Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அவிநாசி அத்திக்கடவு திட்டம்: அரசின் கவனம் திரும்புவது எப்போது?

ம்மா குடிநீர் திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டபோது, தண்ணீருக்காக அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்தக்கோரி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டப்பகுதிகளில் 51 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இப்போது அந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒரு வகையில் அம்மா குடிநீர் திட்டமும், அவிநாசி அத்திக்கடவு திட்டமும் ஒன்றுதான். இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயலாக்க எந்த முன்முயற்சிகளும் எடுக்கப்படாமல் வெற்று அறிவிப்பாக உள்ளது. என்ன... அம்மா குடிநீர் திட்ட அறிவிப்பு வெளியாகி ஓரிரு நாட்கள்தான் ஆகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிறது.

60 ஆண்டாய் தொடரும் போராட்டம்

சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தலானாலும் தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பிடித்து விடக்கூடியது அவிநாசி அத்திக்கடவு திட்டம். கடந்த 1957-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்துக்காக நடக்காத போராட்டம் இல்லை. திட்டத்தை நிறைவேற்று வதாக உறுதி சொல்லாத அரசியல் கட்சிகளும் இல்லை. ஆனால் இன்று வரை  திட்டமும் அமலுக்கு வந்தபாடில்லை. போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை.

நிலத்தடி நீர் குறைந்து வரும் நிலையில் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்காகவும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டக்குழுவினர், கடந்த சில மாதங்களாகவே சென்னையில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் திட்டத்தை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 60 ஆண்டுகால கோரிக்கையான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவிநாசி பகுதியைச் சேர்ந்த 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 8-ம் தேதி துவக்கினர்.

தேர்தல் நேரம் என்பதால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் மேற்கொண்ட பல்வேறு யுக்திகள் பலனளிக்கா மல் போக... இப்போது மிகப்பெரிய போராட்டமாக வெடித்துள்ளது அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்கான போராட்டம்.  அவிநாசி, அன்னூர், பெருமாநல்லூர் என பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு என தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்க ளையும், இலவச பொருட்களையும் திருப்பிக்கொடுப்போம் என அறிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் இவர்களை அரசு திரும்பி பார்க்கவில்லை என்பதுதான் சோகம்.

'சொல்லிட்டே இருக்காங்க... செய்ய மாட்டேங்குறாங்க'


போராட்டக்குழுவினரிடம் பேசினோம்.

"இன்னைக்கு நேத்து இல்ல. 60 வருஷமா இந்த கோரிக்கையை நாங்க வலியுறுத்தி வர்றோம். கடுமையான வறட்சியில் இந்த பகுதி இருக்கு. கிட்டத்தட்ட 1500 அடியில இருந்து 1800 அடிக்கு நிலத்தடி நீர் மட்டம் கீழே போயிடுச்சு. அதனால பவானிசாகர் அணை நிரம்பும் போது, அணையில இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் வெட்டி, காய்ந்து கிடக்குற குளம் குட்டைகளை நிரப்பினா நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதுதான் அவினாசி அத்திக்கடவு திட்டம்.

இப்போ 1500 அடியில இருக்குற நிலத்தடி நீர்மட்டம், இந்த திட்டம் நிறைவேறுனா வெறும் 50, 100 அடிக்கு வந்துடும். 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட காரமடை, மேட்டுபாளையம், அன்னூர்,  திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயனடைவாங்க. இப்போ பவானிசாகார் அணையில இருந்து உபரியா வெளியேறும் நீர் வீணா கடல்ல கலக்குது. ஆனாலும் இந்த திட்டத்தை நிறைவேத்த மாட்டேங்கறாங்க.

கடந்த 1956-ல் காமராஜர் ஆட்சியில் இத்திட்டத்துக்கு, 132 கோடி ரூபாய்  மதிப்பீடு போட்டாங்க. இப்போ  2 ஆயிரம் கோடிக்கு மேலேனு சொல்றாங்க. மதிப்பீடு அதிகமாயிட்டே போகுது. திட்டத்தை செயல்படுத்துறோம்னு சொல்லிட்டே இருக்காங்க. ஆனா செய்யதான் மாட்டேங்குறாங்க. இந்த முறை செய்யாம விட மாட்டோம்," என்றனர் உறுதியாக.

போராட்டத்தை ஒடுக்க படாதபாடு பட்ட போலீசார்

தேர்தல் நேரம் என்பதால் இந்த போராட்டத்தினால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர,  போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர படாதபாடுபட்டனர். எதுவும் பலனளிக்காமல் போக... பேச்சுவார்த்தைக்கு கலெக்டரிடம் அழைத்து செல்வதாக கூறி, கலெக்டர் அலுவலக வாசல் வரை சென்று சிறிது நேரம் காத்திருந்து விட்டு, அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற மறுத்து, வாகனத்தை விட்டு இறங்காமல் போராட்டக்குழுவினர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் ஆனந்தன், அம்மாவிடம் சொல்லி இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மட்டும் சொன்னார். இதில் திருப்தி அடையாத போராட்டக்குழுவினர், மீண்டும் அவிநாசியில் வந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தின் போது உண்ணாவிரதம் இருந்த சிலர் அடுத்தடுத்து மயங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு போராட்டம் பரவியதையடுத்து, அரசியல் கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கத்துவங்கவும்,  பரபரப்பு அதிகரித்தது.

படையெடுத்த எதிர்கட்சிகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ச.ம.க. தலைவர் சரத்குமார், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கே.தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்பி சுப்பராயன் என அதிமுகவை தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட்டக்குழுவினரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கருணாநிதி, வைகோ, திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் என எதிர்கட்சித்தலைவர்கள் தலைவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைவரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

துளியும் கண்டுகொள்ளாத அரசு தரப்பு

ஒருபுறம் அனைத்துக்கட்சித்தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்தும், போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வந்த நிலையில், மறுபுறம் இதை துளியும் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிமுகவும், ஆளும் அரசும்.

தொடர்ச்சியான போராட்டத்துக்கு பிறகும் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து  அமைச்சர்கள் தரப்பிலோ, ஆட்சியர் தரப்பிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அரசு பாராமுகமாய் இருப்பது தங்களுக்கு பெரும் அதிருப்தியை அளிப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகின்றனர் போராட்டக்குழுவினர்.

இதுக்கு தானா ஓட்டு போட்டோம்?

"நாங்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ, எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ போராடலை. மக்களுக்கான 60 ஆண்டுகால கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறோம். போன தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிதான் இது. ஆனால் இன்னைக்கு வரைக்கும் இங்கு வந்து எங்களை சந்தித்து பேசக்கூட அமைச்சர் வரலை" என்றனர் போராட்டக்குழுவினர். அடுத்த கட்டப் போராட்டம் குறித்தும் அவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

2001-ம் ஆண்டு தேர்தல் நேரம். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளரை களமிறக்கியது போராட்டக்குழு. பஸ் சின்னத்தில் போட்டியிட்ட அந்த சுயேட்சை வேட்பாளர் அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.வை மிக மோசமாக தோல்வியடைய வைத்து, இரண்டாமிடம் பிடித்தார்.

15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அப்படியொரு சூழல் உருவாகியுள்ளதாகவே சொல்கிறார்கள் அவிநாசி பகுதி மக்கள். கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை எனச்சொல்லும் அதிமுகவினர் சற்று உற்று கவனிக்க வேண்டியது இதைத்தான்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ