Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூற்றாண்டு விழா நாயகர் பி.யு.சின்னப்பா! (தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர்-22)

மிழ் சினிமாவின் ஆரோக்கியம் ஒருவகையில் போட்டியினால் கட்டிக்காக்கப்பட்டுவருகிறது என்றே சொல்லலாம். கமல் - ரஜினி,  அஜித் - விஜய்,  எம்.ஜி.ஆர் - சிவாஜி என ஒவ்வொரு தலைமுறைக்கும் இரு போட்டி நடிகர்கள் வெற்றிகரமாக உலாவி,  தமிழ்சினிமாவை கட்டிக்காத்தனர் என்றே சொல்லலாம். இதில் எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு முந்தைய தலைமுறையை கட்டிப்போட்ட  முதல்தலைமுறை போட்டி நடிகர்கள் தியாகராஜபாகவதர்- பி.யு சின்னப்பா.

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பகாலமான அன்று,  ஒரே நேரத்தில் பாடவும் நடிக்கவும் கூடிய திறமை வாய்ந்த நடிகர்களாக விளங்கிய இவர்கள்,  மற்ற போட்டியாளர்களை விடவும் பாராட்டுக்குரியவர்கள். இவர்களில் பி.யு சின்னப்பாவின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு துவங்குகிறது.

தமிழ் சினிமாவின் முதல் போட்டியாளர்கள்

1905- ம் ஆண்டு மௌனப்படமாக விதையூன்றப் பெற்ற தமிழ் சினிமா, பிரமாண்ட வளர்ச்சி பெற்று பலகோடி தமிழ் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இக்கனவுத் தொழிற்சாலை ஆசியாவிலேயே பெரிதாக இன்று தோற்றம் கண்டுள்ளது. சினிமா என்ற இந்த கனவுத்தொழிற்சாலையை,  அதன் ஆரம்பக் காலத்தில் இம்மண்ணில் கட்டியெழுப்பிய கலைஞர்கள் பலர்.  அவர்களில் ஒருவர்தான் 1916-ம் ஆண்டு நூற்றாண்டு விழா காண உள்ள தவ நடிக பூபதி நடிகர் பி.யு.சின்னப்பா.

1916 -ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் பிறந்தார் சின்னப்பா. இயற்பெயர் சின்னசாமி. மீனாட்சி -  உலகநாதம் தம்பதியின் மூத்த மகனாக பிறந்த சின்னப்பா,  நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டவர். வறுமை காரணமாக தேங்காய் நாரில் கயிறு திரிக்கும் வேலையில் சேர்ந்தார். மாத ஊதியம் ஐந்து ரூபாய்.  சிறுவயதிலேயே நாடகத்தின் மீது காதல் கொண்டிருந்த அவர்,  தனது 6 வயதில் 'சதாரம்' என்ற நாடகத்தில் 'பக்கா கள்ளனாக' நடித்து புகழ்பெற்றார்.

அக்காலத்தில் குப்பி வீரண்ணா, கள்ள பார்ட் நடராஜ ஆச்சாரி என்பவர்கள் 'கள்ளப்பார்ட்டாக' நடிப்பதில் பெயர் பெற்று விளங்கினார்கள். இவர்களது 'சதாரம்'' நாடகத்தைப் பார்த்து தானும் அவர்கள் போல் 'பக்கா திருடனாக'' நடிக்க ஆசைப்பட்டு ''சதாரம்'' நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார்.

சிறு வயதிலேயே தசாவதாரம் சி.கன்னையா நாடகம் கம்பெனி நடத்திய நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. கன்னையா நாடகத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா பிரதான நடிகர். இவர் அக்கம்பெனியின் நாடகமான ''ஆண்டாள் திருக்கல்யாணம்" ''வள்ளி திருமணம்'' ''தசாவதாரம்'' ஆகிய நாடகங்களில் முக்கிய நடிகராக விளங்கினார். எஸ்.ஜி. கிட்டப்பா நடித்த நாடகங்களை அடிக்கடி சென்று பார்த்து தனது நாடக திறமையை மேன்மேலும் பட்டைத் தீட்டிக் கொண்ட சின்னப்பா 1924 -ம் ஆண்டுவரை நாடகங்களை பார்ப்பதில் செலவிட்டார் சின்னப்பா. பின்னர் சில மாதங்கள் புதுக்கோட்டை மார்கழி பஜனை கோஷ்டியில் சேர்ந்து பஜனை பாடி வந்தார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சின்னப்பா


தனது ஏழு வயதில் பழனியாப் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து சில மாதங்கள் நாடகங்களில் நடித்தார். பின்னர் விலகி விட்டார். அந்த சமயத்தில் புதுக்கோட்டை நகருக்கு மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனி வந்து நாடகம் நடத்தியது. புதுக்கோட்டை நாராயணன் செட்டியார் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாடக ஒத்திகை வாத்தியார் காளி என்.ரத்தினத்தை நேரில் பார்த்து சின்னசாமியை நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்தார். காளி என். ரத்தினம் ஆதரவில் சின்னப்பா மதுரை ஒரிஜினல் பாய்ஸ்  கம்பெனி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மாத சம்பளம் ரூ15. பிறகு வருஷத்துக்கு 5 ரூபாய் சம்பள உயர்வுடன் மூன்று வருடம் பணியாற்றினார்.

திருச்சியில் நாடகங்கள் நடந்த சமயம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருநாள் கம்பெனி வீட்டின் மேல் மாடியில் நடிகர் காளி என்.ரத்தினத்துடன் விவாதம் செய்து கொண்டிருந்தார் நாடக கம்பெனி உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளை. வீட்டின் கீழ்தளத்தில் அனுசுயா 'நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அந்நாடகத்தில் நாரதராக நடித்தவர், பாட்டுகளைப் பாடுவதற்கு சிரமப்பட்டார். அக்கம்பெனியில் அப்பொழுது நாடக வாத்தியாராக பணியாற்றி வந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கம்பெனியில் அப்பொழுதான் வந்து சேர்ந்திருந்த சின்னப்பாவை அப்பாட்டைப் பாடச் சொன்னாராம். சின்னப்பா நாரதர் கதாபாத்திரம் பாடவேண்டிய பாடல்களை சிரமமின்றி மிக இனிமையாக பாடினார். பாடலை பாடி முடித்ததும் மேல் மாடியிலிருந்து ஒரு ஆள் வந்தார். '' இப்பொழுது பாடியவரை முதலாளி கூப்பிட்டு வரச் சொன்னார்" என்றார்.

ஒரே நாளில் எழுபத்தி ஐந்து ரூபாய் சம்பளம்

சின்னப்பா ஏதோ தான் தவறு செய்து விட்டது போல் அச்சமடைந்தார். தன் துடுக்குத்தனத்திற்கு முதலாளி வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்போகிறார் என பயந்தபடி சின்னப்பா மாடிக்கு போனார். உள்ளே சென்ற மறுவினாடி முதலாளி அவரை கட்டித்தழுவினார். பின்னர் உட்காரச்சொல்லி நாரதர் வேஷப் பாட்டுகளையெல்லாம் மீண்டும் பாடச் சொன்னார். சின்னப்பா பாடினார். முதலாளி மகிழ்ச்சியடைந்தார். விளைவு சின்னப்பா நாடக கம்பெனியில் பிரதம நடிகராக்கப்பட்டார். சின்னப்பாவின் மாத சம்பளம் ஒரே நாளில் எழுபத்தி ஐந்து ரூபாய் ஆனது.

தொடர்ந்து கம்பெனி நடத்திய சந்திரகாந்தா, ராஜேந்திரன், கோவலன், பதிபக்தி போன்ற நாடகங்களில் சின்னப்பா நடித்தார். அப்பொழுது இக்கம்பெனியில் கே.எஸ். சொக்கலிங்கப் பாகவதர் கே.பி.கேசவன், காளி, என்.ரத்தினம் பி.ஜி.வெங்கடேசன் டி.ஆர்.பி. ராவ் ஆகியோர் பிரபலமாக விளங்கி வந்தனர். வாத்யார் காளி என்.ரத்தினம் சின்னப்பாவிற்கு நடிப்பு வசன உச்சரிப்பு பாட்டு பாடுதல் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சி கொடுத்து சின்னப்பாவை ஒரு தேர்ந்த நடிகராக உருமாற்றினார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையில் முகாமிட்டு ஒருவருடத்திற்கு மேல் தொடர்ச்சியாய் நாடகங்களை நடத்தியது. இந்த நாடகம் பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது. சின்னப்பாவிற்கு மக்களிடம் பாராட்டுகள் குவிந்தது. தன் நடிப்பின் மூலம் மக்களை வசிகரித்தார்.

மகரக்கட்டால் வந்த வினை

சமயங்களில் நாடகக் கம்பெனி நடத்திய நாடகங்கள் போதுமான அளவிற்கு வசூல் பெறுவதில்லை. அத்தகைய நேரங்களில் சின்னப்பா கோவலனாகவும், காளி என் ரத்தினம் காளியாகவும் நடிக்கும் ''கோவலன்" நாடகத்தை மேடையில் நடத்துவார்கள். வசூல்மழை பொழியும் கோவலன் நடிப்பில் சின்னப்பா நிகரற்று விளங்கினார். இவர் நடித்த 'சந்திரகாந்தா' நாடகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவருக்கு புகழைத் தேடி தந்தது. ஆனால் சின்னப்பாவின் புகழ் உச்சியிலிருக்கும்போதே அவரது தொண்டை தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது.

ஆம் அவருக்கு மகரக்கட்டு ஏற்பட்டது. தனது நிலையைக் கண்டு வருந்திய சின்னப்பா கம்பெனியை விட்டு யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டார். வெளியேறிய பின் தன் பாட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டி கடும் விரதங்களை அனுஷ்டிக்கத் தொடங்கினார். தாம் இழ்ந்த குரலை மீண்டும் பெற்றார். இந்த சமயத்தில் தான் ஜுபிடர் பிக்சர்ஸ் அவரை 'சந்திரகாந்தா' படத்திற்கு ஒப்பந்தம் செய்தது.

திரைப்படம் 1936-ல் வந்தபோது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. டெல்லி, கல்கத்தா, மைசூர், பெங்களூர் போன்ற ஊர்களிலும் இத்திரைப்படம், திரையிடப்பட்டது. அதுவரை சின்னசாமி என்ற பெயருடன் நாடகங்களில் நடித்து வந்தவரை ''சின்னப்பா'' என்ற பெயரில் அறிமுகம் செய்தது சந்திரகாந்தா திரைப்படம். உதயமானார் தமிழ்த்திரையுலகின் ஒப்பற்ற நடிகர் பி.யு. சின்னப்பா...

கண்ணகி படத்தில் பெரும்புகழ்பெற்ற பி.யு சின்னப்பா பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...


எடிட்டர் சாய்ஸ்