Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் சீனுக்கு வரும் சீனியர்... நத்தம் விஸ்வநாதன் vs திண்டுக்கல் சீனிவாசன்!

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட அ.தி.மு.க., அடுத்த மாதங்களில் தனது முதல் தேர்தலை சந்தித்த களம் திண்டுக்கல்.

1973-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில்தான் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. அ.தி.மு.க சார்பாக மாயத்தேவர் போட்டியிட்டார். அ.தி.மு.க.வின் சின்னமாக, இரட்டை இலையை தேர்ந்தெடுத்தவர் சாட்சாத் மாயத்தேவர்தான். முதன்முதலில் களம் அமைத்த தொகுதி என்பதாலோ என்னவோ, திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கென தனி செல்வாக்கு இன்றைக்கும் இருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாயத்தேவர் தி.மு.க.விற்கு மாறிய பிறகு, சிவநாத்பாபு, காதர்ஷா போன்றவர்கள் அ.தி.மு.க.வை வளர்த்தார்கள். காதர்ஷா மாவட்டச் செயலாளராக இருந்த காலத்தில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தவர் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அதே சீனிவாசன்தான். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, காதர் ஷா ஜானகி அணிக்கு சென்றதும், சீனிவாசன் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார். 1987-ம் ஆண்டு முதல் 2000 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்தார் சீனிவாசன். சீனிவாசன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, தனக்கு துணையாக இருப்பார் என நினைத்து, நத்தம் விஸ்வநாதனை மாவட்ட துணைச் செயலாளராக்கினார்.

சீனிவாசன் கை ஓங்கி இருந்த காலம். திண்டுக்கல் அ.தி.மு.க என்றாலே சீனிவாசன் என்ற நிலை இருந்தது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றதால், மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் கூட சீனிவாசன் ஏக பிரபலம். அந்த நிலையில், 2000-ம் ஆண்டு அ.தி.மு.க பொருளாளர் என்ற பதவி உயர்வுடன் சென்னைக்கு அழைத்துக் கொண்டது கட்சி தலைமை. திண்டுக்கல்லில் தனக்கு நம்பிக்கையான ஆள் தேவை என்பதால், துணைச் செயலாளராக இருந்த விஸ்வநாதனை மாவட்டச் செயலாளராக பரிந்துரையின் பெயரில் பதவி வாங்கிக் கொடுத்தார் சீனிவாசன். அந்த காலக்கட்டத்தில் திண்டுக்கல்லைத் தாண்டி நத்தம் விஸ்வநாதனையும், பெரியகுளத்தைத் தாண்டி ஓ. பன்னீர் செல்வத்தையும் யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூட சீனிவாசனின் அனுமதியை வேண்டி நின்ற விஸ்வநாதனும், பன்னீர் செல்வமும் இன்றைக்கு அ.தி.மு.க.வின் அடையாளமாக இருக்க, மாவட்ட அவைத்தலைவர் என்ற பொறுப்புடன் திண்டுக்கல்லில் ஒரு ஓரமாக இருக்கிறார் சீனிவாசன்.

அரசியலில் ஏற்பட்ட சில மாற்றங்களால், சீனிவாசன் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு, சில காலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு அதிகாரி போல, ஒரங்கட்டப்பட்டிருந்தார். அந்த காலத்தில், ஆண்டிபட்டி தொகுதியில் நின்ற ஜெயலலிதாவுக்காக ஓடியாடி வேலை செய்த விஸ்வநாதன் அம்மாவின் குட்புக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தார். சீசா விளையாட்டுப் போல விஸ்வநாதன் மேலே வரவர, சீனிவாசன் கீழே இறங்கிக் கொண்டே இருந்தார். தற்போது அ.தி.மு.க மாவட்ட அவைத்தலைவராக சீனிவாசனும், மாவட்டச் செயலாளராக விஸ்வநாதனும் இருக்கிறார்கள். இருவரும் நட்புடன் இருப்பது போல வெளியே காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் கனன்று  கொண்டே இருக்கிறது இருவருக்குமான பனிப்போர் என்கிறார்கள் விபரமறிந்த அ.தி.மு.க பொறுப்பாளர்கள்.

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க வென்று, விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்ற பிறகு, இருவருக்குமான பனிப்போர் பகிரங்கமாகவே வெடித்தது. அ.தி.மு.க சார்பாக நடக்கும் கூட்டங்கள், விழாக்களில் சீனிவாசனின் பெயர் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள். தவறிப்போய் சீனிவாசன் பெயரை அச்சடித்த பிளக்ஸ் பேனர்களில், அவரது பெயர் மட்டும் வெள்ளைதாள் ஒட்டி மறைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. அரசியலில் ஆடிஓடி அசந்துப் போய் கிடந்த சீனிவாசன், எதுவும் செய்யமுடியாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சுத்தமாக ஓரங்கட்டாமல், மாவட்ட அவைத்தலைவர் பதவியாவது கிடைத்ததே என்ற எண்ணத்தில், நடந்த புறக்கணிப்புகளை கண்டும், காணாதது போல வலம் வந்துகொண்டிருந்தார் சீனிவாசன். குறிப்பாக அ.தி.மு.க இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பான விழாக்களில் முற்றிலுமாக புறக்கணிப்பட்டார் சீனிவாசன். தொடர்ந்து சீனிவாசனின் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, கட்சியின் அனைத்து பதவியிலும் விஸ்வநாதன் ஆதரவாளர்களே அமர்த்தப்பட்டார்கள். சீனிவாசனின் ஆதரவாளர்களாக இருந்த சிலரும், விஸ்வநாதன் பக்கம் விசுவாசத்தை காட்டத் தொடங்கி விட்டார்கள். அம்மாவின் கடைகண் பார்வையாவது பட்டால் போதும் என்ற எண்ணத்தில் தனது மகன் திருமணத்தை ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடத்தினார் சீனிவாசன். எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும், அதன் பிறகு, மாவட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சீனிவாசன் பெயர் மீண்டும் இடம்பிடித்தது.

தற்போது, அ.தி.மு.க ஐவர் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, நத்தம் விஸ்வநாதன் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடந்த 68 ஜோடி திருமணம் கூட,  தலைமைக் கழக அவைத்தலைவர் மதுசூதன் தலைமையில்தான் நடந்தது. அதற்கு அடுத்த நாள் நத்தத்தில் தனியார் கல்லூரி ஒன்றில்,  மாவட்ட நிர்வாகம் சார்பாக மிகப்பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்நாள் மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதன், அடுத்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அமைச்சர் மோகன் தலைமையில் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. சென்னையில் இருந்து அவசர அழைப்பு வந்ததால், சென்னை சென்று விட்டார், அதனால் கலந்துக் கொள்ள முடியவில்லை என காரணம் சொல்லப்பட்டது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி பழனியில் நடந்த அ.தி.மு.க சாதனை விளக்கக் கூட்டத்தில் விஸ்வநாதன் பங்கேற்பார் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நடிகர் ராமராஜன் கலந்துகொண்ட அந்த கூட்டத்திலும் விஸ்வநாதன் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அந்த நிகழ்ச்சியில் சீனிவாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திண்டுக்கல் அ.தி.மு.க.வில் விஸ்வநாதன் ஓரங்கட்டப்பட்டு மீண்டும் சீனிவாசனை முன்னிலைப்படுத்த தலைமை விரும்புகிறதோ என்ற எண்ணத்தை தொண்டர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கேற்ப, விஸ்வநாதனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. ஆனாலும், யாரும் நினைக்காததை செய்வதுதானே ஜெயலலிதாவின் பாணி.

-ஆர்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close