Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஷ்ரத் ஜஹான் பயங்கரவாதியா... இதுதான் நிஜ போலீஸ் 'விசாரணை'யா...? - மருதன்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் ரகசியமான, ஆபத்தான திட்டத்துடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற 19 வயது இஷ்ரத் ஜஹான், அந்த அவசரத்திலும் மறக்காமல் தன்னுடைய கல்லூரி ஐடி கார்டை எடுத்து கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார். இதென்ன விசித்திரம் என்று யாரும் கேட்கக் கூடாது. குஜராத் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில்தான் இந்த முக்கியமான உண்மை இடம்பெற்றிருக்கிறது. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அப்போதுதான் இஷ்ரத் ஜஹான் ஒரு பயங்கரவாதி என்னும் டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தையும் நீங்கள் நம்பி ஏற்க முடியும்.

2008 மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படுபவர் டேவிட் ஹெட்லி. அடிப்படையில் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்றபோதும், இவருடைய பூர்வீகம் பாகிஸ்தான். லஷ்கர் இ தொய்பா தொடங்கி ஐ.எஸ்.ஐ., அல் காய்தா என்று விரிவான நெட்வொர்க் இவருக்கு இருக்கிறது. மும்பையைத் தொடர்ந்து அதே பாணியில் மற்றொரு தாக்குதலை கோபன்ஹேகனில் ஹெட்லி நடத்தியபோது அமெரிக்கா அவரைக் கைதுசெய்தது. 2013-ல் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் மும்பை தாக்குதலுக்காக இவருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 2015ல் மும்பை நீதிமன்றம் இவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அப்ரூவராக மாறினார். வீடியோ கான்ஃபர‌ன்ஸிங் மூலம் இவரை விசாரிக்க அமெரிக்கா அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சென்ற வாரம் மும்பை நீதிமன்றத்திடம் ஹெட்லி பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவற்றில் முக்கியமானவை கீழே...

  *    லஷ்கர் இ தொய்பா கமாண்டர் சாஜித் மிர், ஐஎஸ்ஐ ஏஜென்ட் மேஜர் சமீர் அலி, அல் காய்தாவைச் சேர்ந்த மேஜர் பாஷா ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்தேன்.

 *    மும்பை தாக்குதலுக்குப் பிறகும் சாஜித் மிர்ருடன் தொடர்பு நீடித்தது.

 *    மகாராஷ்டிராவில் உள்ள ராணுவத் தலைமையகம், சித்திவிநாயகர் கோயில் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து வீடியோவில் பதிவுசெய்துவைத்தேன்.

 *    லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமத், ஹிஸ்புல் முஜாஹிதின் ஆகிய அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ நிதி, ஆயுத உதவி அளித்திருக்கிறது. பின்புலத்தில் இருந்து  தார்மீக ஆதரவையும் நீட்டித்திருக்கிறது.

 *    நான் இந்தியா சென்று வந்ததற்கான செலவுகளை மிர், மேஜர் பாஷா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். ஐஎஸ்ஐயும் உதவியது.

 *    2008-ல் இந்தியா வந்திருந்தபோது கோவா சென்றிருந்தேன்.

 *    டெல்லியில் உள்ள நேஷனல் டிஃபென்ஸ் கல்லூரி, மும்பை சிவசேனா பவன் ஆகியவற்றைக் கண்காணித்தேன்.

 *    பால் தாக்கரேவை அகற்றவேண்டும் என்று லஷ்கர் விரும்பியது.

 *    முன்னாள் சிவசேனா ஊழியர் ராஜாரம் ரெஜெ என்பவருடன் நெருக்கமாகப் பழகி, அவர் மூலமாக உளவுத் தகவல்கள் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டேன்.

 *    இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்.

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான், ஐஎஸ்ஐ, லஷ்கர் ஆகியவற்றின் பங்கை அறிவதே இந்த விசாரணையின் முதன்மையான நோக்கம். இதில் இஷ்ரத் ஜஹான் எங்கிருந்து வருகிறார்? அவரைத் தன் வாக்குமூலத்தில் ஹெட்லி குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

 

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் ஒரு சிறிய அறிமுகம்... 15 ஜூன், 2004 அதிகாலை இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷாய்க் என்னும் பிரணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நான்கு பேரின் சடலங்கள் அகமதாபாத் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன. குஜராத் காவல் படைக்குத் தலைமை தாங்கிய டெபுடி ஐஜி டி.ஜி. வன்சாரா, "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்துடன் வந்திருந்த நான்கு லஷ்கர் பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்தும்போது ஏற்பட்ட மோதலில் அவர்கள் உயிரிழந்தனர்" என்று விளக்கம் அளித்தார்.

ஆனால் காவல் துறையின் வாதத்தை தடயவியல் ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் நிராகரித்துவிட்டன. அரை மணி நேரத்துக்கு மேல் மோதல் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட அந்த நெடுஞ்சாலையில் அப்படி ஒரு போராட்டம் நடைபெற்றதற்கான எந்தவொரு சுவடும் காணப்படவில்லை. நான்கு பேர் கொல்லப்பட்ட பிறகும் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை, சாட்சியங்கள் பதிவுசெய்யவில்லை, வழக்கு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை. இந்த அசாதாரணமான செயல் (அல்லது செயலற்ற தன்மை) இயல்பாகவே பல சந்தேகங்களை நாடு முழுக்கக் கிளப்பிவிட்டது.

மிகுந்த அழுத்தத்துக்குப் பிறகு விசாரணை ஆரம்பமானது. 2009-ம் ஆண்டு முதல்முறையாக அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கை,  இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் 12 ஜூன் 2004 அன்று கடத்தி வரப்பட்டு, காவல்துறைக் கண்காணிப்பில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இரண்டு தினங்கள் கழித்தே சடலங்கள் நெடுஞ்சாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தது. வன்சாரா தொடங்கி 22 காவல் துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த அறிக்கை சிபாரிசு செய்தது.

செப்டம்பர் 2010ல் குஜராத் உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமித்தது. நடைபெற்றது மோதல் அல்ல, திட்டமிட்ட படுகொலைதான் என்று குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்ஐடி உறுப்பினருமான சதீஷ் வர்மா குற்றம்சாட்டினார். அரசியல் தலையீடு காரணமாக வழக்கை நடத்தமுடியவில்லை என்றும் அவர் வருந்தினார். பிகார் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட மற்றொரு எஸ்ஐடி குழுவும், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தியது. வழக்கை விசாரித்த சிபிஐ-யும் இதே முடிவுக்குதான் வந்து சேர்ந்தது.

பிறகு கைது படலங்கள் தொடங்கின. இஷ்ரத் ஜஹான் வழக்கு மட்டுமின்றி வேறு பல என்கவுன்டர் வழக்குகளிலும் வன்சாராவுக்குத் தொடர்பு இருந்ததால்,  அவர் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தான் பதவி விலகியபோது எழுதிய கடிதத்தில், அமித் ஷா தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும் மோடியையே தான் நம்பியிருப்பதாகவும் வன்சாரா குறிப்பிட்டிருந்தார். தன்னை ஓர் இந்து தேசியவாதி என்று அறிவித்துக்கொண்ட வன்சாரா, மோடியைக் கடவுள் என்று அழைத்திருந்தார்.  என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்னும் பட்டப்பெயரைப் பெற்றிருந்த வன்சாரா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தபோது, குஜராத் சிங்கம் என்று ஆரவாரத்துடன் முழங்கி, மாலை மரியாதையுடன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மற்ற காவல் துறை அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, மே 2014ல் முன்னாள் குஜராத் அமைச்சர் அமித் ஷாவும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இஷ்ரத் ஜஹான் வழக்கோடு அவரைத் தொடர்புபடுத்துவதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
 

வழக்கு, விசாரணை, கைது, பிணை என்று ஒரு வட்டம் அடித்துவிட்டு ஓய்ந்துவிட்டது இஷ்ரத் வழக்கு. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ஹெட்லியின் வாக்குமூலம் மோடி, அமித் ஷா தொடங்கி வன்சாரா வரையிலான அனைவர் மீதும் ஒட்டிக்கொண்டிருக்கும் கறையை முற்றிலும் துடைத்து அழித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஷ்ரத் ஜஹான் ஒரு லஷ்கர் பயங்கரவாதி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவரையும் அவருடன் இருந்தவர்களையும் குஜராத் காவல் துறை சுட்டுக்கொன்றது சரிதான் என்று ஆகிவிடும் அல்லவா? அவர்களைக் கொல்ல உத்தரவிட்டவர்கள் சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வோம் அல்லவா? அதனாலேயே பாஜக ஆதரவாளர்கள் திடீர் கொண்டாட்ட மனநிலைக்குத் தாவியிருக்கிறார்கள். அபாண்டமாக மோடியையும் அமித் ஷாவையும் குற்றம்சாட்டி வந்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள்.

ஆனால் மனித உரிமை ஆர்வலரும் இஷ்ரத் ஜஹான் வழக்கறிஞருமான விருந்தா குரோவர்,  ஹெட்லியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இஷ்ரத்தை ஒரு பயங்கரவாதி என்று முடிவு கட்டிவிடமுடியாது என்று எச்சரிக்கிறார். ஹெட்லியின் வாக்குமூலம் எப்படிப் பெறப்பட்டது என்பதைப் பார்த்தாலே அதிலுள்ள மிகப் பெரிய ஓட்டையைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்கிறார் இவர்.

ஹெட்லியை விசாரணை செய்தவர் அரசு தரப்பு வழக்கறிஞரான உஜ்வல் நிகம். இஷ்ரத் ஜஹான் பெயரை அவர் எப்படி ஹெட்லியின் வாயில் இருந்து கொண்டுவந்தார் என்பது முக்கியமானது. லஷ்கர் இ தொய்பாவில் பெண்களும் இருக்கிறார்களா என்னும் கேள்வியை முதலில் வீசியிருக்கிறார் உஜ்வல் நிகம். ஆம் இருக்கிறார்கள் என்று ஹெட்லி பதிலளித்ததும், அப்படியானால் பெண் தற்கொலைப் போராளிகளும் இருக்கிறார்களா என்று கேட்டிருக்கிறார். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று பதிலளித்திருக்கிறார் ஹெட்லி.

உஜ்வல் நிகம் விடவில்லை. இந்தியாவில் லஷ்கர் ஏதேனும் திட்டத்துடன் வந்து  அது நிறைவேறாமல் போனது பற்றி ஏதாவது தெரியுமா என்றொரு தூண்டிலை வீசியிருக்கிறார். ஹெட்லி அதைச் சரியாகவே பற்றிக்கொண்டார். ஆமாம், அப்படியொரு திட்டம் இருந்ததாகவும் அது காவல் துறையினரால் முறியடிக்கப்பட்டதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அவர் சொன்னார்.  கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் என்றும் அவர் தெரிந்துகொண்டாராம். உடனே உஜ்வல் மூன்று பெயர்களைச் சொல்லி, நீங்கள் கேள்விப்பட்ட பெண்ணின் பெயரைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு கேட்டிருக்கிறார். உடனே ஹெட்லி இஷ்ரத் ஜஹான் என்று சரியான விடையைச் சொல்லிவிட்டாராம்.

இப்படியொரு 'கோன் பனேகா குரோர்பதி' விசாரணையை இதுவரை நீதிமன்றம் கண்டதில்லை என்கிறார் விருந்தா குரோவர். ‘மூன்று பெயர்களை ஹெட்லிக்கு அளித்து அவரைப் பதில் சொல்லத் தூண்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இதை எப்படி இப்படி அனுமதித்தார்கள் என்றே புரியவில்லை!’ இன்னொரு விசித்திரத்தையும் குரோவர் சுட்டிக்காட்டுகிறார். உஜ்வல் நிகமுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க விருதான பத்ம ஸ்ரீ சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

வேறு சில ஓட்டைகளையும் விருந்தா குரோவர் சுட்டிக்காட்டுகிறார். லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த பலருடைய பெயர்களை உடனுக்குடன் தெளிவாகச் சொல்ல முடிந்த ஹெட்லியால் இறுதிவரை இஷ்ரத் ஜஹானின் பெயரைச் சொல்லமுடியவில்லை. இஷ்ரத்தின் பெயர் அவரிடமிருந்து கிட்டத்தட்ட கறக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இஷ்ரத் வழக்கில் ஹெட்லியை ஒரு சாட்சியமாகக் கொள்ளவே முடியாது என்கிறார் குரோவர். ‘இந்திய தண்டனை சட்டத்தின்படி நேரடியாக ஒரு விஷயத்தைப் பார்த்த, கேட்ட ஒருவரைத்தான் சாட்சியமாகக் கருதமுடியும். இந்த விஷயம் அப்படியல்ல என்பதால் ஹெட்லியை ஒரு சாட்சியமாக ஏற்கமுடியாது. எங்கிருந்தோ, யாரிடமிருந்தோ கேள்விப்பட்டதை மட்டுமே வைத்து அவர் இஷ்ரத்தின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அதுவும்கூட ஏற்கத்தக்க முறையில் அல்ல.’

ஒரு வாதத்துக்கு இஷ்ரத் ஜஹானும், அவருடன் இருந்தவர்களும் லஷ்கர் பயங்கரவாதிகள் என்றே வைத்துக்கொண்டாலும், அவர்களைக் கைது செய்து விசாரணை செய்வதுதானே நியாயமானது? நிஜமாகவே மோடியைக் கொல்வதற்காக அவர்கள் வந்திருந்தால், அவர்களுடைய திட்டம் குறித்தும் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்தும் பல முக்கியமான தகவல்களை குஜராத் காவல் துறையினர் பெற்றிருக்கவேண்டும் அல்லவா? நிராயுதபாணியாக இருந்த நால்வரையும் கொல்லவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? மும்பை குண்டுவெடிப்பு பற்றிய தகவல்களைத் திரட்டுவதை விட்டுவிட்டு இஷ்ரத் ஜஹானின் பெயரை ஹெட்லியின் உதடுகளில் இருந்து உரித்தெடுக்கவேண்டிய அவசியம் ஏன் சிலருக்கு ஏற்பட்டது?

இந்தக் கேள்விகளுக்கு டேவிட் ஹெட்லி மட்டுமல்ல, வேறு யாரிடமிருந்தும் நமக்குப் பதில்கள் கிடைக்கப்போவதில்லை. காரணம், உண்மையைக் கண்டறிவதல்ல, யாரும் கண்டறிந்துவிடக்கூடாது என்பதே இங்கு நடத்தப்படும் பல விசாரணைகளின் நோக்கமாக இருக்கிறது.

ஏற்கெனவே அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுவிட்ட இஷ்ரத் ஜஹானை மீண்டும் மீண்டும் கொல்லும் இத்தகைய விசாரணைகளை நாம் நம்புவதைக் காட்டிலும் மேலான ஆபத்து இன்னொன்றில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close