Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசு... பணம்... துட்டு... உங்கள் தூக்கத்தையும் களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

டு வீதியில் நிர்வாணமாய் ஓடுவதும், தறிகெட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவதும், மரங்கள் நிறைந்த அடர்த்தியான மலை உச்சியிலிருந்து குதிப்பதும் என விதவிதமாய் பிம்பங்கள் கடந்து செல்லும் கொடுங்கனவு பல எனக்கு வந்துள்ளது... ஆனால், அதற்காகவெல்லாம், நான் துக்கத்தை வெறுத்ததில்லை.  நிச்சயம்,  இது போல் உங்களுக்கு அச்சமூட்டும் பல கனவுகள் வந்திருக்கும்.

என்ன கொடுங்கனவுகள் வந்து உங்கள் தூக்கத்தை தின்ன முயற்சித்தாலும், ஒரு கோப்பை தண்ணீர் குடித்துவிட்டு புரண்டு, புரண்டு படுத்தாவது நிச்சயம் நீங்கள் தூக்கத்தை தழுவதான் விரும்பி இருப்பீர்கள் என்ன நம்புகிறேன். ஆம், தூக்கம் அனைவருக்கும் ஒரு சுகானுபவம்.  தூக்கம் வரவில்லை என்று மருந்து சாப்பிடுபவர்களையும், ஆழமான தூக்கத்திற்காக பல மணி நேரம் மருத்துவமனையில் காத்து இருப்பவர்களையும் நாம் அறிவோம்.

நிம்மதியான தூக்கத்திற்கு பத்து வழிகள், நல்ல தூக்கத்தை பெற ஐந்து பழங்கள் போன்ற செய்திகள் முகநூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. அதுவே அதிகம் விரும்பப்பட்ட, பகிரப்பட்ட செய்தியாக இருக்கிறது.  அவனின்றி மட்டுமல்ல, ஆழ்ந்த தூக்கம் இல்லாமல், உங்கள் உடலில் ஒரு அணுவும் அசையாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் உள்ள நேர்த்தியை தீர்மானிப்பது, நீங்கள் தூங்கிய எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம்தான். ஆம். உங்கள் எண்ணங்களை, செயல்களை, ஆற்றலை, நீங்கள் தூங்கும் எட்டு மணி நேரம் தூக்கமே தீர்மானிக்கிறது. நிற்க. இது தூக்கத்தின் மகத்துவம், பயன்கள் சொல்லும் கட்டுரை அல்ல. அதை, நீங்கள் கூகுளாண்டவரிடம் சரண் அடைந்தால், பல்லாயிரப்பக்கங்களை கொட்டுவார். நேற்றிரவு நன்றாக தூங்கி இருந்து, உங்களுக்கு அதை படிக்கும் பொறுமை இருந்தால், நீங்கள் படிக்கலாம்.

இங்கு நாம், நம் தூக்கத்தின் மேல் எப்படி சாம்ராஜ்ஜியங்கள்  கட்டப்படுகின்றன என்பதை பற்றி விவாதிப்போம்.

உங்கள் தூக்கத்தின் மேல் எழுப்பபடும் சாம்ராஜ்ஜியங்கள்:

பெருநகரத்தில் உள்ள பெருநிறுவனங்களின் கட்டடங்கள் வெறும் கல்லில், சிமெண்ட்டில் மட்டும் கட்டப்படவில்லை, அது பலரின் தூக்கத்தின் மேல் எழுப்பப்பட்டு இருக்கிறது. நேற்று ஒரு பேராசிரியருடன் உரையாட நேர்ந்தது. அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும், ஒரு தலைமுறையின் எதிர்காலம் குறித்து அச்சமூட்டுபவையாக இருந்தன. அண்மையில் உலக சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம், தன் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க அவரை அழைத்து இருக்கிறது.  பயிற்சி தலைப்பு : தூக்கம். அதாவது குறைந்த நேரம் தூங்கி, அதிக நேரம் எப்படி ஆற்றலுடன் உழைப்பது.  அந்த தலைப்பின் பின்னணியில் உள்ள வணிக நோக்கத்தை அவர் சொன்ன போது அதிர்ந்தே போய்விட்டேன்.

 

அந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவில் ஒரு முக்கிய வாடிக்கையாளரும், ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய வாடிக்கையாளரும் இருக்கிறார். இந்த இரு நாடுகளுக்கும், நேரம் வித்தியாசங்கள் அதிகம். அதனால், இந்த இரு நாட்டு சந்தையையும் தக்கவைத்து கொள்ள, தன் ஊழியர்களை குறைந்த நேரம் உறங்க சொல்கிறது. உற்பத்தி திறனும் குறைய கூடாது என்கிறது. அதற்காக சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.

தலைப்பையே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த பயிற்சி வகுப்பில், ஊழியர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் பகீர் ரகம். ஆம். ஒரு ஊழியர் மது அருந்திவிட்டு ஆழ்ந்த தூக்கதிற்கு சென்று, அலாரம் வைத்து எழுந்து கொள்ளலாமா என்று கேட்டு இருக்கிறார். இன்னொருவர்,  தினமும் புணர்ந்துவிட்டு படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வருமா...? என்று கேட்டு இருக்கிறார். ஆழ்ந்த தியானம் போன்று புணர்தலை, இந்த நவீன சமூகம் எப்படி பார்க்கிறது.  அலுவலக வேலையை மனதில் வைத்து, அதன் தரம் கூட வேண்டும் என்ற நினைப்பிலேயே புணர்ந்தால், அப்புணர்ச்சியின் மூலம் உருவாகும் உயிர் நிச்சயம் தரமற்றதாகதான் இருக்கும்.

பேராசிரியர், மிகைப்படுத்தி சொல்கிறாரோ என்ற சந்தேகத்தில், அண்மையில் மென்பொறியாளர் வேலையைவிட்டு கிராமத்திற்கு திரும்பிய நண்பனிடம் விசாரித்தபோது, அவன், “எங்கள் நிறுவனத்துடன், ஒரு யோகா பயிற்சி பள்ளி ஒப்பந்தம் செய்து இருந்தது. அவர்கள் எங்களுக்கு அளித்த பயிற்சியே எப்படி குறைந்த நேரம், ஆழ்ந்து தூங்கி, ஆற்றலை பெறுவது என்பதுதான்...” என்றான். இதை மேம்போக்காக பார்த்தால் சரி என்பது போல்தான் இருக்கும். ஆனால், இதில் நிறுவனங்களின் வணிக அரசியல் ஒளிந்து இருக்கிறது. உடல் உழைப்பு அறவே இல்லாமல்போன இந்த காலக்கட்டத்தில்,  பலர் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அதற்கு யோகா ஒரு அருமருந்துதான்,  விமர்சிப்பதற்கில்லை. ஆனால், குறைந்த நேர தூக்கத்தை வலியுறுத்தி, அதற்கு யோகாவை பயன்படுத்துவது, நாம் அந்த கலைக்கு செய்யும் துரோகம் இல்லையா...?

வளர்ச்சிக்காக தானே எல்லாம்....?  'வளர்ச்சிக்காக தூக்கத்தை தியாகம் செய்தால் என்ன?' என்று அவர்களின் பயிற்சி பட்டறையில் அமுத மொழியில் பேசி இருக்க கூடும், அதை நீங்களும் நம்பியிருக்க கூடும்.  யாருடைய வளர்ர்சிக்காக....? உங்களின் வளர்ச்சிக்காகவா இல்லை பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்காகவா...?  நிறுவனம் வளர்ச்சியை,  தேசத்தின் வளர்ச்சியோடு முடிச்சு போடுவது முட்டாள் தனம். ஆம்.  இங்கு நாம் பெருநிறுவனங்கள் என்று கருதி கொண்டிருக்கும் 90 விழுக்காடு நிறுவனங்கள் தம் மூலதனத்தைவிட அதிக கடனில் இயங்குபவை.

எதை விற்று, எதை பெறப் போகிறோம்...?:

மனித விழுமியங்கள் மங்கி, பணம் மட்டுமே பிரதானம் ஆன, இந்த காலச் சூழலில், பொருள் சேர்த்தல் மிக அவசியம்தான். ஆனால், அதற்காக நீங்கள் எதை பணயம் வைக்க போகிறீர்கள்...? உங்களால் ஒரு எட்டு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால், நீங்கள்  கழுத்தளவு பொருள் சேர்த்து என்ன பயன்...? தூக்கமே ஒரு சிறந்த தியானம், ஆனால், தூக்கத்திற்கே தியானம் தேவைப்படும் நிலைக்கு நாம் வந்தது எதனால்....? 

எல்லாரையும் விட, தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு அதன் மகத்துவமும், அதனால்  ஏற்படும் உடற்சிக்கல்களும் நன்கு தெரியும். ஆனால், அதிலிருந்து வெளிவர முடியாமல் நம்மை தடுப்பது எது...?  தூக்கத்தை தொலைத்து, உங்களுக்கு பிடித்த புத்தகத்தில், சினிமாவில் மூழ்குவது என்பது வேறு. அதுவும் தவறுதான் என்றாலும், அதில் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்கிறீர்கள். அது போல், தூக்கத்தை தொலைத்து, நீங்கள் மனமகிழ்வுடன் கோடிங் எழுதுகிறீர்கள் என்றால் மகிழ்ச்சி தான். ஆனால், தூக்கத்தை தொலைத்து, வேலை அழுத்தத்தில் மேலும் மேலும் மூழ்கும் போது, ஓரிரவு நீங்கள் அதில் மொத்தமாக மூழ்கிவிட நேரும்... பணத்தைவிட, வாழ்வு முக்கியம்,  அதற்கு தூக்கம் மிக முக்கியம்.

- மு.நியாஸ் அகமது


 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ