Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்சிகள் பேசிக்கொண்டே இருக்கின்றன... இளைஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள்!

து 2014, டிசம்பர் 29. தருமபுரியில் பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நம்மாழ்வாரின் முதல் நினைவு நாளன்று உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

அவர்கள் நினைவிற்கு வந்தது குப்பை மேடாக, தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் இருந்த இலக்கியம்பட்டி ஏரி. அதை சுத்தம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்கு உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி மறுக்கிறது. அதையும் மீறி, அவர்கள் டிசம்பர் 30, இலக்கியம்பட்டி ஏரிக்கரையில் குப்பை பொறுக்க திரண்ட போது, பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து அவர்களை தடுத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம். “நீங்கள் சுத்தம் செய்தால், மக்கள் எப்படி எங்களை மதிப்பார்கள்...?” என்பதுதான்.

பஞ்சாயத்து நிர்வாகம், ஏரியை புனரமைக்க மூன்று மாதங்கள் நேரம் கேட்கிறது. ஆனால் மூன்று மாதங்களில் அவர்கள் சிறு துரும்பையும் நகர்த்தவில்லை.  பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஏரியை தாங்களே தத்தெடுத்து, முழுவதையும் மீட்கிறார்கள் இளைஞர்கள். நிற்க. இதனுடன் மட்டும் இந்த கதை முடியவில்லை. இன்று அந்த இளைஞர்கள் ‘தருமபுரி மக்கள் மன்றம்’ என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி, அனைத்து சமூக பிரச்னைகளுக்கு எதிராகவும் இப்போது போராடி வருகிறார்கள்.

இது சேலம் மக்கள் குழுவின் கதை. சாலைகளை அகலப்படுத்த அரசு வரன்முறை இல்லாமல் மரங்களை வெட்டுகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்ட சில இளைஞர்களை மாவட்ட நிர்வாகம் உதாசீனப்படுத்துகிறது, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறது. இதனால் கொதிதெழுந்த இளைஞர்கள் கட்டமைத்த இயக்கம்தான், ‘சேலம் மக்கள் குழு’. இவர்கள் இப்போது சேலத்தின் அனைத்து சமூக, சூழலியல் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கிறார்கள், வீரியமாக போராடுகிறார்கள். சேலம் கஞ்சமலையில் உள்ள அரிய வகை தாதுகளை வெட்டி எடுக்க,  அரசு ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியபோது, இவர்களின் வீரியமான போராட்டம்தான் அதை தடுத்து நிறுத்தியது. அந்த மலை இன்னும் உயிருடன் இருக்க அந்த மக்கள் இயக்கமே காரணம்.

சென்னையை சேர்ந்த சில மென்பொறியாளர்களுக்கு, வந்தவாசியில் சில பழங்குடிகள், கொத்தடிமைகளாக ஒரு குவாரியில் இருக்கும் தகவல் கிடைக்கிறது. அவர்கள் அரசின் கவனத்திற்கு இதை எடுத்து போகிறார்கள். ஆனால், எந்த பலனும் இல்லை. அந்த இளைஞர்களின் தொடர் முயற்சியால், அந்த பழங்குடிகள் மீட்கப்படுகிறார்கள். இது ‘சேவ் தமிழ்ஸ்' இயக்கம் உருவான கதை. இவர்கள் ‘இளந்தமிழகம் இயக்கம்’ என்று பெயர் மாற்றி, சூழலியல் பிரச்னை, சமூக, சாதி, ஈழப் பிரச்னை என அனைத்து தளத்திலும் படு தீவிரமாக போராடி வருகிறார்கள். இவர்கள்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மென்பொறி ஊழியர்களுக்கென தனி சங்கம் அமைத்து, வரன் முறை இல்லாமல் தம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பெரும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள்.

உங்கள் அனைவருக்கும் பச்சை தமிழகம் கட்சி உருவான கதை நன்கு தெரியும். அந்த கட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும் தலைவர்களின் போராட்ட களம், முதலில் அணுஉலை எதிர்ப்பாக மட்டுமே இருந்தது. இன்று அது தமிழகம் தழுவிய ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் அரசு,  அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்தது; அவர்களின் அச்சத்தை களைய மறுத்தது.

இந்த நான்கு பத்திகளையும் மீண்டுமொரு முறை படியுங்கள். ஏன் இன்று இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் விருப்பம் கொள்கிறார்கள், ஏன் அதிக அளவில் இளைஞர்கள் போராட்ட களத்தில் தென்படுகிறாகள் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. இந்த நான்கு பத்திகளிலும் பொதிந்து இருப்பது அரசின் அலட்சியமும், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாயக்காத குணமும்தான். அரசு தன் பொறுப்பை தட்டிக்கழிக்கிற ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு இயக்கம் முளைத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் உரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார், “இந்தியாவில் நடக்கும் மொத்த ஆர்ப்பாட்டங்களில் 25 சதவீதம் தமிழகத்தில்தான் நடக்கிறது. இது தமிழக அரசின் ஜனநாயகத்தையும், பெருந்தன்மையும் காட்டுகிறது” என்றார். ஆம். உண்மைதான். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்களை போராட அனுமதிக்க வேண்டும். ஆனால், அதை விட முக்கியம், மக்களின் போராட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். இங்கு எத்தனை போராட்டங்களுக்கு அரசு செவிசாய்த்து இருக்கிறது.

ஒரு நாளில், சராசரியாக 60 போராட்டங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இது தமிழக முதல்வரே சொன்ன தகவல். இதில் எத்தனை கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டுள்ளன...? இது அவர் சொல்ல தவறிய தகவல்.

பச்சைத் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஒரு உரையாடலின் போது சொன்னார், “எனக்கும் மனைவி, குழந்தைகளுடன் அதிக அளவு நேரம் செலவிடதான் ஆசை. ஆனால், இந்த அரசு எங்கு விடுகிறது. எங்களின் குறைந்தபட்ச கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், நாங்கள் ஏன் போராட்ட களத்திற்கு வரப்போகிறோம்”

இங்கு களத்தில் இருக்கும் பல இளைஞர்களின் எண்ண ஒட்டம் இதுதான். சேலம் மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மனுஷ், “ஒரு வலுவான ஜனநாயகத்திற்கு அரசை கண்காணித்தலும், ஆர்ப்பாட்டங்களும் மிக அவசியமான ஒன்று. ஆனால், இங்கு அரசு எத்தனை கோரிக்கைகளுக்கு செவிமடுத்துள்ளது. சிறு விஷயங்களில் கூட மக்கள் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டைதான் எடுக்கிறது.”

இங்கு பல இயக்கங்கள் முளைக்க அரசே காரணமாக இருக்கிறது. அரசே இளைஞர்களை இழுத்து போராட்ட களத்தில் விடுகிறது. பின்பு அவர்களை அடக்க பார்க்கிறது. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல. ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி களத்தில் போராடிய அரவிந்த் கெஜ்ரிவால்தான் இன்று டெல்லியின் முதல்வர்.

இயற்கை குறித்து மிக அர்த்தம் பொதிந்த பழமொழி இருக்கிறது. நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இயற்கை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது, தற்கால அரசியல் சூழலுக்கும் மிகவும் பொருந்தும். களத்தில் இருக்கும் தேர்தல் கட்சிகள் பேசிக்கொண்டே இருக்கின்றன, இளைஞர்கள் செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.

இப்போது தேர்தல் அரசியலில் இருக்கும் கட்சிகள் தங்கள் தவறுகளை சரி செய்து, மக்கள் அரசாக இருக்க தவறினால், போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்கள் நாளை தலைமை பொறுப்பில் இருப்பார்கள்.

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ