Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீமானும், அருணணும் மட்டும்தான் குற்றவாளிகளா...?

மரியாதைக்குரிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு,

உங்களுடைய பேச்சு உதாசீனப்படுத்துப்படும்போது, உங்களது பேச்சு நகைப்புக்குரியதாக ஆகும் போது, உங்களுடைய பேச்சு எந்த விளைவையும் ஏற்படுத்தாதபோது... உங்களுக்கு எப்படி இருக்கும்?  அந்த மனநிலையில் இருந்து நான் இதை எழுதுகிறேன். இது விரக்தியின் வெளிபாடு. வார்த்தைகள் அலங்காரமற்றதாக இருக்கலாம். ஆனால், வார்த்தைகளில் ஒளிந்து இருக்கும் கோபம் நிஜம். சரி, முன்னுரை போதும்,  நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.


நான் தொலைக்காட்சி விவாதங்களின் தொடர் பார்வையாளன் இல்லை. TRPயை  மனதில் வைத்து தயாரிக்கப்படும் இது போன்ற வெற்று விவாதங்கள், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பது என் ஆழமான நம்பிக்கை. ஆனால், அதே நேரத்தில் இந்த விவாதங்களை இடது கையால் தள்ளியும் விட முடியாது என்றும் நம்புபவன். ஏனெனில், இது போன்ற விவாதங்கள் ஒரு தனி மனிதனை பற்றி,ஒரு சமூகத்தை பற்றி, அல்லது ஒரு குழுவை பற்றி மனிதர்களின் பொது புத்தியில் போகிற போக்கில் ஒரு கருத்தியலை உண்டாக்கிவிடும் ஆபத்தும் உண்டு. அதனால், அதில் பங்கு பெறுபவர்களும் , நெறியாளர்களும் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரு நூல் அளவு பிசகினால் கூட, அந்த நிகழ்ச்சி தரம் தாழ்ந்ததாக ஆக வாய்ப்புகள் அதிகம்.

அப்படியொரு அரசியல் விவாதம்,  தரம் தாழ்ந்ததாக மாறியதாக நேற்று இரவு நண்பர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதுடன் மட்டும் நிறுத்தி இருக்கலாம். அந்த வீடியோவை whatsappல் அனுப்பியும் இருந்தார்கள். அதை நான் அழித்து இருக்கலாம். ஆனால், ஊடகவியலாளனுக்கு உள்ள ஒரு குறுகுறுப்பு அதை பார்க்க தூண்டியது.  அதில், இன்றைய அரசியலின் குரூர முகம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருந்தது.

தன்னை விட வயதில் மூத்தவரை, ‘ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா’ என்கிறார் ஒருவர். 'நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லூசு ங்கிற' என பதிலுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற அவரும் எகிறுகிறார். கோடிக்கணக்கான மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற எந்த பிரக்ஞையும் அவர்களுக்கு இல்லாமல் போய், அந்த நிகழ்ச்சி மொத்தமும் தரம் தாழ்ந்ததாக ஆகிவிட்டது. அரசிற்கு விரோதமான கருத்துகள் சொல்லும் போது, நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி விளம்பரம் போட பழகிய தொலைக்காட்சிகள், நேற்று ஏனோ அதற்கு முயலவில்லை... சரி, கடிதம் அதன் மையப்பொருளிலிருந்து தடம் மாறுகிறது என்று நினைக்கிறேன். மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.

பெருமக்கள் கூட்டம் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து, உங்களை உணர்ச்சிவசப்பட தூண்டியது எது...? அதில்தான் இன்றைய மோசமான அரசியல் ஒளிந்து இருக்கிறது. உங்கள் கருத்துகள் மட்டும்தான் கேட்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், எதிர் கருத்துகளை சந்திக்க மறுக்கிறீர்கள். உங்கள் எதிராளி பேசக் கூடாது என்பது உங்கள் எண்ணமாக இருக்கிறது.  இது அப்பட்டமான பாசிசம் இல்லையா...? இதை வெறும் உணர்ச்சி கொந்தளிப்பில் சிந்திய வார்த்தைகள், இதை நீங்கள் பெரிதுப்படுகிறீர்கள் என்று சொல்லிவிடாதீர்கள். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை சிந்துவீர்கள் என்றால், நாளை நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்திற்கு செல்வீர்களானால், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

சீமானும், அருணணும் மட்டும்தான் குற்றவாளிகளா...?

அரசியல் களத்தில் இருக்கும் உங்களில் பலர்,  நேற்று அந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்து இருக்கக்கூடும்.  சக அரசியல் தலைவர்கள்,  பொது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டது உங்களில் பலருக்கு மகிழ்வை தந்திருக்கும். ஆனால் உங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள் அவர்கள் இருவர் மட்டும்தான் குற்றவாளிகளா...? அவர்கள் இருவர் மட்டும்தான்  எதிர் கருத்தை சந்திக்க தயங்கியவர்களா...?

2003 ல் மணிசங்கர் அய்யர், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த மேடையில் ஜெயலலிதாவுக்கு ஒவ்வாத சில கருத்துகளை பகிர்ந்த காரணங்களுக்காக, குண்டர்களால் தாக்கப்பட்டார்.  இதுபோல், எழுதக் கூசும் இன்னொரு சம்பவமும் உண்டு.

தி.மு.க மட்டும் என்ன விதிவிலக்கா...? தி.மு. க ஆட்சியின் போது, உலக செம்மொழி மாநாட்டிற்கு எதிராக கட்டுரை எழுதினார் என்ற ஒரே காரணத்துக்காக, பழ. கருப்பையா  தாக்கப்பட்டார்.

ஒவ்வொரு கட்சியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எதிர் கருத்தை பேசுபவர்கள் மீது வன்முறையை ஏவுகிறது.  கருத்தை, கருத்தால் சந்திக்காமல், அரசியல் கட்சி மேடைகளில்,  தனி மனிதனை இழிவுபடுத்தும் வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் போக்கு தொடங்கி,  பல ஆண்டுகள் ஆகிறது. இது திராவிட கட்களின் கலாசாரம் என்று அனைத்து பழிகளையும் அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. அவர்கள் வளர்ந்த கட்சிகளாக இருப்பதால், அது வெளியில் தெரிகிறது. அரசியல் அரங்கில் நேற்று துளிர்த்த கட்சிகள் கூட அப்படிதான் இருக்கிறது. பா.ம.க, தே.மு.தி.க மேடைகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள்  அச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு, தனி மனித வசை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்கள். அதை அப்போது மேடையில் அமர்ந்து இருக்கும் தலைவர்கள் தடுத்ததில்லை... இதன் நீட்சிதான் இப்போது தொலைக்காட்சி விவாதங்களில், ‘‘ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா’ போன்ற சொல்லாடல்கள்.


ஏன் உங்கள் தத்துவங்களை வைத்து மக்களை ஈர்க்க முடியாதா...?

ஏன் உங்களால், உங்கள் கட்சியின் தத்துவத்தை  முன் வைத்து மக்களை ஈர்க்க முடிவதில்லை...? ஏன் உங்களுக்கு கூட்டத்தை கூட்ட குத்தாட்ட பாடல்கள் தேவைப்படுகிறது...? ஏன் பொது கூட்டங்களுக்கு வந்த கூட்டத்தை தக்க வைக்க, இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆபாசப் பேச்சு தேவைப்படுகிறது...? ஏன் மது வாங்கி கொடுத்து கூட்டத்தை கூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டீர்கள்...?   சின்ன காரணம் தான்,  மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஏன் நம்பிக்கை இழந்து விட்டார்கள்?  என்ற கேள்விக்கான விடையும் மிக எளிமையானது. நீங்கள் முன் மொழியும் தத்துவத்தை நீங்களே பின்பற்றுவதில்லை. இதை பூசி மெழுக தான்,  குத்தாட்டம், சாராயம் என்று அனைத்து அரிதாரங்களையும் பூசுகிறீர்கள்.

அரிதினும் அரிதாக, உங்கள் தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால், நீங்கள் சமநிலையை இழக்கிறீர்கள், அவர்கள் மீது தனி மனித தாக்குதலை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

தமிழ் சமூகத்தின் பெருவாரி மக்கள் உங்கள் வெற்று பேச்சுகள் மீது நம்பிக்கை இழந்து பல நாட்கள் ஆகிறது. உங்கள் பேச்சை கேட்க கூடும் கூட்டம், உங்கள் மீது நம்பிக்கை வைத்து கூடிய கூட்டம் இல்லை என்பதை வரலாறு பல முறை உங்களுக்கு உணர்த்தி உருக்கிறது. அதை பார்வையாளனாக இருக்கும் எங்களை விட களத்தில் இருக்கும் உங்களுக்கு நன்கு தெரியும்.

உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. தேர்தல் வெற்றிகளை கணக்கில் கொள்ளாமல், உங்கள் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சியுங்கள். அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்.வாக்கு வங்கி அரசியலில் அடி எடுத்து வைக்கும் சீமானுக்கு,  
மாற்று அரசியல் கூட்டணியின் பிரதிநிதியான அருணணுக்கு ...


விவாதத்தில் நீங்கள் உதிர்த்த சொல்லாடல்களை, உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள்  பார்த்து இருக்கக் கூடும். அப்படி பார்க்கவில்லை என்றால், ஒரு முறை பாருங்கள். நீங்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டீர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒரு வேளை நிகழ்ச்சியை பார்த்த உங்கள் அன்பு ரசிக தம்பிகள், “அண்ணா... பின்னிட்டீங்க... தோழர்கள் ட்ரவுசரை கழட்டிடீங்க...” என்று புகழ்ந்து இருக்கக் கூடும். அதற்கு, நீங்கள் மயங்கி விடாதீர்கள். அருணனிடம் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள்.

நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்றால், நீங்கள் இது போன்ற தரம் தாழ்ந்த மோசமான சொல்லாடல்கள் மூலம் மக்கள் மனதில் இன்னொரு அச்சத்தையும் விதைக்கிறீர்கள். ஆம். பொதுவில் இப்படி நடந்து கொள்ளும் நீங்கள், நாளை சட்டசபை செல்வீர்கள் என்றால், உங்கள் நடவடிக்கை கண்ணியமானதாக இருக்குமா....?

தோழர் அருணனுக்கு, அரசியலில் மூத்தவர் நீங்கள். சீமானுக்கு நீங்களே முதலில் நட்பு கரம் நீட்டுவதும் தவறில்லை. அதுதான் அரசியல் மாண்பும் கூட...!

 

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close