Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வனத்துறை அமைச்சருக்காக 'வசூல்' வேட்டை... வன அலுவலர்கள் கிளப்பும் 'பகீர்' புகார்!

சீனியாரிட்டி அடிப்படையில் தானாக வரும் பதவி உயர்வுக்கு லட்சங்களில் கவனித்தால் மட்டுமே பதவி உயர்வு என்று வனத்துறை ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ள விவகாரம்,  வனத்துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி தரும் முறைகேடுகள் குறித்து வனத்துறை ஊழியர்கள் vikatan.com க்கு அளித்த பேட்டியில்,
"தமிழக அரசின் வனத்துறையில், வாட்சர், வனவர், கார்டு, ரேஞ்சர் உள்ளிட்ட பதவிகளில் மாநிலம் முழுவதும் 5,635 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அவரவர் பணியாற்றும் பதவிகளில் இருந்து பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் பதவி வழங்காமல் அரசின் அடிப்படை விதிகளை மீறி பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

அதாவது 8 ஆண்டுகள் ஃபாரஸ்டராக பணியாற்றி, 6 மாதம் பயிற்சி பெற்று தகுதியடைந்தவர்கள் மட்டுமே ரேஞ்சர் பதவிக்கு உயர்த்தப்படுவர் என்பது விதி. அதிலும் ரேஞ்சர் பதவிக்கு வருபவர்கள் மீது எந்த  வழக்குகளும் இருக்கக் கூடாது,  அவர் மீது ஊழல் புகார்கள் இருக்க கூடாது என்பதும் முக்கிய விதியாகும்.

ஆனால் இந்த விதியை மாற்றி 5 ஆண்டுகள் ஃபாரஸ்டராக பணியாற்றினால் போதும் என்று கூறி,100க்கும் மேற்பட்டவர்களுக்கு  ரேஞ்சர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும், "மொத்தம் 220 ஃபாரஸ்ட் அலுவலர்களுக்கு,  ரேஞ்சர் பதவி உயர்வுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . இவர்களிடம் தலா 1 லட்சம் ரூபாய் என்று வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஒரு மாதம் என்று விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வுக்கான பணம் வசூலை தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தின் முக்கிய  பொறுப்புகளில் உள்ள இருவர்  நடத்தி, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.ஆனந்தன் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது" என்றும் கூறி அதிர்ச்சி கிளப்புகிறார்கள் வன அலுவலர்கள்.

வரும் 2016  சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக அமைச்சர் தரப்பினர் இது போல பல்வேறு வகைகளில் பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது கோட்டை வட்டாரங்கள்.

இந்த கெடுபிடி வசூலில் திருச்சி மாவட்டத்தில் ரேஞ்சராக பணியாற்றும் ஒருவரும், தேன்கனிக் கோட்டை பகுதியில் பணியாற்றும் அதிகாரி ஒருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு ஃபாரஸ்ட் ஆக பதவி உயர்வு பெற்ற ஒருவர் , அரசு விதிகளின்படி 8 ஆண்டுகள்  கழித்து,  வரும் 2019-ம் ஆண்டுதான் ரேஞ்சராக பதவி உயர்வு பெற வேண்டும். ஆனால் 2016 -ம் ஆண்டே ரேஞ்சர் பதவி உயர்வை ஒருவர் பெற பணம் கொடுத்து முயற்சி செய்கிறார். ஒருவர் மட்டும் அல்ல, இதே போல 220 பேரில் பாதிக்கு பாதி  பணம் கொடுத்தே பதவியைப் பெற கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தமிழ் நாடு வனத்துறையின் 152 ஆண்டுகால வரலாற்றில் இது போன்று விதிகளைத் தளர்த்தி பணம் வாங்கிக்கொண்டு பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும்,  இந்த வரலாறு காணாத முறைகேடு  அமைச்சர் மற்றும் வனத்துறை செயலர், வனத்துறை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர்,முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்  ஆகியோரின் தலையீட்டில் நடப்பது வேதனை அளிக்கிறது என்றும் கண்ணீர் வடிக்கின்றனர்  வன ஊழியர்கள்.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே ரேஞ்சர் ட்ரெய்னிங்  முடித்தவர்கள் மற்றும் 5 ஆண்டுகள் ஃபாரஸ்ட் பதவியில் பணியாற்றியவர்கள் என்று இறுதி பட்டியல் தயார் செய்து அது வனத்துறை செயலர் டேபிளுக்கு சென்றுவிட்டது என்றும்  கூறப்படுகிறது. " என்கிறார்கள் மனம் வெதும்பி.

அரசுப் பணியாற்றுவது மக்களுக்கா அல்லது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் பெட்டியை நிரப்பவா?

  
 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ