Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெகா கூட்டணி: விஜயகாந்த் இறங்கி வந்த ரகசியம்!

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவிற்கும்,  திமுக கூட்டணிக்கும் எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. அதிலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பால் உற்சாகம் குன்றிய கட்சித் தொண்டர்கள்,  நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில், அவர்களை  கட்சி தாவி விடாமல் இழுத்து பிடிப்பதற்காகவும் கூட்டணிக்கான முஸ்தீபுகளில் விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில்,  15 கட்சிகள்  இணைந்து புதிய கூட்டணி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பினை பற்ற வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதிமுகவுடன் தோழமை கொண்டுள்ள 7 கட்சிகளை அழைத்து  திடீர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர்  பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், புதிய கட்சியான சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் தனித்தனியே பங்கேற்றனர். அவர்களிடம்,போட்டியிட விரும்பும் தொகுதிகள்,தேர்தல் பிரசார வியூகங்கள் ஆகியவை குறித்து ஜெயலலிதா  விரிவாகப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு மேற்கண்ட 7 கட்சிகளின் தலைவர்கள் அளித்த பேட்டியிலும்  இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போல திமுக-காங்கிரஸ்  கூட்டணிக்கு  நேற்று முன்தினம்(ஞாயிறு) 19 அமைப்புகளும், நேற்று(திங்கள்) 27 அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.பெரிய கட்சிகள் எதுவும் வராத  நிலையில், சிறுசிறு அமைப்புகள்,சமுதாய இயக்கங்கள் பக்கம் திமுக கவனத்தைத் திருப்பியுள்ளது.

இந்நிலையில்  அதிமுக,  திமுகவிற்கு மாற்றாக பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தே தீருவோம் என்று அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே தென்படுகிறது. இதே நிலைதான் பாமகவிற்கும் நீடிக்கிறது. எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள், பாமக கூட்டணியில் இணையலாம் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து பல மாதங்கள்  ஆகியுள்ள நிலையிலும், பாமக மட்டுமே அரசியல் களத்தில் தனித்து இயங்குகிறது.

பலமுனைப் போட்டியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்கின்றன. இதில், தேமுதிக விஜயகாந்த் தலைமையில்  வலுவான கூட்டணி அமைந்தால்,  அது நிச்சயம் அதிமுக-திமுக வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று  கூறப்படுவதால் அனைத்துத் தரப்பினரின் கவனமும் தேமுதிக பக்கம் திரும்பியுள்ளது.

தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்ட போதிலும் கூட்டணி வைக்கவும் தேமுதிக கதவுகள் திறந்தே உள்ளன. அதனால், 3 கட்ட  பிரசாரத்தை முடித்துவிட்டு தற்போது 4ம் கட்ட பிரசாரத்தையும் தொடங்கியுள்ள மக்கள் நலக் கூட்டணி  தேமுதிகவுடன் இணைய விரும்புகிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன், " திமுக, அதிமுகவுக்கு எதிரான கொள்கையுடைய விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தாலும் சரி அல்லது விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி சென்றாலும் சரி எந்தவித கௌரவ பிரச்னையோ, தயக்கமோ கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

விஜயகாந்த் தரப்பில் கூட்டணி அமைப்பது குறித்தும்,வெற்றி வாய்ப்புக் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது. மேலும், தனித்துப் போட்டி என்பதை தவறாக சில மாவட்டச் செயலாளர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்து  தேமுதிக தலைமை அவர்களிடம் உண்மையை விளக்கி, சரி கட்டி வருகிறது. தனித்துப்போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பை தொடர்ந்து, ஒரு சில மாவட்டங்களில் தேமுதிகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து விலகி, திமுக மற்றும் அதிமுக பக்கம் தாவி வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் இது இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடைசி நேரம் வரை கூட்டணிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த திமுகதான், விஜயகாந்த் மீது செம கடுப்பில் இருக்கிறது.

இதனால் தேமுதிக மீதான இமேஜை காலி செய்வதற்காக, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலருடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் தொடர்ந்து பேசி வரும் தகவல்கள் விஜயகாந்துக்கும் எட்டியுள்ளது. மேலும் திமுகவுடன் கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் சீட் கேட்டு பணம் கட்டிய பலர், அவ்வாறு அமையாமல் போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்த அவர்கள், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தருமாறு கேட்டு வருவதால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனால்தான் அவர்களை சமாதானப்படுத்தும் நோக்குடனும், கட்சித் தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடனும் தேமுதிகவும் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை உணர்த்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி உடன் கைகோர்க்க எவ்வித தயக்கமும் இல்லை என்பதால்தான் விஜயகாந்த் எந்த இடத்திலும், மக்கள் நலக் கூட்டணியை விமர்சிக்கவில்லை. அவரின் விமர்சனத்திற்கு இலக்காக இருப்பது அதிமுக மற்றும் திமுக. அதனால் மக்கள் நலக்கூட்டணி பக்கம் தேமுதிக கவனத்தைத் திருப்பி, தம்மோடு இணைத்துக்கொள்ள விழையும் என்றே கூறப்படுகிறது.

அத்தோடு,ஐ.ஜே.கே.,த.மா.கா.,புதிய தமிழகம்,புரட்சி பாரதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அமையும் பட்சத்தில் விஜயகாந்த் தலைமையில் மெகா கூட்டணி உறுதிப்படும் என்று தெரிகிறது.

- தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close