Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி

சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.

செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு.

அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது.

சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்திரியாகிப்போன சின்னையா,  அரசுக் கார் சாவியை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட  இன்னொரு காரில் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டார். சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தியாளர்கள் வருவதற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது.

யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரிகளில் ஒருவர். இப்போது அந்த எண்ணிக்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது... (முதன்முதலில் காலி செய்யப்பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக்குரியது, இப்போது கடைசி (?!) மந்திரி 'சீட்' டாக காலியாகியிருப்பது சின்னையாவுக்குரியது)

இன்னும் மந்திரிகளின் பட்டியல் சுருங்கலாம், அல்லது ஒரு நாள் என்றளவிலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க முடியாது. அவருடைய அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையாளமும், அதே அளவு விசுவாசத்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒருநாள் சின்னையாவுக்கு வந்தது.

மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக 'டிக்' அடித்தார் ஜெயலலிதா.

தேர்தலும் வந்தது, சின்னையாவும் வென்றார். வெற்றி அறிவிப்புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்தார்.

"ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமாண்டமாக இருக்கிறது" என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வரானார், சின்னையாவும் மந்திரியானார். சின்னையாவின் மனமென்னும் அந்த மாளிகைதான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதாவால் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு

காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன். இவருடைய உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியிலிருந்து காலி செய்தது. கடந்த ஐந்தாண்டில் 'சிட்லப்பாக்கம்' என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமுகவில் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சிட்லப்பாக்கத்தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் ஜெயலலிதா.

அன்றே சிட்லப்பாக்கத்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. ஜெ.வின் எண்ணவோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையாவின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது. அத்தோடும் நிற்கவில்லை, வேகம்... காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன்  பதவியையும் காலி செய்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜெ சந்திப்பின்போதே காஞ்சி மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் லிஸ்டை ஜெ. கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார். அதில், தன்னுடைய கட்சி பொறுப்பு போனபோது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தண்டரை மனோகரன் இடத்துக்கு வேறு பெயரை எழுதிக் கொடுத்திருந்தார் ராஜேந்திரன். இது மொத்தமும் ஒன்றாக, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தற்காலிக நியமனத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை உட்கார வைத்திருக்கிறது.

திருப்பத்தை விதைத்த காஞ்சி மகளிர் மாநாடு

நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மந்திரிகளை,  காஞ்சி மகளிரணி மாநாட்டில் பங்கேற்க தலைமையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்குத்தான் அங்கு போகும்படி உத்தரவு. அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப்பட்டவர் மந்திரி வைத்திலிங்கம்.

முதல்வர் ஜெயலலிதாவின் "குட்-புக்" கிலிருந்தவர் மந்திரி வைத்திலிங்கம். ஓ.பி.எஸ். மீதான கோபம்தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலாளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். இன்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்திருக்கிறது.

சின்னையாவை ஏன் காலி செய்தார் ஜெ. ?

 'அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே... அவரை ஏன் நீக்கினார்கள்?' என்றால், 'அவரும்,  தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையுமாக இருக்கிறவர்கள். இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது' என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப்பட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ?

மந்திரி வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜயபாஸ்கர். தற்போது இவரை லேசாக 'டச்' செய்வது போல் புதுக்கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைரமுத்துவை   மா.செ.வாக போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்.

விஜயபாஸ்கர் நீக்கத்துக்கு கட்சி வட்டாரத்தில், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. "டி.கே.வைரமுத்து  சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு விஜயபாஸ்கர் ஏளனம் பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பிரச்னை வெடித்தது. அப்போது, விஜயபாஸ்கரை எதிர்த்து குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியல், போராட்டம் என்று நடத்தினர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அமைச்சர் பதவியில் ரி-என்ட்ரியாகி இருந்த புதிதில் மறுபடியும் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து தூக்காமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது, வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்ததாலேயே விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கான மாவட்டச் செயலாளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி, சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங்களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப்படுகிறவர்களும் அவருடைய பொறுப்பு எல்லைக்குள் இருப்பவர்களே.

ஓ.பி.எஸ்.சை அடுத்து வைத்திலிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் இருக்கிறவர் என்பது நேற்றுவரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படையாக  வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

அதாவது இந்த களையெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதரவாளர்கள்தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல். ஒருவரை இன்று பகல் முழுமையாக 'ஸ்கேன்' செய்து முடித்து விட்டுதான் லேசாக 'டச்' கொடுத்திருக்கிறார்களாம்.

இன்னைக்கு ராத்திரி யாருக்கெல்லாம் தூக்கம் போகப்போகுதோ....?

 - ந.பா.சேதுராமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ