Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உணவு விடுதிகளில் தண்ணீருக்கு பணம் வாங்கலாமா...?

வன் பெயர் தமிழ்ச்செல்வன். கும்பகோணம் சொந்த ஊர். மென்பொறியாளன். தஞ்சையில் ஒரு கல்லூரியில் படித்துவிட்டு சென்னையில் அண்ணாசாலையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். எப்போதும் கையேந்தி பவனிலேயே சாப்பிட்டு பழக்கப்பட்ட அவனுக்கு, அவன் நிறுவனம் அருகே இருக்கும் ஷாப்பிங் மாலில் அன்று மதியம் சாப்பிட வேண்டும் என விருப்பம்.

ATMல் ரூ 200 எடுத்துக் கொண்டு உணவருந்த செல்கிறான். உணவிற்கான தொகை ரூ. 200 ஆகிறது. அதை செலுத்திவிட்டு உணவருந்த அமர்கிறான். சாப்பாடு மிகவும் காரம். இதில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே விக்கல் வேறு ஏற்படுகிறது. அவன் சாப்பிடும் உணவு விடுதியில் தண்ணீர் கேட்கிறான். ஆனால், அதற்கு அவர்கள் கூறிய பதிலை கேட்டு அதிர்கிறான். அவர்கள் வேறொன்றும் சொல்லிவிடவில்லை, “தண்ணீருக்கு தனியா பைசா சார்...” அவனிடம் இருந்த பணம் அனைத்தையும் உணவிற்கே செலவிட்டுவிட்டதால் விக்கிக் கொண்டே தன் அலுவலகம் செல்கிறான்.

இது தமிழ்ச்செல்வனின் அனுபவம் மட்டுமல்ல. கிராமம், சிறு நகரம் என மாநகரங்களுக்கு வேலை நிமித்தமாக குடிபெயரும் பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களின் அனுபவம். தாகம் எடுத்தால் கிராமங்களில் யார் வீட்டு கதவையாவது தட்டி தண்ணீர் கேட்டு பழகிய அத்தனை வெள்ளந்தி மனிதர்களின் அனுபவம்.

உணவுடன் தண்ணீர் தருவது உங்கள் கடமைதானே என்று நாம் என்றுமே கேட்டதில்லை. தயக்கம், வெட்கம் ஆகிய காரணங்களால், நாம் விக்கலுடன் இடத்தை கடந்துச் செல்ல பழகிவிட்டோம்.

தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல...

தண்ணீர் என்பது வெறும் நம் தாகத்தை தணிக்கும் பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. நீங்கள் தண்ணீருக்கு காசு கொடுப்பதற்கும், நீர் நிலைகள் அழிந்து வருவதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம். நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்பு ஏரிகளும், குளங்களும், பொதுக் கிணறுகளும், நம் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களாக இருந்தது. நம் தண்ணீரை தொட்டு, நீர் நிலைகளிலிருந்து நீர் எடுத்தோம். என்று குழாய்கள் மூலம் நம் வீட்டிற்கே தண்ணீர் வர துவங்கியதோ, என்று நாம் காசு கொடுத்து கேன் தண்ணீர் வாங்க துவங்கினோமோ, அன்றிலிருந்து தான் நமக்கும் தண்ணீருக்குமான அந்த உணர்வுபூர்வமான பந்தம் அறுப்பட்டது. நீர் நிலைகள் நமக்கு அந்நியமாகி போயின... நீர் நிலைகள் முதலில் குப்பை மேடுகளாகவும், பின்னர் வள்ளுவர் கோட்டங்களாகவும், நீதிமன்றங்களாகவும் மற்றும் வீட்டு மனைகளாகவும் மாறின. பொதுக்கிணறுகள் தூர்ந்து போயின.

நீர் நிலைகள் மூடப்படுவது என்பது, ஏதோ ஏதேச்சையான ஒன்றல்ல.... அது தண்ணீர் நிறுவனங்களின் சதி. அந்த சதிக்கு நாம் மனதளவில் பலி ஆகியதால்தான், நாம் உணவு விடுதிகளில் கூட காசு கொடுத்து நீர் வாங்க பழகிவிட்டோம். உணவுடன் சேர்த்து, நீர் கொடுப்பது உணவு விடுதிகளின் கடமை, அது நம் உரிமை என எத்தனை பேர் அந்த உணவு விடுதிகளுடன் முரண்பட்டு இருக்கிறோம்.



நீர் - நம் உரிமை:

'நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா...? ஒரு நொடிக்கூட ஆசுவாசப்படுத்திக் கொள்ள அனுமதி மறுக்கும் இந்த மாநகர வாழ்க்கையில், நாங்கள் எங்கு போய் உணவு விடுதிகளுடன் முரண்படுவது, நீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பது...?' என நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆம் நிஜம்தான். நம்மால் நிச்சயம் தினம் நீர் நிலைகளை தேடிச் சென்று தண்ணீர் எடுக்க முடியாது. நீங்கள் நீர்நிலைகளை தேடி செல்ல வேண்டுமென்பது என் விருப்பமல்ல. நீர் நிலைகள் அனைத்தும் கழிவு நீர் கலக்கும் இடங்களாக மாறிப்போன இந்த சூழலில், நீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பது சுகாதாரமானதும் அல்ல. ஆனால், தண்ணீர் என்பது நம் அடிப்படை உரிமை என உங்களுக்கு நினைவூட்டுவதே என் நோக்கம்.

தனியார் உணவு விடுதிகள், திரையரங்கங்களை விடுங்கள். இங்கு எத்தனை பொது இடங்களில் குடிநீர் வைத்து இருக்கிறார்கள்? நீங்கள் கடைசியாக, பேருந்து நிலையத்தில் காசு கொடுக்காமல் நீர் அருந்தியது எப்போது...? ரயில் நிலையங்களில் நீர் அருந்தியது எப்போது....? ஒன்று அவர்கள் தண்ணீரே வைத்து இருக்க மாட்டார்கள் அல்லது அது சுகாதாரமற்ற சூழலில் இருக்கும். முன்பெல்லாம், சுகாதாரமான பொது குடிநீர் வைத்திருக்கதானே செய்தார்கள். இந்த நிலை எப்போது மாறியது என்றாவது யோசித்து இருக்கிறீர்களா...? யோசித்து பாருங்கள், புட்டி நீர் (Bottle water) வருகைக்கு பிறகுதான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கும்.

நாம் எப்போதெல்லாம், காசு கொடுத்து நீர் வாங்குகிறோமோ, அப்போதெல்லாம மனதளவில், தண்ணீர் நம் அடிப்படை உரிமை என்பதை நாமே மறுக்கிறோம். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயம் ஆவதற்கு நாமே அனுமதி வழங்குகிறோம்.

தண்ணீர் தனியார்மயமாகினால் எனக்கு என்ன...? நான் காசு கொடுத்து நீர் வாங்கி கொள்கிறேன் என்ற மனநிலையில் உள்ளவராக நீங்கள் இருந்தால், சூழலியலாளர் மாட் விக்டோரியா பார்லோ சொல்வதை கொஞ்சம் கேளுங்கள். “இருபதாம் நூற்றாண்டில் மக்கள் தொகை மூன்று மடங்காக உயர்ந்தது. ஆனால் தண்ணீர் நுகர்வு ஏழு மடங்கானது. 2050-ம் ஆண்டுக்குள் இருக்கும் மக்கள் தொகையில் இன்னும் மூன்று பில்லியன் மக்களைச் சேர்த்தபிறகு குடிநீர் வினியோகத்தில் 80 சத அதிகரிப்பு தேவைப்படும்” என்கிறார் மாட் விக்டோரியா.

இதில் ஒளிந்து இருக்கும் செய்தி, தண்ணீர் விலைமதிப்பான பண்டம் ஆகப்போகிறது. அப்படி ஆகும் பட்சத்தில், பொருளாதாரத்தில் வலிமையானவர்களுக்கு மட்டுமே தரமான குடிநீர் கிடைக்கும். நடுத்தர வர்க்கத்துக்கும், அவர்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கும் கழிவு நீர் மட்டும்தான் கிடைக்கும். இது உலகத்திற்கான செய்தி. ஆனால், ஏற்கெனவே தரமற்ற தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்கள், ஒரு சொட்டு நீர் இல்லாமல் விக்கியே சாக வேண்டியதுதான்.

உடனடி தேவை - பொது குடிநீருக்கான தனிச் சட்டம்:

"நம் பண்பாட்டில் நீர் பணம் கொடுத்து பெறும் பண்டமாக மாறும் என்று யாருமே யோசிக்காததால், அது குறித்து தனி சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆனால், பொது இடங்களில் பொது நீர் இருப்பது குறித்து மத்திய அரசின் ‘National Building Code of India' சில வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது என்கிறார்" பொது குடி நீருக்காக தொடர்ந்து போராடி வரும் சூழலியல் செயற்பாட்டாளர் நக்கீரன்.

"மால்கள், திரையரங்கங்கள், உணவு விடுதிகள் கட்ட அனுமதி வாங்கும்போது, இவ்வளவு தண்ணீர் வசதி இருக்க வேண்டும் என அது வலியுறுத்துகிறது. ஆனால், அதனை மீறிதான் அனைத்தும் செயல்படுகினறன. பொது குடிநீருக்கான தனிச்சட்டம் இயற்றுவதும், அனைத்து பொது இடங்களிலும் குடிநீர் வைக்கப்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க மக்களை கொண்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்துவதும் நம் உடனடி தேவை" என மேலும் கூறுகிறார் நக்கீரன்.

பொலிவியா - கொச்சபம்பா நினைவிருக்கட்டும்

மக்கள் அமைதியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் மீது அனைத்தையும் திணித்துவிட முடியாது. நம் அரசுக்கு, பொலிவியா நாட்டில் உள்ள கொச்சபம்பாவில் நடந்தது நினைவிருக்கட்டும். தனியார் நிறுவனம், "நீருக்கான உரிமை எங்களிடம்தான் இருக்கிறது, மழை தண்ணீர் கூட எங்களுக்குதான் சொந்தம்" என்று இருமாப்புடன் கூறிய போது, தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக, கொச்சபம்பா மக்கள் வெகுண்டு எழுந்தனர். தனியார் நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டு இருந்த ஒப்பந்தத்தை கைவிட வைத்தனர்.

ஒரு நாள் நம் மக்களும் தெளிந்து கிளர்ந்தெழுந்தார்கள் என்றால், நிச்சயம் நம் அரசால் அந்த வெப்பத்தை தாங்க முடியாது. அதற்குள் அரசு தரமான குடிநீர் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும், இலவசமாக கிடைப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close