Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அந்த வயது வந்தால் ஜெயலலிதாவை எதிர்ப்பேன்!' - சீறுகிறார் 'மதுவிலக்கு' நந்தினி

துவுக்கு எதிராக அமைப்பு ரீதியாக போராடிக் கொண்டிருப்பதில் பா.ம.க.வின் ராமதாஸ், மதிமுகவின் வைகோ மற்றும் தமிழருவிமணியன், சசிபெருமாள் (போராட்டத்தின் போதே மறைவு) வரிசையில் மதுரை சட்ட மாணவியான நந்தினியின் பயணம் இடையூறுகளை தகர்த்து போய்க் கொண்டே இருக்கிறது.

நந்தினியின் இடைவிடாத போராட்டத்துக்கு அவரது தந்தையார் ஆனந்தன் அளித்துவரும் ஆதரவு, பிரமிக்கத் தக்கதாய் இருக்கிறது. சட்ட மாணவியாய் தன்னுடைய போராட்டத்தை துவக்கிய நந்தினி, இன்று சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராகிவிட்டார். ஆனாலும் அவரது போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அண்மைத் தகவலாக, சென்னையில் கடந்த  ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கே நந்தினியை போலீசார் கைது செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதியில்,  பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் கொடுத்து,  பிரச்சாரம் செய்ததால் நந்தினியை கைது செய்துள்ளதாக போலீஸ் செய்திக் குறிப்பு கூறுகிறது. ஆர்.கே.நகரை அடுத்து போடி தொகுதியிலும் கடந்த 5-ம் தேதி துண்டுப் பிரசுரம் விநியோகித்தார். ஆனால், இந்த முறை நந்தினியை போலீஸ் கைது செய்யவில்லை. போலீசார் இரண்டு மணி நேரம் வரையில் அங்கு இருந்து விட்டு போய் விட்டார்கள். நந்தினியின் போராட்டப் பயணம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...

உங்கள் தந்தை ஆனந்தன் துணையுடன், மிகப் பெரிய சமூக சீர்கேட்டை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறீர்கள், உங்களுக்கான ஆதரவு இல்லாவிட்டாலும் பாதுகாப்பாவது இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. மிரட்டல்களை சந்திக்காத நாளே இல்லை. மதுவுக்கு எதிரான போராட்டக் களத்தில் நாங்கள் நிராயுத பாணியாகவே இருக்கிறோம். என் தந்தை மீது எனக்குத் தெரிந்து ஐந்துமுறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மனரீதியாக அரசியல் தந்த அழுத்தத்தை விட,  போலீஸ் கொடுத்து வரும் அழுத்தம் அதிகமானது.

போராட்டம் என்பதே ஒரு ஃபேஷன் போல பார்க்கப்படுகிற காலகட்டத்தில் நாம் தள்ளப்பட்டிருப்பதை உணர்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் எப்படி இதை எதிர் கொள்கிறீர்கள்? உங்களின் போராட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது?

இந்த விஷயத்தில் பொதுமக்கள் எனக்கு முழுமையாக ஆதரவு தருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூட இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஆறுதலான விஷயம்.

எத்தனை முறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறீர்கள்? இந்த போராட்டத்தை எப்போது முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற இலக்கு ஏதாவது இருக்கிறதா?

இந்த ஆட்சி அமைந்த 2011-ல் ஆரம்பித்து இதுவரையில் 59 முறை கைதாகி இருக்கிறேன். சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால்,  கைது நடவடிக்கையை இந்த குறுகிய கால அளவிற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பூரண மதுவிலக்கு என்று அமலாக்கப்படுகின்றதோ, அன்றே என்னுடைய போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

திமுக ஆட்சி காலத்திலும் இதே மதுக்கடைகள்தானே இருந்தன... அப்போது ஏன் போராடவில்லை என்பது நெருடலாக இருக்கிறதே?

நான் சட்ட மாணவியாக கல்லூரிக்குள் 2011-ல் நுழைந்தபோதுதான் அதிமுக ஆட்சியை அமைத்தது. மாணவப் பருவத்திலான என் போராட்டம் துவங்கியதும்,  அதற்கான சரியான பார்வை அமைந்ததும் அந்த வயதில்தான். ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக மதுக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்து வந்த நான்,  இப்போது சட்டப் படிப்பையே முடித்து விட்டேன். அதிமுகவும் 2011- 2016 அரசியல் அதிகாரத்தை முடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் மதுக்கடைகள்  மட்டும் அப்படியே  இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு எதிராக உங்களை தூண்டி விடுவது எதிர்க் கட்சிகள்தான் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

நந்தினி கைது செய்யப்படும் போது எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் பரிதாபப்பட்டதில்லை, அதற்காக கண்டனம் தெரிவித்தது கூட கிடையாது. இதுதான் நிலை. 

'மதுவுக்கு எதிராகப் போராடும் ஒரு மாணவியை  அரசு இத்தனை முறை கைது செய்து சிறையில் அடைக்கிறதே' என்று நீங்கள் குறிப்பிடும் எதிர்கட்சிகள் ஒரு கண்டன அறிக்கையை கூட கொடுத்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக என் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

ஒரு பெண்ணாக சிறை அனுபவத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?

என்னை கைது செய்து பல இரவுகளில் ஸ்டேஷன் காவலிலேயே போலீஸ் வைத்தது, இதை எந்த அரசியல் கட்சித் தலைமையும் இதுவரை கேட்டதில்லை. சென்னை புழல், திருச்சி பெண்கள் சிறை என பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். கைதாகும்போதெல்லாம், காலை முதல் இரவு வரையில் யாரும் எங்களை வந்து பார்க்க முடியாதபடி போலீசார் ஸ்டேசனில்தான் வைத்திருந்தார்கள். 'மது விலக்குப் போராட்டத்தை  கைவிட்டு விட்டால் அனைத்து உதவிகளையும் செய்கிறோம்...' என்று பலமுறை பேசியும் பார்த்தார்கள். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?'  என்றும் கேட்டுத் தொல்லையும் கொடுத்துப்பார்த்தார்கள். நான்  கைதாகி  போலீஸ்  ஸ்டேசனுக்கு கொண்டு போகப்படும்  தருணங்களில் அவர்கள் தரும் உணவை கூட  எடுத்துக் கொள்வதில்லை, அங்கிருந்தே உண்ணாவிரதம் தொடங்கி விடுவேன்.
 
ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வருகிறதே ?

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேவையான வயது இப்போது எனக்கு இல்லை. சில ஊடகங்களில் நான், ஜெயலலிதாவை எதிர்த்து வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக  செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கான அந்த வயது வரும்போது,  இதேபோன்று மதுக்கொடுமை நீடித்தால் கண்டிப்பாக ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.

அடுத்த புறப்பாடு எங்கே ?

ஜெயலலிதா போடி தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வந்தது. அதனால் அங்கு போய் மதுவிலக்கு பிரசாரம் மேற்கொண்டேன். அங்கு மட்டுமல்ல, எங்கெங்கு தகவல் வந்தாலும் அங்கு போய் பிரசாரம் செய்வேன். என்னை யாரும் தடுத்து விட முடியாது. அதேபோல் மாணவிகளிடம் ஆபாசமாக, அருவெறுக்கத் தக்க முறையில் நடந்து கொண்ட மந்திரி சுந்தரராஜின் பரமக்குடி தொகுதிக்குள் அவரைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் போராட்டம் ஓயாது.

நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

எங்களுக்குப் பதில் சொல்லாமல் ஓடிவிடலாம் என்ற ஜெயலலிதா போன்ற அதிகார சக்திகள் நினைப்பை பொய்யாக்குவோம். மதுவால் அழியும் குடும்பங்களின் எண்ணிக்கையை  சாதாரணமாக கணக்கிலிட முடியாது அல்லவா?  2016-ல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி அமைத்தாலும் தீவிர மது விலக்கைக் கொண்டு வாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close