Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடிஜி விட்டு விடுங்கள் பாவம்... மல்லையா கடன் வாங்கித்தான் வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்! #WhyLetMallyaFlee

ந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்தான். கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. கல்விக்கடன் கட்டவில்லையென ஒரு மாணவியின் புகைப்படத்துடன் பேனர் ஒன்று வங்கி நிர்வாகம் சார்பில் வைக்கப்படுகிறது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மஞ்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் என்ஜீனியரிங் படிப்புக்காக கடந்த  2009-ம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2 லட்ச ரூபாய் கடன் பெறுகிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜுன் மாதத்தில் தொடங்குகிறது. அந்த சமயத்தில் கிருஷ்ணன் ஒரு லட்ச ரூபாய் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து வங்கி நெருக்கடி அளிக்கிறது. நெருக்கடிகளைத் தாங்க முடியாமல், கிருஷ்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்.

இந்நிலையில்தான் வங்கிக்கடனை செலுத்தவில்லையென கூறி வங்கி நிர்வாகம்,  கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி, அவரது மகள் நீத்து ஆகியோர் புகைப்படத்துடன் வங்கி அருகே பேனர் வைத்தது. இதனை பார்த்து கொதித்தெழுந்த மக்கள்,  போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் போலீஸ் உதவியுடன் அது அப்புறப்படுத்தப்பட்டது.  கல்விக்கடன் திருப்பி செலுத்தவில்லையென்றால் மாணவர்களிடன் புகைப்படங்களை எந்த விஷயத்திலும் பிரசுரிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

தற்போது இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம்,  சென்ட்ரல்  பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு,   இந்திய அரசியலமைப்பு பிரிவு 21ல் கூறியதற்கு மாறாக ஒரு மாணவியை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்  என்ற  கண்டனத்துடன்,  மாணவி நீத்துவுக்கு ஒரு லட்ச ருபாய் ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது ? என்றும் மனித உரிமைய ஆணையம் வினா எழுப்பியிருக்கிறது.

இது தமிழகத்தில் ஒரு வங்கியால் ஒரு சாதாரண மாணவி சந்தித்த பிரச்னை. சாதாரண கல்லூரி மாணவி ஒருவர், வங்கியிடம் இருந்து கடன் பெற்று விட்டு, அதனால் அவமானங்களை சந்தித்த சம்பவம் இது .

 

இப்போது விஜய் மல்லையா பிரச்னைக்கு வருவோம். இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளிலும் விஜய் மல்லையா கடன் வாங்கி வைத்திருக்கிறார். அதாவது மொத்தம் 17 வங்கிகள் விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி வழங்கியிருக்கிறது. ஐ.டி.பி.ஐ ரூ 900 கோடி கடன் வழங்கியிருக்கினறது. தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கூட தன்னால் முடிந்த ரூ. 50 கோடியை விஜய் மல்லையாவுக்கு தானமாக வழங்கியிருக்கிறது.

விஜய் மல்லையாவும் அவரது கிங்ஃபிஷர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து நிறுவனமே மூடப்பட்டது.  விஜய் மல்லையாவையும் அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் 'மோசடி செய்தவர்கள்' பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேர்த்தன. எனினும்  விஜய் மல்லையா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையாவை, அதனை கையகப்படுத்திய பிரிட்டனைச் சேர்ந்த தியாஜியோ நிறுவனம் நீக்கியது.

இதற்காக ரூ. 515 கோடியை விஜய் மல்லையாவுக்கு தியாஜியோ நிறுவனம் வழங்க முன்வந்தது. இதனை பெற்றுக் கொண்டு விஜய் மல்லையா,  லண்டனில் சென்று செட்டிலாகப் போவதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்தே இத்தனை காலமும் காத்திருந்து விட்டு அவசர கதியாக விஜய் மல்லையாவை பிடித்து கடனை வசூலித்து தாருங்கள் என கடன் வசூலிப்பு முகமையிடம் வங்கிகள் அனைத்தும் கூட்டாக கோரிக்கை வைத்தன. இந்த விஷயத்தில் வங்கிகள் எடுத்த தாமதமான முடிவுகளே விஜய் மல்லையாவுக்கு சாதகமாக போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது.

 

 

பிப்ரவரி 28-ம் தேதியே வங்கிகள் உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தாமதம் காட்டிய வங்கிகள் தரப்பில் மார்ச் 5ஆம் தேதிதான் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச்9-ம் தேதிதான் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. விசாரணையின் போதுதான், மத்திய அரசு வழக்கிறஞர் முகுந்த் ரோகத்கி உச்ச நீதிமன்றத்தில்,  கடந்த மார்ச் 2-ம் தேதியே விஜய் மல்லையா,  இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்று விட்டதாக தெரிவித்தார். இந்த தகவலால் நாட்டு மக்கள், மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. வழக்கறிஞரிடம் இந்த தகவலை சி.பி.ஐ தெரிவித்ததாம்.

இது போன்ற சம்பவம் நடப்பது யாருடைய ஆட்சியில் தெரியுமா? பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்டு இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ 15 லட்சம் போடுவோம் என்று வாக்குறுதி அளித்த மோடியின் ஆட்சியில்தான் நடக்கிறது.

நாட்டின் பொதுத் துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வைத்து விட்டு, ஒருவர் நாட்டை விட்டு எளிதாக தப்பி விடுகிறார். மத்திய அரசு வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கும் சி.பி.ஐ.,  மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காதா  அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் ஒருவரை கண்காணிக்கும் பொறுப்பு உளவுத்துறையினருக்கு இருக்காதா?


பிரதமர் அவர்களே... நீங்கள் சுவிஸ் வங்கியில் இருந்து தலைக்கு ரூ. 15 லட்சம் தந்ததால்தான்  நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஜய் மல்லையாவிடம் இருக்கும் 9 ஆயிரம் கோடியை மீட்டு தலைக்கு  10 ஆயிரமாக கொடுத்தால் இன்னும் ரொம்பவே சந்தோஷப்படுவோம். விஜய் மல்லையா ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதற்கு  உங்கள் கட்சியும் ஒரு விதத்தில் உதவியாகத்தானே  இருந்தது.

 

மல்லையாவின் ராஜ்யசபா எம்.பி. மெயில் ஐ.டி. வேறு உங்களிடம் இருக்கிறதாமே? எனவே அவரிடம் இருந்து எளிதாக உங்களால் பணத்தை வசூலித்து விட முடியும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு  நிறையவே இருக்கிறது. 

ஆனாலும் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என எங்கள் ஊர் பக்கம் சொல்வது ஏனோ நினைவுக்கு வந்து போகிறது பிரதமர் அவர்களே...!

#WhereisVijayMallya, #WhyLetMallyaFlee

விஜய் மல்லையாவுக்கு உங்கள் கருத்துக்களை ட்விட்டரில் சென்று சொல்லலாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close