Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணின் திருமண வயதை அதிகரித்தால் ஆணவக் கொலை குறைந்து விடுமா?

டுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த ஆணவக் கொலை தமிழகத்தையே அதிர்ச்சியில்  உறைய வைத்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை விகடன்  டீம்  தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இந்தச்செய்திகளுக்கு விகடன் சமூக வலைதளங்களில் வந்த பின்னூட்டங்களில் ‘இதுபோன்ற ஆணவக் கொலைகளுக்கு ஆண்-பெண் இருவரின் திருமண வயதும் ஒரு முக்கியமான காரணம். அந்த 16, 17 வயதில் எந்த வேலையும் இல்லாமல் இளமை வேகத்தில் காதலித்து திருமணம் செய்து கஷ்டப்படுகின்றனர். அதனால் ஆணின் திருமண வயது 21 என்பதை 28-ஆகவும் பெண்ணின் திருமண வயது 18 என்பதை 25 ஆகவும் அதிகரித்து திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் மாணவப் பருவத்தில் வரும் காதல் குறையும். ஆணவக் கொலைகளும் குறையும்...’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

'ஆண்-பெண் பதிவுத் திருமண சட்டத்தில் திருத்தம் செய்தால் ஆணவக் கொலை குறைய வாய்ப்பு இருக்கிறதா?’ என்பது குறித்து  சமூக ஆர்வலர் , வழக்கறிஞர் மற்றும்  உளவியல் நிபுணரிடம் பேசினோம். அவர்கள் கூறியதிலிருந்து...

அருள்மொழி (வழக்கறிஞர்)


இந்த கொலைவெறிக்கும்  பெண்ணின்  வயதுக்கும் எந்த சம்மந்தமும்  இல்லை. இதுபோன்ற நியாமற்ற  கருத்தை  முன்வைப்பதற்கு அவர்களின் ஜாதி மீதான பெருமையும்,  மற்றொரு ஜாதி மீதான தரக்குறைவான எண்ணமுமே காரணம். இந்தக்  காரணங்களைக் கூறி இந்தக் கொலையை நியாயப்படுத்துவது ஒருவித மனநோய்.

பொதுவாக ஜாதி, மதத்தின் மீது மூர்க்கமான நம்பிக்கை வைப்பவர்கள் இத்தகைய இழிவான செயலை பெருமையாக  நினைத்துக் கொள்வார்கள். சில உதாரணங்களில்  ஒடுக்கப்பட்ட  ஜாதியில் உள்ளவர்கள்,  தங்களை விட கீழான சாதியை சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற சூழலும் உள்ளது.

அதற்கும் இதே சாதிய அமைப்புகளின் கோளாறே தவிர,  நியாயம் என்று சொல்லவிட முடியாது. அநியாயத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள் தேடலாம். ஆனால் அவையெல்லாம்   உறுதிப்படுத்த முடியாது. முதலில் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில்  இந்தச் சட்டத்தை  அமல்படுத்துவார்களா?  முதலில் அதைச்  செய்ய  சொல்லுங்கள்.  அதுமட்டுமின்றி  25 வயதில்  ஒருபெண் தாழ்த்தப்பட்ட  பிரிவைச் சேர்ந்த  இளைஞனை  காதலித்தால் இந்த சாதிய அமைப்புகள் ஏற்றுக் கொள்வார்களா?” என்பவர், “திரைப்படங்களை இயக்குபவர்களும் இதுபோன்ற  வன்முறைகளுக்கு தீனி போட்டு  வளர்த்துவிட்டார்கள். இதுபோன்ற  திரைப்படங்களை இயக்குபவர்கள் முதலில்  இதை யோசிக்க வேண்டும” என்றார்.

அபிலாஷா (உளவியலாளர்)

பெண்ணின்  வயதிற்கும் இந்த வன்மமான கொலைக்கும் என்ன  சம்மந்தம்  உள்ளது?  இதில் பெண்ணின் திருமண வயது எங்கே வந்தது? ஒரு பெண் 20 வயதில் இருந்தே  திருமணத்திற்கு தயாராகி  விடுகிறாள். அவள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் தயாராகிவிட்டபிறகு  எதற்கு வயதை உயர்த்த வேண்டும்? இதில் வயதை நியாயப்படுத்துவார்களேயானால் அது சாதிய அமைப்புகளுக்கு ஆதரவானதாகத்தான் இருக்கும். 25 வயதுக்குமேல் மேல் திருமணம் நடைபெற்றால் பெண்கள் தாய்மை அடைவதில் பிரச்னைகளை சந்திக்கும் சூழலுக்கு தள்ளபப்டுவாள் என்பதை இதுபோன்ற கருத்தை உதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். உளவியல்  ரீதியாக இன்றைய  இளைஞர்களுக்கு ஒன்றை  சொல்கிறேன்.  திரைப்படங்களை பார்த்து வெட்டி கௌரவத்திற்காக எந்த ஒரு செயலையும்  செய்யாதீர்கள். எதையும்  உளவியல்  ரீதியாக  எதிர் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நிதானமாக முடிவெடுங்கள்.”

ஓவியா (பெண் உரிமை செயற்பாட்டாளர்)

பெண்களுடைய திருமண வயதை உயர்த்தும் பொது  கோட்பாட்டில் எனக்கு உடன்படான கருத்துதான். .ஆனால் அதை பெற்றோர் திருமணம் பார்த்து வைக்கும் திருமணத்தில் அமல்படுத்துவார்களா? தற்போது உள்ள பெண்ணின் திருமண வயது சட்டத்தையே சிலர் பின்பற்றுவதில்லையே. இதையே மாற்ற முடியவில்லை. ஒரு கொலையை எத்தனை வயதில் செய்தாலும் சரியாகி விடுமா? 18 வயதில் ஒரு பெண் முடிவெடுக்கும் திறன் இல்லாதவளாக இருக்கிறாளா? ஒருபெண் 25 வயதில் தான் முடிவெடிக்கும் திறனை  பெறுகிறாளா? அவ்வாறு 25 வயதில்  ஒரு பெண் காதலித்து திருமணம் செய்வதை இந்த சமூகம் ஏற்குமானால் கண்டிப்பாக அந்த சட்டத்தை நாம் பரிசீலிப்போம். அதை ஏற்கும் முதல் ஆளாக நான் நிற்பேன்.”

- கே. புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்