Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோருக்கு ஆணவக் கொலைகளில் பங்கில்லையா?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். அதே போல, தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் செய்ய நினைப்பவர்கள், சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நிதர்சனம் அப்படி இருக்கிறதா...? உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க. பா.ம.க ஆகிய கட்சிகளின் கையில் ரத்தக் கறை இல்லையா...?
 

ஆட்சி செய்ய விரும்புபவரிடமிருந்து தொடங்குகிறேன்.


அன்புமணி ராமதாஸ் ஆகிய நான்:

அன்பிற்குரிய அன்புமணி, நீங்கள் இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. உங்களுக்கு உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் அதிக தொடர்பில்லை என்றாலும், நீங்கள் சார்ந்த கட்சி,  தமிழகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் ஆணவக்கொலைகள் சிலவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பிணைந்திருக்கிறது.


அதனால், இயற்கையாக அதன் பிரதிநிதியாக மக்களைச் சந்திக்க இருக்கும் உங்களிடம்தான் உரையாடி ஆக வேண்டும்.


உங்களுக்கு டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டம் நினைவிருக்கிறதா...? உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. உங்கள் அப்பா மருத்துவர்  ராமதாஸிடம்  கேட்டுப் பாருங்கள்... ஒரு வேளை அவருக்கு நினைவிருக்கலாம். அவர் தலைமையில், கோவையின் மையப்பகுதியில் ஒரு ஆடம்பர விடுதியில் நடந்த கூட்டம் அது. ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த கூட்டம். ஐம்பதுக்கும் மேற்பட்ட சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். அமைப்பினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. நானும், கோவையைச் சேர்ந்த இன்னொரு ஊடகவியலாளரும் மட்டுமே, கட்சிக்காரர் தோரணையில் சென்றதால், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். அந்தக் கூட்டத்தில் உங்கள் அப்பா, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தூவிய வன்ம விதைதான், இப்போது வரிசையாக உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

தயவு செய்து மறுக்காதீர்கள். ’என் அப்பா எதுவும் அப்படி பேசி இருக்க மாட்டார். அவரே, பல சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்தவர்; தாழ்த்தப்பட்டவருக்கு பாதுகாவலர்!’ என்று வழக்கமான உங்கள் பாணியில் நீட்டி முழக்காதீர்கள். அந்த நிகழ்ச்சியின் முழு ஆடியோவும் கைவசம் இருக்கிறது. நீங்கள் விரும்பினால், அதை விகடன் இணையவெளியில் பதிவேற்றத் தயாராகவே இருக்கிறோம்! உள் அரங்கக் கூட்டம்தானே என்ற மிதப்பில், உங்கள் அப்பாவும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு அமைப்பின் தலைவர்களும் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாதவை!

தென்மாவட்டத்தைச் சார்ந்த சாதிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர், ராமதாஸை நோக்கி, “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். நம்ம வந்தா இடுப்புல துண்டு கட்டுற பயலுவோ... சைக்கிளைத் தள்ளிட்டுப் போற பயலுவோ.... (இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல வார்த்தைகள்) எல்லாம், இன்னைக்கு நமக்கு சரிசமமா நிக்கிறானுங்கன்னா... அதுக்கு நீங்கதான் காரணம்... நீங்க கூட்டணி சேர்ந்து தைரியம் கொடுத்தீங்க... இன்னைக்கு நமக்கு எதிராவே வளர்ந்து நிக்கிறாங்க....” என்றார்.
   

அதற்கு உங்கள் அப்பா, என்ன சொன்னர் தெரியுமா..? “ஆம். தவறு செய்துவிட்டேன். இனி எக்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கிடையாது...” என்றார். உங்கள் அப்பாவின் முற்போக்கு முகமூடி கிழிந்து கந்தலாக பரிதாபமாக தொங்கியது அன்று. அரசியலுக்காக, எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டீர்கள், சமூகநீதி கொள்கைகளை எல்லாம் வாக்கிற்காக பலியிட முடிவுசெய்துவிட்டீர்கள் என்பதை அறிந்தேன்.


மாற்றம், முன்னேற்றம், எப்போது நத்தம் காலனி...?


வளர்ச்சியின் நாயகனாக உங்களைச் சித்தரிக்க விரும்பும் அன்புமணி அவர்களே,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த, பத்திரிக்கையாளர் சந்திப்பு நினைவிருக்கிறதா..? ’இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது... எப்படி நினைவிருக்கும்?” என்று கேட்கிறீர்களா...! சரிதான்.. அதையும் நானே நினைவுபடுத்துகிறேன். உங்களிடம் அப்போது ஒரு வினா எழுப்பப்பட்டது, “நீங்கள் வாக்கு கேட்க நத்தம் காலனி செல்வீர்களா...?” என்று. அப்போது நீங்கள் தீர்க்கமாக கூறிய பதில், உங்கள் மீது ஒரு சின்ன நம்பிக்கையை விதைத்தது. “நிச்சயம் செல்வேன். அதுவும் தருமபுரி தொகுதிக்குள்தானே இருக்கிறது... நான் அனைத்து சமூக மக்களுக்குமான பொது வேட்பாளர்..!”

ஒருவேளை இதை நீங்கள் மறந்திருந்தால், அப்போது உங்கள் அருகில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து பா.ம.கவுக்கு வந்தவருமான மருத்துவர் செந்திலிடம் கேளுங்கள். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? நீங்கள் கடைசி வரை நத்தம் காலனி செல்லவில்லை. நத்தம் காலனிக்கு பக்கத்து ஊரான செல்லாம்கொட்டாய் வரை வந்த நீங்கள், நத்தம் காலனி பகுதிக்கு செல்லவே இல்லை. ஏன்...? அந்த மக்களின் வாக்கை தீட்டாக கருதிவிட்டீர்களா?

“அப்படியெல்லாம் இல்லை... அப்போது அரூர் அருகே என் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது. அது போல் அசம்பாவிதங்களை தவிர்க்கவே நான் செல்லவில்லை...” என்கிறீர்களா...?. ஆனால், நீங்கள் வெற்றி பெற்ற பிறகும், நீங்கள் இதுநாள் வரை செல்லவில்லையே அன்புமணி. அதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்...?


உங்கள் உரைகள் வளர்ச்சி குறித்து இருக்கிறது, தனிப்பட்ட முறையில் உங்களுடனான உரையாடல்கள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, ஆனால், பண்பாட்டு தளத்தில் உங்களது கருத்துகள் சூனியமாக இருக்கிறதே..! சங்கரின் படுகொலைக்கு நீங்கள் நேரடியாக காரணமில்லை. ஆனால், “சாதிய வன்முறைகளுக்கு பின் நடந்த தருமபுரி பாராளுமன்ற தேர்தலில், நீங்கள் பெற்ற வெற்றி கொடுத்த தைரியம்தான், இது போன்ற சாதிய தாக்குதல்கள் பரவக் காரணம்” என்றொரு குரல் ஒலிக்கிறதே... அதை உங்களால் கேட்க முடிகிறதா...?


உங்கள் மீதுள்ள களங்கத்தைப் போக்க, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...? குறைந்தபட்சம் நத்தம் காலனி மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களையாவது பெறுங்கள். அதுவே, பொது சமூகம் உங்களை நம்ப போதுமானதாக இருக்கும்!


நாங்கள் பெரியார் பாதையில் நடப்பவர்கள்:

      
மீண்டும், டிசம்பர் 12, 2012 கோவையில் நடந்த ‘அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை’ கூட்டத்திற்கே வருகிறேன். அந்த கூட்டத்தில் ஒருவர், “நான் பெரியாரை தலைவனாக ஏற்றுக் கொண்டவன். ஆனால், இது போன்ற சாதி மறுப்பு திருமணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது...” என்று தன் உரையை துவங்கினார். அந்த உரையில் வெறும் வார்த்தைகள் மட்டும் நிரம்பி வழியவில்லை, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிட அரசியலின் தோல்வி, அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் தெறித்தது.


பெரியாரை திராவிட இயக்கங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது என்பதற்கு இது சான்று... பெரியார் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அவர் சாதி மறுப்பு கொள்கையில் மிக தெளிவாக இருந்தார். இன்று அவர் வழி வந்த இரண்டு திராவிட கட்சிகளும், அந்த கொள்கையில் உறுதியாக இருக்கிறதா...?


    இன்றும் தன் வேட்பாளர் தேர்வு படிவத்தில், அதற்கான நேர்காணலில், தி.மு.க சார்பாக போட்டியிட விரும்புபவர் என்ன சாதி என்பது பிரதானமான கேள்வியாக இருக்கிறது. பெரியார் கொள்கைகளைப் பரப்புவதும், சாதியற்ற சமூகத்தை உருவாக்குவது எல்லாம், இவர்களின் எண்ணம் அல்ல. சாதிய அரசியலை நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஊக்குவிப்பது... அதன் மூலம், தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நோக்கம் என்றால், தயவு செய்து பெரியார் படத்தை உபயோகிப்பதையாவது நிறுத்துங்கள் திரு. கருணாநிதி அவர்களே!

நேரடியான சாதிய அமைப்புகளை விட நீங்கள்தான் ஆபத்தானவராக இருக்கிறீர்கள். ஆம். அமைதியை, சமத்துவத்தை விரும்பும் பொது சமூகம், சுலபமாக சாதியக் கட்சிகளை எந்தக் குழப்பமுமின்றி தன் இடதுகையால் தள்ளிவிட முடியும். ஆனால், முகமூடி அணிந்திருக்கும் உங்களை என்ன செய்வது...?

"நாங்கள் சமூக நீதிக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கிறோம் தெரியுமா...? எதற்கெடுத்தாலும் தி.மு.க வை விமர்சனம் செய்யாதீர்கள், சாதி ஒழிய வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்” என்கிறீர்களா..? ஆம், சரிதான். ஆனால் அந்த மாற்றம் வர என்ன செய்து இருக்கிறீர்கள். எந்த தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை அறிந்து சீட்டு கொடுப்பதில் நீங்கள் மட்டுமென்ன விதிவிலக்கா...?


இளவரசன், கோகுல்ராஜ்... இப்போது சங்கர். இளவரசனின் மரணத்தை தற்கொலையென்றாகிவிட்டது. சரி. மிச்சம் உள்ள கோகுல்ராஜ், சங்கர் படுகொலைக்கு எதிராக நீங்கள் நடத்திய போரட்டம் என்ன...? இல்லை, உங்கள் தேர்தல் அறிக்கையிலாவது ஏதேனும் குறிப்பு, அறிவிப்பு இருக்கிறதா....?

உங்கள் கூட்டணியில் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்த அவதூறுகள் போதும், நீங்கள் எவ்வகையிலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்று வரலாறு பதிவு செய்ய!


ஜெயாவின் கைகளில் குருதி நாற்றம் :

சங்கரை பட்டப்பகலில் கொன்றவர்கள், எந்தப் பதற்றமும் இல்லாமல் வண்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் தம் முகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அவ்வளவு நெஞ்சுரத்தை அவர்களுக்குத் தந்தவர்கள் யார்...? சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் மட்டுமா..? இல்லை. நிச்சயம் இல்லை. இந்த ஆட்சியாளர்களும், அவர்களது மெளனமும்தான் பிரதான காரணம்.


கடந்த நான்காண்டுகளாக ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அது குறித்து இதுநாள் வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதவராகத்தான் இருக்கிறார் ஜெயலலிதா.


கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்ததாக ஒரு புள்ளிவிபரம். ஆனால், இந்த ஆட்சியில் எந்த ஆணவக் கொலையும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் பேசுகிறார் ஓ.பன்னீர்செல்வம். 

யாரை ஏமாற்ற எண்ணுகிறது இந்த அரசு...?

கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜை கைது செய்ய வக்கற்ற இந்த அரசின் கையாலாகாத தன்மை தான், ’வாட்ஸ் அப்’ தீவிரவாதி யுவராஜை கதாநாயகனாக பல 100 இளைஞர்கள் வரித்துக் கொள்ள காரணமாக அமைந்தது. ஆணவக் கொலைகள் குறித்து பெருமையாக முகநூலில் கருத்துகள் பதிய வைத்தது. அதன் தொடர்ச்சிதான் சங்கரின் கொலை. ஆந்திரா திருடர்களைக் கூட விரட்டியடித்துவிட்டதாக முன்னர் புளங்காகிதப்பட்ட ஜெயலலிதா, இந்த உள்ளூர் ஆணவக் கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்ச வேண்டும்?

கடைசியாக சாமானியன் ஆகிய நமக்கு:

நமது ஆன்மாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருகின்றன. நாம் நமக்கே தெரியாமல் ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்கி வருகிறோம். அந்த வக்கிரமான சமூகத்தில்தான் நாளை நம் குழந்தைகள் உலவ விருக்கின்றன. நாளை, குருதி ஆற்றின் கரையோரத்தில் நம் குழந்தைகள் செய்வதறியாது நிற்பதை நாம் விரும்பவில்லை என்றால், சாதிய ஆணவக் கொலைக்கு எதிராக நம் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்வோம்!

#‎TNHonourkilling‬

- மு. நியாஸ் அகமது
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close