Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயற்பியல் பாட்டு வாத்தியார்!

பொன்னியின் செல்வனும், இயற்பியல் பாடமும்:

ள்ளி நாட்களில் ஒரு பழக்கம் உண்டு.  பொன்னியின் செல்வன் புத்தகத்தை அக்கக்காக பிரித்து, இயற்பியல் புத்தகத்திலும், ஷெர்லாக் ஹோம்சின் துப்பறியும் நாவல்களை வேதியல் புத்தகத்திலும் வைத்து படிக்கும் பழக்கம். இதற்காக பல முறை ஆசிரியரிடம் மாட்டி, தண்டனை அனுபவித்ததுண்டு.

பாடபுத்தகங்கள் அந்நியமாகும்போது, இயல்பாக நமது ஈடுபாடு வேறொரு விஷயத்திற்கு செல்கிறது. ஏன் பாடப்புத்தகங்கள் நமக்கு அந்நியமாகிறது...? இயல்பான விடைதான். அதில் உள்ள விஷயங்கள் புரியாமல் போகும்போது, நாம் அதை வெறுக்க துவங்கிறோம்.... பொது தேர்வில் சென்ட்டம் எடுத்த பலருக்கு ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமானம் புரியாது (E = mc ^ 2). ஆனால், மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்று இருப்போம். ஏன் நூற்றுக்கு நூறு கூட நம்மில் பல பேர் வாங்கி இருப்போம்... இதேதான், வேதியலிலும்.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கூட சப்டைட்டில் இல்லாமல் புரிந்துவிடும். ஆனால் வேதியலில் உள்ள கெமிக்கல் பாண்டுகள் புரியாது...!!!

ஆனால், இது நகைக்கக்கூடிய பிரச்னை இல்லை... இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில், அதிக விஞ்ஞானிகள் உருவாகாமல் இருப்பதும், சுதேசி தொழிற்நுட்பம் வளராமல் இருப்பதும் இதனால்தான். ஏன், கிராம மாணவர்கள் பலர் படிப்பை தொடராமல், இடையில் நின்றுவிடுவதற்கும் (Drop - Outs) இதுதான் காரணம்.

ஏன் நமக்கு பாடங்கள் புரிவதில்லை...? நமது கவனக்குறைவு மட்டும்தான் காரணமா...? இல்லை... நிச்சயம் இல்லை. நமது கவனச்சிதறலும் ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து தவறுகளையும் மாணவர்கள் மீது மட்டும் போட்டு கல்வித்துறை தப்பித்துக் கொள்ள முடியாது....  சரி என்னதான் காரணம்...? பாடங்களை மாணவர்களிடம் சுவாரஸ்யமாக கடத்தும் ஆசிரியர்கள் இல்லாததும் ஒரு காரணம்.

சமூக அடுக்கில் மேல் தட்டில் இருக்கும் மாணவர்களுக்கு,  Smart Class மூலமாக பாடத்திட்டங்களை சுலபமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அவர்கள் அடுத்தடுத்த உயரங்களையும் தொடுகிறார்கள். ஆனால், கிராமங்களில் இருக்கும் கலாம்களுக்கு எப்போதாவது தான் சின்னதுரை கிடைக்கிறார். (சின்னதுரை கலாமின் கல்லூரி பேராசிரியர்).

அப்படி ஒரு சின்னதுரை எல்லாருக்கும் கிடைத்தால், பாடத்தை அனைவருக்கும் புரியும்படி சொல்லி தந்தால்...? நிச்சயம் பல கலாம்கள் உருவாகுவார்கள்.


இயற்பியல் பாட்டு வாத்தியார்:

சத்தியமூர்த்தி அப்படிதான் பாடங்களை கற்றுத் தருகிறார். தஞ்சை மாவட்டத்தின் ஓர் எல்லையில் இருக்கும் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர். அவர் இயற்பியல் ஆசிரியரா இல்லை பாட்டு வாத்தியாரா...? என்ற சந்தேகம், அவர் வகுப்பை கடக்கும் எல்லாருக்கும் வரும். புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கும் இயற்பியல் பாடத்தை, பாட்டாக மாற்றி, மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்கிறார்...

லேசர் ஒளி பற்றி அவரது பாடல்,


“லேசர் ஒளி என்பதுதான்
ஒற்றை நிறம் கொண்டதுதான்
ஓர் இயல்பு கொண்டதுமே
செரிவு அதிகம் உள்ளதுமே...”

இதை அவரின் காந்த  குரலில் கேட்கும் போது, நமக்கே இயற்பியல் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

“பசங்க வகுப்புல ரொம்ப சேட்டை பண்ணுவாங்க... அவங்கள பாடத்தை கவனிக்க வைக்கிறதுக்காக விளையாட்டா ஆரம்பிச்சது, இன்னைக்கு கல்வி துறையே அதை ரெக்கார்ட் பண்ணி  அனைத்து பள்ளிகளுக்கும் தராங்க...” என்கிறார் சத்தியமூர்த்தி.

இவரின் பள்ளியில் 98 சதவீத மாணவர்கள், இயற்பியல் பாடத்தில் தேர்வாகிவிடுகிறார்கள். கிராமப்புற பள்ளிகளில் இது பெரிய விஷயம்.

“சப்ஜெக்ட்டை பாட்டா பாடுறப்ப, அது, மாணவர்களிடம் சுலபமாக சேர்கிறது. அவர்களும், ஆர்வமாக படிக்கிறார்கள்... ஆயிரங்களில் சம்பளம் வாங்குவதை விட இதுதான் சார் மகிழ்ச்சியா இருக்கு....” என்கிறார்.

இப்ப என்ன எல்லா ஆசிரியர்களும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி பாடம் எடுக்கணும்னு சொல்றீங்களா...? நிச்சயம் இல்லை. ஆனால், படிப்பை சுவாரஸ்யமாக்கும் கடமை அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. படிப்பின் மீது வெறுப்பை உண்டாக்காமல், மாணவர்கள் மொழியில் கற்றுத் தர வேண்டியது ஆசிரியரின் கடமை.

இதுதான் சத்தியமூர்த்தி சொல்லும் செய்தி.

 

சத்தியமூர்த்தியின் இயற்பியல் பாடல் இங்கே...


- மு. நியாஸ் அகமது

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close