Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி?

"எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும் கோட்டைதான் அது என்பதை அண்ணன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் " என்கிறார்கள், ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள்.

 'வடக்கே போகலாம், தெற்கே போகலாம், கிழக்கே போகலாம், மேற்கே போகலாம்... ஆனால், மாடிக்கு மட்டும் போகக்கூடாது... என்ன புரியுதா ?' என்ற புகழ்பெற்ற சினிமா வசனம் ஓபிஎஸ் வாழ்க்கையில் நிஜமாகி விட்டிருக்கிறது.

சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் ஓபிஎஸ்சும் எஞ்சிய நால்வரும் பரிதாபமாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இல்லை, இல்லை ஓபிஎஸ் தவிர மற்றவர்கள் அவரவர் ஊரில்தான் இருக்கிறார்கள் என்றும் கடந்த சில நாட்களாக வலம் வருகின்றன தகவல்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அண்ணன் தொகுதியில் இருக்கிறார் என்றோ அல்லது தலைமை அலுவலகத்தில் இருக்கிறார் என்றோ உண்மையை சொல்லவும் முடியாத நிலைதான் காணப்படுகிறது.

கடந்த புதன்கிழமை  (9.3.2016) மாலை,  சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் விமானத்தில் ஓபிஎஸ்சுக்கு டிக்கெட் போடப்பட்டிருக்கிறது.  விமான நிலைய காத்திருப்பு அறையில் இருந்தவருக்கு அப்போது  வந்த  ஒரு செல்போன் அழைப்பே அவரை அவசர, அவசரமாக  பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து தங்கியிருந்த இடத்துக்குத் திரும்ப  வைத்திருக்கிறது.


இதை ஏதோ... அவசர வேலை,  அதனால்தான்  பயணத்தை ரத்து செய்து விட்டு உடனே போய் விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம். அடுத்த பயணமாக அதே நாளில், இரவு மீண்டும் அதே மதுரைக்கு ஓபிஎஸ் போட்ட டிக்கெட்டுக்கும்  அன்று மாலை நடந்த அதே காட்சிதான் நடந்திருக்கிறது. அதே செல்போன் அழைப்பு, அதே அவசரத்துடன் தங்கியிருந்த இடத்துக்கு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார் ஓபிஎஸ்...

என்னதான் நடக்கிறது, ஓபிஎஸ் விஷயத்தில் ? அவருடன் பேசலாமா கூடாதா? அவர் நல்லவரா, கெட்டவரா? - இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் கட்சித் தொண்டர்களின் மத்தியில். ஜெ. தேர்வு செய்யும் வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் வருகிறதா, இல்லையா  என்பதே  இதற்கு சரியான பதிலாக இருக்க முடியும்.
 ஓபிஎஸ் தங்கியிருக்கும் அந்த ஹோட்டலில் வைத்துதான் 'வேட்பாளர் தேர்வு' நடக்கிறது, மற்றபடி ஓபிஎஸ்சை 'அம்மா' ஒதுக்கி வைக்கவில்லை என்று ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பரவலாக தகவலைத் தெளித்துக் கொண்டு இருக்கின்றனர்.
 

"கண்காணிப்பு டீமின் நேரடி மேற்பார்வையில்தான் ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் நால்வருமே அவரவர் வீடுகளில்தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் மட்டும்தான் 'எந்த நேரமும் உங்களைக் கூப்பிடுவோம்' என்ற அறிவிப்பால், சென்னையின் ஸ்டார் ஹோட்டலில் இருக்கிறார் " என்பதும் ஒரு தகவல். " கொஞ்சமாவாங்க, இவங்க ஆட்டம் போட்டாங்க. நாங்க நாலு பேரும் சேர்ந்தால்தான் அம்மா என்பது போல்தானே செயல்பட்டாங்க... அம்மாவின் கோபம் தெரிந்தும் இப்படி நடக்கலாமா?" என்று இந்த கண்காணிப்பு குறித்து அன்றாடம் பார்ட்டி ஆபீஸ் வந்து போகும் ர.ர.க்கள் புலம்புவது தனிக்கதை.

முதல்நாள் வேட்பாளர் ஐவரை ஜெயலலிதா நேர்காணல் செய்த போதே அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோரைத் தவிர மாநில நிர்வாகிகள் யாரையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் ஓபிஎஸ், நத்தம், வைத்தி, எடப்பாடி, பழனியப்பன் என்று எவருக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது...

 காஞ்சிபுரம் வேடலில் நடந்த கட்சியின்  மகளிரணி மாநாட்டின் போதே ஐவர் டீமை 'தள்ளி' வைத்திருந்த தலைமை,  அதில் லேசாக நூல் விடுவது போல எடப்பாடியையும்,  வைத்தியையும் மட்டும் 'மாநாட்டுக்கு போங்கள்' என்று விட்டு வைத்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது என்று இப்போது மெதுவாக  மேட்டரை 'லீக்' செய்கிறார்கள் சம்மந்தப்பட்ட ஏரியாவில்...

பணிவு, விசுவாசம், பக்தி என்று அதிமுகவில் பெரிதும் புகழ்ந்து தள்ளப் பட்ட ஓபிஎஸ்சின் முந்தைய குணாதிசயம் நிஜமா, நடிப்பா என்றெல்லாம் இப்போது ர.ர.க்கள் மத்தியில்  தனி ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது.

 ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரின் மூவ்மெண்ட்டோடு சேர்த்து,  கடைசி நேரத்தில்  மாவட்டச் செயலாளர் போஸ்டிங்கிலிருந்து காலி செய்யப்பட்ட  விஜய பாஸ்கருடைய மூவ்மெண்ட்டும் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விட்டிருக்கிறது. லேண்ட் லைன், ஸ்கைப், செல்போன் இப்படி எந்த வடிவிலும் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில்தான்  இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே "இறுதிச்சுற்று" நிலவரம்.

இவர்கள் எங்கு நகர்ந்தாலும், இவர்களோடு சேர்ந்து நிழல்போல நகரும் உருவங்கள் கைகளில் செல்போனுடன் எப்போதும்  தொடர்வதால்,  ஐவர் டீம் தூக்கம் தொலைத்துக் கிடக்கிறார்கள் என்பதே விவகாரம் எத்தனை தூரம் சீரியசாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சொல்லி விடுகிறது.

வீட்டில் இருப்பவர்கள் வெளியில் போனாலும், வெளியில் இருப்பவர்கள் வீட்டுக்குள் வந்தாலும்  அதுவும் ஏதாவது புதிய சிக்கலில் மாட்டி விடுமோ என்ற அச்சமும் அவர்களிடமே  இருப்பதால் ர.ர.க்கள் வட்டாரம் அந்த ஏரியா பக்கமே தலைகாட்டுவதில்லையாம்.

சென்னையில் இது குறித்து ஏதாவது 'ஹாட்' டாக் இருக்கிறதா? என்று தெரிந்த ர.ர.க்களிடம் பேசியதில், "சென்னையில் 'அம்மாவின் ஆசியோடு' என்று அச்சிடப்பட்ட ஐந்து திருமண அழைப்பிதழ்களில் ஓபிஎஸ் அன்ட் நால்வர் பெயர்கள் இருந்துள்ளன. யாருக்கெல்லாம் அழைப்பிதழை கொடுத்தார்களோ, அவர்களையெல்லாம் தேடித்தேடி அந்த அழைப்பிதழை வாங்கும் வேலையில் எங்கள் ஆட்கள் இருக்கின்றனர்,  கல்யாணத்துக்கு தேதி வாங்கியவர்கள், இப்போது பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள்" என்கின்றனர் அதிர்ச்சி விலகாமல்.

 நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து  பேசும் கட்சிக்காரர்கள்,  அவர்களது பாணியிலேயே 'ரெக்கவரி-செஷன்' போயிட்டிருக்குது தலைவா என்கின்றனர்

-ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close