Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் தின வாழ்த்துக்களை வெறும் வார்த்தைகளில் மட்டும் பகிராதீர்...!

முகநூல் முழுவதும் வாழ்த்து மழை நிரம்பி வழிகிறது. தம் தங்கைகளை, அக்காக்களை, அம்மாக்களை இந்த நன்நாளில், சமூகம் கொண்டாடி தீர்க்கிறது. நிச்சயமாக மகிழ்வான விஷயம்தான். ஆனால், பெண்களை அவர்கள் போக்கில் வாழவிடாத நாம், பெண்கள் தின வாழ்த்துகள் கூற தகுதியானவர்களா...? 

பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் நான் தருகிறேன், அவர்களை நான் சமமாக நடத்துகிறேன் என்று நாம் கூறுவோம் எனில், நம்மைவிட வக்கிரம் பிடித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆம். பெண்களுக்கு உரிமைகளை வழங்கிட நாம் யார்...?

பெண்களும், விளம்பரங்களும்:

"ச்சும்மா... பெண்ணியம் பேசாதீங்க சார்... இப்ப பெண்கள் என்ன அடிமையாகவா இருக்காங்க...?"  என்று வாதம் செய்யும் அனைவரும் அந்த விளம்பரத்தை கடந்து  வந்திருப்பார்கள். “பெண் குழந்தை பிறந்துருச்சுல, இப்பவே நகை சேர்த்து வைக்க வேண்டும்,” என  நவீன பெண்ணடிமை பேசும் விளம்பரம் அது. பெண் குழந்தை பிறந்தால் சுமை, கல்யாணம் பண்ணி தர வேண்டும், வரதட்சணை தர வேண்டும், செலவு அதிகம் என்று பெண் சிசுக்கொலை செய்த சீல்படிந்த இந்திய மனநிலையின் நவீன வடிவம்தான் அந்த விளம்பரம். இந்த ஒரு விளம்பரம் மட்டுமல்ல, ஏறத்தாழ அனைத்து விளம்பரங்களும், பெண்கள் மீது அதீத அக்கறை காட்டி கொள்வது போல், அவர்களை சிறுமைப்படுத்துவதாகவே இருக்கும்.

நாம் யாரைக் கண்டு அதிகம் அஞ்சுகிறோமா,  அவர்களுக்கு எதிராக இரண்டு விஷயங்களை செய்வோம். ஒன்று, அவர்களை தவறாக சித்தரிப்போம், தாம் பலமானவர்கள் என்ற எண்ணத்தை உடைக்க அவர்களை மட்டம் தட்டுவோம். நம் உள்ளுணர்வுக்கு நன்கு தெரியும், பெண்கள் நம்மை விட பலமானவர்கள் என்று. இதுவே அவர்களை நாம் தவறாக சித்தரிக்கவும், மட்டம் தட்டவும் காரணம். 

நாகரிகத்தின் தொடக்க காலத்தில், நாம் தாய் வழிச்சமூகமாக இருந்தோம். அதாவது, சமூகத்தின் அனைத்து அதிகாரங்களும் பெண்களிடம்தான் இருந்தது. பலப் போராட்டங்களுக்கு பிறகு, அதிகாரம் ஆணிண் கைக்கு  வந்தது. அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், பெண்களை தாங்கள் பலவீனமானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்க வேண்டும். இதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள, அவர்கள் மீது அதீத அக்கறை செலுத்துவதுபோல், அவர்களை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறோம்.

கஸ்தூரிபா, ஈரோம் சர்மிளா மற்றும் சேவியரம்மா... :

நாம் அங்கீகரித்தாலும், மறுத்தாலும், பெண்கள் எப்போதுமே பலமானவர்கள். காந்தி,  தாம் கஸ்தூரிபாவிடமிருந்தே அஹிம்சையை பயின்றதாக கூறுகிறார். “கஸ்தூரிபா எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்குப் போகிறவரோ இல்லை. அதே சமயம், தான் எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாரோ அதை நிலை நிறுத்த தயாராக இருப்பவர்.  இதுதான் அஹிம்சை தத்துவத்தின் உண்மையான சாறு” என்கிறார் காந்தி.

ஆம். ஆண்களை விட பெண்கள் எப்போதும் தாங்கள் நம்புவதை நிலைநிறுத்த பிடிவாதமாக இருப்பார்கள்...எந்த அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டார்கள்.  இந்திய அரசின் ராணுவ அதிகார சிறப்பு சட்டத்தை எதிர்த்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தும் ஈரோம் சர்மிளாவும், கூடங்குள போராட்டத்தை முன்னெடுத்த சேவியரம்மாவும்  நம் சமகாலச் சான்று. 

“என் உயிரை ஆயுதமாக்கி போராடி வருகிறேன், என் உயிரை அழிக்கும் உரிமை எனக்கோ, இந்த அரசுக்கோ, அரசியல் அமைப்பிற்கோ கிடையாது...” என்கிற உறுதி ஈரோம் சர்மிளாவின் அடையாளம் மட்டுமல்ல, அது பெண்களின் அடையாளம்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர்  ஒரு முறை கூறி இருந்தார், "வெறும் நாவன்மையை வேண்டினால் ஆணிடமும், செயல்திறனை வேண்டினால் பெண்ணிடமும் பொறுப்பை ஒப்படையுங்கள்...” என்று. ஆண்கள் செயல்திறன் அற்றவர்கள் அல்ல... ஆனால், பெண்களை சிறுமைப்படுத்துவது மூலம் தம் இருப்பை ஆண்கள் உறுதி செய்து கொள்ளும் இந்த காலக்கட்டத்தில், தாட்சரின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

'நீ அவனை காதலிச்ச, உன் மேல லாரியை விட்டு ஏத்திடுவேன்' என்ற வாட்ஸ் அப்  குரலில் ஒளிந்திருந்தது, சாதிய வன்மம் மட்டுமல்ல... பெண்களை வெறும் பண்டமாக மட்டும் பார்க்கும் ஆதிக்க மனநிலையும்தான்.

உண்மையான, பெண்கள் தின வாழ்த்து என்பது, வெறும்  வார்த்தைகளில் இல்லை... அவர்களின் போராட்டங்களுக்கு துணை நிற்பது, அவர்களை அங்கீகரிப்பது. முக்கியமாக, அவர்களின் சுயத்தை இழக்க நேரிடும்  அழுத்தங்களை  தராமல் இருப்பது. சுருக்கமாக, அவர்களை, அவர்கள் இயல்பில் வாழவிடுவது.

- மு. நியாஸ் அகமது


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close