Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த தமிழ்சினிமா சூப்பர்ஸ்டார்! (தமிழ்சினிமா முன்னோடிகள்:தொடர்-23)

 

முதல் படவாய்ப்பு

ஜுபிடர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை எம்.சோமசுந்தரம் என்பவரும்,  எஸ்.கே. மொய்தீன் என்பவரும் இணைந்து தொடங்கினர். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கோவையில் செயல்பட்டது. பின்னர் 1936-ல் சென்னை பிராட்வேக்கு இடம்மாறியது. 1936-ல் ஜுபிடர் பிக்சர்ஸ் ஜே.ஆர். ரங்கராஜுவின் சமூக சீர்திருத்த நாவலான ''சந்திரகாந்தாவை'' சரஸ்வதி ஸ்டுடியோவில் தயாரித்தனர். இப்படத்தின் இயக்குநர் ராஜா சாண்டோ.

கே.சோமசுந்தரம் பொறுப்பில் 'சந்திரகாந்தா' படப்பிடிப்பு நடந்து வந்தது. சென்னை அலுவலகத்தில் எஸ்.கே.மொய்தீன் பொறுப்பில்,  படத்தில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்தது. சந்திரகாந்தா படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க, தகுந்த திறமையான நடிகரை தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகர் காளி என்.ரத்தினம்,  ஒரு நடிகரின் பெயரை அந்த வேடத்திற்கு சிபாரிசு செய்தார். சிபாரிசு செய்யப்பட்ட நாடக நடிகரை முதலாளிகளில் ஒருவரான எஸ்.கே.மொய்தீன் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வரவழைத்து தன் அலுவலகத்தில் நடிப்பு ஒத்திகை நடத்தினார்.

கருத்த, குட்டையான புதுக்கோட்டை சின்னசாமியின் நடிப்பு பரிசோதிக்கப்பட்டது. அக்காலத்தில் நடிகரின் பிரதான தகுதி குரல் வளமும் பாடும் திறமும்தான். ஒத்திகையின்போது,  நாடகங்களில் தான் பாடி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ''பக்தி கொண்டாடுவோம்" என்ற பாடலை,  சுமார் முக்கால் மணி நேரம் விஸ்தாரமாக பாடி,  தன் திறமையை நிரூபித்தார் சின்னசாமி.

ஆழ்ந்த இசைஞானத்துடன் சின்னசாமி பாடிக் காட்டியதால், அப்படத்தின் வில்லன் 'சுண்டூர் இளவரசன்' வேடத்துக்கு சின்னசாமியை ரூ300/-க்கு ஜுபிடர் ஒப்பந்தம் செய்தது. சின்னசாமி படப்பிடிப்பில் கலந்து கொள்ள பூனா சென்றார். படத்தில் வில்லனாக ஜுபிடர் அறிமுகப்படுத்திய அந்த சின்னசாமிதான் பின்னாளில் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய பி.யு.சின்னப்பா. முதல்பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது இப்படித்தான்.

இப்படத்தைத் தொடர்ந்து மாத்ரூபூமி, ராஜ்மோஹன், பஞ்சாப் கேசரி, ஆரியமாலா, கண்ணகி, குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, மகாமாயா, பிருதிவிராஜன் ஜகதலப்பிரதாபன், மனோன்மணி, உத்தமபுத்திரன், மங்கையர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்து மகிழ்ந்தார் சின்னப்பா.

பி.யு.சின்னப்பாவும் எம்.கே. டி. பாகவதரும்

உத்தமபுத்திரன் படத்தில் நடித்த சின்னப்பா,  தனது பட்டை தீட்டப்பட்ட நடிப்பால் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார். சின்னப்பாவின் திரையுலக வளர்ச்சி எம்.கே. டி. பாகவதருக்கு ஒரு பலமான போட்டியை ஏற்படுத்தியது. பாகவாதர் நடித்த சத்தியசீலனும், சின்னப்பா நடித்த சந்திரகாந்தவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோதே இரு நடிகர்களின் அபிமானிகள் சிலர் இருவரையும் 'பவளக்கொடி' என்ற நாடகத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.

'சத்தியசீலன் சுண்டூர் இளவரசன் சந்திப்பு' என்று விளம்பரத் தட்டிகளை வைத்து நோட்டீசுகளை அச்சடித்து வினியோகித்தனர். பொதுமக்களும் ரசிகர்களும் இதை நம்பவில்லை. காரைக்குடி சண்முக விலாஸ் தியேட்டரில் பவளக்கொடி நாடகத்தில் பாகவதர் அர்ச்சுனனாகவும், பி.யு. சின்னப்பா கிருஷ்ணனாகவும் நடித்ததை கண்டு ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கு சென்றனர். காரைக்குடியே விழாக்கோலம் பூண்டது. நாடகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இதுதான் இந்த இருவரும் இணைந்து நடித்த ஒரே நாடகம்.  இதற்கு பின் இவர்கள் நாடகத்திலோ திரையிலோ இணைந்து நடிக்க முடியவில்லை. திரையுலகின் உச்சிக்கு சென்றதே காரணம்.

எழுத்தாளர் சின்னப்பா


சின்னப்பா எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். ''என்னுடன் நடித்த கதாநாயகிகள்'' என்ற தலைப்பில் ஒரு பிரபல சினிமா பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுதினார். கண்ணாம்பா, சகுந்தலா, பானுமதி, எம்.வி.ராஜம்மா, டி.ஆர்.ராஜகுமாரி என ஒவ்வொரு நடிகையை பற்றியும் சிறப்புடன் எழுதினார்.

அவதுாறுகளை புறந்தள்ளிய சின்னப்பா


சி. என். இலட்சுமிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர்,  தான் நடத்திய சினிமாதூது, இந்துநேசன் என்ற பத்திரிகைகளில் பிரபல சினிமா நடிகர்,  நடிகைகளை தரக்குறைவாக தாக்கி எழுதிவந்தார். இதில் பி.யு. சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றியும் எழுதப்பட்டது. சின்னப்பா அந்தப் பத்திரிகைகளைக் கண்டு அச்சப்படவில்லை. அந்தப் பத்திரிகையில் வந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் அலட்சியப்படுத்தினார். 'நடித்துப் பிழைப்பது நம் தொழில்,  அந்த ஆளுக்கு இதுதான் தொழில். விட்டுவிட்டு வேலைபார்ப்போம்' என அந்த பத்திரிக்கையை புறந்தள்ளினார். ஆனால் சக நடிகரான எம்.கே.டி. பாகவதர்,  லட்சுமிகாந்தன் விவகாரத்தில் தேவையின்றி சிக்கி வாழ்க்கையை தொலைத்தார். இதுதான் சின்னப்பாவின் அணுகுமுறை.

இப்படி தியாகராஜ பாகவதருக்கும் சின்னப்பாவிற்கும் தனிப்பட்ட வாழ்வில் குணாதிசயங்கள் வெவ்வேறு. திரையுலகின் உச்சத்திற்கு சென்ற பின் பாகதவரின் தனிப்பட்ட வாழ்க்கை படோடமாக மாறியது. ஆனால் சின்னப்பா அதற்கு நேர்மாறானவர். சாதாரண தனிமனிதர்களின் சிக்கனத்தை அவர் கடைபிடித்தார். சாதாரண சுருட்டு ரசிகர் அவர். திரையுலகில் சிக்கனம் சின்னப்பா என்று அவருக்கு பட்டப்பெயர் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தபோதிலும், அவர் ரயிலில் மூன்றாவது வகுப்பில்தான் பயணம் செய்வார் என்பார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

சிக்கனம் சின்னப்பா

ஒருமுறை சேலத்திலிருந்து சின்னப்பா,  புதுக்கோட்டைக்கு ரயிலில் மூன்றாவது வகுப்பில் (IIIrd Class) பிரயாணம் செய்தார். சின்னப்பா தனது அடையாளத்தை மறைக்க வேண்டி,  தலையில் முண்டாசு கட்டிக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்தால் சக பிரயாணிகள் தன்னை நடிகர் என்று தெரிந்து அன்புத்தொல்லைகள் விளைவிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை. ரயில்பெட்டியில் எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு பிரயாணி இவரை அடையாளங்கண்டு கொண்டு; ''நீங்கள் பி.யு. சின்னப்பா தானே என்றார்." உடனே இவர் 'நான் சின்னப்பா" இல்லை; சின்னப்பா போன்ற தோற்றம் எனக்கு அமைந்திருந்தால் நான் சின்னப்பா ஆகிவிடுவேனோ... உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? நடிகர் பைத்தியம் பிடித்து அலைகிறீர்கள்...!" என்று அந்த கேள்விகேட்ட சக பிரயாணியை கண்டித்து விட்டு,  ரயில் பிரயாணத்தை தொடர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியை புதுக்கோட்டை வந்து சேர்ந்த பின் தன் மனைவியிடம் தெரிவித்து விட்டு,   ''எனக்குத் தேவையில்லாத பப்ளிசிட்டி பிடிக்காது என்பதுதான் உனக்குத் தெரியுமே! அதனால்தான் உத்தமபுத்திரன் படத்தில் இரண்டு வேடம் புனைந்த நான் 'ரயிலில் மூன்றாவது வேடமும் போட்டேன் என்று மேற்கொண்டு சொன்னார்.

சிறைக்கு அனுப்பிய தேசபக்தி

சின்னப்பாவின் சிக்கனம் அவருக்கு சிக்கலானதும் உண்டு. தான் ஈட்டிய செல்வத்தையெல்லாம் புதுக்கோட்டையில் வீடுகளாகவும்,  நிலமாகவும் மாற்றி வைத்திருந்தார். ஒருகட்டத்தில் புதுக்கோட்டை நகரசபை, 'மேற்கொண்டு புதுக்கோட்டையில் சின்னப்பா அசையா சொத்து எதுவும் வாங்கக் கூடாது' என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கும் அளவுக்கு இடங்களை வாங்கிப்போட்டிருந்தார் என்பார்கள்.

ஒருமுறை புதுக்கோட்டை திவான்  கலிபுல்லா சாயுபு, சின்னப்பாவை அணுகி, இரண்டாம் உலக யுத்தத்திற்கு ஆயுதம் வாங்க, நாடகம் நடத்தி யுத்த நிதிக்கு நிதி திரட்டித் தரும்படி கோரிக்கை வைத்தார். சின்னப்பா,  தன் தாய் நாட்டின் மீது கொண்டிருந்த தேசபக்தியால் அதற்கு மறுத்து விட்டார். விளைவுகளை கண்டு அசரவில்லை சின்னப்பா. ஒரு சமயம் புதுக்கோட்டையில் மதுவிலக்கு சட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மது அருந்தியதாக ஒப்புக் கொண்டு போலீஸ் லாக்கப்பில் ஒரு நாள் முழுவதும் இருந்தார். கோர்ட்டில் 200 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு விடுதலையாகி வெளியே வந்து விட்டார். யுத்த நிதி திரட்டிக் கொடுக்காததால் வந்த வினை இது.

பி.யு.சின்னப்பாவைப் போல் நடிக்க விரும்பிய எம்.ஜி.ஆர்

''சின்னவர்'' என்று திரைத்துறையினரால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.,  நடிகர் பி.யு.சின்னப்பாவின் பரமரசிகர். அவரைப் பற்றி புகழ்ந்து பெருமையாக பேசுவார். சின்னப்பா நடித்த ஆரியமாலா என்ற படம் அந்தக் காலத்தில் வசூலில் சக்கைப் போடு போட்டு வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தைப் பார்த்து 'சின்னப்பா' போன்றே ஒரு படத்தில் தானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.

அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இப்படத்தில் சில காட்சிகளில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்போது தான் சார்ந்திருந்த தி.மு.க.-வின் கொள்கை காரணமாக தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. 'காத்தவராயன்' என்ற அத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'மந்திர தந்திரங்கள்' செய்து புடலங்காயை பாம்பாக மாற்றுவது போன்ற காட்சியில்,  தான் நடிக்க வேண்டியிருந்ததால் அது தன் கொண்ட கட்சிக் கொள்கைக்கு முரணானது என்று தீர்மானித்து படத்திலிருந்து விலகிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

பி.யு.சின்னப்பா போன்றே காத்தவராயனில் நடிக்க விரும்பிய எம்.ஜி.ஆரின் எண்ணம் திராவிட இயக்க கொள்கைகளால் சிதைவுபட்டது. எம்.ஜி.ஆர். இதை பின்னாளில் வருத்ததுடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சின்னப்பாவின் காதல் திருமணம் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்...

- பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close