள், அவர்களின் வசதிகளுக்கு ஏற்ப சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அதன் தொடக்கமாக தாவூத்தின் தம்பி அனிஸ்,  பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக மீடியாக்கள் எழுதித் தள்ளின. அந்த நடிகை தமிழ்ப்படங்களிலும் சில ஆண்டுகள் முன்னணி இடத்தில் வலம் வந்தவரும் கூட.

இந்த சம்பவத்தை பிரபல குட்கா வியாபாரி ஜோஷியே சொன்னதால் பிரச்னை வெளியே வந்தது. தாவூத் துடன் தொடர்பு வைத்து இருந்ததாலும், பாகிஸ்தானுக்கு சென்று தாவூத்தின் தம்பிக்கு குட்கா தயாரிக்க உதவிகள் செய்து வந்ததை மும்பையில் இருந்து கண்டுபிடித்த மும்பை போலீஸ், ஜோஷி மீது மகாராஷ்ட்ரா ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

அந்த வழக்கில் தனது 18  பக்க வாக்குமூலத்தில் “ 115 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை தாவூத்திற்காக கொண்டு சென்று பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். அனிஸ்க்கு குட்கா தயாரிக்கும் இயந்திரங்களையும், உதிரி பாகங்களையும் மும்பையில் இருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து கராச்சிக்கு அனுப்பி வைத்தேன். ஒரு நாள் அந்த பிரபல நடிகைக்கு பத்து லட்சம் ரூபாயை, மும்பை பாந்த்ராவில் உள்ள காரிட்டார் சாலையில் இருக்கும் அவரது பிளாட்டில் சென்று கொடுத்து விட்டு வந்தேன். இந்த பணத்தை அனிஸ்தான் கொடுக்க சொன்னார். அனிஸின் காதலிதான் அந்த நடிகை” என்று தெரிவித்து இருந்தார் ஜோஷி.

வாக்குமூலம் கொடுத்த அடுத்த நாள் தேசிய செய்திக்கான முக்கியத்துவத்துடன் செய்தித்தாள்களில் அது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த அந்த நடிகை,  “நான் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எனக்கு வேண்டாதவர்கள் பல்வேறு வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்” என்று மறுத்தார். அதன் பிறகு பல்வேறு கிசு கிசு செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

இது ஒருபுறம் இருக்க   பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் ஜாவேத் மியாண்டட்டுடன் கை கோர்த்தான் தாவூத். 1996- ம் ஆண்டு  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி போட்டி,  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  அப்போது ஜாவேத் மியாண்டட்,   பெங்களூரில் வைத்து மிகப்பெரிய அளவில் ஹவாலா பணத்தை ‘கை’ மாற்றியததாக புகார் எழுந்தது.

அந்த விளையாட்டு நடந்து கொண்டு இருக்கும் பொழுதே தாவூத்தின் ஆட்கள்,  ஹவாலா பணத்தை அங்கு வைத்து ‘கை’ மாற்றியது தெரிய வந்தது. அந்தக் சம்பவத்திற்கு ஜாவேத்தான் முக்கிய பொறுப்பு வகித்ததாக சொல்லுகிறார்கள். அன்று தொடங்கிய  தாவூத்-ஜாவேத்  கூட்டணி அடுத்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் உலகையே உலுக்கும் அளவு வளர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் மேலும் நெருக்கமாக, ஒருகட்டத்தில் தாவூத்-ஜாவேத் இருவரும் சம்பந்தியாகவே ஆகிப்போனார்கள்.

அந்த சம்பந்தம்தான் பாகிஸ்தானில் தாவூத் நிலையாக இருக்க அச்சாரம் போட்டது... அது எப்படி?

- சண்.சரவணக்குமார்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

    

  


      
                                                   


 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ