Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீரவிசங்கர் ஆஸ்ரமம்!

ந்திய அரசியலை தமிழகத்தின் கண்களில் இருந்து பார்க்கிற வாய்ப்பு,  ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஏற்பட்டு விடுகிறது. மனிதர்களாக இருப்பவர்கள், மாமனிதர்களாக  மாற இரண்டு வழிகள்தான் இந்தியாவில் பிரதானமாக இருக்கிறது. ஒன்று சினிமா, மற்றது அரசியல். அந்த அரசியல் வானில்  நீடித்த ஒளியுடன் சுடர் விட்டுப் பிரகாசிக்க  தேவைப்படும் அத்தனை உபாயங்களையும்  'ஜொலிக்க' விரும்பும் அனைவரும் கையாண்டுப் பார்த்து விடுகிறார்கள். 

அரசியலுக்கும், சினிமாவுக்கும், ஆன்மிகத்துக்கும் அப்படி என்னதான் உறவு இருக்குமோ தெரியவில்லை. அவர்கள் வார்த்தையிலேயே சொல்வதென்றால், என்னதான் பூர்வ பந்த உறவு இருக்குமோ தெரியவில்லை.

நாற்பதாண்டு காலம் என்றளவில் எடுத்துக் கொண்டால், அன்று  இந்திய அரசியலில் சந்திராசாமியார் ஜொலிப்பின் அளவு மிக அதிகம். வடநாட்டில் ராகவேஸ்வர பாரதிஸ்வாமி, அதுல்ய மகராஜ், ஆசாராம்பாபு, சிவமூர்த்தி திரிவேதி, குர்மீத்ராம்ரஹீம்சிங், மகேந்திரகிரி, ராமஸ்வாமிதேவிஶ்ரீ குருஜி என்று பலர் வரிசை கட்டினர். இதில் ஒருசிலர் சிக்கல்களில் மாட்டி விழி பிதுங்கி நின்றது தனிக்கதை.

அண்மைக் காலமாக யோகாவில் பிரசித்தி பெற்ற பாபா ராம்தேவும், வாழும்கலையான ராஜயோகத்தில் பிரசித்திப் பெற்ற பூஜ்ய ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கரும்  இந்திய அரசியலில் மதிக்கத்தக்க சக்தியாக மாறிவருவது அனைவரும் அறிந்தது. இருவரில் ஒருவரான ரவிசங்கர், சில நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆன்மீக ரீதியிலான 'ருத்ர' பூஜைக்கான பயணம் இது என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் அரசியல்  இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

" யார் மனதில் யார் இருக்கின்றனர்?" என்கிற அரசியல் கான்செப்ட்தான் ரவிசங்கரின் பயணப்பாதை சொல்லும் சேதி என்கிறார்கள் அவர்கள். நாம் சொல்லும் இந்தப் பாதைக் கணக்கு சரிதானா என்பதை நாம் ரவிசங்கரின் ஆசிரம வட்டாரத்திலேயே உறுதிப்படுத்திக் கொண்டோம். நாம் கேட்டதும், கிடைத்ததும் இங்கே தரப்பட்டுள்ளது.

ரவிசங்கரின் பயணம் ருத்ர பூஜைக்கான அழைப்பு மட்டும் இல்லை என்று நன்றாகத் தெரிகிறது. குறிப்பாய் அவர் பிரதமர் மோடியுடன் கொண்டிருக்கும் நட்பு உலகறிந்த ஒன்று. இந்தப் பயணத்தின் நோக்கம்தான் என்ன ?

இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு எப்போதுமே அதிகம். சுவாமிஜி (ரவிசங்கரைதான் அப்படிதான் குறிப்பிடுகிறார்கள்) தமிழ்நாட்டின் மீது அலாதி அன்பு கொண்டவர். அவர் ஆசீர்வாதம் தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு. இன்றுள்ள அரசியல் போக்கினால் தமிழகத்தில் ஒற்றுமை ஏதும் குலைந்து போய் விடக் கூடாது என்று சுவாமிஜி நினைக்கிறார். அதைத்தான் மோடிஜியிடம் அவர் வருத்தமாக சொல்லியும் இருக்கிறார். ஒரு ஒற்றுமையை அனைத்துத் தரப்பிலும் கொண்டுவரும் முயற்சியாக இந்த ருத்ர பூஜை விழாவை பயன்படுத்துகிறார் அவ்வளவே.

சுவாமிஜியை  இதுவரையில் யார், யார் சந்தித்தனர்?


சுவாமிஜி ருத்ர பூஜைக்கான அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர் வீரமணி அய்யாவைத் தவிர அனைத்துக் கட்சித் தலைமைக்கும், சமூக நல்லிணக்கம் நாடும் நண்பர்களுக்கும்,  இ.ஆ.ப. , இ.கா.ப. உள்ளிட்ட அனைத்து அரசு உயர் அதிகாரிகளுக்கும் ஆசிரமம் சார்பாக கொடுத்துள்ளோம். திருமதி சவுமியா அன்புமணி, மு.க. ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த் என்று பல அரசியல் பிரபலங்களும் அழைப்பை ஏற்று சுவாமிஜியை சந்தித்துள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை.

நடிகர்களும் சந்தித்துப் பேசியதாக தகவலும் படங்களும் வெளியாகி உள்ளதே...ருத்ர பூஜையில் அவர்களுக்கு என்ன வேலை?

ஆம். நடிகர் சங்க நிர்வாகிகள் தங்களுடைய பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் சுவாமிஜியை சந்தித்து ஆசிபெற கேட்டிருந்தனர். அதன்படி அந்த சந்திப்பு நடந்தது. முன்னாள் போலீஸ் டிஜிபி நட்ராஜ் அய்யா கூட ஆவிச்சி பள்ளியில் நடந்த விழாவின் போது சுவாமிஜியை சந்தித்தார். இதில் அரசியல் உள் நோக்கம் ஏதுமில்லை.

சுவாமிஜியுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல தொழிலதிபர் மதுரை சதீஷ்குமார்தான் கேப்டனின் முதல் மாநாட்டுக்கு உறுதுணையாய் நின்றவர்... சென்னையில் சுவாமிஜி வருகையை அவர்தானே (சதீஷ்குமார்) திட்டமிடுகிறார்?

மதுரை சதீஷ்குமார், சுவாமிஜியின் தீவிரமான அபிமானி. தமிழகத்தில் சுவாமிஜியின் அருமை, பெருமையை அவருடைய ஆற்றலை, இந்த மக்கள் மீது அவர் கொண்டுள்ள பாசத்தை எக்ஸ்போஸ் செய்கிற ஒரு கருவியாக தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுகிறவர் சதீஷ்குமார். அவர்தான் சினிமாவுலக பிரபலங்களை சுவாமிஜிக்கு அறிமுகம் செய்து வைத்ததும் கூட. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு போய் நிறுத்த சுவாமிஜி கொண்டிருக்கும் நல்லெண்ணத்தின் எதிரொலிப்பை அவர் உள்வாங்கி பிரதிபலிக்கிறார் என்றுதான் இதைப் பார்க்க வேண்டும்.

விஸ்வரூபம் பார்ட் டூ, த்ரீ போல பாகுபலியை ஏன் கொண்டு போகக் கூடாது, அப்படிக் கொண்டுபோக என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பது உள்பட பல ஏக்கங்கள் சுவாமிஜிக்கு இருக்கிறது.

அதைத்தான் அவர் செயல் படுத்த நினைக்கிறார். அதன் இன்னொரு பரிணாமமாகத்தான் தனுஷின் தந்தையும், விஜய்யின் தந்தையும் சுவாமிஜியை சந்தித்ததும் கூட. சுவாமிஜி என்ன அரசியலில் நிற்கப் போகிறாரா, பணம் சம்பாதிக்கப் போகிறாரா... அவருக்கு இப்போதைய தேவை தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். இந்திய அளவில் அந்த நிம்மதி பரவ வேண்டும் என்பதுதான்.

அப்படியென்றால், சுவாமிஜியின் ருத்ர பூஜைக்கான அழைப்பிதழை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கும் கொடுத்து விட்டிருக்கலாமே. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் நிம்மதி தேவைப்படாதா என்ன ?


நீங்கள் சொல்வது உண்மைதான்.. சுவாமிஜியும், மோடிஜியும் இருக்கும் நெருக்கம் அனைவரும் அறிந்த ஒன்று. காங்கிரசில் போய் அழைப்பு கொடுத்தால் எப்படி சரியாக வரும்? அதனால்தான் அது தவிர்க்கப் பட்டது

சரி, சுவாமிஜியின் இந்த சந்திப்பு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மனதில்  என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது ?

சுவாமிஜி மாற்றத்தை ஏற்படுத்த வரவில்லை. அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களின் குழப்பம், அவர்களின் எண்ணவோட்டம் இதை அப்சர்வ் பண்ணி விடும் ஆற்றல் அவருக்கு உண்டு. அதைத்தான் இப்போது அவர் செய்திருக்கிறார். அவர்களின் நினைப்பை அப்படியே சுவாமிஜி மோடிஜியிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதிமுக -பாஜக இணைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவே சுவாமிஜியின் மனதிற்குப் பட்டிருக்கிறது.

அப்படியென்றால் கேப்டன், திமுக பக்கம் போய் விடுவாரே அது சுவாமிஜியின் பயணத்துக்கு  சரியான மாற்றமாய் வருமா?

அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், கேப்டனும் இங்கேதான் வருவார். அண்மைக் காலமாக மேடத்தை (முதல்வர் ஜெயலலிதா) கேப்டன் காட்டமாக பேசி ஒரு அறிக்கை கூட கொடுக்க வில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா? "பார்த்து செய்யலாம் இல்லையா?" என்பது போல்தானே அந்த அறிக்கைகள் உள்ளன. இதுவே கேப்டனின் மனமாற்றத்துக்கு ஒரு உதாரணம்தானே?

சுவாமிஜியின் ஆஸ்ரமத்தில் நிறைய சமூகப் பணிகள் செய்து வருவதை கேட்டறிகிறோம், வாழ்த்துகள். இப்படி அரசியலிலும் இந்தப் போடு போடுகிறீர்களே அதுதான் பிரமிப்பாக இருக்கிறது...

சுவாமிஜி இந்த உலகத்தின் அத்தனை நிலைப்பாட்டையும் இருந்த இடத்தில் இருந்தே அறியக் கூடியவர். அவருக்கு விருப்பு, வெறுப்பு என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. அவருடைய சேவைக்கு நாங்கள் இந்திய  மாநிலங்களில் ஒரு சிறு கருவியாக இருக்கிறோம். அந்த மெல்லிய தொடர்பே எங்களை இந்தளவுக்கு  அரசியல் தெளிவில் நிற்க வைத்திருக்கிறது. முழுமையான அரசியல், உலகம், சமூகம் குறித்து சுவாமிஜிதான் அறிவார், நாங்கள் இல்லை.

ரஜினி, கமல் போன்றவர்கள் சுவாமிஜியை சந்திக்கவில்லை போலிருக்கிறதே?


ராஜ்தாக்கரே சந்திப்பின்போது சுவாமிஜி, கமல்ஹாசன், அவர் அண்ணன் சந்திரஹாசன் போன்றோர் அண்மையில் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். ரஜினிகாந்த தொடர்ந்து ஆன்ம மனநிலையில் இருப்பதால் அவர் சுவாமிஜியை நெருக்கமாக அறிவார்.

சுவாமிஜியின் பயண நோக்கம் வெற்றியா ? வெற்றியென்றால் அதை யாரிடம் சொல்வார்?

உங்கள் கேள்வியின் நோக்கம் புரிகிறது, அவர்  தம்முடைய நண்பர் மோடிஜியிடம்தான் சொல்வார் போதுமா?

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ