Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சரைப் பற்றி கார்டனுக்கு பறக்கும் புகார்கள் இப்படித்தான் இருக்குமா!? - ஒரு அலேக் பட்டியல்!

முன்குறிப்பு: சுற்றுச் சூழல் துறை மந்திரி தோப்பு வெங்கடாசலம் பற்றிய இந்தக் கட்டுரையில் கீழே இடம்பெற்றுள்ள புகார் பட்டியலில், ஒரு வரி, ஒரு வார்த்தை கூட நாம் எழுதியதல்ல. சில வார்த்தைகள் மட்டும் சுருக்கப்பட்டுள்ளன! ) 

’அமைச்சரைப் பற்றி ‘கார்டனுக்கு’ புகார் பறந்தது; குமுறல்களை கொட்டிவிட்டனர்!’ என்று அடிக்கடி செய்திகளில் வாசிப்போம். அந்த புகார் மனுக்கள் எப்படி இருக்கும்..? சும்மா போகிறபோக்கில் விசாரித்தால்... வண்டி வண்டியாக குவிந்தன குமுறல்கள். அதில் பொது பார்வைக்கு வைக்கக் கூடியதாக தேர்வானது(!) சுற்றுச் சூழல் துறை மந்திரி தோப்பு வெங்கடாசலம் பற்றிய புகார் மனுக்கள்.  அதிலிருந்து சில அப்படியே உங்கள் பார்வைக்கு...


புகார் 1

அடுத்தவர் பெயரில் 'தோப்பு'வின் மணல் கொள்ளை!

மாண்புமிகு தாயே!
2006-11 காலகட்டத்தில் தி.மு.க. மந்திரி என்.கே.கே.பி. ராஜாவும், தோப்பு வெங்கடாசலமும் சேர்ந்து ஈரோடு கொம்மக் கோவில் ராமசாமி கவுண்டர் மகன் சின்னக் கண்ணு (எ) கே.ஆர். சேனாதிபதியின் பெயரிலும், 'தோப்பு'வின் சொந்த ஊரான தோப்புப் பாளையம் லேட் சென்னிமலைக் கவுண்டர் மகன் டி.சி.சுப்பிரமணியம் பேரிலும் பெருந்துறை தாலுக்கா, நல்லாம்பட்டி கிராமத்தில் ஒரு வேலையைப் பார்த்துள்ளனர். சர்வே எண்  460/ 2 பி என்ற பட்டா நிலத்திலும், பெருந்துறை தாலுக்கா, தென்முகம் வெள்ளோடு கிராமம் சர்வே எண் 154/2, 172/1 ஆகிய பட்டா நிலங்களிலும் 13.02.2009 முதல் 13.09.2011 வரையில் மணல் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. மண்ணை அள்ள வேண்டிய இடத்தில் அள்ளாமல் சென்னிமலை, முகாசி பிடாரியூர் ஊராட்சி, கூரப்பாளையம் கிராமத்தில் உள்ள 'மணிமலைக் கரடு' என்ற பெரிய மலையில் மண்ணை எடுத்து விற்று கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் மண் எடுப்பைக் கண்டித்து, 5.06.2011 அன்று மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 10.6.2011 அன்று  இந்திய கம்யூ. மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்னு தலைமையில் பொதுமக்கள் இதில் இறங்கியதால் மண் எடுப்பு நிறுத்தப்பட்டது.

சேனாபதிக்கும், சுப்பிரமணிக்கும்  பதில் மரியாதை செய்த தோப்பு!

தோப்பு என்.டி.வெங்கடாசலம்  மந்திரி பதவிக்கு வந்த பின்னர் கே.ஆர்.சேனாதிபதி மனைவி புஷ்பலதா பெயரில் அதே சென்னிமலையின் பெருந்துறை தாலுக்காவில் சர்வே எண் 32/5,6,7 பட்டா நிலத்திலும், மந்திரியின் தோப்புப் பாளையத்தில் அதே தென்முகம், வெள்ளோடு கிராமத்தில் சென்னிமலை கவுண்டரின் மகன் டி.சி. சுப்பிரமணியம் பெயரில் சர்வே எண் : 466/1பி, 2பி, 3பி, 4பி, 6 ஏ, 7பி ஆகிய பட்டா நிலத்தில்  2.06.2012 முதல் 10.07.2014 வரை மணல் அள்ள உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய கதை போலவே மணலை அள்ளியது பெருந்துறை தாலுகா, கருமாண்டி செல்லிபாளையம், புத்தூர் கிராமங்களில். இதன் மூலம் வழக்கம் போல் பல கோடிகளை அதிகார துஷ்பிரயோகம் மூலம் குவித்துள்ளனர்.
நாங்களும் (அதிமுகவினர்), பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு புகார் மனு கொடுத்தோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மணல் கொள்ளைக்குத் துணை நின்ற இருவரில் ஒருவரான கே. ஆர். சேனாதிபதி வசிப்பது ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில். ஆனால், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை நில அடமான வங்கியின் தலைவர் பதவியை இவர் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதவியை இவருக்கு வாங்கிக் கொடுத்தது, மந்திரி தோப்பு வெங்கடாசலம்தான். இன்னும் நிறைய இருக்கிறது எங்கள் தாயே!

புகார் 2 

மாண்புமிகு தாயே!

எங்கள் ஊர் மந்திரி தோப்பு வெங்கடாசலம் அவர்களின் குறுகிய கால அரசியல் வளர்ச்சிக்கு துணை புரிந்தவர்  இன்ஃப்ரா டெக்ஸ் நிறுவன அதிபர் சக்திவேல். அதற்கு கைமாறாக மந்திரி 'தோப்பு' நிறையவே செய்து விட்டார்.

சக்திவேலின் நிறுவனத்திற்கு இந்து அறநிலையத் துறை நிலத்தைக் கொடுத்ததோடு, அந்த நிறுவனத்தின் தென்புறத்தில் கடைகள் வைத்தும், குடியிருந்தும் வந்த 6 ஏழைக் குடும்பங்களை ஒரே நாளில் பொக்லைன் எந்திரம் மூலம் இந்த சக்திவேல் அகற்றி விட்டு,  அந்த இடத்தை தன்னுடைய நிறுவனத்தோடு இணைத்துக் கொண்டு விட்டார்.

புகார் 3

அம்மா அவர்களுக்கு...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் 'கெய்ல்' திட்டத்தை எங்கள் விளைநிலங்களின் வழியே கேஸ்-பைப் லைன் செல்ல மந்திரி தோப்பு வெங்கடாசலம்தான் அனுமதி வழங்கினார். என்ன பிரதிபலன் எதிர்பார்த்து செய்தாரோ... ஊருக்குள் பல கதைகள் உலவுகிறது. கெய்ல் திட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஏழை விவசாயிகளை அப்போதைய பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. குணசேகரனை விட்டு சமாளிக்க வைத்தார். அவரும் போலீஸ் படையுடன் வந்து விவசாயிகளை அடித்து துன்புறுத்தினார்.

புகார் 4

மாண்புமிகு அம்மா...

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை, சிப்காட்டில் தோல் கழிவு நீர் சுத்திகரிக்கும் பேஸ்-1 நிலையம் 100 அடி நீளத்திலும், 15 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர்தான் இதில் கழிவு நீர்த்தொட்டி அமைந்துள்ளது. ஆனால், இதற்கு சட்ட ரீதியான அனுமதி ஏதும் வழங்கப்படாமல் வாய்மொழி உத்தரவாக அனுமதி கொடுக்கப்பட்டு, அது ஆறு மாதங்களாக செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட திடக்கழிவினைச் சேகரித்து வைப்பதற்கு பதிலாக சுத்திகரிக்கப்படாத திரவ வடிவிலான கழிவுகளைத்தான் அங்கே சேகரித்து வைத்து வந்தனர். மொத்தம் 83 தொழிற்சாலைகளின் கழிவுகள் இங்கு கொண்டுவந்து கொட்டப்பட்டிருக்கிறது. தோல்கழிவில் இருந்த 'குரோமிக் ஆசிட்'  கான்கிரீட் சுவற்றையே  அரித்துக் கொண்டு சுத்திகரிப்பு தொட்டியை உடைத்தபடி வெளியேறியதால்தான் 10 அப்பாவித் தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டரீதியான அனுமதி இன்றி இப்படியோர் அனுமதியைக் கொடுத்து பத்து உயிர்கள் பறிபோக காரணமாக இருந்தது மந்திரி தோப்பு வெங்கடாசலத்தின் நிர்வாகக் குளறுபடிகள்தான்.
 
புகார் 5
   
கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு அனுப்பும் மனு !

அம்மா, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை-கோவை நான்கு வழிச் சாலை, சரளை பகுதியில் ஶ்ரீபிளஸ் திருமண மண்டபத்திற்கு அருகில் 43 ஏக்கர் நிலம் நிலம் இருந்தது. ஈரோட்டில் ஒரு கல்லூரி நடத்தி வருபவரின் பெயரில்,  பினாமியாக மந்திரி 'தோப்பு' வெங்கடாசலம் இந்த இடத்தை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.

மந்திரி தோப்பு வெங்கடாசலத்தின் முறைகேடான பணத்தில், தனியார் பேருந்து கம்பெனிக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு தனியார் உணவுப் பொருள் தயாரிப்பாளரின் உறவினர்கள் பெயரில், பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்துமே மிகக் குறுகிய காலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து வாங்கி பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. காரணம், அந்தக் குடும்பம் தோப்பு வெங்கடாசலத்தின் பினாமி!

புகார் 6

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்காவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மனைவி வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக பெருந்துறை-குன்னத்தூர் பிரதான சாலையில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அருகே பெருந்துறை கிராமத்தில் நிலம் உண்டு.

சர்வே எண் : 10/6, 426/1, 426/2- க்களில் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 2.64 ஏக்கர் நிலம்,  பெருந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் 7.11.2013 அன்று,  கிருஷ்ணமூர்த்தி மற்றும் வளர்மதி ஆகியோர் சி.தட்சணாமூர்த்தி என்பவருக்கு ஃபவர் ஏஜெண்ட் அங்கீகாரம் (பதிவு எண்: 5418/2013) கொடுத்துள்ளனர். மந்திரி தோப்பு வெங்கடாசலமோ, அதே நிலத்தை தன்னுடைய ஃபவரை பயன்படுத்தி,  அரசு விடுமுறை தினமான 'மொகரம்' தினத்தன்று (14.11.2013) பெருந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு ஆவண எண்: 5602/2013 என்ற எண்ணில் அவருடைய பெயரிலேயே பத்திரப் பதிவு செய்து கொண்டு விட்டார். அம்மா, இதற்கான உரிய ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

புகார் 7

மாண்புமிகு அம்மா  அவர்களுக்கு...

அம்மாப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் நீண்ட காலம் இருந்து வந்தவர் எக்ஸ். எம்.பியான, என்.ஆர்.கோவிந்தராஜ். இவரை திடீரென்று நீக்கி விட்டு, அவரிடம் உதவியாளராக இருந்து வந்த சரவணன் (எ) சந்திரசேகரனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஒன்றியக் கழகச் செயலாளராக இப்போதைய சுற்றுச்சூழல் துறையின் மந்திரி தோப்பு வெங்கடாசலம் போஸ்டிங் போட்டு விட்டார். வருவாய்த்துறைக்கு இதே 'தோப்பு' மந்திரியாக இருந்த போது, சென்னையில் அவருக்கு உதவியாளராக நியமனமானார். கட்சிப் பொறுப்புகளை போடுவது, பணியிட மாறுதல்கள், அரசுப்பணி காண்ட்ராக்ட்கள் என்று சகலத்துக்கும் சந்திரசேகரனே பொறுப்பாக இருந்து கவனித்துக் கொண்டார். சென்னை அரசினர் எம்.எல்.ஏ. விடுதியிலேயே தங்கிக் கொண்டார். பவானி தாலுக்கா, அம்மா பேட்டையில் வசிக்கும் ராஜ் என்பவரின் மகன் சரவணனுக்கு கொடுக்கப்பட்டிருந்த உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையை மோசடியாக தன்னுடைய பெயருக்கு மாற்றி, ரயிலில் இலவசமாக பயணம் செய்து வந்தார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து அவர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு சில காலங்கள் தலை மறைவானார்.

பவானி வட்டம், நெருஞ்சிப் பேட்டையில் அரசு நியாய விலைக் கடை எண்: சி.ப்பி 097- அ.பதிவேடு எண் 1033-ல் குடும்ப அட்டை எண்: 12/ஜி/0768881. அதே கடையில் அ.பதிவேடு எண் 1060-ல் 12/ஜி 0822646 என்ற குடும்ப அட்டையையும், ஈரோடு வட்டம், மேல் திண்டல் நியாய விலைக்கடை எண் ஏ.ப்பி 038-ல் அ.பதிவேடு எண் 3213 -ல் மூன்றாவதாக ஒரு குடும்ப அட்டையும்,  (எண் :12/ஜி/ 0836750) வைத்திருந்தார். கடைசியில் குட்டு உடைந்து அந்த குடும்ப அட்டைகள் ரத்தாகின. இத்தனை விவகாரங்களில் சந்திரசேகரன் சிக்கி, அதுவும் வெளியே தெரியவந்த நிலையில்தான் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து எடுத்தார்.

பவானி 11-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், பவானி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர், மாநில கூட்டுறவு வாணிபக் கழக இயக்குனர், (சென்னை) மாநில மத்திய கூட்டுறவு சங்க இயக்குனர் (சென்னை), சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்.... - அம்மா, இவ்வளவு பதவிகளையும் பவானி நகரக் கழகச் செயலாளரான கிருஷ்ணராஜ் என்ற ஒரே ஒருவருக்கு மட்டும் மந்திரி தோப்பு வெங்கடாசலம் வாங்கிக் கொடுத்துள்ளார். 2014-ன் நாடாளுமன்றத் தேர்தலின்போதே கிருஷ்ணராஜுக்கு திருப்பூர் எம்.பி. கேன்டிடேட் ஆக்கிக் காட்டுகிறேன் என்று மந்திரி தோப்பு வெங்கடாசலம் சொன்னார். செயல் வீரர்கள் கூட்டத்தில் கிருஷ்ணராஜூக்குத்தான் சீட்டு என்று மந்திரி தோப்பு தன்னிச்சையாக அறிவித்தார் அம்மா. எங்கே... நாங்கள் கேட்கிறோம்... கிருஷ்ணராஜிடம் பணம் வாங்காமல்தான் இத்தனை  பதவிகளையும் அவர் ஒருவருக்கே கொடுத்தேன் என்று மந்திரி தோப்பு வெங்கடாசலத்தை சொல்லச் சொல்லுங்கள் அம்மா!

ஒரு மந்திரி பற்றியே இவ்வளவு புகார் என்றால், ஒவ்வொரு மந்திரிக்கும் மலையென குவியும் புகார்களை நினைத்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. ஹூம்ம்.... இவ்வளவு புகார்களுக்கும் காது கொடுத்து, விசாரித்து, ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து....பாவம்தான் ஜெயலலிதா!


பின்குறிப்பு: நம்மிடம் குவிந்த புகார்களில் மிகச் சிலவற்றைத்தான் இங்கே பிரசுரித்துள்ளோம். அதிலும் சில பகுதிகளை தணிக்கை செய்திருக்கிறோம். பிரசுரிக்காத பல புகார் மனுக்கள் இன்னும் நம்மிடம் இருக்கிறது. இது தொடர்பாக மந்திரி தோப்பு வெங்கடாசலத்திடம் விளக்கம் பெற முயன்றோம். ஆனால், இந்தச் செய்தி பதிவேறும்வரை பதில் இல்லை. தோப்பு வெங்கடாசலம் பதில் அளிக்கத் தயாராக இருந்தால், அவரிடம் ஒரு பேட்டி எடுக்கத் தயாராகவே இருக்கிறோம்!  


- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ