Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேரறிவாளன் விடுதலைக்கு முயற்சிப்பீர்களா...?- பதில் சொல்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

’விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆஸ்ரமம்!’ என்ற தலைப்பில் அண்மையில் ரவிசங்கர் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்தது குறித்து vikatan.com இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து, ரவிசங்கரின் ஆசிரமத்தில் இருந்து தொடர்பு கொண்ட அவரது சீடர்கள், ’சுவாமிஜியின் ஆன்மீக பயணத்தை நீங்கள் அரசியல் பயணமாக தொனிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். சுவாமிஜிகளுக்கு அரசியலில் விருப்பம் கிடையாது’ என்று ஆட்சேபம் தெரிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தமிழக விஜயம் குறித்து விளக்கம் பெற அவரிடமே பேட்டி எடுக்க விருப்பம் தெரிவித்தோம். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கும்பகோணம் கோவிந்தபுரத்தில் சன்னியாசிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும்போது சந்திக்கலாம் என்று அழைத்தார்கள். பேட்டிக்கென ஒதுக்கப்பட்ட மதியம் 1.30 மணிக்குச் சென்றோம். காத்திருந்தோம். ’சுவாமிஜிகள் ஒய்வெடுக்கிறார். மாலை சந்திக்கலாம்’ என்றார்கள். காத்திருந்தோம்.

மாலை அவர் கோவில்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். காத்திருந்தோம். அவர் முன்பு ஒருமுறை கூறியது அப்போது நினைவுக்கு வந்தது, ‘அனைத்தையும் சந்தோஷமாக செய்யுங்கள், நடப்பது, பேசுவது, அமர்ந்திருப்பது என அனைத்தும் சந்தோஷமாக செய்யுங்கள். உங்களுக்கு யார் மீதாவது புகார் இருந்தால், அதையும் சந்தோஷமாக தெரிவியுங்கள்’. அவரது சீடர்களிடம் ஏறத்தாழ 7 மணி நேரக் காத்திருப்புக்கு பின்னும் சந்தோஷமாகக் கேட்டேன்... “இன்னும் எவ்வளவு நேரம் நாங்கள் காத்திருக்க வேண்டும்?” 
  ஒருவழியாக இரவு 10 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடான சந்திப்பு நிகழ்ந்தது.

உங்களது நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்ததன் நோக்கம் என்ன..? ஏதாவது அரசியல் காரணம் இருக்கிறதா...?

இல்லை. நிச்சயம் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்மீக, நல்லெண்ண சந்திப்பு. அவர்கள் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு அழைத்து இருந்தார்கள். அதனால் சென்றேன்.

நீங்கள் தி.மு.க பொருளாளர் ஸ்டாலினை கூட சந்தித்து இருந்தீர்கள். அவரும் ஆன்மீக பாதைக்கு திரும்பிவிட்டாரா...?

இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் எங்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்கள். எங்கள் பெங்களூர் ஆசிரமத்துக்கு வந்து இருந்தார்கள். அவருடைய மகள், மருமகன் அனைவருமே ஆன்மிகத்தில், வாழும் கலையில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். அதனால், என்னை அழைத்தார்கள். அவர் மட்டும் அல்ல, எங்களை அன்பாக யார் அழைத்தாலும், நாங்கள் நேரில் செல்வோம்.

வாழும் கலை பயிற்சி பற்றி பேச்சு வந்ததால், இதனை கேட்கிறேன். எப்போதுமே, யோகா மத்திய வர்க்கம், மற்றும் பணக்காரர்களுக்கான விஷயமாக இருக்கிறதே...?

அப்படியெல்லாம் இல்லையே... பணக்காரர்களுக்கு மட்டும் எங்கள் பயிற்சிகளை சொல்லி தருவதென்றால் சிறு அறை போதுமே, ஆனால் எங்கள் பயிற்சி வகுப்புகளுக்கு பெரிய இடம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நாங்கள் கிராமத்திற்கு இதனை எடுத்து சென்றுள்ளோம். எங்கள் பயிற்சிகளை செய்வதால், அவர்களிடம் உள்ள கெட்ட பழக்கம், குடி பழக்கம் மாறுகிறது. மன அமைதி அனைவருக்கும் ஏற்படுகிறது. உணவு போல், அமைதியும் எல்லாருக்கும் வேண்டும் அல்லவா...?

நான் குறிப்பிட விரும்பியது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை... அவர்களுக்கு நாம் இந்த பயிற்சிகளை கற்று தருகிறோமா...?

நிச்சயமாக... நிறைய தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கள் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். எங்களிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்களே இருக்கிறார்கள். நாங்கள் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. எல்லா சமூக மக்களும் இருக்கிறார்கள்.

நீங்கள் இலங்கையில் போர் நடந்த போது, அங்கு அமைதியை கொண்டு வர முயற்சித்தீர்கள் அல்லவா... இப்போது அங்கு நிலை எப்படி இருக்கிறது...?

அரசாங்கம் மாறிய பின், பெரிய மாற்றம் உண்டாகி இருக்கிறது. நாங்களும் அவர்களது மறுவாழ்விற்காக பணியாற்றி வருகிறோம். எங்கள் சிறுவர் இல்லமும் அங்கு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, போரால் துன்பபட்ட மக்களுக்காக பல பயிற்சிகளை கொடுத்து வருகிறோம்.

நீங்கள் கொலம்பியாவில் அமைதியை கொண்டு வரவும் சில முயற்சிகளை எடுத்தீர்கள். அங்கு அரசுக்கும், புரட்சி குழுக்களுக்கும் மத்தியஸ்தம் செய்து, அவர்களை காந்திய வழிக்கு திருப்ப சில முயற்சிளை மேற்கொண்டீர்கள். அது போல் இந்தியாவில் தண்டகாருண்யா பகுதிகளில் உள்ள புரட்சி குழுக்களையும் நீங்கள் காந்திய வழிக்கு திருப்பி உள்ளீர்களா...?

இங்கும் நாங்கள் அதுபோல் பல வேலைகளை பார்த்து வருகிறோம். அசாம் மாநிலத்தில் உள்ள உல்ஃபா இயக்கத்தை சேர்ந்தவர்களையும், ரண்வீர் சேனா இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அமைதி பாதைக்கு திருப்பி உள்ளோம். அது மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பூமிஹார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒரு இணக்கத்தை உண்டாக்கி உள்ளோம். ஜார்க்கண்டிலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை, பல தலைவர்கள் உட்பட வன்முறையிலிருந்து, அமைதியான பொது வாழ்க்கைக்கு திருப்பி உள்ளோம். 'Leave the bullet, Come to ballot' என்ற கோஷத்தை முன் வைத்தோம், பலர் அதனை ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.

பெரு நிறுவனங்கள் வரைமுறை இல்லாமல் இயற்கையை சுரண்டுகிறது, நீங்கள் அது போன்ற நிறுவனங்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்களே...?

எல்லா நிறுவனங்களும் அப்படி இல்லை. அவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறார்கள், மக்களுக்கு வேலை தருகிறார்கள்.

1992-ம் ஆண்டு முதல், நீங்கள் சிறைவாசிகள் மறு வாழ்விற்காக தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் அல்லவா...? இப்போது தமிழக சிறைசாலைகளில் பலர் விசாரணை கைதிகளாகவும், தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடுகிறார்கள்.... குறிப்பாக பேரறிவாளன்... அவர்கள் விடுதலைக்காக முயற்சிகளை மேற்கொள்வீர்களா...?

‘நிதி இல்லாத நீதி’ என்ற பெயரில் சட்ட உதவி மையங்களை நடத்தி வருகிறோம். உதவிகள் தேவைப்படுவோர் அங்கு அணுகலாம்...

நீங்கள் லோக்பால் மசோதா கொண்டு வர காங்கிரஸ் ஆட்சியின் போது, வீதிக்கு வந்து போராடினீர்கள்...? இப்போது அந்த போராட்டம் எந்த அளவில் உள்ளது...?

லோக்பாலால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. இருக்கின்ற சட்டங்களே போதும். அந்த சட்டங்களை ஏற்றுக் கொள்ள, கீழ்ப்படிய மனிதர்களின் மனம் மாற வேண்டும். அதற்காகதான் இப்போது உழைக்கிறோம்.

நீங்கள் மனிதர்களின் மனம் மாற வேண்டும் என்று கூறுவதை, அரசியல்வாதிகள் மனம் மாற வேண்டும் என்ற பொருளில் எடுத்து கொள்ளலாமா...?

ஊழல் வெறும் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தின் மனமும் மாற வேண்டும்.

ஜவஹர்லால் பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள்...?

யார் தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தாலும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால், இது மாணவர்கள் போராட்டம் மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் நுழைந்து பிரச்னையை சிக்கல் ஆக்கிவிட்டார்கள். நீதிமன்றம்தான் உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஆனால், நீதிமன்றத்திலும் மாணவர்கள் தாக்கப்படுகிறார்களே...?

மிகவும் தவறு. குற்றவாளிகளை கூட துன்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

நீங்கள் மார்ச் 11-ம் தேதி ‘உலக கலாச்சார விழா’ யமுனா வெள்ளச் சமவெளியில் நடத்த திட்டமிட்டு உள்ளீர்கள் அல்லவா...?

ஆம். மிகப் பெரிய மாநாடு அது. 155 நாட்டுகளிலிருந்து, பொது மக்கள், தலைவர்கள் வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து முன்னாள் பிரதமர் கிலானி வருகிறார்.

ஆனால், நீங்கள் அந்த மாநாட்டிற்காக யமுனா வெள்ளச் சமவெளியில் தடை மீறி கட்டுமானங்கள் கட்டுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உங்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது அல்லவா...?

ஆம். சில விளக்கங்கள் கேட்டு இருந்தார்கள். எங்கள் மீது உள்ள பொறாமையால் யாரோ ஒருவர் புகார் தெரிவித்து இருக்கிறார். அதனால் எங்களிடம் விளக்கம் கேட்டார்கள். நாங்கள்தான் முதன்முதலாக யமுனா நதியை தூய்மை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 500 டன் குப்பைகளை அகற்றி உள்ளோம். நாங்கள் எப்படி அதனை அசுத்தப்படுத்துவோம்...?

நாங்கள் குப்பைகளை அகற்றவே jCb எடுத்து கொண்டு போனோம், கட்டடங்கள் கட்டுவதற்கு அல்ல...

 பேட்டியை முடித்தவர் தனக்கு முன் இருந்த டப்பாவில் இருந்த இனிப்பை நமக்கு தந்துவிட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்கிறார்.

- மு. நியாஸ் அகமது


படங்கள் : கே. குணசீலன்,

ம. அரவிந்த் (மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ