Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்ஹையாவை கண்டு அரசு ஏன் அஞ்சுகிறது...?

 “நாம் மாபெரும் லட்சியங்களுக்காகப் போராடும் மிக அற்ப மனிதர்கள். ஆனால்  லட்சியம் பெரிதாக இருப்பதால் அதன் பெருமையில் கொஞ்சம், நம்மீதும் விழுகிறது.” - இது 1946 ல் ஜவஹர்லால் நேரு சொல்லியது.

இந்த உரையின் சாரம், சமகாலத்தில் யாருக்கு பொருந்துகிறது...? உங்களுக்கு அவர் பின்பற்றும் சித்தாந்தத்தின் மீதும், தத்துவங்கள் மீதும், அவர் வழிமுறைகள் மீதும், நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.... ஆனால்,  சேத்தன் பகத் நாவலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில், ஆசியாவின் பெரிய குதிரை லாட  வடிவ ஏரிகளில் ஒன்றான ‘கபார் தாள்’ ஏரி இருக்கும் மாவட்டமான பெகுசாராய் மாவட்டத்தில், மாதம் மூவாயிரத்தி சொச்சம் ஊதியம் வாங்கும் ஒரு ஏழை அங்கான்வாடி ஊழியருக்கு மகனாய் பிறந்து, இன்று இந்தியாவின் அனைத்து ஊடகங்களின் தலைப்பு செய்திகளை அலங்கரிக்கும் கன்ஹையா குமாருக்கு இது பொருந்துகிறதுதானே....?

பீகார். வரலாற்றில் முக்கிய இடம் இந்த ஊருக்கு உண்டு. ஆம். சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு பிறகு,  1974 ல் ‘பீகார்  இயக்கம்’ என்று அறியப்பட்ட மாபெரும் மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த மாநிலம் இது.  அப்போது பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நாராயண் ஆற்றிய உரை மிக பிரபலமானது. “... சுதந்திரம் பெற்று 27 ஆண்டுகள் கழித்தும், இந்திய மக்கள் பட்டினியால், கட்டற்று உயரும் விலைவாசியால், ஊழலால், அநீதியால்...  சிதைந்து வருகிறார்கள்...  நாங்கள் ஒட்டுமொத்த சமூக புரட்சியை கோருகிறோம். அதற்கு குறைவாக எங்களுக்கு எதுவும் வேண்டாம்...!" என்று ஓங்கி ஒலித்த நாராயணின் குரல், இந்திய பாராளுமன்றத்தையே அசைத்து பார்த்தது.

மீண்டும், அதே மாநிலத்தை சேர்ந்தவரிடமிருந்து ஒரு குரல் பாராளுமன்றத்தை அசைத்து பார்க்கிறது.  சீல் படிந்த இந்த அமைப்பையும், அதன் பிரதிநிதிகளையும் பதற்றமடைய செய்கிறது. தங்களிடமும் மாணவர் அமைப்பு இருக்கிறது என்பதை மறந்து, “அவர்களுக்கு (கன்ஹையா குமார் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள்) அரசியலில்  விருப்பம் இருந்தால், படிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் குதிக்கட்டும். அவர்கள் படிப்பது மக்கள் பணத்தில்..." என தலைவர்களை பேச செய்கிறது. கன்ஹையா குமார் நாக்கிற்கு ஐந்து லட்சம் விலை நிர்ணயக்க வைக்கிறது.

ஆனால், கன்ஹையாவுக்கு எந்த பதற்றமும் இல்லை.  “ஏபிவிபி-க்கு எதிராக எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. ஏனென்றால், நாங்கள் உண்மையிலேயே ஜனநாயக சக்திகள். நாங்கள் அரசியல் சாசனத்தின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆகையால், ஏபிவிபி-யை எதிரியாக அல்ல. மாறாக, எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் உங்களை துர்தேவதைகளைப்போல நடத்தமாட்டோம்....” - இது கன்ஹையாவின் உரை. நிச்சயம் பயந்தவனால், பதற்றமடைந்தவானால், இது போன்ற முதிர்ச்சி அடைந்த சொற்களின் திரட்டை நாம் எதிர்பாக்க  முடியாது.

யாரை எதிர்க்க  வேண்டும்...?

ஆம். கன்ஹையா மிகவும் தெளிவாக இருக்கிறார். இது காந்தியிடம் இருந்த தெளிவு. இன்றைய பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடம் இல்லாத தெளிவு. காந்தி எதிரிகளையும், எதிரியின் செயல்களையும் பிரித்து பார்ப்பதில் தெளிவாக இருந்தார். எதிரியின் செயல்களைத்தான் நாம் இம்மியும் விட்டுக் கொடுக்காமல் எதிர்க்க வேண்டும், எதிரியை அல்ல, என்று காரண காரியங்களை மிக சரியாக வரையறுத்து கொண்டார். வரலாறு ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு பிறகு அது போல்  ஒரு மனிதனை அடையாளம்  காட்டி உள்ளது.

உங்கள் தத்துவங்களை நீங்களே நம்பவில்லையா...?


ஏன் இந்த அரசு கன்ஹையாவை கண்டு அஞ்சுகிறது....? ஏன் இந்த அரசு அவரின் குரலை நசுக்க பார்க்கிறது...?  இதற்கான விடையில்தான், தேசத்தின் மொத்த எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.  மீண்டும் காந்தியிடமே வருகிறேன். அவர் தொடர்ந்து தன் எதிரிகளின் கருத்தை கேட்க விரும்பினார், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுடன் உரையாட விரும்பினார். அதுவே, பிரச்னைகளுக்கு தீர்வென்று நம்பினார். ஆனால், இப்போது இந்த தேசம் அப்படி இருக்கிறதா...? ஒரு சித்தாந்தத்தின் வெற்றி என்பது, மக்கள் மனதில் பரவலாக்க வேண்டும், மக்களின் ஒப்புதலை அதற்கு இசைவாக பெற வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயக பண்பு. அப்படி இல்லாமல், தன் சித்தாந்தத்திற்கு எதிராக கருத்து இருப்பவர்களை அடக்கி ஒடுக்குவதல்ல...? தங்கள் தத்துவங்கள் மீது நம்பிக்கை இழந்து பதற்றமடைந்தவர்கள்தான், எதிரி கருத்தை நசுக்க பார்ப்பார்கள். எதிரியின் நாக்கை துண்டிக்க துடிப்பார்கள்.

கன்ஹையா இதிலும் தெளிவாக இருக்கிறார்.  “உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸின் பத்திரிகையான ஆர்கனைசரில் ஜேஎன்யு-வைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். சுப்பிரமணிய சுவாமி ஜேஎன்யு-வைப் பற்றி பேசியிருந்தார். ஒருவேளை, ஏபிவிபி-யின் எனது நண்பர்கள் கேட்பீர்களேயானால், அவர்களிடம் எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. ஒருமுறை சுப்பிரமணிய சுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நேருக்குநேர் விவாதிக்கலாம். தர்க்கமுறையில், குதர்க்க வழிமுறையில் அல்ல, ஜேஎன்யு-வை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று நிரூபிப்பாரேயானால், நான் அவரது கருத்தை ஆமோதிக்கத் தயார்.”

இதில் கன்ஹையா மட்டுமல்ல, மொத்த  ஜேஎன்யூ பல்கலைக்கழகமும் மிக தெளிவாக இருக்கிறது. அங்கு அனைத்து கருத்துகளுக்கும் இடம் இருக்கிறது. தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள், இடதுசாரி செயற்பாட்டாளர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்குள் உரையாடி கருத்தால், மக்களை வென்றெடுக்க விரும்புவார்களே தவிர... அடக்குமுறையால் அல்ல... கன்ஹையாவே தன் உரையில் குறிப்பிட்டு இருப்பது போல், “ஜேஎன்யூ வளாகத்தின் ஏபிவிபி, வெளியே இருக்கும் ஏபிவிபி-யைவிட முற்போக்கானது.”


தலைவர்கள் அனிச்சை செயல்களால் உருவாகிறார்கள்:


 உலகமே இன்று கன்ஹையாவின் பேச்சை கூர்ந்து கேட்கிறது. பிபிசியின் முன்னாள் டெல்லி செய்தியாளர்  ஆன்ட்ரீயூ,  ”கன்ஹையாவின் அக்னி பேச்சு,  எழுபதுகளில்  அமெரிக்காவின் தீவிர இடதுசாரியாக இருந்த  ஏஞ்சலா டேவிஸ் பேச்சை நினைவூட்டுகிறது என்கிறார்.  ஆம். கவிதைகள், கதைகள், மேற்கோள்கள் நிறைந்த அவர் பேச்சு, அவரின் அரசியல் எதிரிகளையும் கவர்ந்துள்ளது. கன்ஹையாவின் பேச்சாளுமைக்கு, அவர் பள்ளி நாட்களில், இந்திய மக்கள் நாடக மன்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட , பேச்சு போட்டிகள், நாடகங்களில் கலந்து கொண்டது மட்டும் காரணமல்ல. அவர் பார்த்து, அனுபவித்த வறுமையும் கூட. உணர்வுபூர்வமான உரைகளை, வெறும் சந்தத்தை கொண்டு மட்டும் நிரப்பிவிட முடியாது. அதில் அனுபவபூர்வமான உண்மைகள் இருக்க வேண்டும். அந்த உண்மைகள் சமூகத்தின் பெருமக்களுடன் பொருந்தி போக வேண்டும். ஏன் இந்த தேசம், கன்ஹையாவின் பேருரையை உற்று கேட்கிறதென்றால், கடுமையான அந்த உண்மை பெருமக்களுடன் பொருந்தி போகிறது என்றுதானே அர்த்தம்.  பெருமக்கள் அனுபவிக்கும், அந்த மோசமான அனுபவங்களை மாற்றாமல், அதன் பிரதிநிதியாக மேல் எழும்புபவர்களின் குரல்களை நெரிப்பதுதான் தேச பக்தியா...?காந்தி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தலைவர் இல்லை. அவர், துவக்கத்தில் வெள்ளை மேட்டு குடி மக்களுடனே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.  முதல் வகுப்பு டிக்கெட் இருந்த போதும், பீய்டர்மாரிஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஒரு வெள்ளை நடத்துனரால், அவர் வலுக்கட்டாயமாக  இறக்கிவிடப் படுகிறார். அந்த சம்பவம்தான் காந்தியை உருவாக்குகிறது.“நிச்சயம், உங்களை இந்த தேசமே உற்று நோக்கப்போகிறது,” என்று சென்ற மாத துவக்கத்தில்  யாராவது கன்ஹையவிடம் சொல்லி இருந்தால், அவரே நம்பி இருக்கமாட்டார். அவரே சொல்கிறார், “வேடிக்கையான விசயம் என்னவென்றால், இது உடனடி நிகழ்வாகும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாம் திட்டமிட்டதாக இருக்க, நம்முடையவை எல்லாமே அனிச்சையாக நிகழ்ந்தன”.

ஆம் . அனிச்சை செயல்கள்தான் தலைவர்களை உண்டாக்குகிறது.  சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல சோசலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சாசனத்தினுடைய லட்சியங்களின் பக்கம் நிற்கும் ஒரு தலைவனை அனிச்சை செயல்கள் உண்டாக்கி இருக்கிறது,

- மு. நியாஸ் அகமது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close