Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் மகனைப் பார்க்காமல் நான் செத்துவிடக் கூடாது..!' - கதறும் சாந்தனின் தாய்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் சாந்தன். ' தமிழக அரசு விரைவில் இவர்களை விடுதலை செய்யலாம்' என்ற தகவல், அரசியல் அரங்கில் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை அவர்களது குடும்பத்தினர் சிறைக்குள் வந்து சந்திப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த வழக்கில் 25 ஆண்டுகளாக குடும்பத்தினர் யாரையும் சந்திக்காமல், தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருவது சாந்தன் மட்டும்தான். 1991-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் செல்வதற்காக தமிழகம் வந்த சாந்தன், அதே ஆண்டு ஜூன் மாதம் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 'சாந்தன் என்ற பெயருடையவரை சி.பி.ஐ வலைவீசித் தேடிக் கொண்டிருந்தது. கைது செய்யப்பட வேண்டியவர் வேறொரு சாந்தன். அந்த சாந்தனும் இறந்துவிட்டார்' என்றெல்லாம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.


நீண்ட சிறை வாழ்க்கையின் பலனாக, வேலூர் சிறைக்குள் முழுநேர பூசாரியாகவே மாறிவிட்டார் சாந்தன். அங்குள்ள ஷீரடி சாய்பாபா கோவிலைச் சுத்தப்படுத்துவது, யாகம் வளர்ப்பது என ஆன்மிகவாதியாக வலம் வருகிறார். இந்நிலையில், இலங்கையில் உள்ள சாந்தனின் தாய் தில்லையம்பலம் மகேஸ்வரி, முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று அவரது உறவினர் மூலம் நமக்கு வந்தது. அந்த வீடியோவில், சாந்தன் தாயாரின் கண்ணீர் கோரிக்கை பார்க்கும் எவரையும் கலங்க வைக்கும். 'மகனைப் பார்க்காமல் தாடி எடுக்க மாட்டேன்' என பிடிவாதமாக இருந்த சாந்தனின் தந்தை, மூன்றாண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். தற்போது யாருடைய துணையுமின்றி, ஒரு கண் பார்வையில்லாமல் அவதிப்பட்டு வருகிறார் மகேஸ்வரி. ஒரே ஒருவேளை மட்டும் சாப்பிட்டு கோவிலில் போய் படுத்துக் கொள்கிறார். சாவதற்குள் மகனை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என துடிக்கிறார்.

மகேஸ்வரி அம்மாள் பேசும் வார்த்தைகள் அப்படியே..." 25 வருடம் பெற்ற மகனைப் பிரிந்து ஒரு தாய் தவிக்கும் தவிப்பை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். நான் மிகுந்த வேதனையோடு இருக்கிறேன். என் உடல்நிலை ரொம்பவே கெட்டுவிட்டது. மகன் வருவான் என நீண்ட தாடி வைத்துக் கொண்டு காத்திருந்தார் என் கணவர். அவரும் இப்போது இறந்துவிட்டார். எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சாந்தன் மட்டும்தான். என் மகனைப் பார்க்காமல் நான் செத்துவிடக் கூடாது என கவலைப்படுகிறேன். அம்மா...முழுக்க முழுக்க உங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து என் மகனைப் பார்க்க அனுமதி கொடுங்கள். அழுது அழுது என் கண்ணீரே வற்றிப் போய்விட்டது. ஒரு கண்ணும் போய்விட்டது. டி.வியில் என் மகனை விடுவிப்பார்கள் என்ற செய்தி ஓடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மறுகணம், இல்லை என்ற செய்தி வந்தால் உணவும் தண்ணியும் இறங்க மறுக்கிறது. என் மகனை எப்படியாவது விடுதலை செய்யுங்கள் அம்மா. நான் சாவதற்குள் என் மகனைப் பார்க்க வேண்டும் அம்மா....வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசி முடித்தார் மகேஸ்வரி அம்மாள்.

மகேஸ்வரி அம்மாளின் கோரிக்கை நிறைவேறுமா?

வீடியோவை காண... 



- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ