Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழுக்கு ஒரு நீதி... டெல்லிக்கு ஒரு நீதி... இதுதான் இந்திய நீதித் துறை சமத்துவமா?

வேறு விஷயமாக கூகுளில் ஒரு தகவலை தேடி கொண்டிருக்கும்போது, எதேச்சையாக ஒரு மீம்ஸ் கண்ணில் பட்டது. 8 மணி நேர பரோலில் வெளிவந்த நளினியையும், விடுதலையான சஞ்சய் தத்தையும் ஒப்பிட்டு இந்திய நீதித் துறையை கிண்டல் செய்தது அந்த படம். 

பல விசித்திரமான தீர்ப்புகளுக்கு பின்பும், இந்திய நீதித் துறையின்  மீது ஆழ்ந்த நம்பிக்கையும், மரியாதையையும் வைத்திருக்கும் நான் அதை ரசிக்கவில்லை... இருந்தாலும் ஒரு விஷயம் உறுத்தியது, என்னதான் சட்டங்களும், அரசியலமைப்பும் சம நீதியை வலியுறுத்தி இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது மனிதர்கள்தான் அல்லவா...? ஒரு வேளை அந்த மனிதர்கள் சமநிலை தவறுகிறார்களா...? பிறகு, அது குறித்து தகவல்களை திரட்ட தொடங்கினேன்...அதிக ஆண்டுகள் பின் செல்லவில்லை, அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தையும், சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்... அந்த ஒப்பீடுதான் இந்த சிறிய பதிவு....மாநிலத்திற்கு ஒரு நீதியா...?

கடந்த 2015, செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று 10 வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி போராடுகிறார்கள்.  அவர்கள் யாரையும் தாக்கவில்லை, உடல் ரீதியாக காயப்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள்.  அது போல், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்த இன்னொரு சம்பவத்தில்,  நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்ததற்காகவும், வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையையும் மீறி ஹெல்மெட்டை எரித்ததற்காகவும் , 14 வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

எல்லாம் சரிதான்...? நீதிமன்றத்தை அவமதிப்பதும், தீர்ப்பை அவதூறு செய்வதும் குற்றம்தான்.... அதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.... ஆனால், நீதியும், தண்டனையும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

விக்ரம் சிங் சவுகான் என்ற வழக்கறிஞர் தலைமையில் இரு கருப்பு அங்கி படை, உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே, விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கன்ஹையா குமாரை தாக்குகிறது... அது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகுகிறது, பத்திரிகைகளுக்கும்  அந்த வழக்கறிஞர்கள் கெளரவமாக பேட்டி தருகிறார்கள்....

ஏன் அந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று பார் கவுன்சில் சேர்மன் ஸ்ரீ மானன் குமாரிடம் கேட்டால், "உடனடியாகவெல்லாம் நடவடிக்கை எடுத்துவிட முடியாது. இதனை விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம்" என்கிறார்.  அடித்த வழக்கறிஞர்களே ஊடகங்களுக்கு பெருமையாக பேட்டி கொடுத்த பிறகு, இவர் எந்த ஆதாரத்தை தேடி கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.

இது குறித்து நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்று போராடி சிறை சென்ற வழக்கறிஞர் செந்தமிழ் செல்வன், “ஆம். இது நீதித் துறையில் இருக்கும் பாகுபாட்டைதான் காட்டுகிறது...” என்கிறார்.

நாங்கள் எங்கு சென்று போராடுவது...?

"கல்லூரியில் பிரச்னை என்றால் கல்லூரியில் போராடுகிறார்கள்...வருவாய் துறை சார்ந்து ஏதாவது கோரிக்கை என்றால், அவர்களது அலுவலக வளாகத்தில் போராடுகிறார்கள்... அவரவர் வேலை இடத்தில், அவரவர் கோரிக்கைகளுக்காக போராடுவதுதான் மரபு.  ஆனால், நாங்கள் எங்கள் வேலை இடத்தில் போராடினால் மட்டும், நீதிபதிகள் தொழிற்படை பாதுகாப்பு கேட்கிறார்கள். சரி,  நாங்கள் எங்குதான் போய் போராடுவது...?"  என்ற வழக்கறிஞர்களின் குரலையும் கேட்க முடிகிறது.

ஆங்கிலேயர்களின் முன்முடிவை பொய்யாக்குவோம்...

ஜான் ஸ்ட்ராச்சி, பிரிட்டன் ஏகாதிபத்திய காலத்தில், இந்தியவில் கவர்னருக்கு ஆலோசகராக இருந்தவர். அவர் இந்தியாவில் உள்ள வேறுபாடுகளை விட ஐரோப்பியாவில் உள்ள வேறுபாடுகள் மிகக் குறைவு என்று கருதினார். 'ஐரோப்பாவில பல நாடுகள் ஒன்று சேர்ந்த ஒரு தேசமாவது கூட சாத்தியம், ஆனால பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் தேசிய உணர்வு ஏற்பட சாத்தியமில்லை' என்று தீர்க்கமாக கருதினார். இது சம்பந்தமாக கேம்பிரிட்ஜில் ஒரு சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.  இதுபோல் தான் பல ஆங்கிலேயர்கள் கருதினர். தாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறினால், இந்தியா சிதறும் என்று கருதினர்.

ஆங்கிலேய காலத்தில் கல்கத்தாவின்  பிஷப்பாக இருந்த ஜே. ஈ. வெல்டன், “கடைசி பிரிட்டிஷ் வீரர் கப்பல் ஏறியவுடனேயே இந்தியா எதிரெதிர் இன, மத சக்திகளின் போர்க்களம் ஆகிவிடும்...” என்று திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால், அனைவரின் கற்பனைகள், முன்முடிவுகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி, இந்தியா வெற்றிகரமாக உயிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பும், நீதித்துறையும்தான்.
அத்தகைய, நீதித்துறையில் சமநிலையை உறுதி செய்வதும், அதற்காக குரல் கொடுப்பதும், நம் அனைவரின் கடமை.

- மு. நியாஸ் அகமது 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ