Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...?

மிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் உட்கட்சி பூசல்கள் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளாக மாறிப்போயுள்ளன. காணும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் இதயமாக வலம் வரும்  அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் ஓரங்கப்பட்டுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.  இந்த நீக்கல் நடவடிக்கைகைகள் மேலும் தொடரும்.என்பதெல்லாம் அதிமுகவின் இப்போதைய ஹாட் நியூஸாக இருக்கிறது.

எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும்  அதிமுகவினர்கூட 'அம்மா'வின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிர விவாதத்தில் இறங்கிவிடுகின்றனர்.

இந்த அளவுக்கு அதிமுகவில் பிரளயம் வெடிக்க, அப்படி என்னதான் காரணம் இருக்க முடியும் என்று களத்தில் இறங்கி விசாரித்தால்,  கிடைத்த தகவல்கள் ஷாக் ரகம். இந்த இடத்தில் 'அமைதிப்படை' நாகராஜ சோழன் எம்.ஏ. நினைவுக்கு வந்தால் அதற்கு நாம்  பொறுப்பல்ல.

அதிமுகவின் வரலாறு வேறு எந்த இந்திய அரசியல் கட்சிக்கும் இல்லாத தனித்துவம் கொண்டது. வெள்ளைக்காரர்  ஆதிக்கத்தை ஒழிக்க, நிலபிரபுக்கள் முதலாளிகள் நடத்தும் சுரண்டலை அகற்ற,மாநில சுயாட்சியை அடைய,இடஒதுக்கீடு பெற...இப்படி அரசியல் பல இயக்கங்கள் தோன்றிய இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் அதிமுக உருவான விதம் அதிரி புதிரி ரகம்.

தமிழ்த் திரைப்படங்களின் வெற்றி ஹீரோவாக உருவாகி, மக்களின் மனதில் 'வாத்தியாராக' இடம்பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன், அறிஞர் அண்ணாவின் அன்பால் அவரின் திமுகவில் சேர்ந்தார். திமுகவில் எம்.ஜி.ஆர். இடம்பெற்ற பிறகு அறுபதுகளில் அவர் இல்லாத கூட்டங்கள், செய்திகள் என்று எதுவும் இல்லை.1967 ல் திமுக,  காங்கிரசை ஓரம்கட்டி  ஆளும் கட்சியாக அரியணை ஏறியது. இது எம்.ஜி.ஆர். என்ற திரை ஹீரோ செய்த மந்திரம் என்று  இன்றளவும் மூத்த அரசியல்வாதிகள் மத்தியில் பெருமையுடன் பேசப்படும் விஷயம்.

அதன் பிறகு நடந்தவை எல்லாம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அத்துப்படி. எம்.ஜி.ஆர்.,  திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து  நீக்கப்பட்டது, அதன் விளைவாக தமிழக அரசியலில்,  குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் சுனாமி வீசியது என பல திருப்பங்களுக்கு பின்னர்,  ஒருவழியாக நீண்ட யோசனைக்குப் பிறகு அதிமுக என்னும் புதுக்கட்சியை 1972 -ம் ஆண்டு ,தனது தலைமையில் கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர். வந்த வேகத்தில் ஆட்சியையும் பிடித்தார். அத்துடன் தனது மறைவு வரை திமுகவை ஆட்சிக்கட்டிலிலிலேயே ஏற விடாமல் பார்த்துக்கொண்டார் எம்ஜிஆர் என்பது வரலாறு.

திமுக தலைவர் கருணாநிதிக்கும்,  எம்.ஜி.ஆருக்கும் இருந்த மனக் கசப்பு இன்னொரு கட்சி உதயமாக அடிப்படையாக இருந்தது என்றால், திரைப்படத்தின் ஹீரோ தமிழகத்தின் முதல்வராகவும் உருமாற முடியும் என்பதையும் நிரூபித்து இந்திய அரசியலுக்கு புதிய தடத்தையும் அவர் காட்டினார்.

அவரின் மறைவுக்குப் பின்னர் சிதறிய அதிமுகவை ஒருங்கிணைத்து  மீண்டும் தமிழகத்தின் அரசியல், நிர்வாக அரியணையில்  ஏற்றி லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்களின்  இதயத்தை வலுப்பெற செய்தவர் ஜெயலலிதா. பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும்,தொல்லைகள் மிரட்டல்கள், சதிகள் என்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், 1991ம் ஆண்டு தமிழக முதல்வர் ஆனார். பின்னர் 2001ம் ஆண்டு, 2011ம் ஆண்டு என்று மூன்று முறை  தமிழக முதல்வரானர். இந்த சூழ்நிலையில்தான், கடந்த 2014-ம் ஆண்டில்  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பதவியில் இருக்கும்போதே இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு, தனது கட்சியின் எம்.எல்.ஏ. வெற்றிவேலை ராஜினாமா செய்யவைத்து, அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று  வென்று,மீண்டும் தமிழக முதல்வராக 2015 ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார்.ஏழெட்டு மாதங்களாக தமிழகத்தின் உயர் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்த ஓ.பி.எஸ். , கட்சிக்குள் தனக்கு என்று 90 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஆதரவு அணியையும் உருவாக்கிக் கொண்டாராம். இதுதான் அவரது உள்ளடி வேலை என்று கண்டுபிடிக்க ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகியுள்ளது அதிமுக தலைமைக்கு. அதன் அதிரடி விளைவுகளே டி.கே.எம். சின்னையாவின் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சிப் பதவி பறிப்பு, எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன் கட்சிப் பதவி பறிப்பு. இந்த அதிரடிகள் இன்னும் தொடரும் என்று கார்டன் வட்டாரத்தில் பரபரப்பாக தகவல்கள் உலா வருகின்றன.

2015 மே மாதம் தொடங்கி அரசின் முக்கிய முடிவுகளை ஓ.பி.எஸ்.,நத்தம் விசுவநாதன்,வைத்திலிங்கம் உள்ளிட்ட 5 அணி இல்லாமல் ஜெயலலிதா எடுத்ததில்லை என்றும், அண்மையில் தொடர்ச்சியாக நடந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, துறை சார்ந்த  ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை முடிவெடுக்க இந்த 5 பேர் அணியை  நாடுமாறு ஜெயலலிதா அறிவுறுத்தியதும் தற்போது பெரும் வினையாக வந்துள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அண்மையில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள்,  அமைச்சர்கள்  கிழக்குக் கடற்கரை பக்கம் ரகசியமாக கூடி சில முக்கிய ஆலோசனைகளை செய்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் மணல் காண்ட்ராக்ட், அதிமுகவில் எம்.எல்.ஏ.சீட் வாங்க என்று பல்வேறு திரைமறைவு நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ். ஆர்வமாக ஈடுபட்டதாகவும், அதில் சில பத்துக் கோடிகள் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்  மீண்டும் சிறை செல்ல நேர்ந்தால் அதிமுகவை எப்படி முழுமையாகக் கைப்பற்றுவது என்று ஓ.பி.எஸ். ரகசிய முடிவும் எடுத்துள்ளார். இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜெயலலிதா கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று சசிகலாவுடன் தீவிர ஆலோசனை நடத்தி பன்னீர் செல்வத்திற்கு 'செக்' வைக்கும் நடவடிக்கையாக சிலரின் மாவட்டச்  செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பிடுங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி பறிப்பு நடவடிக்கையில் இருந்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாம்.  இவருக்கு வைக்கப்பட்ட 'செக்' ஒன்றில் ஷாக்கான நத்தம், சில நூறு கோடிகளை மொத்தமாகக் கொண்டு சென்று  கார்டன் தரப்பில் ஒப்படைத்து, தன்மீது 'நீக்கம்' எதுவும் வராத வகையில் பார்த்துக்கொண்டாராம்.

கார்டன் கோபம் இன்னும் ஓ.பி.எஸ். மீது குறையவில்லை என்றே அதிமுகவினர் கருதுகிறார்கள். இந்நிலையில் பன்னீர் செல்வத்தை மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டி அழைப்புவிடுக்கும் போஸ்டர் ஒன்று வாட்ஸ் அப்பில் சுற்றுகிறது. அதில் MGR ADMK என்ற கட்சி பெயர்,  எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த மூவர்ண கொடி அச்சிடப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவில் தற்போதைய ஹாட் டாப்பிக். உண்மையில் இது பன்னீர்செல்வத்தின்  ஆதரவாளர்கள் செய்த விஷயமா அல்லது அவரின் விருப்பத்தின்படியே இந்த விளம்பரம்  செய்யப்பட்டதா அல்லது  அவருக்கு வேண்டாத நபர்கள் செய்த லீலையா என்று தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறது ஒரு டீம்.

           
ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழக முதல்வராக வர கனவு கண்டதாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தேடும் அளவிற்கு ஒரு சூழலை உருவாக்கியுள்ளார் ஜெ.

தற்போது அதே வேகம் ஓ.பி.எஸ். மீதும் திரும்பியுள்ளது. இரண்டு முறை ஜெயலலிதாவால் மாற்று முதல்வராக அரியணையில் அமரவைக்கப்பட்ட பன்னீர் செல்வம், நிலையான முதல்வராக ஆசைப்பட்டுள்ளார் என்பதே ஜெ.வின் அதிரடி  நடவடிக்கைகளுக்கு அடிப்படை என்று கூறப்படுகிறது.

ஆக மொத்தம் அதிமுகவில், வரும் நாட்களில் இன்னும் பல அதிரடிகள் அரங்கேறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  
 

- தேவராஜன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close