Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதற்காக இந்த அரசு...? இது நியாயமா! #WhereisMyToilet

ணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால்... தாய் வீடு திரும்பிய இளம் பெண்ணுக்கு கிராம சுகாதார விழிப்புணர்வு விருது. ஆம், மத்திய பிரதேசம் மாநிலம் பீதுல் மாவட்டத்தில் உள்ள சின்சோலியை சேர்ந்தவர்தான் அனிதா. கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் இவருக்கு திருமணம் ஆனது. கணவன் சிவராம் நாரேவுடன்,  ஜீதுதானா கிராமத்தில் உள்ள புகுந்த வீட்டுக்கு சென்ற அனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிவராமின் வீட்டில் கழிப்பறை இல்லாததே அனிதாவின் அதிர்ச்சிக்குக்  காரணம். அந்தக்  கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதியே கிடையாது. கிராமத்தைச்  சுற்றிலும் உள்ள திறந்தவெளியைத்தான் கழிப்பறையாகப்  பயன்படுத்தி வந்தனர்.

கழிப்பறை பிரச்னை

அந்த கிராமத்து பெண்கள் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து,  திறந்த வெளியில் காலைக் கடனை முடித்துவிடுவார்கள். ஆனால், இந்த திறந்தவெளி கழிப்பிட முறையை அனிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே கழிப்பறை கட்டினால்தான் உங்களோடு வாழ்வேன் என்று சிவராமுடன் சண்டைபோட்டார். அதற்கு சிவராம் மறுக்கவே, புகுந்த வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு அனிதா திரும்பிவிட்டார்.

கழிப்பறை பிரச்னையால் திருமண வாழ்க்கையே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டதால்,  சிவராம் மனம் உடைந்தார். தன்னுடைய வீட்டில் கழிப்பறை கட்டியதோடு, கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார். இதனையடுத்து அந்த கிராமத்தை 'சுலப்' இன்டர்நேஷனல் நிறுவனம் தத்து எடுத்து, கழிப்பறைகளை கட்டியது. அதன் பின்னர்தான் கணவன் வீட்டுக்கு திரும்பினார் அனிதா.

அடுத்த அனிதா யார்?

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அங்கிருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு திரும்பிய அனிதாவுக்கு, சுத்தம், சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அன்றைய மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார். கிராம மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அந்த கிராமமே இன்றுவரை அனிதாவை பாராட்டி வருகிறது.

இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் இதுவரை நடைபெற்றதில்லை. காரணம் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இங்கு இல்லாததுதான். ஆனால், வடநாட்டு அனிதாபோல, தமிழ்நாட்டிலும் பல அனிதாக்கள் உருவாக வேண்டும். மனிதனின் அடிப்படை உரிமையில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றோடு சுகாதாரத்தையும் சேர்க்க வேண்டியது தருணம் இது. நாம் மூன்று வேளை உண்ணாமல் கூட சில நாட்கள் இருந்துவிடலாம். ஆனால், உண்டதை கழிக்காமல் நிச்சயம் இருக்க முடியாது.

( குறிப்பு: நாட்டில் கழிவறை வசதிகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதை அறிய கீழே இருக்கும் கருப்பு நிற கட்டத்தை க்ளிக் செய்க. படத்தை  கம்யூட்டரில் தெளிவாக பார்க்கலாம்)

இன்றைய நிலைமை


இந்தியாவில் 53.1% , அதாவது பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. குடிசைப் பகுதிகளில் கழிப்பறைகள், கழிவு நீர் வெளியேற்றம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பல இடங்களில் அரசு கழிப்பறைகள் கட்டினாலும், அதற்கு தண்ணீர் வசதி செய்யாமல் இருப்பதால், அவை பயன்பாட்டிலேயே இருப்பதில்லை.

பொதுக்கழிப்பிடம் அல்லது இலவச சிறுநீர் கழிப்பிடங்களை எடுத்துக் கொண்டால், நுழைய தகுதியற்றதாகத்தான் காணப்படுகிறது. ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டிய ஒருவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே இன்றைய பொதுக் கழிப்பறைகள் என்பது உள்ளன.

எதற்காக இந்த அரசு...?


தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாக அரசு கூறிவந்தாலும், கழிப்பறையைப் பொறுத்தவரை வெட்கக்கேடான நிலைமைதான் இன்னும் உள்ளது. ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்தாமல் கண்களை மூடிக் கொண்டுதான் உள்ளனர். நாமோ தினம் தினம் மூக்கை மூடிக்கொண்டும்தான் இருக்கிறோம்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 51.7% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர். இதிலிருந்து சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கிக் கிடக்கிறோம் என்ற நிலை காணப்படுவது வேதனையான ஒன்று

ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட முடியவில்லை என்றால் வெட்கக்கேடு.

அதைக்கூட அரசால் தரமுடியாவிட்டால், எதற்காக இந்த அரசு...?

-சோ.கார்த்திகேயன்

படம்:  கே. கார்த்திகேயன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close