Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாம் ஊழல்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டோமா....?

2G வழக்கு உச்சத்தில் இருந்த காலத்தில் என் நண்பன் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது.... "பாவம்டா  ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடா... வெறும் நாலாயிரம் கோடி ஊழல் பண்ணிட்டு தலைமறைவாக இருந்தார்ல...?" என்றான் பரிதாபமாக. 

இது அவன் ஒருவனின் மனநிலை மட்டும் அல்ல, நம் பெரும்பாலானோரின் மனநிலையும் இப்போது இதுவாகதான் இருக்கிறது. நமக்கு நூறு கோடி, இரு நூறு கோடி ஊழல்கள் எல்லாம் பழகிவிட்டன... இயல்பாக நமது கவனம் அதில் குவிய மாட்டேன் என்கிறது அல்லது அதை எளிதாக கடந்து சென்று விடுகிறோம். சொல்லப்போனால், சின்ன தொகையில் ஊழல் செய்து மாட்டுபவர்கள் மீது நமக்கு பரிதாபமே வருகிறது. நிச்சயம் இது சாதாரண விஷயமல்ல... நம் பொதுபுத்தியில் படிந்துள்ள மாபெரும் கறை அது.

நாம் ஊழல்களை சுலபமாக கடந்து விடுகிறோம் என்ற ஒற்றை காரணம் தரும்  தைரியத்தில்தான், ‘அதிகம் விற்பனையாகாத ஒரு நாளிதழ் என் மீது குற்றம் சுமத்தி உள்ளது’ என்று தம் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுக்காமல், இது போன்ற கிண்டல்கள் மூலம், அரசியல்வாதிகளால் சுலபமாக கடந்து சென்று போய்விட முடிகிறது. ஒருவர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லவேண்டுமென்றால் கூட,  அந்த பத்திரிக்கை அதிகம் விற்பனை ஆகும் நாளிதழாக இருக்க வேண்டுமா...?

பிரச்சார மேடையும், எமெர்ஜென்சியும்:

இந்தியாவில் எமர்ஜென்ஸி நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும்,  பிரச்சார மேடையும் ஒரு முக்கிய காரணம். ஆம், தேர்தல் பிரசாரத்திற்காக இந்திரா காந்தி,  அரசு ஊழியர்களை பயன்படுத்தினார் என்பதும், பிரச்சார மேடை அமைக்க காவல் துறையை பயன்படுத்தினார் என்பதும்தான். அதனால் அவர் தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் இந்திரா காந்தி. வழக்கை விசாரித்த நீதியரசர் கிருஷ்ண ஐயரும், அந்த தீர்ப்பை உறுதி செய்தார்.  எந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற  ஒரு நிபந்தனையுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. இதை தொடர்ந்துதான் நாட்டில் அவசர நிலையை பிரகனப்படுத்தினார் இந்திரா.இதை சமகாலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.  பிரதமர் கூட  வேண்டாம், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வெற்றி இது போன்ற முறையான காரணங்களுக்காக  ரத்து செய்யப்பட்டால், நம் மனநிலை என்னவாக இருக்கும்...? நாம் அந்த தீர்ப்பை பாராட்டவோமா... இல்லை இதெல்லாம் ஒரு காரணமென்று வெற்றியை ரத்து செய்வதா என்று நமக்கு நாமே சப்பைக்கட்டு கட்டுவோமா...?   நம்மில் பலருக்கு அந்த தீர்ப்பு விசித்திரமனாதாக இருக்கும். ஏனென்றால், இந்த நாற்பது ஆண்டுகளில், நமது சமூக மதிப்பீடுகள் பல மாறிவிட்டன. பல முறைக்கேடுகளுக்கு நாம் பழகிவிட்டோம். அதற்காக வக்காலத்து வாங்கவும் தொடங்கிவிட்டோம். 'சமூகம் இப்படிதான் இருக்கும், அதற்கு தகுந்தாற் போல நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டோம்.

இது நிச்சயம் ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல. அநியாயத்தை கண்டு பொங்கி, நாம் வீதிக்கு வந்து போராட  வேண்டாம். குறைந்தபட்சம், நடப்பது அநீதிதான் என்று உணரவாவது செய்கிறோமா...?

இந்த நம் மனநிலைதான், ஊழல் அரசியலவாதிகளையும், ஊழல்வாதிகளையும் தொடர்ந்து தப்பு செய்ய தூண்டுகிறது. மக்கள் ஊழல்களுக்கு பழகிவிட்டார்கள், நாம் செய்யும் ஊழல்கள் அவர்கள் கண்ணை உறுத்தாதது போல் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் மனநிலை.

ஊழல்கள் வளர்ச்சி அடைந்தது எப்போது...?


இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்து பாருங்கள். எப்போது ஊழல் இவ்வளவு வளர்ச்சி அடைந்தது....? 200 ஜோடி செருப்புகளையே பெரிய விஷயமாக நமது முந்தைய தலைமுறை பார்த்தது... ஆனால், நாம் இப்போது 2000 ஜோடி செருப்புகள் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டால் கூட, அந்த செய்தி இந்த சமூகத்தில் ஒரு சிறு சலசலப்பையும் ஏற்படுத்தாது. நாம் எப்போதிலிருந்து இவ்வளவு ஊழல்களை சந்திக்க, சகித்துக் கொள்ள துவங்கினோம்...? நிச்சயம் பெரும் நிறுவனங்களின் வருகைக்கு பிறகுதான். ஒவ்வொரு பெரும் நிறுவனமும் லஞ்சம் தருவதற்கென்றே ‘lobbying’ என்ற பெயரில் நிதி ஒதுக்குகிறது.

நீங்கள் ஒரு பெரும் ஊழலை, உங்களையே அறியாமல் அனுதினமும் சந்திக்கிறீர்கள்... ஆம். என்றாவது நீங்கள் மருத்துவருக்காக காத்திருக்க நேரிட்டது உண்டா....? அப்போது நீங்கள் மட்டும் காத்திருந்திருக்க மாட்டீர்கள். உங்களுடன் சில மருத்துவ பிரதிநிதிகளும் காத்திருந்து இருப்பார்கள். என்றாவது அவர்களுடன் உரையாடி இருக்கிறீர்களா...? வாய்ப்பிருந்தால் உரையாடி பாருங்கள். அவர்கள் தங்கள் நிறுவனத்தின் மருந்தை எழுத, மருத்துவருக்கு என்னென்ன தருகிறார்கள் என்று பட்டியலிடுவார்கள். ஒரு மருத்துவருக்கே இவ்வளவு தருகிறார்கள் என்றால், அந்த மருந்து, இந்தியா என்ற பெரிய சந்தையில் விற்பனைக்கு வர எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு, என்னென்ன அன்பளிப்புகள் கொடுத்து இருப்பார்கள்....? 

இது தான் அனைத்து துறையிலும் நடக்கிறது. ஆனால், நாம் இதை வியாபார தந்திரமென்று சுலபமாக கடந்து விடுகிறோம்.  

இதுபோன்ற வியாபார தந்திரத்தால்தான் குறைந்த விலையில் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டு,  ஏறத்தாழ ரூ. 176,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஊழல் சர்ச்சை கிளம்பியது . நாம் நம்பும் இது போன்ற வியாபார தந்திரத்தால்தான் நாட்டின் செல்வமான பழுப்பு நிலக்கரி முறையாக ஏலம் விடப்படாமல், அரசு கஜானாவுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்று கிளம்பிய புகார் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்,  இது போன்ற வியாபார தந்திரத்தால்தான் எந்த உள்கட்டமைப்பும் இல்லாத ஒரு யோகா கல்லூரி அனுமதி பெற்றது. அதனால் மூன்று மாணவிகள் இறக்கவும் செய்தார்கள்.


இதையும் கடந்து செல்வோமா...?


2006 -2014 வரை சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது, அவர் மகனால் வாங்கப்பட்ட நிறுவனங்களென்று, இன்று ஒரு அங்கில நாளிதழ் ஒரு பெரிய பட்டியலையே வெளியிட்டு இருக்கிறது. இதற்கு நாமே ஒரு சப்பைக்கட்டு கட்ட தொடங்கிவிட்டோம். இது ஜவகர்லால் பல்கலைகழகப் பிரச்னையை திசை திருப்ப, பட்ஜெட் குறித்து எதிர்மறை விமர்சனம் வராமல் இருக்க பி.ஜே.பி  செய்யும் யுக்தி என்று நமக்குள்ளேயே பேச்சு வர துவங்கிவிட்டது.  நாம் நம்மையே அறியாமல், இது போன்ற வெற்று வாதங்களால், எந்த நெருக்கடிக்கும் ஆளாக்காமல் ஒருவரை தப்பிக்க விடுகிறோம்.
நாம் கொடுக்கும் இந்த தைரியத்தில்தான் குற்றம் சுமத்தப்பட்டவரும், எந்த கஷ்டமும் இல்லாமல் ஒரு மூன்றே கால் வரி மறுப்பு கடிதத்தை வெளியிட்டுவிட்டு அமைதியாகிறார். அவருக்கு தம்மை நிரூபிக்க வேண்டுமென்ற எந்த எண்ணமும் இல்லை. அவருக்கு, ‘இதையும் கடந்து செல்லும்’ நம் மனநிலை நன்று தெரிந்து இருக்கிறது.

நமக்கு நாமே ஊழல்களுக்கு சமாதானம் சொல்வதை நிறுத்தும்வரை, ஊழல்கள் பற்றி குமுற நமக்கு தகுதி இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டதில் இருக்கிறோம். நாம் நம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நம் அடுத்த தலைமுறைக்கு ஒரு லட்சம் கோடி ஊழல்கள் சாதாரணமாக தெரியும்.

- மு. நியாஸ் அகமது

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close