Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?

மார்ச் 8... உலக மகளிர் தினம். பெண்களுக்கான உரிமைகள் குறித்த சிந்தனைகளையும், அதற்காகச் செயலாற்றியவர்களையும் நினைவுகூரும் நாள் இன்று. பெண்ணியம் என்றாலே ஏதோ அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம் என்கிற மனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை குறித்த வீரியமிக்க சிந்தனைகளை முன்வைத்த மரபு நமக்குண்டு.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தார். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம். ஆனால், இதை அவர் மட்டுமே சாதிக்கவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிய நூற்றுக்கணக்கான பெண்களும், பெண்ணியச் சிந்தனையாளர்களும் காலத்தைத் தாண்டிச் சிந்தித்தார்கள். வெறுமனே பெண்களுக்கான உரிமைகளைப் பேசுவது என்பதைத் தாண்டி சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுதியும் பேசியும் வந்தனர். மேலும் உலகளாவிய சிந்தனைகளான மார்க்சியம், தாராளவாதம் போன்ற சிந்தனைப்போக்குகளோடு இந்தியப் பெண்களின் பிரச்னைகளை அணுகவும் முற்பட்டனர்.

காலத்தால் மறந்துபோன நம் முன்னோடிப் பெண்ணியச் சிந்தனையாளர்களின் செயல்பாடுகளில் சில துளிகள் இவை....

* பெரியார் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர். திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ்வது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகள் ஆகியவை குறித்து நவீனப் பெண்ணிய உருவாக்கத்தையொட்டி சமீபகாலமாகத்தான் பேசப்படுகின்றன. ஆனால், 1928 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே, ''தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும்” என்று பெரியார் எழுதுகிறார். வெறுமனே சொல்லளவில் நின்றுவிடாமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார்.

* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.

* மூன்றாவது தஞ்சை மாவட்ட  சுயமரியாதை மாநாட்டில் 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஒரு ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரது கணவர் கட்டாய உறவு கொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டை விட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.

* சுயமரியாதை இயக்க ஆதரவாளரான டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியை ஆதரித்து தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்குத் துணை நின்ற சுயமரியாதை இயக்கம்தான், ''பெண்களுக்குச் சமயக்கல்வி அளிக்கப்படவேண்டும்” என்று அவர் பேசியபோது எதிர்த்தும் வந்தது. இதை எதிர்த்து குடியரசுவில் எழுதியவரும் தி.சு.மாசிலாமணி என்ற பெண்தான்.

* ''பல மனைவிகளுடைய கடவுள்களை விமர்சிக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது வேறு பெண்ணை மணந்துகொள்வதை ஏற்றுக்கொள்கிறதா?”” என்று ஒரு கூட்டத்தில் பெரியாரிடம் கேட்கப்பட்டது. “கடவுள்களை விமர்சிப்பதாலேயே அவர்களின் எல்லாச் செயல்களையும் கண்டிப்பதாக ஆகாது. கடவுள் மூச்சுவிடுவதாகப் புராணத்தில் இருப்பதால் நாம் மூச்சுவிடுவதை எதிர்க்கிறோமா என்ன? அதனால், பலதார மணத்தை நாங்கள் ஏற்கிறோம். இதே உரிமை பெண்களுக்கும் இருக்கவேண்டும்” என்றும் பெரியார் பதில் அளித்தார்.

* சுயமரியாதை இயக்க முன்னணி வீரர் அ.பொன்னம்பலத்தாரின் மனைவி சுலோசனா, ஏற்கனவே திருமணமானவர். ஆனால், கணவரோடு வாழ விருப்பமில்லாததால் அவருடைய சம்மதத்துடன் பொன்னம்பலத்தாரைத் திருமணம் செய்துகொண்டார்.

* பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனார் சிவகாமி என்ற விதவையைத் திருமணம் செய்துகொண்டார்.

* 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார்.

* 1930-களில் கருத்தடை பற்றிய கட்டுரைகளைக் ‘குடி அரசு’ இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. அப்போது அரசாங்கம்கூட குடும்பக்கட்டுப்பாடு குறித்த பிரசாரங்களை முன்னெடுக்காத காலகட்டம் அது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

* காத்ரின் மேயோ எழுதிய ‘பாரத மாதா’ என்ற புத்தகம் இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து அம்பலப்படுத்தியதால் அது இந்தியர்களை இழிவுபடுத்துவதாகத் தேசியவாதிகள் எதிர்த்தனர். ஆனால், அதை மொழிபெயர்த்து குடி அரசு தொடராக வெளியிட்டது.

* சோவியத் ரஷ்யாவில் பெண்களின் நிலை குறித்த கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. துருக்கிப் பெண்கள் விடுதலை குறித்து ஹாவிட் ஹானும் என்பவர் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக நவீனச் சிந்தனைகளும், பெண்ணியச் சிந்தனைகளும் அயல்நாடுகளில் பேசப்படும்போது சாத்தியப்பட்டவரை அதை மொழிபெயர்த்து, ‘குடி அரசு’ இதழ் வெளியிட்டு விவாதித்தது.

* ‘ஆண் - பெண் வித்தியாசம்’ குறித்து 1935-ல் நாகை முருகேசன் என்பவர் எழுதிய கட்டுரையொன்றில் ஏங்கெல்ஸ் தொடங்கி பாகோபென், ஹூம்போல்ட் ஆகிய மானுடவியலாளர்களின் ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

* சுயமரியாதை இயக்கத்துக்காரர்களால் பல பத்திரிகைகள் நடத்தப்பட்டன. அதில் ’அறிவுக்கொடி’ என்ற இதழை நடத்தியவர் எஸ்.சி.சிவகாமி அம்மாள் என்ற பெண்.

* 05.05.1935-ல் ‘பெண்கள் நிலையமும் பிள்ளை வளர்ப்பு விடுதியும்’ என்ற கட்டுரையை எழுதிய மயில்வாகனன், குழந்தை வளர்ப்பில் இருந்து பெண்களை விடுவித்து, அதற்காகத் தனியான விடுதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

*  பெண்ணுரிமை தொடர்பாக ‘குடி அரசு’ இதழில் வெளியான சில கட்டுரைகள் : தேவதாசிகளுக்கு ஒரு வேண்டுகோள், ரஷ்யாவில் ஆண்-பெண் ஒழுக்கம், ஆண்மை அழியவேண்டும், சமதர்மத்துக்குப் பெண்கள் விடுதலை அவசியம், முஸ்லிம் பெண்களும் அடிமைகளேதான், பர்தாவின் கொடுமை, கத்தோலிக்க மதமும் பெண்களும், பெண்கள் நாடு - ஆண்களுக்கு வேலையில்லை, சோசலிசமும் பெண்களும், சோசலிச உலகில் பெண்கள், பெண்களும் தொழிலாளிகளே, பெண்களும் சங்கமும்.

* சுயமரியாதை இயக்க மாநாடுகளோடு தனியாகப் பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டன. ஆனாலும், பெண்களுக்கென்று தனித்துவமான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தை நீலாவதி அம்மையாரும், ராகவனும் தொடங்கி வைத்தார்கள். அதேபோல் பெண்கள் நிலையம் ஒன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

* சுயமரியாதை இயக்கத்தில் இயங்கிவந்த, தொடர்ச்சியாக ‘குடி அரசு’ இதழில் எழுதிவந்த பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: தி.சு.மாசிலாமணி, பினாங்கு ஜானகி, நீலாவதி அம்மையார், ஜெயசேகரி, லட்சுமி, கிரிஜாதேவி, அன்னபூரணி, சுப விசாலாட்சி, சிதம்பரம் அம்மாள், பண்டிதை ரங்கநாயகி, வள்ளியம்மாள், குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ், தருமு அம்மாள், நீலாம்பிகை, கே.ஏ.ஜானகி அம்மாள்.

* இசை வேளாளர் சாதியில் பிறந்த குஞ்சிதம் அம்மையார் இந்தியாவின் முதல் பெண் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். முதல் பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசியவர். ''கோயில்களை மருத்துவமனைகளாக மாற்றவேண்டும்” என்றும், ''கோயில் வருமானத்தைக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான இலவசக் கல்வி அளிக்கவேண்டும்” என்றும் 30-களில் பேசினார். முதலியார் சாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க வீரர் குருசாமி ஒரு தலித் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருந்தார். பெரியாரும், மற்ற தோழர்களும் அவருக்காகப் பெண் பார்த்து குருசாமியைச் சமாதானம் செய்து குஞ்சிதம் அம்மையாருக்குத் திருமணம் செய்கிறார்கள்.

பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் குருசாமி - குஞ்சிதம் அம்மையாருடைய திருமணம். குருசாமி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. திருமணத்தன்று குருசாமியின் தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று தந்தி வருகிறது. பெரியாரும் மற்றவர்களும் பதறிப் போகிறார்கள். “எங்கள் குடும்பத்திலேயே துணிச்சலான பெண் அவள்தான். இது திருமணத்தை நிறுத்துவதற்கான சதி” என்கிறார் குருசாமி. திருமணம் முடிந்தபிறகு அவரது அனுமானம் உண்மைதான் என்று தெரியவருகிறது. இருவரின் திருமணத்தின்போது குஞ்சிதம் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அதை மொழிபெயர்ப்பவர் ''இதுவரை யார் யார் உரைகளையோ மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்ப்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார். திருமணத்துக்குப் பிறகு தாலி அணியாமலும், பொட்டு வைக்காமலும் இருந்ததால் குஞ்சிதம் அம்மையாருக்குப் பள்ளியில் ஆசிரியர் பணிபுரியும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பாரதிதாசன் கவிதைகளை முதன்முதலில் பதிப்பித்த பதிப்பாசிரியர் குஞ்சிதம் அம்மையார்தான்.

இவையெல்லாம் வெறுமனே 1928-35 காலகட்டத்து நிலை. இந்த சிறியளவிலான குறிப்புகளை வாசித்தாலே கருத்தியல் ரீதியாக சுயமரியாதை இயக்கம் எத்தகைய செயல்பாடுகளைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். மேலும் ஒருபுறம் சனாதனம் உச்சத்திலும், இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு உச்சத்திலும் இருந்த காலத்தில் இத்தனை பெண்கள் கற்பு, குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவை குறித்து சுதந்திரமாகவும் சுயசிந்தனையோடும் விவாதித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமானது!

- ரீ.சிவக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close