Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்! : அதிரவைத்த டிகாப்ரியோ

ந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!”  - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக  ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல்.

ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன்,  'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது.  மார்லன், நமது முந்தைய தலைமுறையின் ஆதர்ச நாயகன். தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, அவர் விருதை மறுக்கவில்லை... தன் நாட்டின் தொல்குடிகளான செவ்விந்தியர்கள், எப்படி நிஜத்திலும், திரையிலும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்திய  கலைஞனின் கலகக்குரல்தான் அந்த கடிதம். உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு விழா மேடையில், தன் தேசத்திற்கு எதிராக சுட்டு விரலை நீட்டிய உண்மையான கலைஞன் அவர்.

மார்லன் திரை நாயகன் மட்டுமல்ல... நிஜ நாயகனும் கூட.  ஒரு முறை லண்டன் நகரத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது, கருப்பின மக்களின் மெழுகுவர்த்தி பேரணி செல்வதை அறிகிறார். பல கருப்பின அப்பாவி மக்கள், எந்த குற்றமும் செய்யாமல் பல நாட்கள் லண்டன் சிறைகளில் வாடுகிறார்கள், அவர்களை விடுவிக்கக்கோரிதான் அந்த பேரணி. தான் உலகம் கொண்டாடும் நாயகன் என்ற எந்த மமதையும் இல்லாமல், உற்சாகமாக பேரணியில் கலந்து கொள்கிறார், கோஷமிடுகிறார்.

ஆம். மார்லன் அப்படிதான். உண்மை எப்போதும் எந்த அரிதாரமும் பூசி திரிவதில்லை. உண்மை உருமாறாதது, நிர்வாணமானது-  நாம் பார்க்க மறுத்தாலும். அது அங்கு அப்படியேதான் இருக்கும். அந்த உண்மையை பேசிய கலகக் கலைஞன் மார்லன். “நான் படங்களில் நடிப்பது, பணத்திற்காகதான்...” என்று உண்மையை உரக்க சொன்னவர் அவர்.

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்:

நாம் எப்போதும் உண்மையை சந்திக்க தயங்குகிறோம்.  அந்த உண்மையை சந்திக்கும் பண்பு, நம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போகாதா என்று ஏங்குவது, விடுமுறையை கொண்டாட மட்டுமல்ல... விடைத்தாளை சந்திக்கவும் பயந்துதான். அதே பண்புதான் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. முகத்தில் அறைந்தாற்போல் உண்மையை பேசுபவர்களை நமக்கு பிடிப்பதில்லை. இது தனி மனிதனின் குணம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், தேசத்தின் குணமாகவும் இதுதான் இருக்கிறது. தம் தேசத்திற்கு எதிராக யாராவது சுடும் உண்மையை பேசினால்,  அவர் மீது தேச விரோத முத்திரை குத்தப்பட்டு, விலக்கி வைக்கப்படுகிறார்.

பல ஆண்டுகள் காத்திருப்புக்குன் பின் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விருது கிடைக்கிறது. நாம் என்ன செய்வோம்...? இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு, விழா ஏற்பாட்டளர்களை புகழ்ந்து பேசுவோம். இல்லையென்றால், நாம் இந்த விருது வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று ஒரு கதை அளப்போம். எத்தனை பேர் நமக்கு கிடைத்த மேடையை, உலகம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையைப் பற்றி பேச பயன் படுத்துவோம்...?

ஆனால்,  லியோனார்டோ டி காப்ரியோ பயன்படுத்தி இருக்கிறார்.  “நாம் ஆதரிக்க வேண்டும்-  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது.

மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவநிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும்.

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும், அதற்காக கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள  வேண்டும் என்று ஐ.நா மன்றம் வலியுறுத்தியது. ஆனால்,  இதில் தன் பங்களிப்பை அமெரிக்கா போல வளர்ந்த நாடுகள் புறந்தள்ளி வந்தன. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, அண்மையில் தான் பாரிசில் நடந்த மாநாட்டில் கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள முன்வந்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்நாடுகள் அதை செயல்படுத்துமா என்பது கேள்வி குறி...

இந்த சூழலில் காப்ரியோவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. அவரின் பேச்சு தட்டையானது அல்ல.  மறைமுகமாக தன் நாட்டின் மீது தான் குற்றம் சுமத்துகிறார். 

பேராசையின் அரசியல்:

ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் பேர் பருவநிலை மாற்றத்தால் இறக்கிறார்கள். முப்பது கோடி பேர் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். பருவநிலை மாற்றம் இயற்கையான நிகழ்வல்ல... அது ஒரு சிலரின் பேராசை, நிறுவனங்களின் பணத்தாசை, வளர்நத நாடுகள் தாங்கள்தான் அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தில், வரைமுறை இல்லாமல் செய்யும் ஆயுத உற்பத்தியும், அதன்  விளைவுகளும்தான் புவிவெப்பமயமாதல்.

இத்தகைய சூழலில் நாம் காப்ரியோவின் பேச்சை, மற்றுமொரு பேச்சாக கடந்து சென்றுவிட முடியாது...

மார்லனின் உரைக்கு பின்புதான்,  செவ்விந்தியர்கள் மீது கவனம் குவிந்தது. அவர்கள் நலன் குறித்து பேச்சு எழுந்தது.  இப்போது, 43 ஆண்டுகளுக்கு பின்பு காப்ரியோ, விழா மேடையில் ஒரு கலகக் குரலை எழுப்பி உள்ளார்.

தனது உரையில் 'பேராசையின் அரசியல்' என்ற சொல் பதத்தையும் காப்ரியோ பயன்படுத்தி உள்ளார்.  பேராசைப் பிடித்த அந்த அரசியலின் மனசாட்சியை அவரது  உரை தட்டி எழுப்புகிறதா என்று காத்திருந்து  பார்ப்போம்.

- மு. நியாஸ் அகமது.

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close