Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணுரிமை பேசிய முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம்!

'ஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் ' என 70 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசிய தமிழின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம். மார்ச் 19, அவரது நினைவுநாள்.

சித்தி ஜுனைதா 1917-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அப்பகுதியில் பிரபலம். தந்தை கல்வியாளராக இருந்தாலும், அந்நாளில் கல்வி கற்பதில் இஸ்லாமிய பெண்களுக்கு இருந்த கடும் கட்டுப்பாடுகளினால் சித்தி ஜூனைதா பேகம் 3-ம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. இருப்பினும் இயற்கையான எழுத்தின் மீதான ஆர்வமும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், அவரை 16 வயதில் எழுத்துத் துறைக்கு கொண்டுவந்தது.

பெண்கள் தனித்துவமாக இயங்கும் சூழல் அதிகரித்த இந்நாளிலும் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து இலக்கியப் பணியாற்றுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு முந்தைய, பிற்போக்குத் தனம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் ஒரு தமிழ் இஸ்லாமிய  பெண் துணிச்சலாக எழுத்துலகிற்கு நுழைந்தது ஆச்சரியமானது.

மற்ற எந்த சமூகத்தினரைவிடவும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தில்,  சித்தி ஜுனைதா வெறும் எழுத்தாளர் என்ற மட்டத்தில் நின்றுவிடவில்லை. பெண்ணியத்தையும் ஆண், பெண் சமத்துவத்தையும் தன் எழுத்துக்களிலும் நடைமுறை வாழ்விலும் தீவிரமாக வெளிப்படுத்தினார். 

12 வயதில் திருமணமாகி,  17 வயதில் விதவையான சோகமான வாழ்வு சித்தி ஜூனைதாவினுடையது. நான்கு பெண் குழந்தைகளுடன் ஆதரவின்றி நின்ற அவருக்கு எழுத்து மட்டுமே ஆறுதலாக இருந்தது. எழுத்து, படிப்பு, பெண் பிள்ளைகளின் வளர்ப்பு இவற்றால் வாழ்க்கையை ஆறுதல்படுத்திக்கொண்ட சித்தி ஜுனைதா, பிற்காலத்தில் நேர்காணல் ஒன்றில் “என்  வாழ்க்கை அனுபவமே எனது எழுத்துக்கள்" என்று கூறினார். உண்மைதான். இதனால் அவர் தனது முதல் படைப்பினை வெளியிடும்போது, பலவகை அனுபவங்களையும், தடைகளையும் சந்திக்கவேண்டியிருந்தது.

தன் 21 வயதில் அவர் எழுதிய ‘காதலா கடமையா’ என்ற புரட்சி நாவல்,  இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்ற அந்தஸ்தை அவருக்கு அளித்தது. 18 அத்தியாயங்களைக் கொண்ட 'காதலா  கடமையா'  நாவல்,  சரித்திரப் பின்னணியை கொண்ட நாவல். மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவல்,  அது வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூலுக்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் புதுமைப்பித்தன், "முஸ்லிம் பெண்டிர் எழுத முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று பாராட்டியிருந்தார்.

இந்த நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே.சா, ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என்று எழுதியிருந்தார்.

1930 களின் மத்தியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் உஷ்ணம் ஏற்படுத்திவந்த காலகட்டத்தில்,  'காதலா கடமையா?' நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று துணிச்சலாக எழுதியிருந்தது இவரது தமிழ்ப்பற்றுக்கு சான்று.

இந்நாவலைப்பற்றி எழுத இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி வெற்றிபெற்ற “நாடோடி மன்னன்“ கதை,  இந்நாவலின் மூலம் என்பார்கள். ஆனால் அதுபற்றிய வாத பிரதிவாதம் இன்றளவும் உண்டு. 

இவரது பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்த 'இஸ்லாமும் பெண்களும்' நூல், பெண்கள் சினிமா பார்க்கலாமா, இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணிகளும், விவாக விலக்கும் என்பது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களையும், புரட்சிகரமான பல முற்போக்கு கருத்துக்களையும் பேசியது.

'மகிழம்பூ' நல்ல வரவேற்பைப் பெற்ற அவரது மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன், ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை, பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் என தொடர்கதைகள் மற்றும் சிறுகதைகள் அவரின் அடையாளங்கள். இதுதவிர தம் இறுதிநாள்வரை பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார்.

"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட முயற்சிக்கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண் மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு, சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம். பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும், இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும் முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண் எழுத்தாளர்களை வரவேற்குமாக!" என 'சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல்' என்ற தனது குறுநாவலுக்கு சித்தி ஜுனைதா முன்னுரை எழுதியிருந்தார். பெண்களுக்கான குரலை ஓங்கி ஒலிக்கும் இந்த முன்னுரை இடம்பெற்ற நுால் சுதந்திரத்திற்கு முன்புவெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தி ஜுனைதா பேகம்,  தமது கட்டுரை ஒன்றில்,  பெண்கள் தமக்கு பிடித்தவரையே மணஞ்செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிப்பதை குறிப்பிட்டு, "ஒரே குணமும், பண்பும் இல்லாத இருவரை ஆடு மாடுகளைப் பிணைப்பதைப்போல் பிணைத்து விடுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமில்லாத ஒருவனை மணந்துகொள்ள பெற்றோராலும் மற்றோராலும் வற்புறுத்தப்படுவாளேயானால், அப்பெண் அத்திருமணத்தை நிறைவேற்றி வைக்கும் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள்ளலாம்” என்று,  இஸ்லாமிய பெண்கள் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்வதின் மூலம் குடும்ப பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையையும் முன் வைக்கிறார்.

சித்தி ஜுனைதாவின் பெண்ணியச் சிந்தனைகள்,  தன்சார்ந்த சமூக பெண்களுக்கான குரலாக மட்டுமின்றி, உலகம் முழுவதும் போராட்ட வாழ்வில் சிக்கித்தவிக்கும் பெண்களுக்கானதாகவும் இருந்தது. இவர் எழுதிய பல நூல்களுக்கு அவர் சார்ந்த சமூத்தினராலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்து படைப்புகளை வெளியிட்டார். தன் வீட்டு வாயிலில் தன்னை பன்னுாலாசிரியை என்றே பெருமிதமாக குறிப்பிட்டவர் இவர்.

அவரின் இறுதிக்காலத்தில் அவரிடம் ஒரு பத்திரிக்கை,  'தங்களின் எழுத்து தாங்கள் விரும்பிய பயனை விளைவித்ததா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதிலளித்த அவர், “ நான் எந்தப் பயனையும் கருதி நூல் எழுதவில்லை. பிறர்நலன் கருதாமல் தன்நலத்தையே கருதி செருக்கிலும் அறியாமையிலும் புதைந்து போகுமாறு மக்களை நெருக்கியழுத்தும் சாதி வேற்றுமை, சமய வேற்றுமையைக் களைந்து,  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற அடிப்படையில்,  மக்கள் இனம் வாழ வழிவகுக்கும் ஒரு சிறு நூலை உரைநடையில் எழுதவேண்டும் என்ற அவா என்னை நீண்ட நாட்களாகத் தூண்டியது. எழுதினேன், வெளியிட்டேன். ஆனால் நான் விரும்பிய பயன் கிட்டியதா? அதுதான் இல்லை.

மொழி வளர்ச்சி பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். பல்வேறு இலக்கிய மாநாடுகள் கூட்டுகிறோம். பயன்? திருக்குறள், நாலடியார் முதலியவைகளிலிருந்து தமிழரின் தத்துவஞானத்தைப் பற்றியும், நல்லொழுக்கத்தைப் பற்றியும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவைகளிலிருந்து தமிழரின் நாகரிகத்தைப் பற்றியும் ஒருவாறு நாம் தெரிந்து கொள்கிறோம். ஆடம்பரத்திற்காக செலவு செய்யும் இந்த ஆயிரக்கணக்கான தொகைகள் எந்தப் பயனைத் தந்தன என்றால், அதற்கு ஏற்ற பதில் கிடைக்குமா?" என்று ஆதங்கத்துடன் அழுத்தமாக எதிர்கேள்வியை எழுப்பினார்.

'காதலா, கடமையா' நாவல் உள்ளிட்ட சித்தி ஜுனைதாவின் மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக அவரது உறவினர் நாகூர் ரூமி என்பவர் வெளியிட்டுள்ளார். தம் இறுதிக்காலம் வரை படிப்பதையும் எழுதுவதையும் கைவிட்டுவிடாமல்  இலக்கியப்பணி ஆற்றிய சித்தி ஜுனைதா, 1998 ஆம் ஆண்டு இதேநாளில் தம் 82 வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இஸ்லாமிய சமூகத்தில் முற்போக்குத்தனமான, புரட்சிகரமான சிந்தனையை படரவிட்ட சித்தி ஜுனைதாவின் இலக்கிய பங்களிப்பு, அவர் வாழ்ந்த காலத்திலேயே மறுக்கப்பட்டது மாபெரும் துயரம். இலக்கிய சூழலில்,  இப்படி எத்தனையோ படைப்பாளிகள் வரலாற்றில் மறுக்கப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. சித்தி ஜுனைதாவும் அந்த பட்டியலில் இடம்பெற்றவர்களில் ஒருவர்.

இன்று சித்தி ஜுனைதாவின் நினைவுநாள் என்பதோடு,  1917 ல் பிறந்தவரான அவரின் நுாற்றாண்டு வரும் வருடம் துவங்குகிறது. இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளரும்,  பிற்போக்குத்தனம் நிரம்பி வழிந்த காலகட்டத்தில் பெண்ணியத்தையும் முற்போக்கு கருத்துக்களையும் முன்வைத்தவருமான அவரது நுாற்றாண்டை கொண்டாடவேண்டியது இந்த சமூகத்தின் கடமை மட்டுமல்ல; அரசின் கடமையும் கூட!

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ