Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீப் போராளிகளே... பெண்கள் சிறுநீர் கழிக்க குரல் கொடுப்பீர்களா? #WhereisMyToilet

பீப் பாடலுக்கு எதிரான போராளிகள் மட்டுமல்ல... பெண்கள் நலம் தொடர்பாக போராடும் அனைத்து தரப்பினரின், மிக முக்கியமாக அரசாங்கம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கு... இந்த கட்டுரை!

இப்போது நான் கல்லூரி மாணவி. தஞ்சாவூர், பாபநாசம் அருகே உள்ள  ஓரளவு வளர்ச்சியடைந்த சிறுபட்டினம்தான் என் ஊர். அப்போது ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருக்கும் இரண்டு தனிக் கழிப்பிடங்கள்,  ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும். எங்களுக்கு பொதுக்கழிப்பிடம்தான். அதுவும் சுத்தம் செய்யப்பட்டு இருக்காது. பொதுவாக எந்த அரசுப் பள்ளிகளிலும் கழிவறை,  யாராவது உயர் அதிகாரிகள் வரும்போதுதான் அவசர அவசரமாக சுத்தப்படுத்தப்படும். அதனால் பெரும்பாலும் எங்களுக்கு அந்த கழிவறையை உபயோகப்படுத்த பிடிக்காது. எனவே தண்ணீர் குடிக்க மாட்டோம். வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒரு முறை கழிவறை சென்றுவிட்டு பள்ளிக்குச் சென்றால், வீட்டிற்கு மாலை வந்தவுடன் முதலில் செல்வது கழிவறைக்குத்தான்.

எனக்கு அரையாண்டு தேர்வு முடிந்தபோது திடீரென தினமும் காய்ச்சல் அடித்தது. வயிற்றின் அடிப்பகுதி யாரோ ஈட்டியால் உள்ளே அமர்ந்து குத்துவதுபோல் இருக்கும். மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று மருந்து கடை அறிவுரைகள் கேட்டு சிகிச்சை எடுக்கும்  நடுத்தரவர்க்கத்தின் மனநிலை நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. கும்பகோணத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபின்தான் தெரிந்தது, ஜுரம் 106 டிகிரியை தாண்டியிருக்கிறது என்று. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல சோதனைகளுக்கு பிறகு மருத்துவர்கள் சொன்னார்கள், '... பயப்பட வேண்டாம். உயிரைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்புகிறோம்!' என்று.  என் அப்பா, அம்மாவுக்கு உயிருக்கு ஆபத்தான அளவு தங்கள் மகளுக்கு என்ன சிக்கல் என்றே புரியவில்லை. யூரினரி இன்ஃபெக்க்ஷன் எனப்படும் சிறுநீரக தொற்றுதான் அந்த உயிருக்கு ஆபத்து விளைவித்த சிக்கல்! ஒரு நிலத்தை விற்று மூன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,  இரண்டு மாத காலம் மருத்துவமனை வாசம், ஒரு வருட தொடர் சிகிச்சைக்குப் பின் உயிர் மீண்டேன்.

இது என் கதை மட்டுமல்ல. தமிழச்சிகள் அனைவரும் தினம் தினம், நொடிக்கு நொடி எதிர்கொள்ளும் இம்சைதான். நீங்களோ, உங்களுக்குத் தெரிந்தவர்களோ, உங்கள் வீட்டுப் பெண்களோ... யாரும் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாது. தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஊரின் நிலை மட்டுமல்ல, என் அக்கா ஒருவர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பகுதி நேர வேலை பார்க்கிறார். அதில் ஒரு பள்ளியில் கழிவறை இல்லை. இத்தனைக்கும் அது நகரின் பிரசித்தி பெற்ற பள்ளி. அவர் அடுத்த பள்ளிக்குச் செல்லும்போதுதான் கழிவறைக்குச் செல்ல முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், அவர் கழிவறை செல்ல இன்னொரு பள்ளி செல்ல வேண்டும்.

வட இந்தியாவில் தமிழகத்தின் நிலையை விட மோசமாக இருந்த (இப்போதும் இருக்கும்) பீகார் போன்ற மாநிலங்களில் நடிகை வித்யா பாலன் போன்ற பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண்கள், தன் தாலியை விற்று கழிவறை கட்டும், கழிவறை இல்லா வீடுகளுக்கு மருமகளாக செல்ல மாட்டேன் என்று கூறும் நிலைக்கு வந்து விட்டனர். தமிழகத்தோடு ஒப்பிடும்போது, சுகாதார வசதிகளில் பின் தங்கிய மாநிலங்கள் வளர்ந்து வரும் நிலையில்,  தமிழகத்தின் சுகாதார நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது.

பெரும்பாலும் படிப்பறிவு இல்லாத பெண்கள்,  சுகாதாரம் தனது உரிமை என்று உணர்ந்து,  அதற்காக தன் கணவனிடமும், சமூகத்திடமும் போராட வேண்டியே நிலையே இங்கு நிலவும்போது, மிக முக்கியமாக பேச வேண்டிய சுகாதார பிரச்னையை பற்றிப் பேசாமல், இரண்டு நாட்களில் திட்டிவிட்டு தூக்கிப்போட வேண்டிய ‘பீப் பாடலை’ திட்டுவதையே ஒரு இயக்கமாக மேற்கொண்டார்கள் நம்மவர்கள். அதில் ’ஸோ கால்டு பெண்ணியவாதிகளும்’ அடக்கம். பெண் சிசுக் கொலை, ஈவ் டீஸிங், பாலியல் தொல்லைகள் அளவுக்கு மிக தீவிரமாக விவாதித்து, தீர்வுக்கான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது இங்கு. ஆனால், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் யாரும் அதற்காக மெனக்கெடுவதாக தெரியவில்லை. 
 
அனைத்து தளங்களிலும் வசதி வாய்ப்புகள் நிரம்பிய தமிழகத்தின் தலைநகரம்,  பெண்களுக்கு பெரும்பாலும் நரகமாகவே அமைகிறது. ஒரு பெண் வேலைக்குச் செல்ல வெளியே கிளம்பினால், அவள் வெளியே செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் முன்பு அவள் குடித்த தண்ணீரையெல்லாம் கழிவறையில் சென்று வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் போகிற இடத்தில் கழிவறை இல்லாமல் நிற்க வேண்டும். அதுவே அவளுக்கு தப்பித்தவறி மாதவிடாய் காலமாக இருந்துவிட்டால்..... அது நரகத்தின் உச்சம்.

ஆண்களுக்கு சிறுநீரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் சிறுநீர் பைக்கும்,  அது வெளியேறும் துவாரத்திற்கும் இடையேயான இடைவெளி 20 செ.மீ. ஆனால், பெண்களுக்கோ வெறும் 5 செ.மீ. தான். மேலும் சிறுநீர்ப் பைக்கும் பிறப்புறுப்புக்குமான இடைவெளியும் மிகக் குறைவு. எனவே பெண்களுக்கான கழிவறை தேவை ஆண்களை விட அதிகம். ஏனெனில் சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு இரண்டும் அருகருகே இருப்பதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். அதுவும் போக பெண்கள் பொதுவாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் இன்னும் அதிகமாய் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி அதிகமாக இருக்கும். ஆனால், வெளியில் வேலைக்குச் செல்லும் (இங்கே பல கல்லூரிகளிலும் கழிவறை பிரச்னை இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்) பெண்களால், தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க முடியாது. மாதவிடாய் சமயங்களில் நாப்கினையும் மாற்ற முடியாது. சிறுநீரும் கழிக்க முடியாது. பொதுவாகவே பெண்களுக்கு சிறுநீர் பை நிரம்பியும், நீரை வெளியேற்றாவிட்டால் பிறப்புறுப்பில் ஏற்படும் வலியும் எரிச்சலும் சகிக்க முடியாது. மாதவிடாய் சமயங்களில் பிறப்புறுப்பில் ஏற்படும் வலி கொன்றெடுக்கும். சரியான நேர அளவில் நாப்கின்களை மாற்றவில்லை என்றால் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் இதனால் கர்ப்பவதிகளுக்கு கர்ப்பம் களையவும் வாய்ப்பிருக்கிறதாம். சிறுநீர் தொற்றுக்கள் உருவாவதற்கான வாய்ப்புகள்,  சாதாரணமாகவே அதிகமாக இருக்கும் உடல் அமைப்பை பெற்ற பெண்களுக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள் அதனை இன்னும் அதிகப்படுத்துகின்றன.

ஒரு ஆராய்ச்சியில் சராசரியாக 40 சதவீதப் பெண்கள் சிறுநீரக நோய் தொற்றினால் பாதிக்கப்படுவாதாகவும், 25 சதவீதப் பெண்களுக்கு தொற்று மீண்டும் மீண்டும் வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  50 முதல் 60 சதவீத பெண்கள் பருவம் அடைந்த வயதிலேயே சிறுநீர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கள நிலவரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். சிறுநீர் தொற்றானது 31 சதவீதம் ஈ – கோலி என்ற பாக்டீரியாவினால் வருகிறது. இது பரவும் தன்மை கொண்டது. சிறுநீரக நோய் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் தொற்று முக்கியமாக சுகாதார பற்றாக்குறையினாலேயே வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் பொதுவாக பயணம் செய்ய பேருந்தைக் காட்டிலும் ரயிலை விரும்புவதற்கான காரணம், அது பாதுகாப்பானது என்பதையும் தாண்டி,  அங்கு கழிவறை இருக்கிறது என்பதுதான். தப்பி தவறி ரயில் கிடைக்காமல் பேருந்தில் ஏறும் பெண்கள், எவ்வளவு தாகம் எடுத்தாலும் தொண்டையை மட்டும் நனைக்க குப்பியில் தண்ணீர் குடித்துக் கொள்வர். ஆண்களே, இதுதான் உங்கள் சகோதரி, தாய், மனைவி, குழந்தை, தோழி... ஆகியோர் எதிர்கொள்ளும் துயரம். இதைக் களைய என்ன நடவடிக்கை.. எப்போது மேற்கொள்ளப்படும்?

ஆண்களுக்கு சில மொபைல் டாய்லட்டுகள், நகரத்தின் வீதிகளிலே ஆங்காங்கே எட்டிப்பார்க்க,  பெண்களுக்கு அது மிகமிக அரிது. சென்னையில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கும் புறநகர் ரயில் நிலையங்களிலேயே கழிப்பிட வசதி கிடையாது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை உள்ள மார்க்கத்தில் குரோம்பேட்டை, எழும்பூர், பூங்கா மற்றும் சென்னை கடற்கரையில் மட்டுமே கழிவறை உள்ளது. தாம்பரத்திலேயே கிடையாது. வேளச்சேரி மார்க்கத்தில் இடையில் எங்குமே கழிப்பிட வசதி கிடையாது. உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் ஆசியாவின் ரெண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரினாவில் மூன்றே மூன்று கழிப்பிடங்கள்தான் உள்ளன. அதுவும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. அதே போல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. திருவான்மியூரில் கழிவறையே கிடையாது.

இருக்கும் சில கழிவறைகளிலும் உள்ளே நுழைந்ததும் வரவேற்பது நாப்கின்கள்தான். இந்த நகரில் ஐந்து ருபாய் இல்லாத பெண் சிறுநீர் கூட கழிக்க முடியாது. ஆண்களைப்போல் பெண்கள் தெருவில் நினைத்த இடத்தில் ‘அமர’ முடியுமா? பெண்களுக்கு எதிராக படங்களை,  பாட்டுக்களை எடுத்துக் குவிக்கும் இந்த சமூகம், அதற்கும் வரிந்துகட்டிக் கொண்டு வந்து அறிவுரை வகுப்பெடுக்கும். கழிவறை என்பது அடிப்படை வசதி இல்லையா? அதை மக்களுக்கு உறுதிபடுத்தவேண்டியது, சுகாதாரம் பற்றி விளம்பரங்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டிக் குவிக்கும் இந்த அரசுகளின் கடமை இல்லையா?

இது பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கப்பெண்களைப் பாதிப்பது இல்லை; காரணம் அவர்களால் ஒரு உயர் ரக வணிக வளாகங்களிலோ, உயர் ரக உணவகங்களிலோ சென்று கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், நடுத்தர, கீழ்தட்டு வர்க்கப் பெண்களின் நிலைதான் மோசம்.

அடிப்படை வசதியான கழிவறை வசதியை கூட,  குறிப்பாக பெண்களுக்கு செய்து தராத, சதுர கிலோமீட்டருக்கு 16,000 பேர் என்பதாக மக்கள் தொகை கொண்ட தமிழகத் தலைநகர், (தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை அடர்த்தியே சதுர கிலோமீட்டருக்கு 552 பேர் தான்), இந்தியாவின் பிரதான நகரங்களில் ஒன்று. இதை எல்லாம் தாண்டி சென்ற வருடம் கழிவறை பராமரிப்பில் முதலிடம் போன்ற விருதுகளை வாங்கிக் கொண்டதாக அறிவித்துக் கொள்வதெல்லாம், என்னைப் போன்ற பெண்களுக்கு அரசுகள் செய்யும் துரோகம்.

எந்த அம்மாவின் அய்யாவின் கைகளும் எங்கள் கண்ணீரை துடைக்கவில்லை! புல்லட் ரயில், மெட்ரோ ரயில் என்று ஏகத்துக்கும் பறக்கும் அரசாங்கங்கள் பெரு முதலாளிகளின் நலன்களை விடுத்து, தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது எப்போது? அதுவரை நாங்கள் சிறுநீர் கழிக்க முக்கி முனகிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா..!?

- ரமணி மோகனகிருஷ்ணன்

(மாணவ பத்திரிகையாளர்) 

ஓவியம்: ஹாசிப் கான்

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஆனந்த விகடனில் கழிப்பறை சிக்கல்கள் குறித்த கட்டுரை விகடன் பார்வையாக வந்திருக்கிறது.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அவள் விகடனில் கழிப்பறை கஷ்டங்கள் குறித்த பல தரப்பட்ட பெண்களின் பார்வைகள் குறித்த கட்டுரை வந்துள்ளது.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close