Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நமக்கு நாமே vs மாற்றம் முன்னேற்றம் ஒரே வழி... இரு நபர்கள்...

வரும் துறை வாரியாக ஒவ்வொரு இடத்திலும் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்துகிறார். அவரும் துறை வாரியாக ஆலோசனைகளை கேட்கிறார். இருவரும் நம் ஊர் தேர்தல் பிரசாரம் போல அல்லாமல், அமெரிக்க அதிபர் தேர்தலைப்போல வித்தியாசமான உடைகளுடன் உரையாற்றுகின்றனர்.

இருவரும் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரான அப்பாவின் பெயரையும், படத்தையும் பயன்படுத்தாமல் தங்களை மட்டுமே முன்னிறுத்திக்கொள்கின்றனர். இருவரும் தங்கள் நிகழ்ச்சிக்காகவும், தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும் ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு, அதை மக்கள் மனதில் பதிய வைக்க படாதபாடு படுகிறார்கள்.

இருவரும் பக்கம் பக்கமாய் விளம்பரம் கொடுத்துக்கொள்கிறார்கள். அந்த இருவர் யார் என உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? ஒருவர் நமக்கு நாமே என ஊர் சுற்றி வரும் மு.க.ஸ்டாலின். மற்றொருவர் மாற்றம்.. முன்னேற்றம் என சொல்லி வரும் அன்புமணி ராமதாஸ்.
அது ஏமாற்று வேலை சரி... அப்போ இது?

"துணை முதல்வர் பதவி வகித்த மு.க. ஸ்டாலினுக்கு தமிழக விவசாயிகள், நெசவாளர்களின் நிலை தெரியாதா? தற்போது நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிவித்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது ஏமாற்று வேலை," எனச்சொன்ன அன்புமணி ராமதாஸ் தான் இப்போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி எனச்சொல்லி அதேபோல் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு துறை பற்றி பேசி, அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார். (ஸ்டாலின் செஞ்சது ஏமாற்று வேலை. சரி தான்.  அப்போ இது என்ன பாஸ்? துணை முதல்வரா இருந்தவருக்கு தமிழக மக்கள் நிலை தெரியாதானு கேக்கறது நியாயம் தான். அதே மாதிரி மத்திய அமைச்சரா இருந்த உங்களுக்கும் தெரியலையா என்ன?)

ஏற்கனவே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விளம்பரத்தை காப்பியடித்து தனக்கு தானே விளம்பரம் செய்து கொண்டவர், இப்போது அதே அமெரிக்க அதிபர் தேர்தல் ஸ்டைலில் (ஸ்டாலினுக்கு ஐடியா வந்ததே அமெரிக்காவில் இருந்து தான் பாஸ்) ஒவ்வொரு துறை குறித்து, ஒவ்வொரு ஊரில் டிப்டாப் உடையணிந்து, மைக்ரோ போன் மைக்கை பொருத்தி உரையாற்றி வருகிறார் அன்புமணி.

மண்டல மாநாடுகளை தொடர்ந்து, மாநில மாநாடு முடிந்த கையோடு, வேலூரில் சுகாதாரப்பிரச்னைகள், சேலத்தில் மதுவிலக்கு ஆகியவை குறித்து பேசி, மக்களின் கருத்தை கேட்டவர், கோவையில் தொழில்துறை, வேலைவாய்ப்பு பிரச்னைகள் குறித்து மக்களிடம் கலந்துரையாடியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை என விவசாயம், நிர்வாகம், கல்வி, நகரமைப்பு என பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளார்.

ஸ்டாலினை கிண்டல் அடித்தவர் அதே பாணியில்

நமக்கு நாமே எப்படி இயங்குகிறதோ, அதேபாணி தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி கூட்டங்களும். அங்கு ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்தும் மேடை அமைப்பு. இங்கே அன்புமணியை மட்டும் முன்னிறுத்துகிறது மேடை. அங்கே ஸ்டாலின் மட்டுமே பேசுவார். இங்கு அன்புமணி மட்டும் தான். உள் அரங்க கூட்டத்தில் ஒரு தரப்பினரை சந்தித்து பேசி அவர்களின் கேள்விக்கு பதிலளிப்பது தான் இருவரது நிகழ்ச்சிகளும்.  இரு நிகழ்ச்சிகளும் யதேச்சையாக நடப்பது அல்ல. திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.

ஸ்டாலினின் பயணத்தை கிண்டல் அடித்தவர் இப்போது அதே பாணியை பின்பற்றி வருகிறார்.  உண்மையில் இந்த பயணங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது என்பது வேறு விஷயம். ஏற்கனவே ஸ்டாலினின் இந்த பிரசார முறை குறித்து விகடன் இணைய தளத்தில் எழுதியிருந்தோம். அன்புமணியின் நிகழ்வுகளும் அரங்கேறுவது அதே முறை தான். அன்புமணி என்ற முகத்தை தமிழகத்தில் பிரபலமாக்குவது, அவர் வந்தால் தான் எல்லாமும் சரியாகும் என விளம்பரங்கள் மூலம் நம்ப வைக்க முயல்வது இவை தான் இந்த நிகழ்ச்சிகளின் டார்கெட். இதற்காக ஒரு குழுவே இயங்குகிறது.

வழக்கத்துக்கு மாறாக பல கோணங்களில், பல கேமராக்கள் துணையோடு இவை பதிவு செய்யப்படுகின்றன. நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது நடை, உடை, செயல்பாடு என எல்லாமுமே திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. நமக்கு நாமேவுக்கும், மாற்றம் முன்னேற்றம் அன்புமணிக்கும் பெரிய வித்தியாசங்களை நீங்கள் பார்க்க முடியாது. இருவரும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுகிறார்கள் அவ்வளவு தான்.
எல்லாமே செட்டப் தானோ?

கோவையில் தொழில் துறை, வேலைவாய்ப்பு பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஒரு மணி நேரம் நான் முதல்வரானால் தொழில்துறையில் என்னவெல்லாம் சாதிப்பேன் என இடைவிடாமல் பேசினார் அன்புமணி. அடுத்து கேள்வி நேரம் துவங்கியது.

அப்போது எழுந்த ஒரு இளைஞர் உங்கள் ஒருவரால் இது எப்படி இது முடியும் என ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினான். நீங்கள் ஆதரித்தால் என்னால் முடியும் என்றார் அன்புமணி. அதன் பின்னர் பேசிய அந்த இளைஞர், 'நான் பாமகாவின் ஆதரவாளர் அல்ல. ஆனால் அன்புமணியின் ஆதரவாளர் என ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, திரும்ப நின்று கூட்டத்தை பார்த்து தமிழில் அதை மீண்டும் சொன்னார். இளைஞர்கள் அன்புமணியை நோக்கி வருவதாக உணர்த்தியது அந்த காட்சி.

சில நிமிடங்களில் அந்த இளைஞர் அரங்கை விட்டு வெளியே வந்தார். அவரை நாமும் பின் தொடர்ந்தோம். அவரோடு மேலும் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பேசிக்கொண்டனர். தேர்தலுக்கு முன் நாம் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் நம் செயல்பாடு இன்னும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டனர். தர்மபுரி தேர்தலில் வேலைபார்த்தது மாதிரி இன்னும் வேகமாக செய்ய வேண்டும் என தேர்தல் வேலைகள் குறித்து மட்டுமே அவர்கள் பேசினர். அந்த இளைஞர் யார் என்பதில் பெரிய சந்தேகமே எழுந்தது. உண்மையில் அன்புமணியை முன்னிலைப்படுத்த பயன்படுத்தப்படும் கேரக்டர்கள் தான் இவர்கள். இந்த கூட்டத்துக்கான ஆட்களையும் பாமகவினர் தான் அழைத்து வந்தனர். பேசியவர்கள் அன்புமணியை எழுச்சி நாயகன், நாளைய முதல்வர், இளைஞர்களின் தளபதி என பாராட்டியே பேசினர்.  இப்படித்தான் ஒவ்வொரு கூட்டமும் நடத்தப்படுகிறது. எல்லாமே செட்டப் தானோ.

மறுபுறம் என்னமா இப்படி பண்றீங்களேமா என திமுக முழுபக்க விளம்பரத்தை வாரி இறைக்க...இந்த விளம்பரத்தை கிண்டல் அடித்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் அடுத்த ஓரிரு தினத்தில் அன்புமணியாகிய நான் என பாமகவும் முழுப்பக்க விளம்பரங்களை வாரி இறைத்தது. கோடிகளை இறைத்து இப்படி பிரசாரம் செய்ய வேண்டுமா என கேள்வி கேட்டால், "அவர்கள் (திமுக) சோப்பு விளம்பரம் போல் செய்கிறார்கள். நாங்கள் பாசிட்டிவ்வாக விளம்பரம் செய்கிறோம். எங்கள் விளம்பரத்தை மக்கள் விரும்புகிறார்கள்," என புதிய விளக்கம் கொடுக்கிறார்.

கோவையில் பேசும் போது இந்த கூட்டத்த நமக்கு நாமே காப்பி என சொன்னாலும் சொல்வார்கள் என சொன்னார் அன்புமணி. கூட்டத்துக்கு பின்னர் இது நமக்கு நாமேவின் காப்பியா என கேட்க, "அதைப்பற்றி பேசினால் இந்த கூட்ட செய்தி வலுவிழந்து விடும். எனவே அதை விடுங்கள். அதற்கு பின்னர் பதிலளிக்கிறேன்,"  என சொன்னார் அன்புமணி. நிச்சயம் இது நமக்கு நாமேவின் காப்பி என சொல்வதற்கில்லை.

ஏனென்றால் நமக்கு நாமேவே அமெரிக்க தேர்தலில் இருந்து அடிக்கப்பட்ட காப்பி தானே....? என்னமோ போங்க பாஸ்....
 
ச.ஜெ.ரவி,
படங்கள் : தி.விஜய்

                                       

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ